பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இந்து மதம் என்பது உண்டா? -1


காணொலியில் தமிழர் தலைவர் இந்து மதம் என்பது உண்டா?


* கலி. பூங்குன்றன்


இந்துத்துவா என்னும் தொடர் சொற்பொழிவை நேற்று மாலை 6.30 மணிக்குக் (6.7.2020) காணொலி மூலம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடங்கினார்.



இந்துத்துவா, இந்து மதம் பற்றி பல நூல்களை எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்தி வைத்தார் 'ஹிந்துத்வா' (Hindutva) எனும் தலைப்பில் ஜோதிர் மாயி ஷர்மா அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.


இன்னொரு நூல் பேராசிரியர் பத்திரிகையாளர் பிரஜ் ரஞ்சன் அவர்களால் ஆங்கிலத்தில் (De Brahmanising History: Dominance and Resistance in Indian Society) எழுதப்பட்ட நூல் - க. பூரணச்சந்திரன் அவர் களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது (வரலாற்றில் பிராமண நீக்கம்). மூன்றாவது நூல் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்டு உயிர்மைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.


நான்காவது நூல் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.  இறையன் அவர்களால் எழுதப்பட்ட "இல்லாத இந்து மதம்" என்ற நூல்: இது திராவிடர் கழக (இயக்க) வெளியீடாகும்.


இந்துமதம் இந்து மதம் என்று சொல்லுகிறார்களே - அப்படியொரு பெயர் இந்துமத ஆதாரங்களில் உண்டா என்ற வெடிக்குண்டுக் கேள்வியைத் தூக்கிப் போட்டார்.


ஆரிய மதம், பிராமண மதம், சனாதன மதம் என்ற வழங்கப்பட்டு வந்திருக்கிறதே தவிர  ஹிந்து மதம் என்று எங்கேயும் காணோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு இந்த இந்து மதவாதிகள், சங்பரிவார்கள் எதிரிகளாக நிறுத்தும், கிறித்தவர்கள்தான் - வெள்ளைக்காரர்கள்தான் இந்து மதம் என்ற பெயரைக் கொடுத்தவர்கள் ஆவார்கள்.


இதனை பார்ப்பனர் மஹா பெரியவாள் என்று போற்றும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.


"நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக் காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்துப் பெயரை வைத்திருக்கா விட்டால், ஒவ்வொரு ஊரிலும், சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார், உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போதைக்கு ஹிந்து சமூகம் என்ற பொதுப் பெயரில் சொல்லப்பட்டும் சமுதாயத்தை இப்படிஏழெட்டாக தனித்தனி மதம் என்று பிரித்து விட்டால், அதற்கப்புறம் ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தவர்கள் தான் அதிகத் தொகையாக இருப்பார்கள். அதாவது இப்போது தேசத்தில் இரண்டு பகுதிகளில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாகிஸ்தானாகியிருக்கும். எத்தனைக் கிருத்திருமங்கள் செய்து, பாகிஸ்தானைப் பிரித்த வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு 'ஹிந்து' என்ற பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும்படியான நன்மையையே செய்திருக்கிறான்" என்று சீனியர் சங்கராச்சாரியார் சொன்னதுண்டே ஒப்புக் கொண்டதும் உண்டே! (ஆதாரம்: 'தெய்வத்தில் குரல்' முதல் பாகம் பக்கம் 267, 268)


இத்தகைய ஆதாரங்களை எடுத்து வைத்த தலைவர் ஆசிரியர் அவர்கள் 'ஹிந்து' என்ற சொல்லுக்கு உயர்நீதிமன்றம் என்ன சொன்னது என்பதையும் ஆதாரத்துடன் கூறினார்.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் பி.வி.ராஜமன்னார் கூறியதுதான் அது.


"When I speak of Hinduism, I am actually conscious of the vague connotation of that word. Hinduism is not a religion in the sense in which  we understand it is not India in origin, nor was it ever used by the Hindus as the same name of their religion. But the word has come to stay"


(Michael vs Venkatesan case - MLJ 239/1952)


"இந்து மதம் என்று குறிப்பிடுகையில், அச்சொல் எவ்வளவு தோராயமானதொரு நிலையைக் குறிக்கிறது என்பதை நான் அறிவேன். நாம் அறிந்த வகையில் அது ஒரு மதம் என்றே சொல்ல முடியாது. இந்துக்கள் என்பவர்கள் இந்தச் சொல்லையே அம்மதத்தினைக் குறிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. என்றாலும் அச்சொல் நடைமுறைக்கு வந்து விட்டது" என்று  ஒரு நீதிபதியே குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.


அதோடு இன்னொரு முக்கிய தகவலையும் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.


1893ஆம் ஆண்டு விவேகானந்தர் அமெரிக்கா சென்றார் - சிகாகோ நகரில் இந்து மதத்தைப்பற்றி சும்மா பிளந்து தள்ளினார் என்று நீட்டி முழங்குகிறார்களே - அதன் உண்மைத் தன்மை என்ன? அங்கு நடைபெற்றது "இந்துமதம்" என்ற பெயரில் நடைபெற்ற மாநாடுதானா?


அங்குப் பேசப்பட்ட மதங்கள் பற்றிய பெயர்களின் பட்டியல் என்ன கூறுகிறது?


(1) Buddhism (பவுத்தம்)


(2) Shintoism (ஷிந்தோயிசம் ஜப்பான்)


(3) Brahminism (பிராமணியம்)


(4) Judaism (யூதம்)


(5) Christianity (கிறித்துவம்)


(6) Mohammedanism (இஸ்லாம்)


இந்தப் பட்டியலில் பிராமண மதம் - பிராமணீசம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர ஹிந்து மதம் என்று குறிப்பிடப்பட வில்லையே!  இதற்கு என்ன பதில்?


அடுக்கடுக்கான வினாக்களையும், தரவுகளையும் எடுத்துரைத்தார் கழகத் தலைவர்.


இதற்கிடையே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் என்ற பெயரில் சில சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.


தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், விவேகானந்தர்,  போன்ற சீர்திருத்தக்காரர்கள் என்றெல்லாம் பேசப்படு பவர்கள் உண்மையில் அவர்கள்  செய்தவை சமூக சீர்திருத்தம் அல்ல - இந்து சமய சீர்திருத்தங்களே!


இவர்களின் நோக்கமெல்லாம் இந்து மதத்தை  சர்ச்சைகளிலிருந்து காப்பாற்றுவதே!


எடுத்துக்காட்டாக தயானந்த சரஸ்வதியை எடுத்துக் கொண்டால் அவதாரங்கள் உண்மையல்ல என்றார், புரோகிதர்களை ஏற்கவில்லை. பார்ப்பனர்களைக் கேலி செய்திருக்கிறார், மதச் சின்னங்கள் அணிவதை நையாண்டி செய்திருக்கிறார்.


அதே நேரத்தில் வருணாசிரமம், சனாதனம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்.


எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி   சமஸ்கிருதம் எனகிறார். வேதத்தில் இல்லாத விஞ்ஞானம் வேறு எங்கும் இல்லை என்கிறார்.இது ஏமாற்று வேலை யல்லாமல் சீர்திருத்தம் என்று கருத முடியுமா? குஜராத் பார்ப்பனரான  இவர் 59 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.


வங்காளத்தைச் சேர்ந்தவர் அரவிந்தர். வெளிநாடு எல்லாம் சென்று படித்தவர் தான் - சனாதனத்துக்கு எதிரான பிரிட்டனை எதிர்க்க வேண்டும் என்று கூறி இந்தியாவுக்குள் இருந்தால் கைது செய்யப்படலாம் என்பதற்காக பிரஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பாண்டிச்சேரிக்குச் சென்று ஆசிரமம் அமைத்தவர். சீர்திருத்தம் பேசினாலும் இந்து மத அடிப்படை வாதியாகவே வாழந்தவர்.


இந்து மதத்திலும் சீர்திருத்தத்திற்கு இடம் உண்டு என்று சொல்லி, அதே நேரத்தில் இந்து மதத்தின் ஆணிவேரான சனாதனத்தையும் வருணதர்மத்தையும் காப்பாற்றக் கூடிய ஏமாற்றுக்காரர்கள் இவர்கள் என்று படம் பிடித்துக் காட்டினார் தமிழர் தலைவர்.


இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்று பேச ஆரம்பித்துள்ளனர்.


இதற்கு ஆரம்பப் புள்ளி வைத்தார் வி.டி. சாவர்க்கர். இதைப்பற்றி எல்லாம் தொடர்ந்து பேசுவோம் என்று கூறி முதல்நாள் சொற்பொழிவை நிறைவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக