பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா ?

 

'இந்துத்துவா'பற்றி காணொலியில் தமிழர் தலைவர் "இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா?"


* கலி. பூங்குன்றன்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'இந்துத்துவா' எனும் தொடரில் தனது இரண்டாம் நாள் சொற்பொழிவை நேற்று (7.9.2020) மாலை 6.30 மணிக்குக் காணொலி மூலம் நிகழ்த்தினார்!



இந்து மதச் சீர்திருத்த வாதிகள் போல தோற்றமளித்து, அதே நேரத்தில் இந்து மதத்தின் அடிப்படை வாதங்களான சனாதனம், வருணாசிரமத்தைக் கட்டிக் காப்பதில் கவனமாக இருந்தவர்கள் என்ற வகையில் தயானந்த சரஸ்வதி, அரவிந்தகோஷ், விவேகானந்தர், வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். என்று வரிசைப்படுத்தலாம்!


இதில் விவேகானந்தர் (இயற்பெயர் நரேந்திரன்) மிஷனரி கல்விக் கூடத்தில் படித்து ஆங்கிலத்தில் ஈர்ப்பாகப் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர் - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்.


தொடக்கத்தில் கடவுள் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாத Agnostic என்ற நிலையில்இருந்தார்.


பிறகு பிரம்ம சமாஜம் பக்கம் சென்றார். கடைசியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் போனார் - அவரைக்கூடத்  தொடக்கத்தில் ஒரு பைத்தியக்காரர் என்ற அளவில்தான் மதிப்பிட்டார். பிறகு எப்படியோ அவரின் சீடர் ஆனார். அதிலும்கூட அவர் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இராம கிருஷ்ணரோ காளிபக்தர் - இவரோ அதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.


இவர் அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் மாநாட்டில் ஆற்றிய உரைதான் பெரிதாகப் பேசப்படுகிறது.


அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரியான கருத்தினைக் கூறக் கூடியவர் - சீர்திருத்தக்காரர் போல சில இடங்களில் பேசுவார். ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படைவாதங்களை விட்டுக்கொடுக்காதவர்  அவரைப் பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறவர் பற்றி - தந்தை பெரியாரின் கருத்து எப்படி இருக்கும்? அமெரிக்காவிலேயே அவருக்கு விழா எடுக் கிறார்களே என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது "முட்டாள்தனம் என்பது உனக்கே சொந்தமா?" என்று கேட்டார் பெரியார்.


சிகாகோவுக்கு அவர் செல்ல உதவி புரிந்தவர் இராமநாதபுரம் ராஜாதான். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு விவேகானந்தரைப் பிடிக்காது; காரணம் விவேகானந்தர் ஒரு சூத்திரர்தானே! அதனால் தான் பார்ப்பனர்கள்பற்றி சில நேரங்களில் விவேகானந்தர் கடுமையாகத் தாக்கிப் பேசியதுண்டு.


அமெரிக்க மாநாட்டில் அவர் பேசும் தலைப்பு "இந்து மதம்" என்பதுபற்றியல்ல, மாறாக 'பிராமணியம்' எனும் தலைப்பில்தான் பேசினார்.


"பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியஇரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.


உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதைப் போதிப்பது நமது தர்மம்-


"சர்வே பவந்து சுகினஹ


சர்வே சந்து நிராமையா, சர்வே பத்ரானி


பாஷ்யந்து மாகசிஷித்துக்க


பாத்பவே, ஓம் சாந்தி,சாந்தி, சாந்தி"


எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். எல்லோரும் நோயின்றி இருக்க வேண்டும், எல்லோரும் வளத்தைக் காண வேண்டும்! யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று உபநிடதம் கூறுகிறது என்று சிகாகோ மாநாட்டில் எல்லோரும் வியக்கும்படி விவேகானந்தர் பேசினார்.


ஓரிடத்தில் இவர் பேசுவதை வைத்துக் கொண்டு இவர் இப்படிப்பட்டவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பச் சூழ்நிலையையொட்டிப் பேசக் கூடியவர்தான் இவர்.


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக இவர் ஒரு முறை தங்கி இருந்தபோது 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டவர்தான் இவர்.


(திராவிடக் கோத்திரம் என்று அவர் பதிலடிகொடுத்தவர்  சுந்தரனார் என்பது சுவையானது - ஏன் ஆழமான கருத்தும்கூட!)


சங்கராச்சாரியாரை சாடியதுண்டு. சூத்திரன் சந்நியாசம் ஆகக் கூடாது என்று சங்கராச்சாரியார் சொன்னார் அல்லவா -  விவேகானந்தரும் சூத்திரர் என்பதால் சங்கராச்சாரியார்மீது கோபம்.


புத்தரையும் சங்கரரையும் அவர் ஒப்பிட்டுக் கூறும்போது - 'சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல் மிகவும் கூர்மையாய் இருந்தது. ஆனாலும் அவரிடம் அகன்ற நோக்கமில்லை. வாதத்திலே தோல்வியடைந்த புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கிய சங்கரர் எங்கே, சிறு ஆட்டுக் குட்டியின் உயிரைக் காக்க தன் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்த புத்தர் எங்கே? என்று பேசிய இதே விவேகானந்தர்தான், புத்தரால்தான் நாட்டில் அகிம்சை உணர்வு மக்களிடம் ஏற்பட்டு சமூகம் வீழ்ச்சி அடைந்தது என்று குற்றம் சொன்னவரும் இதே விவேகானந்தர்தான்.


ஆரிய நாகரிகமே உலகில் சிறந்தது. இந்து மதத்தில் வருணதர்மம் என்பது உயர்வானது - சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.


இன்னொரு இடத்தில் இதற்கு நேர் எதிராகப் பேசுவார்.


"மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர் என்கிறார் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் ('தமிழர் மதம்'  பக்கம் 24).



விவேகானந்தர் இப்படியென்றால் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர்தான் 'இந்துத்துவா' என்ற ஒன்றை உருவாக்கியவர்.


'Hindutva'  என்ற நூலையும் இதற்காகவே எழுதியவர் - காந்தியார் கொலைக்கு மூளையாக இருந்தவர். சட்டத்தின் சந்துப் பொந்துகளில் நுழைந்து, தண்டனையிலிருந்து தப்பியவர்.


அந்தமான் சிறையில் இருந்தபோது எத்தனை முறை பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதற்குக் கணக்கு வழக்கு இல்லை - அப்படிப்பட்ட வீராதி வீராதி வீரர்தான் -  இந்த வீர சாவர்க்கார்.


இங்கிலாந்து சென்று படித்தவர். இத்தாலி சென்று மாஜினியைச் சந்தித்து வந்தவர். இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு மூலக்கரு இத்தாலிதான். ஆர்.எஸ்.எஸைத் தொடங்கிய முக்கியமானவர்களுள் ஒருவரான மூஞ்சே என்னும் பார்ப்பனர் பாசிஸ்ட் முசோலினியை நேரில் சென்று சந்தித்தவர். உங்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுவோம் என்று முசோலினியிடம் உறுதி அளித்து வந்தவர்!


இந்த சாவர்க்கார் இந்து மகா சபையின் தலைவராக 1938 முதல் 1943 வரை இருந்தவர். இவரைத் தொடர்ந்துதான் சியாமபிரசாத் முகர்ஜி அதன் தலைவராக இருந்தவர்.


இந்துத்துவா இந்துத் தேசியம் என்பதற்கு சாவர்க்கார் கொடுத்த விளக்கம் கவனிக்கத்தக்கது.


இப்படிச் சொன்ன ஒரு மதவெறியரைப்பற்றி என்ன பிரச்சாரம் என்றால் சாவர்க்கார் ஒரு நாத்திகர் என்பதுதான். இந்தக் கூட்டத்தின் தில்லுமுல்லுக்கு அளவேயில்லை.


இவர் கொடுத்த முக்கிய கோஷம்தான் "இந்து மதத்தை இராணுவமயமாக்கு! - இராணுவத்தை இந்துமயமாக்கு!" என்பதாகும்.


இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறு என்று வியாக் கியானம் செய்வார்கள். 'இந்து' என்பதை மய்யப்படுத்தி ஏன் குழப்பத்தைச் செய்யவேண்டும். வெவ்வேறு வகையில், மயக்கத்திற்கு இடம் அளிக்காத வகையில் சொற்களை உருவாக்க வேண்டியதுதானே - எதிலும் குழப்பம் - அதில் ஆதாயம் காண்பதே ஆரியம்.


இந்துமதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்றும் கூறுவார்கள். கேட்டால் உச்சநீதிமன்றமே அப்படிக் கூறி விட்டது என்பார்கள்.


2011ஆம் ஆண்டு மகாராட்டிரத் தேர்தலில் சிவசேனை சார்பில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி 'எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இந்தியாவில் முதன் முதலாக அமையும் இந்து மாநிலம் மகாராட்டிரம் தான்' என்று பேசினார்.


தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி - இந்த அடிப்படையில் மனோகர் ஜோஷியை எதிர்த்து நின்றவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.


நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறிய ஒரு வார்த்தையைக் கொண்டு இந்து மதம்என்பது ஒரு மதம் அல்ல - வாழ்க்கை நெறி என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.


அதே நீதிபதி ஜே.எஸ். வர்மா, தான் சொன்னது வேறு - அதைத் திருத்திப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறியதும் உண்டு.


கலாச்சார, மத, அரசியல் நோக்கங்களைக் கொண்ட கலவையாக இருப்பவையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியங்களாகும். இந்து (மத) தர்மத்தையும், இந்து சமஸ்கிருத கலாச்சாரத்தையும் காத்து வளர்ப்பதையும் இந்து ராஷ்டிரா என்னும் இந்து தேசத்தை உருவாக்குவதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு இது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நாதுராம் கோட்சேயினால் மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, பொதுமக்களின் பார்வைக்கேனும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அரசியல் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று 1948 ஜனவரி மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வற்புறுத்திக் கூறினார்.


 அதன் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டத்தில் இருந்த 'இந்து ராஷ்டிரா' என்ற சொற்றொடர் இவ்வாறுதான் நீக்கப்பட்டது. இனி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முற்றிலும் ஒரு கலாச்சார அமைப்பாகவே செயல்படும் என்றும், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாது என்றும் இந்த அமைப்பு அரசுக்கு உறுதி அளித்தது.


சாவர்க்கரால் எழுதப்பட்ட 'இந்துத்துவா' என்ற நூலில் அவரால் புதியதாக உருவாக்கப்பட்ட சொல்லாடலான 'இந்துத்துவா' என்பது, இந்து மதம் மற்றும் இந்து மக்களிடையே நிலவும் ஒட்டுறவை ஒத்த  பார்வையைத் தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள இயன்ற தனிச் சிறப்பு பெற்றதாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டுகொண்டது.


இந்துமதம்  - மதம்


இந்துத்துவா - மதத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டது அல்ல என்பது சாவர்க்கரின் கருத்து.


இந்து தேசம் என்ற ஒன்றால்


ஒரு பொதுவான கலாச்சாரத்தாலும்,


ஒரு பொதுவான வரலாற்றாலும்,


ஒரு பொதுவான தேசத்தாலும்,


ஒரு பொதுவான மதத்தினாலும்,


பண்பாடு இருப்பவர்கள் இந்துக்கள் ஆவர்.


"ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர்” என்பது சங்பரிவாரத்தின் முக்கிய அடிப்படை முழக்கமாக ஆகிவிட்டது.


இந்துத்துவாவின் மறைமுக செயல்திட்டம்.


(ஆதாரம்: வி.டி.சாவர்க்கரின்


இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 82)


இந்து என்பவன் யார்?


"இந்த தேசத்தை பாரத வர்ஷா என்றும், சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தை நாடு என்றும், புனித பூமி என்றும், தனது இந்து மதத்தின் தொட்டில் என்றும் எவன் ஒருவன்  கருதுகிறானோ அவனே இந்து என்பவன்.'


(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 38-39)


'சிந்து' என்ற சொல்லின் வளர்ச்சியைப் பற்றிய ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாம் இதுவரை சமஸ்கிருத மொழியையே சார்ந்திருந்தோம். ஆனால், தற்போதுள்ள வேறு எந்த ஒரு சொல்லையும்விட, 'சிந்துஸ்தான்' என்ற சொல்லினால், இந்து தேசம் பற்றிய கருத்து இன்னமும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட இயலும் என்பது தெரிய வந்த ஒரு காலகட்டத்தில், நமது தேடுதல் எனும் நூலின் முனையை நாம் கைவிட்டுவிட்டோம். இச்சொல்லினோடு ஆர்யவர்த்தா என்பதை இணைத்துப் பார்த்தால் தந்தை வழிக் குறுகிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருப்பதாக அது பொருள் தரும்; ஆனால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது கட்சி வண்ணம் பூசப்பட்டதுடன் தொடர்பு ஏதுமற்றதென விளக்கம் அளிப்பதாக சிந்துஸ்தான் என்ற சொல் அமைந்திருக்கிறது.


எடுத்துக்காட்டாக, ஆர்யவர்த்தா என்பது என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக்  காண்க.


நான்கு வர்ண நடைமுறை இல்லாத நாடு மிலேச்ச நாடாகும்; ஆர்யவர்த்தம் என்பது அதற்கும் வெகு தொலைவில் இருப்பதாகும்.)


 (- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115 )


அதனால், இவற்றின் முடிவுகளைத் தொகுத்துக் காணும்போது, சிந்து முதல்  - இந்துக்களிலிருந்து கடல்கள் வரையிலான பூமியை தனது முன்னோர்களின் நிலமாக, தந்தை நிலமாக (பித்ரு) என்று எவன் ஒருவன் காண்கிறானோ, வேதகால சப்த சிந்துவில் தனது தோற்ற மூலத்தில் இருந்து வந்த இனத்தின் ரத்தத்தை எவன் பாரம்பரியமாக வரித்திருக்கிறானோ, கற்றறிந்து கொள்ள வேண்டியவைகளை  அதிகமாக எவன் கற்றறிந்து கொண்டானோ, அவனே இந்து என்று அறியப்படும் மனிதனானான். அவர்களது பொது செம்மொழியான சமஸ்கிருதத்தில் முக்கியமாக விவரிக்கப் பட்டுள்ள இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்றிருப்பதாகவும், பொதுவான வரலாறு ஒன்றின் பிரதிநிதி யாகத்தான் இருப்பதாகவும்,பொதுவான இலக்கியம், கலை, கட்டக்கலை, சட்டம், நீதிநெறி சடங்குகள் சம்பிரதாயங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், புனிதவேள்விகள் ஆகியவற்றைத் தான் பெற்றிருப்பதாகவும் எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அனைத்துக்கும் மேலாக, சிந்துஸ்தான் என்னும் இந்த பூமியை தனது புனித பூமியாக (புண்யபூ)வும், வருமுன் உரைப்போர்கள், சமயக்குருமார்கள், மடாதிபதிகள், கடவுள் மனிதர்களின் பூமியாகவும், பக்தியும், தலயாத்திரையும் மிகுந்து விளங்கும் பூமியாகவும் காண்பதாக எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.


ஒரு பொதுவான தேசம் (ராஷ்டிரா), ஒரு பொதுவான இனம் (ஜாதி), பொதுவான ஒரு கலாச்சாரம் (சமஸ்கிருதம்) ஆகியவை அனைத்தும் இந்துத்துவாவுக்கு முக்கியமாகத் தேவைப்படும் அம்சம்களாகும்.


இந்த  அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தொகுத்து சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறுவதானால் சிந்துஸ்தான் என்பது பித்ருபூமியாக மட்டுமல்லாமல், புண்ய பூமியாகவும் எவன் ஒருவனுக்கு இருக்கிறதோ அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.


இந்துத்துவாவின் முதல் இரண்டு முக்கியமான தேவைகளான தேசம் மற்றும் ஜாதி என்பவை பித்ருபூமி என்ற சொல்லினால் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப் படுவதாகவும், சுட்டிக் காட்டப்படுவதாகவும் உள்ளது. மூன்றாவது முக்கியத் தேவையான சமஸ்கிருதம் (கலாச்சாரம்) என்பது புண்யபூமி என்ற சொல்லினால் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு புண்ய பூமியை உருவாக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் கொண்டாட்டங்கள், புனித வேள்விகள் என்னும் சமஸ்காரங்கள் உள்ளிட்டவை அடங்கிய சமஸ்கிருத மொழி மதிப்பு மிகுந்ததாகும்.


(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115)


சதுர்வர்ணாய விய வஸ்தாடன


யாஸ் மின்தேஷ் ஹிக நாபித் யத்தே


தாம்மிலேச்ச தேஷ்தாம்


ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே


The Land where the system of four varnas does not exit should be known as the mellach country arya vart lies away from it.


எந்த நாட்டில் நான்கு வருணம் இல்லையோ, அந்த நாடு மிலோச்சர்களின் நாடு என்று பொருள் -


இதுதான் சாவர்க்கார் கூறும் ஹிந்துத்துவா.


அய்ந்தாவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் - அவர் எழுதிய 'ஞான கங்கை' (Bunch of Thoughts) முக்கியமானதாகும்.


இந்து ராஷ்டிரம் இதன் கொள்கையாகும். முசுலிம்களுக்கு ஒரு பாகிஸ்தான் என்பதுபோல இந்துக்களுக்கு ஒரு நாடு இந்தியா என்பதே அவர்களின் அடிப்படை!


இந்துக்கள் அல்லாதாருக்கு இங்கு வேலையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.


அண்மையில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்த வர்களானாலும் அவர்கள் இந்துக்களே என்று சொல்ல வில்லையா!


'ஞான கங்கை' நூலை எழுதிய கோல்வால்கர் இன்னொரு நூலையும் எழுதியுள்ளார்.


"We or our nationhood defined" என்பது அந்த நூலாகும். அந்த நூலில் மிக மிக வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.


"இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது.  அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்" என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றால் இதற்குப் பெயர்தான் இந்துப் பாசிசம் என்பது!


இப்பொழுது ஆர்.எஸ்.எசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? கோல்வால்கரின் நூல்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறும் நிலை ஏற்பட்டு விட்டது.


(நாளை சந்திப்போம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக