பக்கங்கள்

வியாழன், 17 அக்டோபர், 2024

ஆர்.எஸ்.எஸ்க்கு முன்னோடி ஆரிய பார்ப்பன பாரதி? - எதிர்வினை (78)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (78)

ஜுன் 16-30 ,2021

ஆர்.எஸ்.எஸ்க்கு முன்னோடி ஆரிய பார்ப்பன பாரதி?

நேயன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 125ஆம் ஆண்டில் அய்ந்து பேரால் உருவாக்கப்பட்டது.  ஆனால், பாரதியார் 11.9.1921லே இறந்துவிட்டார். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாரதியின் பங்கு எப்படியிருக்க முடியும் என்று எவரும் எளிதில் எண்ணுவர்!

பாரதி இறந்த பின் 4 ஆண்டுகள் கழித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்கள் அனைத்தையும் பாரதி தன் கொள்கையாக முன்னமே அறிவித்துவிட்டார்.

பாரதி ஜாதி ஒழிப்புப் பேசியவர்; பார்ப்பனர்களைச் சாடியவர்; பெண்ணுரிமை பற்றி பாடியவர்; தாழ்த்தப்பட்டவருக்குப் பூணூல் மாட்டிப் புரட்சி செய்தவர். அப்படியிருக்க அவர் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அடித்தளம் இட்டிருக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு பாரதி எதிரானவர் அல்லவா? என்றே எல்லோரும் கேட்பர்!

இப்படி இவர்கள் கேட்பதற்குக் காரணம், பாரதியைப் பற்றி முழுமையாக அவர்கள் அறியாததே காரணம்.

இந்துத்துவத்தின் முதன்மைக் கொள்கைகள் எவை என்பதை நான் முன்னுரையில் கூறியதை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, அவை பற்றி பாரதியின் கொள்கைகள் என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை ஒளிரும்!

முதலில் இந்துத்துவாவின் அடிப்படைக் கொள்கையான வர்ணாஸ்ரம தர்மம் பற்றியும், வேத, சாஸ்திரங்களைப் பற்றியும் பாரதியின் கொள்கை என்ன என்பதைப் பார்ப்போம்.

பாரதியும் வர்ணாஸ்ரம தர்மமும்:

“ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதி எப்படி வர்ணாஸ்ரம ஆதரவாளராய் இருக்க முடியும்? என்றே எல்லோரும் எண்ணுவர். பாரதியின் சந்தர்ப்பவாதக் கருத்துகள் சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டே சிலர் பாரதியாரை ஒரு சமதர்மக் கவிஞராக, புரட்சிக் கவிஞராகக் காட்டுகின்றனர்.

பாரதியின் கருத்துகள் இருவகைப்படும்.

1. பாரதியின் உள்ளக் கருத்துகள். 2. பாரதியின் கள்ளக் கருத்துகள்.

பாரதி ஓர் கபடவேடதாரி. கபடவேடதாரிகளிடம் எப்போதும் இரட்டை வேடம் இருக்கும். அது பாரதியிடம் அதிகம் இருந்தது. அதை நீங்கள் இந்நூலைப் படிக்கப் படிக்க அறிவீர்கள். பாரதி வர்ணாஸ்ரம தர்மத்தில் தீவிர பற்றும் வெறியுங் கொண்டிருந்தார். சமூகச் சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் வர்ணாஸ்ரமம் அழிந்ததுதான் என்கிறார்.

1910இல் பாரதி தனது சுயசரிதைக் “கனவு’’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் அவருடைய தந்தை வறுமையுற்று வருந்தியதற்குக் காரணம் வர்ணாஸ்ரமம் கெட்டொழிந்ததே யாகும் என்கிறார்.

“பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்தியதை

பாழடைந்த கலியுகம். ஆதலால்

வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே

மேன்மை கொண்ட தொழில் எனக் கொண்டான்’’ என்று கூறுகிறார். (பாரதியார் கவிதைகள்)

பார்ப்பான் உடல் வியர்க்க உழைக்கக் கூடாது என்ற வர்ணாஸ்ரம மற்றும் மனுதர்ம விதியை ஏற்று இக்கருத்தைக் கூறுகிறார்.

மேலும், “சமூகம்’’ என்ற தலைப்பில் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்திப் பாடுகிறார்.

“வேதம் அறிந்தவன் பார்ப்பான் (பிராமணன்)

நீதிநிலை தவறாமல் _ தண்ட

நேமங்கள் செய்பவன் நாயக்கன் (க்ஷத்ரியன்)

பண்டங்கள் அறிபவன் செட்டி(வைசியன்)

பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி (சூத்திரன்)

நாலு வகுப்புமிங்கு ஒன்றே _ இந்த

நான்கினில் ஒன்றுகுலைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே _ செத்து

வீழ்ந்திடும் மானிடச்சாதி (பாரதியார் கவிதைகள்)

கண்ணன் (கிருஷ்ணன்) என் தந்தை என்ற பாடலில்,

“நாலு குலங்கள் அமைத்தான் _ அதை

நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதர்’’ என்கிறார். (பாரதியார் கவிதைகள்)

ஆரியர்களின் சாஸ்திரங்களை பாரதி மிகவும் உயர்வாக மதித்தார். அவற்றைப் பின்பற்றினால்தான் நன்மை கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார்.

“வேள்விகள் கோடி செய்தால் _ சதுர்

வேதங்கள் ஆயிரம் முறைபடித்தால்

மூளும் நற்புண்ணியங்கள்தான்’’

(பாரதியார் கவிதைகள்)

“முன்னாளில் அய்யரெல்லாம் வேதம் சொல்வார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இந்நாளில் பொய்மைப் பார்ப்பனர் _ இவர்

ஏதும் செய்தும் காசு பெறப்பார்ப்பார்’’ என்கிறார் பாரதி. (பாரதி புதையல் பெருந்திரட்டு)

பாரதியின் இப்பாடலின் உட்பொருளை மிக நுட்பமாகக் கூர்ந்து பொருள் கொள்ள வேண்டும். இப்பாடலின் மூலம்,

1.            வேதம் உயர்ந்தது

2.            வேதம் சக்தியுடையது

3.            வேதம் உலகை உய்விக்கக் கூடியது

4.            வேதம் பிராமணன் மட்டுமே ஓதவேண்டும்

5.            வேதம் ஓதுவது வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணனுக்குரியது.

6.            வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணன் வேதம் ஓதும் தொழிலை விட்டுவிட்டு, காசு, பதவி என்று மற்ற தொழில்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டான். இது கண்டிக்கத்தக்கது.

7.            வர்ணாஸ்ரம தர்மப்படி அவனவன் தொழிலை அவனவன் செய்தால்தான் சமூகம் வாழும் செய்பவனுக்கும் சிறப்பு.

                இதுவே பாரதியின் இப்பாடலின் உட்பொருள்; உண்மையான பொருள். இப்போது சொல்லுங்கள் – பாரதி வர்ணாஸ்ரமத்தை எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டார், மற்றவரும் ஏற்க வலியுறுத்தினார் என்று.

(தொடரும்)

புதன், 16 அக்டோபர், 2024

வேலியா தாலி?

 


ஏப்ரல் 16-30

முகப்புக் கட்டுரை : வேலியா தாலி?

- கவிஞர் கலி.பூங்குன்றன்


ஒரு தனியார் தொலைக்காட்சியில் தாலி பற்றிய ஒரு விவாதம் நடந்தது. அது ஒளிபரப்பப் படவும் இருந்தது. அந்தக் காலகட் டத்தில் அதனை ஒளிபரப்பக் கூடாது.

இந்து மதத்தை அவமதிக்கிறது. தாலி இந்துப் பெண்களின் புனிதச் சின்னம் என்று இந்துமத அடிப்படைவாதிகள் எகிறிக் குதித்தனர். அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தை மிரட்டினர். தொலைப்பேசிகள் மூலம் ஆபாசச் சேற்றை அள்ளி வீசினர்.

அடுத்த கட்டமாக அந்த நிறுவனத்தின் உள்ளே புகுந்து பணியாளர்களைத் தாக்கினர். பெண் ஒருவரும் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி உடைக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். அதற்கு மேலும் ஒருபடி மேலே சென்று, டிபன் பாக்ஸ் குண்டுகளை அந்த நிறுவனத்துக்குள் வீசி அச்சுறுத்தினர்.

 

இந்த இடத்தில் திராவிடர் கழகம் நுழையாமல் என்ன செய்யும்? பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்க் கேள்வி என்ற நிலை உடைப்பெடுத்துத் தன் கம்பீரமான வருகையை திராவிடர் கழகம் பதிவு செய்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் போர்க்குரல் கொடுத்தார்  கொடுக்காமல் இருந்தால்தானே ஆச்சரியம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் (14.4.2015)

சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை அறிவித்தார். இது ஒன்றும் கழகத்திற்குப் புதிதும் அல்ல. திருமணத்தின் போதே தாலியின்றி திருமணம் செய்து கொள்வதும், தாலி கட்டித் திருமணம் செய்தோராயிருந்தால், திருமணத்திற்குப் பிறகு தாலி என்பதன் உண்மைப் பொருளறிந்தபின் கழக நிகழ்ச்சிகளில் வாழ்க்கை இணையர்கள் இருவரின் ஒப்புதலுடன் தாலி அகற்றல் நடைபெறுவதும் சர்வசாதாரணம்! மத்தியில் மதவெறி ஆட்சி மகுடம் தரித்தது என்றவுடன் இந்த அடிப்படைவாதிகள் கொஞ்சம் ஆட்டம் காட்டுகின்றனர்.

தாலியை அகற்றிக்கொள்ளும் நிகழ்வைத் தாலி அறுக்கும் போராட்டம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம் பித்தார்கள். திராவிடர் கழகத்தின் தலைமை நிலையம் உண்மையை வெளிப்படுத்திய நிலையில், இப்பொழுதுதான் தாலி அகற்றும் போராட்டம் என்று எழுதிட, சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதுகூடப் போராட்டம் அல்ல _ ஒரு சாதாரண நிகழ்வுதான். தாலி நமது பாரம்பரிய கலாச்சாரச் சின்னம், புனிதச் சின்னம் என்று சொல்லிப் பார்த்தனர். பரம்பரைச் சின்னம் என்பதற்கு ஆதாரங்கள் காட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டோம். சங்க இலக்கியத்தில் உண்டா என்று வினா எழுப்பினோம். அகநானூற்றில் இடம் பெறும் 86 மற்றும் 136ஆம் பாடலில் திருமணம் குறித்துக் கூறப்பட்டுள்ளதே _ அதில் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மூச்சுப் பேச்சு இல்லை.

தமிழர் திருமணத் தில் தாலி உண்டா? என்று டாக்டர் இராச மாணிக்கனார் தனி நூலே எழுதி இருக்கிறாரே  அதற்கு இதுவரை மறுப்பு எழுதிய கொம்பர் யார் என்று கேட்டோம்  கேள்வி செங்குத்தாக நிற்கிறதே தவிர, பதில் சொல்லுவாரைத்தான் காணோம். அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் வேதத்தில்கூட தாலி என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று கடைந்தெடுத்துச் சொன்ன பிறகு வாயடைத்துப் போன நிலைதான்!

பதில் சொல்ல வக்கு இல்லை என்றாலும் சந்து முனைகளில் சிந்துகளைப் பாடிக்கொண்டு திரிகிறார்கள். பெரியார் திடலை முற்றுகை யிடுவோம் என்றெல்லாம் கருத்தில் சரக்கு இல்லை என்ற நிலையில் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தில் தாலி கட்டாயம் இல்லை என்ற விவரமாவது இவர்களுக்குத் தெரியுமா? எதையும் அறியாத தனத்தால் ஆவேசச் கூச்சல் போடுகிறார்கள்.

கடைசியாக எங்கே வந்து நிற்கிறார்கள்? தாலி பெண்களுக்கு வேலி என்கிறார்கள்.

அதாவது உண்மையா? நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் இந்தத் தாலிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை விதிவிலக்கு இல்லாமல் மனித மிருகங்கள் வேட்டையாடுகின்றனவே _ அவை யெல்லாம் இவர்களின் கருத்துக்குப் புலப்படவே புலப்படாதா? பெற்ற மகள்களையே பெண்டாண்டான் என்று கேடுகெட்ட வெட்கத்தில் தலைகுனிய வேண்டிய செயல்களுக்கு என்ன சமாதானம்?

மும்பையில் உள்ள பெண்கள் உரிமைகளுக்கான வழக்குரைஞர் ஃபிளாவியா ஆக்னஸ் கூறும்போது, குடும்ப உறுப்பினர்களின் பொருந்தாத பாலியல் வன்முறைகள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. ஆனால் புகார்கள் அவர்களின் குடும்பத் தார்களின் அழுத்தங்களால் திரும்பப் பெறப்படுகின்றன.

மும்பையில் 18 வயதுப் பெண் ஒருவர் தமக்கை மற்றும் தன்னிடமும் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட தன் தந்தையின் மீது புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தத் தந்தை தண்டிக்கப்படவில்லை.

அவர்மீது போச்சோ (Pocso Act) சட்டத்தின்படி அந்தப் பாலியல் உறவின்போது அப்பெண் மைனர் அல்ல என்று கூறப்பட்டது. தாலிக்கும் பாலுறவு வன்முறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அதுபற்றிய புள்ளி விவரங்கள் உண்டா? நாள்தோறும் ஒரு செய்தி மட்டும் தவறாமல் வெளிவருகிறது. அதுதான் பெண்களின் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் செய்தி.

தாலி என்பதால் திருடர்கள் தவிர்த்து விடுகிறார்களா? இதில் இன்னொரு முக்கியக் கருத்தும் உண்டு. மங்களகரம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு மஞ்சள் கயிற்றில் இப்பொழுது தாலி அணிபவர்கள் எத்தனை பேர்? தங்கச் சங்கிலியில் அல்லவா தாலி தொங்குகிறது? அந்த மங்களகரம் _ புனிதம் எல்லாம் பறந்துபோனது குறித்து யாராவது புலம்புகிறார்களா?

தாலி _ பெண்களுக்குத் திருமணம் ஆனதற் கான அடையாளம் என்றால் அதே கேள்வி ஆண்கள் பக்கம் திரும்பாதா? அதிகம் வெளியில் சுற்றுபவன், பெண்களை விட ஆண்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கான அடை யாளம் இல்லையே  ஏன் என்ற கேள்விக்கு எந்த இந்து முன்னணிகள் பதில் சொல்லி யுள்ளன? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தாலி அணிவிப்பது என்பது _ கணவன் மரணம் அடைந்தால் அந்தப் பெண்களை அவமானப் படுத்தும் சடங்குக்காகத் தானே இந்தத் தாலி அணிவிப்பு.

முதலில் அணிவிப்பு _ அடுத்து அறுப்பு. கணவன் இறந்த துயரம் ஒரு பக்கம் என்றால் அதனைவிடப் பெரும் கொடுமை _ அவமானம் அந்தப் பெண்ணை அமங்கலி, முண்டச்சி என்ற முத்திரை குத்தி மூலையில் ஒதுக்குவ தற்குத்தானே இந்தத் தாலி சமாச்சாரம்?

ஆனால் சுயமரியாதைத் திருமணம் என்ன சொல்லுகிறது? ஆண்_பெண் என்பவர்கள் இணையர்கள் _- வாழ்வின் இன்ப துன்பங்களில், ஏற்றத் தாழ்வுகளில் சமபங்கு ஏற்கும் உற்ற நண்பர்கள் என்ற உறுதிமொழி ஏற்று வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குபவர்கள். இதில் இழிவு இல்லை _ ஆணின் உரிமை பெண் என்ற நிலைப்பாடு இல்லை. தாலி என்பது பெண் என்பவள் ஆணின் அடிமை _ சொத்து என்பதற்கான தளை _ அடையாளம் என்பதுதான்.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லாதவர்கள் விட்டேனா பார்! என்று பேசுவது அறிவுடைமைதானா? ஒன்றை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைவாய்ப் புரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமண உரிமை, பால்ய திருமண தடுப்பு என்ற உரிமை வரிசை நீண்டதற்கு, சட்ட வடிவம் பெற்றதற்குக் குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்? தாலி பெண்களுக்கான அடிமைச் சின்னம் என்று கூறுவது இதே இயக்கத்தவர்கள் தானே? தந்தை பெரியார் அவர்கள்தானே? _ மறுக்க முடியுமா?

அதே நேரத்தில் பெண்களுக்காக வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு வரிந்து கட்டுவோர் எந்தப் பக்கத்தில் நிற்கக் கூடிய வர்கள்? படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17) பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 சுலோகம் 66) பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

இப்படிச் சொல்லுகின்ற இந்துத்துவா பக்கம் நிற்கிறவர்களா பெண்களுக்கான பெருமையை உயர்த்திப் பிடிப்பவர்கள்?

பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள்?

பார்ப்பனரை அழைத்து விவாஹ சுப முகூர்த்தம் நடத்துகிறார்களே  அந்தக் கல்யாணத்தில் பார்ப்பானர்கள் சொல்லும் மந்திரம் என்ன? ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர த்ருத்யோ அக்நிஷ்டே பதி துரியஸ்தே மனுஷ்ய ஜா கல்யாணத்தில் மணமகளைப் பார்த்து புரோகிதப் பார்ப்பான் சொல்லும் மந்திரம் இது. முதலில் சோமன் என்ற கடவுள் கணவனாக இருந்தான், பிறகு கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாள், இந்தப் பெண்ணின் மூன்றாவது கணவன் அக்னி, நான்காவதுதான் மனித ஜாதியாகப் பிறந்த இந்த மாப்பிள்ளை.

இப்படி பெண்களைத் திரும ணத்தின்போதே நான்கு பேர் களுக்கு மனைவி என்று மந்திரம் சொல்லுவதுதான் பெண்களுக்கான பெருமையா?

இப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்தாதே என்று போர்க் குரல் கொடுத்து, ஆண்களும் பெண்களும் சமம் _ சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, இன்று சட் டப்படியாகவும் ஆக்கிய நாங் கள்தானே பெண்களின் பெரு மையைப் போற்றும் பெருமக்கள் _ மறுக்க முடியுமா? பெண்களுக்குத் திருமணம் உபநயனம், கணவனுக்குக் கடமை யாற்றுவது குருகுலவாசம்.

இல்லறம் காத்தலே வேள்வி என்பதை இன்றைய படித்த பெண்ணுலகம் ஏற்றுக்கொள் ளுமா?

Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will a woman pure.

ஒரு வடமொழி சுலோகத்தை இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.12.1990) எடுத்துக்காட்டியது. இதன் பொருள் எப்போது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல் லது கடல் சுவை நீரால் நிரப் பப்படுகிறதோ அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மையான வளாக இருப்பாள் என்று கல்லூரி வாசல்களுக்குச் சென்று பெண்களிடம் சொல்லிப் பார்க்கட்டுமே _ என்ன பரிசு கிடைக்கும் _ தெரிந்ததுதான்.

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே – ஒன்றுக்கும் உதவாதவர்கள். – ஜெயேந்திர சரஸ்வதி, (1997) (தினமணி – தீபாவளி மலர்)

வேலைக்குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம்பேர்தான் ஒழுக்கமாக இருக்கிறார்கள். – காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. இவற்றை எதிர்த்து காஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தியவர்கள் (9.3.1998) யார்? திராவிடர் கழக மகளிர் அணியினர்தானே?

பெண்களின் புனித தாலியைக் கொச்சைப் படுத்துவதா என்று கூக்குரலிடும் கூட்டம் அன்று விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசிய சங்கராச்சாரியாரை எதிர்த்து ஒரே ஒரு சொல் கூறியதுண்டா?

தாங்களாகவே உணர்ந்து தமது துணைவனின் கருத்து ஒற்றுமையோடு அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொள்ளுதல் குற்றமா? சமதர்மப்படிதான் குற்றமா?

சட்டப்படிதான் குற்றமா? மனித உரிமைப்படிதான் குற்றமா? கணவன் அடித்தாலும் உதைத்தாலும் _ இந்த ஜான் கயிறுக்காகப் பார்க்கிறேன் என்று அந்தத் தாலிச் செயினைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அந்தக் கொடுமை நீடிக்க வேண் டுமா?

அதற்காகத்தான் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை எதிர்க்கிறார்களா? வெறுக்கிறார்களா? கடைசியாக ஒரே ஒரு கேள்வி. தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டவர்கள் விவா கரத்துக் கோரி குடும்ப நீதிமன்றத்தின் வாயிலில் நிற்பது ஏன்? அந்தப் புனிதத் தாலி எந்த வகை யில் அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது? எதிர்ப்பாளர்களின் வரிசையில் ஆண்களைப் பார்க்க முடிகிறதே தவிர, பாதிப்புக்குச் கார ணமான பெண்களை அதிகம் காண முடியவில்டிலயே _ ஏன்? ஏன்? ஆத்திரப்பட்டால் அறிவு வேலை செய்யாது. அமைதியாக ஆழமாகச் சிந்தியுங்கள் _ 14ஆம் தேதி நிகழ்ச்சியின் அருமை பெருமை நன்றாகவே புரியும்.

——————

இந்து மதத்தில் பெண்கள் நிலை

 

பெண்களின் அந்தஸ்து பற்றி

1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.

3.    போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்.  _ (சுந்தர காண்டம் 5)

5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6.    உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்… ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)

7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)

8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே – இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

———–

 

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன

சொல்லுகிறார்?


அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :

மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.

இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.

கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)

நீதிக்கட்சி அமைச்சரவையும் தாழ்த்தப்பட்டோரும்!-கி. தளபதிராஜ்

 


2024 ஆகஸ்ட் 1-15, 2024

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது காங்கிரஸ்தான் என்று கூறியுள்ளார். அதே வேளையில் நீதிக்கட்சி ஆட்சியில் கூட அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெற முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இது ம.பொ.சி வகையறாக்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட புளித்துப்போன ஒரு குற்றச்சாட்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றைய நிலை என்ன?

1935ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று சொன்னதோடு பயணச் சீட்டுகளிலும் அப்படி அச்சிடப்பட்டிருந்ததே! அதை ஒழித்துக் கட்டியது இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சிக் குழுத் தலைவராக இருந்த சவுந்தரபாண்டியனார் அல்லவா?

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சி ஆற்றிய சாதனைகள் எத்தனை? எத்தனை? பேருந்தில் கூட செல்ல முடியாத நிலை. உணவு விடுதிகள், பொது இடங்கள் என எங்கு சென்றாலும் தடை. அனைத்தையும் உடைத்து தகர்த்தது நீதிக் கட்சியும் அதன் நீட்சியான திராவிட இயக்கமும் அல்லவா? இதை உணர்ந்தால் நீதிக்கட்சி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லையே!

1919லிருந்து 1935ஆம் ஆண்டு வரை இங்கே இருந்தது இரட்டை ஆட்சி முறை. அதன்படி அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட இந்தியர் மொத்தமே மூன்று பேர்தான் இடம்பெற முடியும். அந்தக் காலகட்டத்தில் ஆட்சி புரிந்த நீதிக்கட்சி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லை என்று கூறுபவர்கள், அதனைத் தொடர்ந்து 1937இல் 10பேர் கொண்ட அமைச்சரவையையும், 1952இல் 15பேர் கொண்ட அமைச்சரவையையும் வைத்திருந்த ராஜாஜி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லை என்ற உண்மையை மறைப்பது ஏன்?

1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சொற்பகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.சி.ராஜா அவர்கள். அவர் பெரியார் அவர்களைப் பற்றி கூறியது என்ன?

“இம்மேடையில் தோழர் ஈ.வே. ராமசாமி பெரியார் இருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆதி திராவிட மந்திரி நியமிக்கப்பட வேண்டும் என அவர் சென்ற ஆறு- ஏழு வருஷ காலமாக கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார். அவர் தமது பத்திரிகைகள் மூலமாகவும் அதிகாரிகளிடம் நேரில் சொல்லிக் கொள்வதன் மூலமாகவும் அவர் நமக்காக பெரு முயற்சி செய்து வந்திருக்கிறார். ஆதி திராவிடர்களுக்குரிய இன்றைய மந்திரி ஸ்தானத்துக்கு பெரியாருடைய முயற்சியே பிரதானக் காரணம் என்பது பொய்யல்ல. இந்த மாநாட்டை அவர் நம்மிடம் இருந்து நடத்திக் கொடுக்க உதவியமைக்கு என் நன்றியையும் சந்தோஷத்தையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட வில்லையா?

நீதிக்கட்சிக்குப்பின் ஆட்சிக்கு வந்த காமராசர் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் இடம் பெற்ற முழுப் பெருமையையும் காங்கிரஸ் எடுத்துக் கொள்ள முடியாது! அதற்குக் காரணமாக காமராசரின் பின்புலத்தில் பெரியார் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் ‘காரணம் பெரியார்! காரியம் காமராசர்!’ என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க இயலாமல்தான் பெரியாரே காங்கிரசை விட்டு வெளியேறினார். காங்கிரசில் தற்போது பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய நிலை அப்படி இல்லை.

அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கை ஒளியாய் காங்கிரஸ் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. காங்கிரசைத் தூக்கிப் பிடிப்பதற்காக, நீதிக்கட்சியைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை!

திங்கள், 14 அக்டோபர், 2024

குடைத்தூணிக் கூட்டம் (சின்னகுத்தூசியார் நினைவு மலர்)

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஜூன் 16-30

நூல் : மூத்த பத்திரிகையாளர்  சின்னகுத்தூசியார் நினைவு மலர் வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,     105, ஜானி ஜான்கான் சாலை,     ராயப்பேட்டை, சென்னை – 14 மொத்தப் பக்கங்கள்:194 விலை: ரூ60/-

குடைத்தூணிக் கூட்டம்

இந்த மலரில் இடம் பெற்றுள்ள சின்னகுத்தூசி தியாகராஜன் அவர்களின் விரிவான பேட்டியிலிருந்து ஒரு பகுதி : எனக்கு ஊர் திருவாரூர்.  இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு முன்பு பிறந்தவன் நான்.  அப்பா ஒரு சமையல்காரர்.  அம்மாவும் வீடுகளில் சமையல் வேலை பார்த்தாங்க.  அவர்களைப் பொறுத்தவரையில் வைதீக மனோபாவமுள்ள, வைதீக நம்பிக்கையுள்ளவர்கள்தான்.  அப்பா பெயர் இராமநாதன்.  அம்மா பெயர் கமலம்.

நான் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, சமூகத்தில் நிலவிய ஜாதிபேதங்கள் _ ஏற்ற தாழ்வுகள் _ என்னை மிகவும் பாதித்தன.  பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிக் குழந்தைகளும் ஒரே வரிசையில் அமர்ந்து படிப்போம்.  ஒருவர் கடித்த அல்லது எச்சிற்படுத்திய பழங்களை, உணவுப் பண்டங்களை சேர்ந்து சாப்பிடுவோம்.  ஆனால், வீடு என்று வந்துவிட்டால் எல்லாக் குழந்தைகளும் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைந்துவிட முடியாது.  வாசல் திண்ணையோடு பள்ளிக்கூடத்து நேசம், தொடுதல் எல்லாமே முடிந்துவிடும்.

பிராமணர்களது வீடுகளில் இந்த பேதம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் _ ஒரே ஒரு உதாரணமே போதும், முழுவதையும் தெரிந்துகொள்ள.  வீட்டில் வாசல்படி தாண்டினவுடனே இடைச்சுழி ஒன்றிருக்கும்.  அந்தப் பகுதியை அவர்கள் ரேழி என்று சொல்லுவார்கள்.  அங்கே ஒரு மூலையில் மூங்கில் அல்லது சவுக்குக் கம்பு ஒன்றை வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் அவர்களது ஆடைகளை அவிழ்த்து அங்கே போட்டுவிட வேண்டும்.  பின்னர் அந்தக் குச்சியால் அவிழ்த்துப் போட்ட ஆடையை எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் போய் கிணற்றுப் படியில் உள்ள தொட்டியில் போட்டுவிட வேண்டும்.  அங்கே துவைத்து உலர வைத்த ஆடைகள் _ மடியாக _ கொடியில் தொங்கும். அவைகளை அணிந்து கொண்டுதான் வீட்டுக்குள் நுழைய வேண்டும்.  பள்ளியில் அணிந்திருந்த ஆடைகள் தீட்டுப்பட்டவை; தீட்டுப்பட்ட துணியை அணிந்து வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

வீடு கட்டும்போதே ஒவ்வொரு வீட்டுக்கும் பக்கத்தில் ஒரு சந்து வைத்தே வீட்டை அமைப்பார்கள்.  தஞ்சாவூர் ஜில்லாவில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கறவை மாடுகள், வண்டி மாடுகள், உழவு மாடுகள் இருக்கும்.  இந்த மாடுகளை மேய்த்து, குளிப்பாட்டிக் கொண்டு வரும் ஊழியர்கள், மலம் அள்ளும் ஊழியர்கள் எல்லாம் தாழ்ந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  அவர்கள் கொல்லைப் பக்கத்துக்கும் தொழுவத்திற்கும் வீட்டின் புனிதம் கெடாமல் போகவும் வரவுமே இப்படிப்பட்ட சந்துகளை அமைத்து வைத்திருந்தார்கள்.

சின்னக்குத்தூசி வாழ்ந்த அறை

ஓட்டல்களுக்கு அந்தக் காலத்தில் காப்பிகிளப்புகள் என்று பெயர்.  அங்கே சாப்பிடச் சென்றால், அங்கேயும் ஜாதி பேதமே கொடிகட்டிப் பறக்கும்.  பிராமணர்கள் சாப்பிடுவதற்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கும்.  அல்லது தட்டிகளால் மறைத்து ஒரு பகுதி இருக்கும்.  அதன் முகப்பில் பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று போர்டு வைக்கப்பட்டிருக்கும்.  பிராமணர் அல்லாத மற்ற ஜாதிக்காரர்கள் சாப்பிட என்றே தனியாக ஒரு பகுதி.  அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க ஓட்டல் முதலாளி அமர்ந்திருக்கும் மேசையருகே சென்றால், அந்த மேசைமீது ஒரு சொம்புத் தண்ணீர் இருக்கும்.

பிராமணர் அல்லாதார் தரும் காசுகளை அந்தச் சொம்பிலுள்ள தண்ணீரை எடுத்து அதன்மேல் தெளித்து தீட்டைப் போக்கிவிட்டே கல்லாவில் சேர்த்துக் கொள்வார்கள்.  தாழ்த்தப்பட்ட மக்கள் நிலையோ இன்னும் மோசம்.  அவர்களுக்கு இட்லியோ தோசையோ தந்தால் அவைகளைக் கையில்கூட தரமாட்டார்கள்; தரையில் வைத்துவிடுவார்கள்.  தொட்டுத் தந்தால் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே!  அவர்களுக்கு காப்பி, டீ தருவதற்கென்றே வாசல் தூணில் ஒரு சங்கிலியில் இணைக்கப்பட்ட மூங்கில் குழாய் முனையில் ஒரு அலுமினிய டம்ளர் தொங்கும். அந்த டம்ளரை எடுத்து நீட்டினால், மூங்கில் குழாய் வழியாக காப்பியை ஊற்றுவார்கள்.  குடித்துவிட்டு தூணருகே உள்ள தொட்டியிலிருந்து தண்ணீர்விட்டு டம்ளர்களைக் கழுவி, கவிழ்த்து வைக்க வேண்டியது காப்பி குடித்த தாழ்த்தப்பட்டவரின் வேலை.

இன்று கல்வியறிவும் நாகரிகமும் வளர்ந்துவிட்ட நிலையிலும்கூட தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஓட்டல்களில் மட்டும் சாப்பிட்ட இலையை, அவர் யாராக இருந்தாலும், தாமே எடுத்து குப்பைக் கூடையில் போட்டுவிட வேண்டும் என்ற நிலை நீடித்து வருகிறது. இதற்கு அவர்கள் ரகசியமாகக் கூறும் காரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.  மேசை துடைக்கும் பையன்கள்கூட, பிராமணரல்லாதாரில் மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களாம். இந்தப் பையன்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் இலையை எடுத்தால் அதன் மூலமும் தீட்டு பரவிடுமாம்.  அதனால் எல்லா ஜாதியினரும் அவரவர் சாப்பிட்ட இலையை அவரவர்களே எடுத்துவிட வேண்டும் என்கிறார்களாம்.  இந்த விஷயமெல்லாம் தெரியாத இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் புதிதாக ஓட்டல் திறந்தாலும், அவர்களும் மற்ற ஓட்டல்களில் கடைப்பிடிக்கப்படும் அதே முறையையே பழக்கம் என்ற பேரால் பின்பற்றுகிறார்கள் என்கிறார்கள்.

*************

அந்தக்காலத்துப் பள்ளிக்கூடங்களில், மாணவர்களை அடிக்க ஆசிரியர்கள் மேசை மேல் ஒரு பிரம்பு இருக்கும்.  அது தவறு செய்யும் அல்லது சரியாகப் படிக்காத மாணவர்களை அடித்துத் திருத்துவதற்காக என்றுதான் நான் வெகுகாலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிற்காலத்தில், நானே ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்கப் போனபோதுதான், ஆசிரியர் கைப்பிரம்பின் மகிமை எனக்குப் புரிந்தது.  மாணவர்களைக் கையால் தொட்டு அடித்தால் தீட்டு ஒட்டிக்கொள்ளுமாம், அதற்காகத்தான் அந்தக் காலத்து ஆசிரியர்கள் இந்தப் பிரம்பால் அடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்களாம்.

*************

கோயில்களிலும் எல்லோரும் நுழைந்துவிட முடியாது.  கோபுர வாசலுக்கு வெளியே நின்று கும்பிட வேண்டிய ஜாதி, கொடிமரம் வரையில் செல்லக் கூடிய ஜாதி என்று மனிதர்களைப் பிரித்து வைத்திருந்த காலம் அது.  தாழ்த் தப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாடார் பெருமக்களும் கோயிலில் நுழைய முடியாது என்றிருந்தது.  இந்த ஜாதிப் பிரிவினைக் கொடுமையினால் காலஞ்சென்ற காஞ்சி பெரியவர் கூட சிதம்பரம் கோயிலுக்குள் நுழையாமல் வெளியே நின்றபடியே கும்பிட்டுவிட்டுப் போய்விட்டார் என்று சொல்லுவார்கள்.

காஞ்சிப்பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திர சேகரேந்திர சுவாமிகள் பீடாதிபதியான பிறகு ஒரு முறை நாடு முழுவதும் சஞ்சரித்து, க்ஷேத்திராடனம் செய்து கொண்டே இருந்தாராம்.  அப்போது அவர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வரும்போது அங்கே அவருக்கு கோபுர வாசலில் பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் செல்வது என்று சில பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.  இதனைக் கேள்விப்பட்ட சிதம்பரம் தீட்சிதர்கள், காஞ்சி சாமியாருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கக்கூடாது என்று எதிர்த்தார்களாம்.  காஞ்சியார் ஸ்மார்த்த பிராமணர் என்றும் தீட்சிதர்கள் காரணம் கூறினார்களாம்.  இதனால் வருத்தமடைந்த சங்கராச்சாரியார் கோயிலுக்குள் நுழைய விரும்பாமல் வெளியே நின்றே தரிசனம் செய்துவிட்டுப் போய்விட்டார்.  அதன்பிறகு பல வருடங்கள் வரையில் அவரால் அதை மறக்க முடியவில்லை.  மாராட்டிய மாநிலம் சதாரா என்ற ஊரில் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு தனவணிகர் மூலம் சிதம்பரம் நடராசர் கோயிலைப்போலவே உத்தர சிதம்பரம் என்ற பெயரில் ஒரு கோயிலை உருவாக்கி அதில் சிதம்பரம் தீட்சிதர்களில் சிலரையே அர்ச்சகராக நியமித்தார் என்று சொல்லுவார்கள்.  அந்த அளவுக்-கு ஜாதி என்பது மகாவிஷ்ணுவின் படுக்கை என்று சொல்லப்படுகிற ஆயிரம் நாவுபடைத்த ஆதிசேஷன் மாதிரி படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்த காலம் அது!

இத்தகைய சமூகச் சூழ்நிலைகள் காரணமாகத்தான் தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியைக் காட்டிலும் தஞ்சை மாவட்டத்தில் பெரியாரின் இயக்கம் பலமாக வேரூன்ற முடிந்தது.  இவைகளே என்னையும் திராவிடர் கழக அனுதாபியாக ஆக்கியது.

*************

திராவிடர் கழகத்துக்காரர்களை குடைத்துணிக் கூட்டம் என்று அந்தக் காலத்தில் கேலி செய்வார்கள்.  அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருப்பதை இவ்வாறு கேலி செய்வார்கள்.  அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை அம்மாசிக் கூட்டம் என்பார்கள்.  காரணம், குடியானவர்களுக்கு அமாவாசை அன்றுதான் லீவு கிடைக்கும்.  அந்த நாளில்தான் அவர்களைத் திரட்டி, கூட்டம் போட்டுப் பேசுவார்கள் கம்யூனிஸ்ட்கள்.

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் இயக்கத்தை வலுவாகக் கட்டியதில் (காலஞ்சென்ற) பி.சீனிவாசராவுக்குப் பெரும் பங்குண்டு.  மிராசுதார்கள் ஏவிவிடும் ரவுடித்தனம், அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட போலீசின் அடக்குமுறை, தடியடி தர்பார், துப்பாக்கிச் சூட்டுத் துரைத்தனம் ஆகியவைகளுக்கு மத்தியில் சளைக்காமல் பாடுபட்டு விவசாய இயக்கத்தைப் பலப்படுத்தியவர் அவர்.  ஒரு சமயம் விவசாய இயக்கத்தை ஒடுக்க மிராசுதார்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனிவாசராவுடன் தோளோடு தோள் நின்று விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடியவர்களில் மணலூர் மணியம்மாளுக்குக் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு.
புத்தக விற்பனையில் உதவ அவருக்கு ஒரு ஆள் தேவைப்பட்டபோது, திருவாரூர் நகராட்சி அலுவலகத்தின் வாசலில் மாணவர் சக்தி என்ற பெயரில் பெட்டிக் கடை வைத்திருந்த நாகப்பன் மூலம் என்னை அந்த வேலைக்கு அழைத்தார் மணியம்மாள்.  அப்போது நான் திராவிடர் கழகத்தவரோடு நெருக்கம் கொண்டவனாக இருந்தபோதிலும், புத்தகம் விற்கும் வேலை எனக்குப் பிடித்திருந்தது.  அவரிடம் வேலைக்குச் சேர்ந்தேன்.

நாள் ஒன்றுக்கு எட்டணா சம்பளம்.  அது அந்தக் காலத்தில் பெரிய தொகை.  (அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப்பின் பயிற்சி பெறாத ஆசிரியராக ஒரு ஆரம்பப் பள்ளியில் வேலை கிடைத்தது.  அந்த வேலைக்கு சம்பளம் 18 ரூபாய், பஞ்சப்படி 18 ரூபாய்தான்).  மணியம்மாளுடன் சேர்ந்து கட்சிப் பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில், அம்மாசிக் கூட்டங்களில் புத்தகம் விற்ற வேளையில், அந்தப் புத்தகங்களையும் படித்துவிடுவேன். கட்சியின் வட்டாரத் தலைவர்களைச் சந்திக்கும்போது படித்த புத்தகங்களில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களைப்பற்றிக் கேட்பேன்.  மிகவும் பொறுமையாக அவர்கள் எனக்கு விளக்கமளிப்பார்கள்.  இப்படி கட்சிக் கொள்கைகளை விளக்குவதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கும் ஆர்வமும் அக்கறையும் தனிதான்.  பின்னர் ஒரு காலகட்டத்தில் காலஞ்சென்ற கே. பாலதண்டாயுதத்திடம் பாடம் கேட்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
இப்படி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் எனக்கு மணியம்மாள் மூலம் நெருக்கம் ஏற்பட்டாலும்கூட, தஞ்சை மாவட்டத்தில் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த பெரியார் இயக்கமே என்னை மிகவும் ஈர்த்தது.  பெரியாரின் கொள்கைகள் _ அவைகளை விளக்க அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் அழகு தமிழில் எழுதிய புத்தகங்கள், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் துணிச்சல் மிகுந்த நாடக மேடைப் பிரச்சாரம் போன்றவை _ படித்த இளைஞர்கள் மத்தியிலும் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் , சிறுகடை வணிகர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவிய அந்த நேரத்தில் நானும் திராவிடர் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டது ஒன்றும் அதிசயமல்ல.

*************

வேலை எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.  ஒருநாள் திராவிடர் கழகத் தலைவர் சிங்காராயருடன் நகரசபைத் தலைவர் வி.சாம்பசிவம் அவர்களது வீட்டுக்குப் போயிருந்தேன்.  பேச்சுக்கிடையே நான் வேலை இல்லாமல் இருப்பது குறித்து அவர்களிருவரும் கவலை தெரிவித்தார்கள்.  அப்போது சிங்கராயர், திருச்சியில் அய்யா ஒரு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறார்.  நீங்கள் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்று சொன்னார்.  உடனடியாக தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார் சாம்பசிவம்.

மறுநாளே நான் திருச்சி சென்றேன்.  அப்போதெல்லாம் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு பஸ் வசதி கிடையாது.  ரயிலில் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து திருச்சி செல்லவேண்டும்.  நான் போன ரயில் மிகவும் காலதாமதமாகத்தான் தஞ்சையைச் சென்றடைந்தது.  அதனால் திருச்சி செல்லும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை.  காத்திருந்து அடுத்த ரயிலில் திருச்சி போனபோது இரவு 9 மணி ஆகிவிட்டது.

திருச்சியில் பெரியார் மாளிகை புத்தூரில் இருக்கிறது.  இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தேன்.  அய்யா அந்த நேரத்திலும் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார்.  என்னைக்கண்டதும், வாங்க, எங்கே இவ்வளவு தூரம்! என்று கேட்டார்.  என்னை சிங்கராயர், யாகூப்புடன் அடிக்கடிப் பார்த்திருந்ததால், அய்யாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது.
சாம்பசிவம் தந்த கடிதத்தைக் கொடுத்தேன்.  அய்யா படித்துப் பார்த்துவிட்டு, உங்களை எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்திருந்தேனே.  ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே அட்மிஷன் எல்லாம் முடிந்து போய்விட்டதே; ஜூன் மாதக் கடைசியில் வந்து கேட்டால் எப்படி? என்று அன்போடு கடிந்து கொண்டார்!  தொடர்ந்து, சாப்பிட்டுவிட்டீங்களா? என்று கேட்டார்.  இல்லை என்றேன்.  உடனே மணியம்மையை அழைத்து எனக்குச் சாப்பாடு போடுமாறு சொன்னார்.

அய்யாவின் எதிரிலேயே அம்மா வழங்கிய உணவைச் சாப்பிட்டேன்.  சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அய்யா தனது உதவியாளர் கொரடாச்சேரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார்.  கிருஷ்ணமூர்த்தி எனக்கு நெருங்கிய நண்பர்.  திருவாரூரில் நண்பர் விசுவநாதன் நடத்தும் தட்டச்சுப் பயிலகத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர்.  அவரிடம், அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு வந்து நிற்கிறார் இவர்.  ஒவ்வொரு வகுப்பிலும் மேலும் அய்ந்து அய்ந்து இடங்கள் அனுமதிக்க முடியுமா என்று கேட்டு சுந்தரவடிவேலுக்கு எழுதுங்க; அனுமதி கிடைத்தால் முதலில் இவருக்குக் கடிதம் அனுப்பச் சொல்லுங்க என்றார் அய்யா.  என் எதிரிலேயே நண்பர் கிருஷ்ணமூர்த்தி, அன்று பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த நெ.து. சுந்தரவடிவேல் அவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தைத் தட்டச்சு செய்து அய்யாவிடம் காட்டினார்.

நான் சொன்னேன் என்று வக்கீலய்யாவிடம் இதைக் கொடுத்து, அனுப்பச் சொல்லுங்கள் என்றார்.  வக்கீல் அய்யா என்று குறிப்பிட்டது தி.பொ.வேதாசலம் அவர்களை.  அவர்தான் அப்போது பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.  அப்ப நான் வர்ரேங்க அய்யா என்று நான் எழுந்தபோது, இந்த நேரத்தில்  ரயில் இருக்கிறதா? என்று கேட்டார்.  இருக்கிறது என்றேன் நான்.  உடனடியாக வேன் டிரைவரை அழைத்து என்னை ரயில் நிலையத்தில் விட்டுவரச் சொன்னார்.  பத்து தினங்களுக்குப் பிறகு, எனக்கு பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர அனுமதி கிடைத்தது.  பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துவிட்டேன்.  மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே அதுபோல அங்கும் வகுப்பறையில் நுழைய முடியாதபடி எனக்குக் கஷ்டம் வந்து சேர்ந்தது.

அப்போது அந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வராக பிரபுதத்த பிரம்மச்சாரி என்பவர் பணிபுரிந்து வந்தார்.  அவரே எனது வகுப்பின் ஆசிரியர்.  அவர் மிகவும் கண்டிப்பானவர்.  புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் வாங்க என்னிடம் பணம் இல்லை.  அறை வாடகை, சாப்பாட்டுச் செலவுக்காக எனது பெற்றோர் ஒரு சிறு தொகையைத்தான் எனக்குக் கொடுத்திருந்தார்கள்; ஊரிலிருந்து அவர்கள் மறுபடியும் பணம் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவும் இடமில்லை.  இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வருகைப்பட்டியல் எடுத்து முடிந்ததும், என்னிடம் புத்தகம் வாங்கிவிட்டாயா என்று முதல்வர் கேட்பார்.  நான் இல்லை என்பேன்.  அப்படியானால் வெளியே போ என்பார்.  வகுப்பு ஆரம்பம் ஆவதற்கு முன்னாலேயே நான் வெளியே வந்துவிடுவேன்.

நான் வகுப்பறையிலிருந்து வெளியே வந்ததும், ஒரு மூலையில் அமர்ந்து கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.  இப்படி தினசரி வகுப்புக்குச் செல்லாமல், மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கும் என்னை அய்யா கவனித்துவிட்டார்.

மணியம்மையாரை அழைத்து, அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு, இவருக்காக மறுபடியும் அனுமதி வாங்கி இவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம்; இவர் வகுப்பறைக்கே போவதில்லை போலிருக்கிறதே; என்னவென்று விசாரித்தால் நல்லது என்று கூற, மணியம்மையார் என்னை அழைத்து விசாரித்தார்.  நான் எனது ஏழ்மை நிலையை விளக்கி, புத்தகம் வாங்க முடியாததால், வகுப்புக்குச் செல்ல முடியாதிருப்பது பற்றிச் சொன்னேன்.  அய்யாவிடம் வந்து சொல்லுங்கள் என்றார் அவர்.

அய்யாவிடம் சென்று சொன்னேன்.  உடனடியாக அவர் அங்கு நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சோமு என்பவரை அழைத்து எனக்கு புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கித்தரச் சொன்னார்.  பெரியார் அவர்களோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை.  ஆனால் இந்த வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் அவரது அன்பும், உதவியும், வழிகாட்டுதலும் இருப்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது

புதன், 9 அக்டோபர், 2024

தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்

 


மார்ச் 16-31

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.

நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.

தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.

நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.

எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)

இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.

அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.