பக்கங்கள்

திங்கள், 14 அக்டோபர், 2024

குடைத்தூணிக் கூட்டம் (சின்னகுத்தூசியார் நினைவு மலர்)

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஜூன் 16-30

நூல் : மூத்த பத்திரிகையாளர்  சின்னகுத்தூசியார் நினைவு மலர் வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,     105, ஜானி ஜான்கான் சாலை,     ராயப்பேட்டை, சென்னை – 14 மொத்தப் பக்கங்கள்:194 விலை: ரூ60/-

குடைத்தூணிக் கூட்டம்

இந்த மலரில் இடம் பெற்றுள்ள சின்னகுத்தூசி தியாகராஜன் அவர்களின் விரிவான பேட்டியிலிருந்து ஒரு பகுதி : எனக்கு ஊர் திருவாரூர்.  இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு முன்பு பிறந்தவன் நான்.  அப்பா ஒரு சமையல்காரர்.  அம்மாவும் வீடுகளில் சமையல் வேலை பார்த்தாங்க.  அவர்களைப் பொறுத்தவரையில் வைதீக மனோபாவமுள்ள, வைதீக நம்பிக்கையுள்ளவர்கள்தான்.  அப்பா பெயர் இராமநாதன்.  அம்மா பெயர் கமலம்.

நான் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, சமூகத்தில் நிலவிய ஜாதிபேதங்கள் _ ஏற்ற தாழ்வுகள் _ என்னை மிகவும் பாதித்தன.  பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிக் குழந்தைகளும் ஒரே வரிசையில் அமர்ந்து படிப்போம்.  ஒருவர் கடித்த அல்லது எச்சிற்படுத்திய பழங்களை, உணவுப் பண்டங்களை சேர்ந்து சாப்பிடுவோம்.  ஆனால், வீடு என்று வந்துவிட்டால் எல்லாக் குழந்தைகளும் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைந்துவிட முடியாது.  வாசல் திண்ணையோடு பள்ளிக்கூடத்து நேசம், தொடுதல் எல்லாமே முடிந்துவிடும்.

பிராமணர்களது வீடுகளில் இந்த பேதம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் _ ஒரே ஒரு உதாரணமே போதும், முழுவதையும் தெரிந்துகொள்ள.  வீட்டில் வாசல்படி தாண்டினவுடனே இடைச்சுழி ஒன்றிருக்கும்.  அந்தப் பகுதியை அவர்கள் ரேழி என்று சொல்லுவார்கள்.  அங்கே ஒரு மூலையில் மூங்கில் அல்லது சவுக்குக் கம்பு ஒன்றை வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் அவர்களது ஆடைகளை அவிழ்த்து அங்கே போட்டுவிட வேண்டும்.  பின்னர் அந்தக் குச்சியால் அவிழ்த்துப் போட்ட ஆடையை எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் போய் கிணற்றுப் படியில் உள்ள தொட்டியில் போட்டுவிட வேண்டும்.  அங்கே துவைத்து உலர வைத்த ஆடைகள் _ மடியாக _ கொடியில் தொங்கும். அவைகளை அணிந்து கொண்டுதான் வீட்டுக்குள் நுழைய வேண்டும்.  பள்ளியில் அணிந்திருந்த ஆடைகள் தீட்டுப்பட்டவை; தீட்டுப்பட்ட துணியை அணிந்து வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

வீடு கட்டும்போதே ஒவ்வொரு வீட்டுக்கும் பக்கத்தில் ஒரு சந்து வைத்தே வீட்டை அமைப்பார்கள்.  தஞ்சாவூர் ஜில்லாவில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கறவை மாடுகள், வண்டி மாடுகள், உழவு மாடுகள் இருக்கும்.  இந்த மாடுகளை மேய்த்து, குளிப்பாட்டிக் கொண்டு வரும் ஊழியர்கள், மலம் அள்ளும் ஊழியர்கள் எல்லாம் தாழ்ந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  அவர்கள் கொல்லைப் பக்கத்துக்கும் தொழுவத்திற்கும் வீட்டின் புனிதம் கெடாமல் போகவும் வரவுமே இப்படிப்பட்ட சந்துகளை அமைத்து வைத்திருந்தார்கள்.

சின்னக்குத்தூசி வாழ்ந்த அறை

ஓட்டல்களுக்கு அந்தக் காலத்தில் காப்பிகிளப்புகள் என்று பெயர்.  அங்கே சாப்பிடச் சென்றால், அங்கேயும் ஜாதி பேதமே கொடிகட்டிப் பறக்கும்.  பிராமணர்கள் சாப்பிடுவதற்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கும்.  அல்லது தட்டிகளால் மறைத்து ஒரு பகுதி இருக்கும்.  அதன் முகப்பில் பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று போர்டு வைக்கப்பட்டிருக்கும்.  பிராமணர் அல்லாத மற்ற ஜாதிக்காரர்கள் சாப்பிட என்றே தனியாக ஒரு பகுதி.  அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க ஓட்டல் முதலாளி அமர்ந்திருக்கும் மேசையருகே சென்றால், அந்த மேசைமீது ஒரு சொம்புத் தண்ணீர் இருக்கும்.

பிராமணர் அல்லாதார் தரும் காசுகளை அந்தச் சொம்பிலுள்ள தண்ணீரை எடுத்து அதன்மேல் தெளித்து தீட்டைப் போக்கிவிட்டே கல்லாவில் சேர்த்துக் கொள்வார்கள்.  தாழ்த்தப்பட்ட மக்கள் நிலையோ இன்னும் மோசம்.  அவர்களுக்கு இட்லியோ தோசையோ தந்தால் அவைகளைக் கையில்கூட தரமாட்டார்கள்; தரையில் வைத்துவிடுவார்கள்.  தொட்டுத் தந்தால் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே!  அவர்களுக்கு காப்பி, டீ தருவதற்கென்றே வாசல் தூணில் ஒரு சங்கிலியில் இணைக்கப்பட்ட மூங்கில் குழாய் முனையில் ஒரு அலுமினிய டம்ளர் தொங்கும். அந்த டம்ளரை எடுத்து நீட்டினால், மூங்கில் குழாய் வழியாக காப்பியை ஊற்றுவார்கள்.  குடித்துவிட்டு தூணருகே உள்ள தொட்டியிலிருந்து தண்ணீர்விட்டு டம்ளர்களைக் கழுவி, கவிழ்த்து வைக்க வேண்டியது காப்பி குடித்த தாழ்த்தப்பட்டவரின் வேலை.

இன்று கல்வியறிவும் நாகரிகமும் வளர்ந்துவிட்ட நிலையிலும்கூட தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஓட்டல்களில் மட்டும் சாப்பிட்ட இலையை, அவர் யாராக இருந்தாலும், தாமே எடுத்து குப்பைக் கூடையில் போட்டுவிட வேண்டும் என்ற நிலை நீடித்து வருகிறது. இதற்கு அவர்கள் ரகசியமாகக் கூறும் காரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.  மேசை துடைக்கும் பையன்கள்கூட, பிராமணரல்லாதாரில் மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களாம். இந்தப் பையன்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் இலையை எடுத்தால் அதன் மூலமும் தீட்டு பரவிடுமாம்.  அதனால் எல்லா ஜாதியினரும் அவரவர் சாப்பிட்ட இலையை அவரவர்களே எடுத்துவிட வேண்டும் என்கிறார்களாம்.  இந்த விஷயமெல்லாம் தெரியாத இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் புதிதாக ஓட்டல் திறந்தாலும், அவர்களும் மற்ற ஓட்டல்களில் கடைப்பிடிக்கப்படும் அதே முறையையே பழக்கம் என்ற பேரால் பின்பற்றுகிறார்கள் என்கிறார்கள்.

*************

அந்தக்காலத்துப் பள்ளிக்கூடங்களில், மாணவர்களை அடிக்க ஆசிரியர்கள் மேசை மேல் ஒரு பிரம்பு இருக்கும்.  அது தவறு செய்யும் அல்லது சரியாகப் படிக்காத மாணவர்களை அடித்துத் திருத்துவதற்காக என்றுதான் நான் வெகுகாலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிற்காலத்தில், நானே ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்கப் போனபோதுதான், ஆசிரியர் கைப்பிரம்பின் மகிமை எனக்குப் புரிந்தது.  மாணவர்களைக் கையால் தொட்டு அடித்தால் தீட்டு ஒட்டிக்கொள்ளுமாம், அதற்காகத்தான் அந்தக் காலத்து ஆசிரியர்கள் இந்தப் பிரம்பால் அடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்களாம்.

*************

கோயில்களிலும் எல்லோரும் நுழைந்துவிட முடியாது.  கோபுர வாசலுக்கு வெளியே நின்று கும்பிட வேண்டிய ஜாதி, கொடிமரம் வரையில் செல்லக் கூடிய ஜாதி என்று மனிதர்களைப் பிரித்து வைத்திருந்த காலம் அது.  தாழ்த் தப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாடார் பெருமக்களும் கோயிலில் நுழைய முடியாது என்றிருந்தது.  இந்த ஜாதிப் பிரிவினைக் கொடுமையினால் காலஞ்சென்ற காஞ்சி பெரியவர் கூட சிதம்பரம் கோயிலுக்குள் நுழையாமல் வெளியே நின்றபடியே கும்பிட்டுவிட்டுப் போய்விட்டார் என்று சொல்லுவார்கள்.

காஞ்சிப்பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திர சேகரேந்திர சுவாமிகள் பீடாதிபதியான பிறகு ஒரு முறை நாடு முழுவதும் சஞ்சரித்து, க்ஷேத்திராடனம் செய்து கொண்டே இருந்தாராம்.  அப்போது அவர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வரும்போது அங்கே அவருக்கு கோபுர வாசலில் பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் செல்வது என்று சில பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.  இதனைக் கேள்விப்பட்ட சிதம்பரம் தீட்சிதர்கள், காஞ்சி சாமியாருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கக்கூடாது என்று எதிர்த்தார்களாம்.  காஞ்சியார் ஸ்மார்த்த பிராமணர் என்றும் தீட்சிதர்கள் காரணம் கூறினார்களாம்.  இதனால் வருத்தமடைந்த சங்கராச்சாரியார் கோயிலுக்குள் நுழைய விரும்பாமல் வெளியே நின்றே தரிசனம் செய்துவிட்டுப் போய்விட்டார்.  அதன்பிறகு பல வருடங்கள் வரையில் அவரால் அதை மறக்க முடியவில்லை.  மாராட்டிய மாநிலம் சதாரா என்ற ஊரில் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு தனவணிகர் மூலம் சிதம்பரம் நடராசர் கோயிலைப்போலவே உத்தர சிதம்பரம் என்ற பெயரில் ஒரு கோயிலை உருவாக்கி அதில் சிதம்பரம் தீட்சிதர்களில் சிலரையே அர்ச்சகராக நியமித்தார் என்று சொல்லுவார்கள்.  அந்த அளவுக்-கு ஜாதி என்பது மகாவிஷ்ணுவின் படுக்கை என்று சொல்லப்படுகிற ஆயிரம் நாவுபடைத்த ஆதிசேஷன் மாதிரி படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்த காலம் அது!

இத்தகைய சமூகச் சூழ்நிலைகள் காரணமாகத்தான் தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியைக் காட்டிலும் தஞ்சை மாவட்டத்தில் பெரியாரின் இயக்கம் பலமாக வேரூன்ற முடிந்தது.  இவைகளே என்னையும் திராவிடர் கழக அனுதாபியாக ஆக்கியது.

*************

திராவிடர் கழகத்துக்காரர்களை குடைத்துணிக் கூட்டம் என்று அந்தக் காலத்தில் கேலி செய்வார்கள்.  அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருப்பதை இவ்வாறு கேலி செய்வார்கள்.  அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை அம்மாசிக் கூட்டம் என்பார்கள்.  காரணம், குடியானவர்களுக்கு அமாவாசை அன்றுதான் லீவு கிடைக்கும்.  அந்த நாளில்தான் அவர்களைத் திரட்டி, கூட்டம் போட்டுப் பேசுவார்கள் கம்யூனிஸ்ட்கள்.

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் இயக்கத்தை வலுவாகக் கட்டியதில் (காலஞ்சென்ற) பி.சீனிவாசராவுக்குப் பெரும் பங்குண்டு.  மிராசுதார்கள் ஏவிவிடும் ரவுடித்தனம், அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட போலீசின் அடக்குமுறை, தடியடி தர்பார், துப்பாக்கிச் சூட்டுத் துரைத்தனம் ஆகியவைகளுக்கு மத்தியில் சளைக்காமல் பாடுபட்டு விவசாய இயக்கத்தைப் பலப்படுத்தியவர் அவர்.  ஒரு சமயம் விவசாய இயக்கத்தை ஒடுக்க மிராசுதார்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனிவாசராவுடன் தோளோடு தோள் நின்று விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடியவர்களில் மணலூர் மணியம்மாளுக்குக் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு.
புத்தக விற்பனையில் உதவ அவருக்கு ஒரு ஆள் தேவைப்பட்டபோது, திருவாரூர் நகராட்சி அலுவலகத்தின் வாசலில் மாணவர் சக்தி என்ற பெயரில் பெட்டிக் கடை வைத்திருந்த நாகப்பன் மூலம் என்னை அந்த வேலைக்கு அழைத்தார் மணியம்மாள்.  அப்போது நான் திராவிடர் கழகத்தவரோடு நெருக்கம் கொண்டவனாக இருந்தபோதிலும், புத்தகம் விற்கும் வேலை எனக்குப் பிடித்திருந்தது.  அவரிடம் வேலைக்குச் சேர்ந்தேன்.

நாள் ஒன்றுக்கு எட்டணா சம்பளம்.  அது அந்தக் காலத்தில் பெரிய தொகை.  (அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப்பின் பயிற்சி பெறாத ஆசிரியராக ஒரு ஆரம்பப் பள்ளியில் வேலை கிடைத்தது.  அந்த வேலைக்கு சம்பளம் 18 ரூபாய், பஞ்சப்படி 18 ரூபாய்தான்).  மணியம்மாளுடன் சேர்ந்து கட்சிப் பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில், அம்மாசிக் கூட்டங்களில் புத்தகம் விற்ற வேளையில், அந்தப் புத்தகங்களையும் படித்துவிடுவேன். கட்சியின் வட்டாரத் தலைவர்களைச் சந்திக்கும்போது படித்த புத்தகங்களில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களைப்பற்றிக் கேட்பேன்.  மிகவும் பொறுமையாக அவர்கள் எனக்கு விளக்கமளிப்பார்கள்.  இப்படி கட்சிக் கொள்கைகளை விளக்குவதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கும் ஆர்வமும் அக்கறையும் தனிதான்.  பின்னர் ஒரு காலகட்டத்தில் காலஞ்சென்ற கே. பாலதண்டாயுதத்திடம் பாடம் கேட்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
இப்படி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் எனக்கு மணியம்மாள் மூலம் நெருக்கம் ஏற்பட்டாலும்கூட, தஞ்சை மாவட்டத்தில் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த பெரியார் இயக்கமே என்னை மிகவும் ஈர்த்தது.  பெரியாரின் கொள்கைகள் _ அவைகளை விளக்க அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் அழகு தமிழில் எழுதிய புத்தகங்கள், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் துணிச்சல் மிகுந்த நாடக மேடைப் பிரச்சாரம் போன்றவை _ படித்த இளைஞர்கள் மத்தியிலும் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் , சிறுகடை வணிகர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவிய அந்த நேரத்தில் நானும் திராவிடர் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டது ஒன்றும் அதிசயமல்ல.

*************

வேலை எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.  ஒருநாள் திராவிடர் கழகத் தலைவர் சிங்காராயருடன் நகரசபைத் தலைவர் வி.சாம்பசிவம் அவர்களது வீட்டுக்குப் போயிருந்தேன்.  பேச்சுக்கிடையே நான் வேலை இல்லாமல் இருப்பது குறித்து அவர்களிருவரும் கவலை தெரிவித்தார்கள்.  அப்போது சிங்கராயர், திருச்சியில் அய்யா ஒரு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறார்.  நீங்கள் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்று சொன்னார்.  உடனடியாக தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார் சாம்பசிவம்.

மறுநாளே நான் திருச்சி சென்றேன்.  அப்போதெல்லாம் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு பஸ் வசதி கிடையாது.  ரயிலில் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து திருச்சி செல்லவேண்டும்.  நான் போன ரயில் மிகவும் காலதாமதமாகத்தான் தஞ்சையைச் சென்றடைந்தது.  அதனால் திருச்சி செல்லும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை.  காத்திருந்து அடுத்த ரயிலில் திருச்சி போனபோது இரவு 9 மணி ஆகிவிட்டது.

திருச்சியில் பெரியார் மாளிகை புத்தூரில் இருக்கிறது.  இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தேன்.  அய்யா அந்த நேரத்திலும் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார்.  என்னைக்கண்டதும், வாங்க, எங்கே இவ்வளவு தூரம்! என்று கேட்டார்.  என்னை சிங்கராயர், யாகூப்புடன் அடிக்கடிப் பார்த்திருந்ததால், அய்யாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது.
சாம்பசிவம் தந்த கடிதத்தைக் கொடுத்தேன்.  அய்யா படித்துப் பார்த்துவிட்டு, உங்களை எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்திருந்தேனே.  ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே அட்மிஷன் எல்லாம் முடிந்து போய்விட்டதே; ஜூன் மாதக் கடைசியில் வந்து கேட்டால் எப்படி? என்று அன்போடு கடிந்து கொண்டார்!  தொடர்ந்து, சாப்பிட்டுவிட்டீங்களா? என்று கேட்டார்.  இல்லை என்றேன்.  உடனே மணியம்மையை அழைத்து எனக்குச் சாப்பாடு போடுமாறு சொன்னார்.

அய்யாவின் எதிரிலேயே அம்மா வழங்கிய உணவைச் சாப்பிட்டேன்.  சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அய்யா தனது உதவியாளர் கொரடாச்சேரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார்.  கிருஷ்ணமூர்த்தி எனக்கு நெருங்கிய நண்பர்.  திருவாரூரில் நண்பர் விசுவநாதன் நடத்தும் தட்டச்சுப் பயிலகத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர்.  அவரிடம், அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு வந்து நிற்கிறார் இவர்.  ஒவ்வொரு வகுப்பிலும் மேலும் அய்ந்து அய்ந்து இடங்கள் அனுமதிக்க முடியுமா என்று கேட்டு சுந்தரவடிவேலுக்கு எழுதுங்க; அனுமதி கிடைத்தால் முதலில் இவருக்குக் கடிதம் அனுப்பச் சொல்லுங்க என்றார் அய்யா.  என் எதிரிலேயே நண்பர் கிருஷ்ணமூர்த்தி, அன்று பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த நெ.து. சுந்தரவடிவேல் அவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தைத் தட்டச்சு செய்து அய்யாவிடம் காட்டினார்.

நான் சொன்னேன் என்று வக்கீலய்யாவிடம் இதைக் கொடுத்து, அனுப்பச் சொல்லுங்கள் என்றார்.  வக்கீல் அய்யா என்று குறிப்பிட்டது தி.பொ.வேதாசலம் அவர்களை.  அவர்தான் அப்போது பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.  அப்ப நான் வர்ரேங்க அய்யா என்று நான் எழுந்தபோது, இந்த நேரத்தில்  ரயில் இருக்கிறதா? என்று கேட்டார்.  இருக்கிறது என்றேன் நான்.  உடனடியாக வேன் டிரைவரை அழைத்து என்னை ரயில் நிலையத்தில் விட்டுவரச் சொன்னார்.  பத்து தினங்களுக்குப் பிறகு, எனக்கு பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர அனுமதி கிடைத்தது.  பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துவிட்டேன்.  மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே அதுபோல அங்கும் வகுப்பறையில் நுழைய முடியாதபடி எனக்குக் கஷ்டம் வந்து சேர்ந்தது.

அப்போது அந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வராக பிரபுதத்த பிரம்மச்சாரி என்பவர் பணிபுரிந்து வந்தார்.  அவரே எனது வகுப்பின் ஆசிரியர்.  அவர் மிகவும் கண்டிப்பானவர்.  புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் வாங்க என்னிடம் பணம் இல்லை.  அறை வாடகை, சாப்பாட்டுச் செலவுக்காக எனது பெற்றோர் ஒரு சிறு தொகையைத்தான் எனக்குக் கொடுத்திருந்தார்கள்; ஊரிலிருந்து அவர்கள் மறுபடியும் பணம் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவும் இடமில்லை.  இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வருகைப்பட்டியல் எடுத்து முடிந்ததும், என்னிடம் புத்தகம் வாங்கிவிட்டாயா என்று முதல்வர் கேட்பார்.  நான் இல்லை என்பேன்.  அப்படியானால் வெளியே போ என்பார்.  வகுப்பு ஆரம்பம் ஆவதற்கு முன்னாலேயே நான் வெளியே வந்துவிடுவேன்.

நான் வகுப்பறையிலிருந்து வெளியே வந்ததும், ஒரு மூலையில் அமர்ந்து கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.  இப்படி தினசரி வகுப்புக்குச் செல்லாமல், மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கும் என்னை அய்யா கவனித்துவிட்டார்.

மணியம்மையாரை அழைத்து, அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு, இவருக்காக மறுபடியும் அனுமதி வாங்கி இவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம்; இவர் வகுப்பறைக்கே போவதில்லை போலிருக்கிறதே; என்னவென்று விசாரித்தால் நல்லது என்று கூற, மணியம்மையார் என்னை அழைத்து விசாரித்தார்.  நான் எனது ஏழ்மை நிலையை விளக்கி, புத்தகம் வாங்க முடியாததால், வகுப்புக்குச் செல்ல முடியாதிருப்பது பற்றிச் சொன்னேன்.  அய்யாவிடம் வந்து சொல்லுங்கள் என்றார் அவர்.

அய்யாவிடம் சென்று சொன்னேன்.  உடனடியாக அவர் அங்கு நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சோமு என்பவரை அழைத்து எனக்கு புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கித்தரச் சொன்னார்.  பெரியார் அவர்களோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை.  ஆனால் இந்த வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் அவரது அன்பும், உதவியும், வழிகாட்டுதலும் இருப்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக