பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

பாரதியின் வழக்குரைஞர்கள்! - எதிர்வினை (98)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (98)

ஏப்ரல் 16-31,2022

பாரதியின் வழக்குரைஞர்கள்!

நேயன்

தமிழ் அறிஞர்கள், இலக்கிய மேதைகள், பொதுவுடைமை இயக்கத்தவர், பத்திரிகை-யாளர்கள், பாரதியின் விசிறிகள் என்று பலர், பாரதியின் கருத்துகளுக்கு முட்டுக்கொடுத்து முற்போக்குக் கருத்துகளாக நிறுத்த அவரது வழக்குரைஞர்களாகவே மாறி வாதங்களை வைக்கின்றனர்.

அப்படி அவர்கள் உளச்சான்றுக்கு எதிராய், பாரதியை முற்போக்காளராய்க் காட்டும் முனைப்பில் தப்பான முடிவை மக்கள் முன் வைப்பதோடு, தங்களின் தகுதியை தாழ்த்திக் கொள்வதோடு, தங்களின் ஒருதலைச் சார்பையும் வெளிக் காட்டுகின்றனர். அதனால்தான் அவர்களை வழக்குரைஞர்கள் என்று நான் அழைக்கிறேன். தான் எடுத்துக்கொண்டதை எப்படியாவது நிலைநிறுத்திக் காட்ட வேண்டும் என்றுதான் வழக்குரைஞர் முனைவார். அவர் சொல்வது சரியா, நேர்மையா, உண்மையா என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். அப்படித்தான் இந்தப் பாரதியின் வழக்குரைஞர்களும் உண்மைக்கு மாறான கருத்துகளை உளச்சான்றுக்கு எதிராய்க் கூறி வருகின்றனர்.

பொதுவுடைமைப் போராளி ஜீவா தொடங்கி, பேராசிரியர் சிவத்தம்பி, முனைவர் கோ.கேசவன், பேராசிரியர் கைலாசபதி, ஞானிகள், பேராசிரியர் பாரதிபுத்திரன், பார்த்திபராஜா போன்றவர்கள்தாம் பாரதியின் வழக்குரைஞர்கள். ஒன்றுமில்லா அபத்தக் குப்பையான வேதங்களை உலகில் உயர்ந்தவை என்று உயர்த்திக் காட்டி, மற்றவர்களையும் நம்ப வைத்து, ஏற்க வைத்ததுபோல, இந்து சனாதன பாரதியை புரட்சிக் கவியாய், தேசியக் கவியாய் தூக்கி நிறுத்திப் பாராட்டுகின்றனர்.

பாரதியின் இந்து சனாதன, பிற்போக்குக் கருத்துகளை நாம் எடுத்துக்காட்டி அவரின் உண்மை உள்ளத்தை உரித்துக் காட்டும்போது, இவர்கள் (இந்த வழக்குரைஞர்கள்) பாரதியின் காலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும் என்கின்றனர். இதைவிட பைத்தியக்கார உளறல் வேறு இருக்க முடியுமா?

என்ன பாரதியின் காலம்? அய்யாயிரம் ஆண்டா? பத்தாயிரம் ஆண்டா? நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவர் பாரதி. அது என்ன பத்தாம் பசலி காலமா?

பாரதியின் காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களே எவ்வளவு முற்போக்குப் பேசியுள்ளவர்கள்?

2000 ஆண்டுகளுக்கு முன் “பிறப்பொக்கும்’’ என்று சமத்துவ, உயர் நேய உணர்வோடு திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். 750 ஆண்டுகளுக்கு முன் பெம்மான் பசவர் ஜாதி, வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு எதிராய் புரட்சி செய்திருக்கிறார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள உத்தரநல்லூரில் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உத்தர நல்லூர் நங்கை என்பவர் 500 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதிக்கு எதிராய் எவ்வளவு புரட்சிகரமாய்ப் பாடியுள்ளார் பாருங்கள்.

“குலங்குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணு நூலும்

சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ

நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்துண்டோ

பலந்தரு பொருளுமுண்டோ பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

 

ஊருள பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி

நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யை விட்டுக்

கார்வயல் தவளை போலக் கதறிய வேதந் தானும்

பாரை விட்டகன்ற தோதான் பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

 

சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும்

அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர்மணம் வீசக் காணேம்

செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேற தாமோ

பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

 

ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு

அறிவினில் அறிந்தவற்கு அதுவுங்கள் இதுவுங் கள்ளே

ஒருகுலை உயர்ந்த தேனோ ஒருகுலை தாழ்ந்த தேனோ

பறையனைப் பழிப்பதேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

 

ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே

சாதியும் ஒன்றே யல்லால் சகலமும் வேற தாமோ

வேதியன் படைத்த தல்லால் விதியினை வெல்ல லாமோ

பாதியிற் பழியே சூழ்ந்த பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

ஜாதிக்கு எதிராய் எவ்வளவு நுட்பமாக கேள்விகளை எழுப்பி, புரட்சி செய்துள்ளார் பாருங்கள். 500 ஆண்டுகளுக்கு முன் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பெண் பாடிய இப்புரட்சிப் பாடல்களுக்கு, உயர்குலம் என்றும், கற்ற பரம்பரை என்றும் கூறிக் கொள்ளும், பார்ப்பன பாரதி 100 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் இணையாகுமா? 500 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஜாதி ஒழிப்புக்கு களம் இறங்கிக் கர்ஜித்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரதியைக் காலத்தை வைத்து கணக்கிட வேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டுவதும், முட்டுக் கொடுப்பதும் அறிவு நாணயத்திற்கு அழகா?

பாரதிக்கு முன் வாழ்ந்த தமிழ் சித்தர்கள் பாடாத புரட்சிப் பாடல்களா?

சிவவாக்கியர்

சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே

வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ

மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்

சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே. (14)

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே

ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே. (35)

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரெலாம்

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னென்றலோ

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. (47)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்

பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ

ஆதி பூசை கொள்ளுமோ அநாதி பூசை கொள்ளுதோ

காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. (254)

ஓதும்நாலு வேதமுறைத்த சாத்தி ரங்களும்

பூததத்து வங்களும் பொருந்துமாக மங்களும்

சாதிபேத வுண்மையுந் தயங்குகின்ற நூல்களும்

பேதபேத மாகியே பிறந்துழன்றி ருந்தவே. (475)

நட்டகல்லைத் தெய்மென்று நாலுபுட்பஞ் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்த்ர மேதடா

நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்

சுட்டசட்டி சட்டடுவங் கறிச்சுவைய றியுமோ (520)

 

பட்டினத்தார்

சாதிபே தங்கள் தமையறிய மாட்டாமல்

வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே (35)

பத்திரகிரியார்

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்

சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம் (156)

தாயுமானவர்

சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி

               அருவுருவத் தன்மை நாமம்

ஏதுமின்றி யெப்பொருட்கும் எவ்விடத்தும்

               பிரிவறநின் றியக்கஞ் செய்யுஞ்

சோதியைமாத் தூவெளியை மனதவிழ

               நிறைவான துரிய வாழ்வைத்

தீதில்பர மாம்பொருளைத் திருவருளே

               நினைவாகச் சிந்தை செய்வாம்.

பாம்பாட்டிச்சித்தர்

உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி

உலகத்தின் மூடர்களுக் குண்டோ வுணர்ச்சி

புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்

போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே. (92)

சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல

தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்

விதம்வித மானவான வேறு நூல்களும்

வீணான நூல்களெயென் றாடாய் பாம்பே (98)

சமயபேதம் பலவான சாதி பேதங்கள்

சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ

சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ

சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே (99)

கடுவெளிச்சித்தர்

காசிக்கோ டில்வினை போமோ – அந்தக்

               கங்கையா டில்கதி தானுமுண் டாமோ

பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல

               பேதம் பிறப்பது போற்றினும் போமோ 

என்று சித்தர்கள் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களுள் இவை சில. கிராமப்புறத்தில், கல்வி கற்க வாய்ப்பில்லா காலத்திலே பிறந்து வளர்ந்த சித்தர்களே இந்த அளவிற்குப் பகுத்தறிவுச் சிந்தனையோடு கருத்துகளை பாரதிக்குபல நூற்றாண்டுகளுக்குமுன்பே  கூறியிருக்கும்போது, காசிக்குச் சென்று கல்வி பயின்று, பத்திரிகைத் துறையில் பணியாற்றிய பாரதி எத்தனை மடங்கு புரட்சிச் சிந்தனையைக் கூறியிருக்க முடியும்? கூறியிருக்க வேண்டும்? ஆனால், அவர் ஏன் கூறவில்லை? கூற முடியாமல் இல்லை. கூறக் கூடாது என்றே கூறவில்லை. அவர் முழுமையான சனாதனவாதி என்பதாலேதான் கூறவில்லை என்பதே உண்மை.

(தொடரும்…)

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பெரியார் பர்வையில் பாரதி -- எதிர்வினை (97)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (97)

ஏப்ரல் 1-15,2022

பெரியார் பர்வையில் பாரதி

நேயன்

 

நம் தமிழ்நாட்டில் அண்மையில் பாரதியின் பிறந்த நாளை பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்போது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலைபோட்டுத் தூப தீப நைவேத்தியங்கூட சிலர் செய்தார்கள். இப்படி எல்லாம் செய்வதற்கு பார்ப்பனரின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும், மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்–களில் கலந்துகொண்டதன் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து-கொள்ளுவார்களாக.

பாரதி தமிழ்ப் புலமை பெற்றவர் அல்லர்!

பாரதிக்கு கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவரைப் பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான அளவுக்கு மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமுள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரம் செய்கிறபடி எந்தவிதத்திலும், அண்மைக் காலத்தில் தோன்றி, மறைந்துபோன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப் பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.

முக்கிய காரணம், அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால், ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனா யிருந்தாலும், ஒழுக்கங்கெட்டவனாயிருந்தாலும் துர்ப்பழக்கமுடையவனாயிருந்தாலும் பேடியா யிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களை யெல்லாம் மறைத்து ‘இந்திரன்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன்மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.

பாரதியின் அறிவுக்கு ஒவ்வாக் கருத்துகள்

பாரதி ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக்கிறாரா? என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். ‘எல்லோரும் ஓர் இனம்’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’யென்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்! நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமர மக்கள் புகழ்வதற்குக் காரணம், அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும், மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக் கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும்.

மனு ஆட்சியை ஆதரிப்பவர்

எப்படியென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவற்றை அப்படியே தழுவி அவற்றில் அடங்கியிருக்கும் விஷயங்களை இக்காலத்துத் தேவைகளை அதில் கலக்கி, அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக் காட்டி அவர் பாடல் எழுதியிருப்பதே யாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டுமென்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?

பெண்களுக்கு எதிரானவர்

பாரதி அநேக பாடல்களைக் குடிவெறியில் பாடியிருக்கிறாரே தவிர, நிதான புத்தியோடு பாடவில்லை என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்களைப் பற்றி வானளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால், பெண்களைப் பற்றி அவரது அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி’’ என்ற தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது.

பார்ப்பன மேன்மையே அவரது நோக்கம்

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால், பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும், இந்தியா அவர்களுக்குச் சொந்தமான சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலையை உயர்த்த வேண்டு மென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது.  அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லட்சியமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசியப் பாடல்களிலிருந்து மட்டும் இந்த சந்தர்ப்பத்தில் எடுத்துக்காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

பாட்டின் தலைப்பும், அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.

வந்தே மாதரம்: ஆரிய பூமியில்…

பாரத நாடு: யாகத்திலே தவவேகத்திலே…

நாட்டு வணக்கம்: துங்கமுயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே

பாரததேசம்: மந்திரங் கற்போம்… (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)

தொழில்: பிரம்மதேவன் கலையிங்கு நீரே… விண்ணினின்று எமை வானவர் காப்பார்…

எங்கள் நாடு: பன்னருமுபநிடத

               நூல்கள் எங்கள் நூலே

               உன்னத ஆரிய நாடெங்கள் நாடே…

வந்தே மாதர மொழிபெயர்ப்பு:

               கமல மெல்லிதழ்களிற் களித்திடுங்கமலை நீ…

எங்கள்தாய்-: நாவினில் வேதமுடையவள்…

               வெண்மை வளரிமையாசலந்தந்த

               விறன்மகளா மெங்கள் தாய்…

பாரத மாதா: முன்னையிலங்கை அரக்கர் அழிய,

               ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள்;

               போர்க்களத்தே பரஞான மெய்க் கீதை.

திருப்பள்ளியெழுச்சி: தெள்ளிய அந்தணர்

               வேதமும் நின்றன…

தசாங்கம்: ஆரிய நாடென்றே யறி…

நவரத்தின மாலை: ஆணிமுத்துப் போன்ற

               மணி மொழிகளாலே… (சமஸ்கிருதம்)

மகாத்மாவின் துவஜம்: ஆரியக்காட்சி ஓர் ஆனந்த மன்றோ…

               செந்தமிழ் நாட்டுப் பொருநர் _ கொடுந்தீக்கண்

               மறவர்கள், சேரன்நன் வீரர்,

               சிந்தை துணிந்த தெலுங்கர் _ தாயின் சேவடிக்கே

               பணி செய்திடு துளுவர் (ஆரியருக்கு அடிமைகள்)

லஜபதிராய்: ஆதி மறை தோன்றிய நாடெந்நாளும்

               நீதி மறை வின்றி நிலைத்த திருநாடு

               ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான்

               ஆரியர் பாழாகா தருமுறையின் உண்மை தந்த…

திலகர்: அன்போடோதும் பெயருடையாரின்

கிருஷ்ணன் துதி: என்னரும் புகழ் கீதை யெனச் சொலும்

               எங்களாரிய பூமியெனும்…

கிருஷ்ணன் ஸ்தோத்திரம்: ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே…

               ஆரிய நீயுன் அற மறந்தாயோ…

               வெஞ்செய லரக்கரை வீட்டிடு வோனே வீரசிகாமணி ஆரியர் கோனே…

ஆங்கிலப் பயிற்சி: அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதே

               இயல்புணர்த்திய சங்கரனேற்றமும்

               பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்..

நாட்டுக் கல்வி: மந்திரவேதத்தின் பேரொலி…

தமிழ்த்தாய்: உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்…

(சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)

புதுவருஷம்: ஆரிய நாட்டினர் ஆண்மையோடி யற்றும்…

என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே _ பார்ப்பனியத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆகவே, பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும், பார்ப்பன சூழ்ச்சி. பார்ப்பன ஆதிக்கப்புத்தி ஆகியவற்றில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை.

(பாரதியைப் பற்றி 1937இல் ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் எழுதிய கட்டுரை 26.10.1962 ‘விடுதலை’யில் மீண்டும் வெளிவந்தது.)

(தொடரும்…)

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா? - எதிர்வினை (96)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (96)

மார்ச் 16-31,2022

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா?

நேயன்

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதி, சென்னை அரசு டி.அய்.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து, அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார்.

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசன்ட், சி.பி.இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். மாநில அரசு மீண்டும் டி.அய்.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை,

நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும். இந்த மூன்று நிபந்தனை-களையும் எழுத்துப் பூர்வமாகப் பாரதி ஒப்புக் கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918இல் பாரதியை விடுதலை செய்தார்.

பாரதியை ஆதரிப்போர் பார்வைக் கோளாறு

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள், “ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்ற பாரதி வரியால் பெரியார் ஈர்க்கப்பட்டு, ரஷ்யா சென்றார்’’ என்று தமது “சுயமரியாதை இயக்கம்’’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது உண்மைக்கு மாறான பதிவு. பாரதியின் பாடலை “குடிஅரசு’’ மேலட்டையில் போட்ட பெரியார் 8.11.1925 முதல் நீக்கிவிட்டதோடு, அதன்பின் பாரதி பாடல்களைப் போடவில்லை. உண்மை இப்படியிருக்க 1931இல் பெரியார் ரஷ்யா சென்றது பாரதி பாடல் உந்துதலால் என்பது பிழை. பாரதி புரட்சியை ஆதரித்தவர் அல்ல என்பதையும் மேலே விளக்கிவிட்டேன். பெரியார் 1929 முதலே தமது சொந்த பொதுவுடைமைக் கருத்துகளை வெளியிடத் தொடங்கி, ரஷ்யா செல்கிறார்.

அடுத்து ஜீவா, “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே’’ என்கிறார்.  இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால், பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா.

‘ஜனசக்தி’ பொன்விழா மலரில் “நான் ஒரு நாஸ்திகன்’’ என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது,

“நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யூனிஸ்டு களும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்ட மாகக் கூறவில்லை. நேர்மாறாக, தொழிலாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்’’ என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும்.

அது மட்டுமல்ல, ஜாதிக்கு எதிராய் சில வரிகள் தொடக்க காலத்தில் எழுதிய பாரதியை ஜாதி ஒழிப்பு வீரராய்க் காட்டும் ஜீவா, பெரியாரை ஜாதி ஒழிப்புப் போராளி என்று ஏற்க மறுக்கிறார். மறுப்பதோடு நிறுத்தி-யிருந்தாலும் குற்றமில்லை. அதையும் தாண்டி பெரியாரை கேவலமாக, நக்கலாகவும் விமர்சித்து கருத்துகள் கூறியுள்ளனார்.

“நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா. கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதியப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடு-கிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்” என்று கூறியுள்ளார்.

இப்படி ஜீவாவிடம் விருப்பு _ வெறுப்புப் பார்வைகள் பல உண்டு. ஒரு சிறந்த பேச்சாளரான பொதுவுடைமைவாதியான ஜீவாவிடம் காணப்பட்ட இந்த நேர்மையற்ற நிலைகள்தான் பின்னாளில் வந்த பொது-வுடைமைவாதிகளுக்கும் தவறான வழியைக் காட்டிற்று எனலாம்.

ஜாதி ஒழிப்புக்கு பெரியார் ஆற்றிய பணிகள் கொஞ்சமா? ஊர் ஊராய் பரப்புரைகள். ஏராளமான மாநாடுகள், தியாகத்தின் உச்சத்திற்கே சென்று போராட்டங்கள் நடத்தியவர் பெரியார். அதற்காக ஏராளமான இன்னல்களை ஏற்றவர்கள் பெரியாரும் அவருடைய தொண்டர்களும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் புரையோடிக் கிடக்கும் ஜாதி உணர்வை சில பத்தாண்டுகளில் ஒழிக்க முடியவில்லை என்று எண்ணுபவன்தான் பைத்தியக்காரன். 10 ஆண்டுகளில் ஜாதியை ஒழிப்பேன் என்று பெரியார் எப்போதும் சொன்னதில்லை. ஆழ வேரோடி நிற்கும் ஜாதியை தகர்க்க முயன்று அதில் அவர் காலத்திலே பெருமளவு வெற்றியும் பெற்றார். பெரியாரின் போராட்டங்களும், பரப்புரைகளும் ஜாதிப்பற்றை, வெறியை பெருமளவிற்குத் தகர்த்துள்ளன. ஜாதி மறுப்பு மணங்கள் அதிக அளவில் செய்யப்படுவதே அதற்குச் சான்று. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போடுவது பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. தாழ்த்தப்-பட்டவர்கள் மற்றவர்களோடு சரிசமமாக வாழும் நிலை வந்துள்ளது. தமிழ்நாட்டை மற்ற வடமாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும்.

அப்படியிருக்க பெரியாரின் ஜாதி ஒழிப்பு முயற்சிகளைக் கொச்சைப்படுத்தி, ஜாதிக்கு எதிராய் நாலு வரி பாட்டு எழுதிவிட்டு, வர்ணாஸ்ரமத்தை வரிந்துகட்டிக்கொண்டு ஆதரித்த பாரதியை ஜாதி ஒழிப்பு வீரர் என்று கூறுவது எப்படிச் சரியாகும்?

பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் ஜீவாவுக்கு இருந்த வெறுப்பின் வெளிப்-பாட்டினைத்தான் இது காட்டுகிறதே யன்றி, உண்மையான மதிப்பீட்டை அல்ல.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை உண்மையில் வன்மையாகக் கண்டித்தவர் வ.உ.சி. படுகொலையை ஆதரித்தவர் அன்னிபெசன்ட் அம்மையார். அன்னிபெசன்டை ஆதரித்தவர் பாரதி.

அது மட்டுமல்ல, இப்படுகொலை நடந்த-போது பாரதி புதுவையிலிருந்து கொண்டு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு விடுதலை பெற்று கடயத்தில் வாழ்ந்தார். இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதுவதில் சாவர்க்கருக்கு முன்னோடியாய் இருந்த பாரதியைப் போராட்ட வீரராகக் காட்டி, வ.உ.சி. வீர, தீர, தியாக வரலாற்றை மறைப்பதுதான் நடுநிலையா?

பொதுவுடைமைக் கொள்கையில் சிறிதும் உடன்பாடில்லாத வர்ணாஸ்ரமம், ஜாதி, மதவெறி, சனாதனம், பெண்ணடிமை, உடன்கட்டை, சமஸ்கிருதத் திணிப்பு, ஆதிக்கக் கட்டமைப்பு, தனியுடைமை போன்றவற்றை ஆதரித்த, ஓர் இந்துத்துவாவாதியை புரட்சி-யாளராய், முற்போக்காளராய் பொதுவுடைமை-வாதிகள் காட்டுவது வரலாற்றுப் பிழையுமாகும்!

மேலும், இப்படிப்பட்ட ஒரு சனாதன-வாதியை உயர்த்திக் காட்டுவதால் பொது-வுடைமைக் கட்சிக்கு என்ன பயன்?

“லெனினைப் பற்றி கன்னாபின்னா என்று பாரதி விமர்சித்திருந்தாலும், அவரை ஒரு கம்யூனிஸ்ட்டாய் பார்ப்பது, வர்க்க விடுதலை, ஜாதி மறுப்பு, பெண் விடுதலை என எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுபிடித்து அதற்கான மருந்துகளை டப்பாக்களில் போட்டு வைத்திருக்கும் டாக்டர் பாரதியாக அவரைப் பார்ப்பது என்பதெல்லாம் அறிவுடைமை-யாகாது’’ என்று எழுத்தாளர் பாமரன் கூறியுள்ளதை பொதுவுடைமைவாதிகள் பகுத்தாய்ந்து சிந்தித்து, தங்கள் பாதையைப் பழுது நீக்கிச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நமது தோழமை எதிர்பார்ப்பு.

(தொடரும்…)

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி - எதிர்வினை (95)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (95)

மார்ச் 1-15 2022

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி

நேயன்

இந்து தர்மத்தை ஆங்கிலேயர்கள் அழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன். இக்கொலையில் பாரதிக்கும் தொடர்பு உண்டு என்று ஆங்கிலேயர்கள் அய்யப்படவே, தனக்கும் இக்கொலைக்கும் தொடர்பு இல்லையென்று 8.4.1914இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டொனால்டுக்கு பாரதி கடிதம் எழுதுகிறார்.

ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும். ஆனால், அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தாகூட வாஞ்சி அய்யர் என் வீட்டுக்கு வந்தார் என்றோ என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை. இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912இலேயே தன் நிலையை விளக்கி, சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை கவர்னராக லார்டு பென்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ள-தாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு தொலை தூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்-கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ் மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது… ஆனால் மேன்மை தங்கிய கவர்னரின் விருப்பம்கூட, அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்-படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது ஆகையால், பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன். நீங்கள் எனக்கு லார்டு பென்ட்லாண்டு நீதி வழங்க அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.

பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது.

மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில் தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் ……

…… உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பாரதி ஆங்கில ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், இப்பாடலை மேற்கோள் காட்டிப் பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால், உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

1916 மே 25இல் ‘சுதேசமித்திரனில்’ சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு:

பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்-தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916இல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார்.

1916 டிசம்பர் 26ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் அவர் எழுதுகிறார்: எல்லா ஜாதி-யாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு _- செலவு உள்பட எல்லா விவகாரங்களுக்கும், மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம். பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகு முறையில் மாற்றம் இருக்கும் எனக் கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச் சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர். பாரதிக்குக் கடலூர் சப்_-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi
District Jail, Cuddalore,
28 November – 1918.

His Excellency Lord Pentland,
Governor,
Fort St. George, Madras.

The Humble petition of
C.Subramania Barathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy. I.G (C.I.D) was send by your Excellency’s Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain.
                   Your Excellency’s
               most obedient Servant
          C.Subramania Bharathi.
(G.O. No.1331 dt. 18.12.1918 Public)

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (94) :

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (94) : பாரதியும் பொதுவுடைமையும்

பிப்ரவரி 16-28,2022

நேயன்

“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், ‘அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிருவாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்-தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்-களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்படி தொழில் நிருவாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை-பேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கி-றோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.’’

பாரதியின் மேற்கண்ட கருத்துகளைக் கூர்ந்து நோக்கினால் கீழ்க்கண்ட கருத்துகளை (கொள்கைகளை) அவர் கொண்டிருந்ததும், வலியுறுத்தியதும் புலப்படும்.

1.            இரஷ்ய புரட்சியாளர் லெனின் வழி சிறந்த வழியல்ல.

2.            இந்திய முதலாளிகள் அய்ரோப்பிய முதலாளிகளைப் போல மோசமானவர்-கள் இல்லை.

3.            இந்திய முதலாளிகளின் உடைமைகளைப் பிடுங்க வேண்டும் என்பது நியாயம் ஆகாது. இதை நம் நாட்டு ஏழைகளே விரும்ப மாட்டார்கள்.

4.            ஏழைகளின் பசியைத் தீர்ப்பதற்குத்தான் நாம் வழிகாண வேண்டும். முதலாளி-களின் செல்வக் குவிப்பைப் பற்றி கவலைப்படக் கூடாது.

5.            ஒரு கிராமத்தில் உள்ள ஏழைகளும் பணக்காரர்களும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்படி முதலாளிகள் யார் யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

6.            அவ்வாறு ஒதுக்கப்பட்ட வேலையை தொழிலாளர்களின் பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டும்.

7.            இந்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று சத்தியப் பத்திரம் எழுதி வைக்க வேண்டும்.

8.            இந்த ஏற்பாட்டின் மூலம் எல்லா ஏழைகளுக்கும் வயிறார சோறு கிடைத்துவிடும்.

9.            இந்தத் திட்டத்தை எல்லா இடங்-களுக்கும் பரப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட கருத்துகளைக் கூறிய பாரதிதான் புரட்சியாளராம், பொதுவுடைமைப் போராளியாம். அவரைப் பொதுவுடைமை வாதிகள் போற்றிப் பாராட்டுகிறார்கள். இதைவிட பிற்போக்கான, முதலாளித்துவ ஆதரவு நிலை, தொழிலாளர் எதிர்நிலை வேறு இருக்க முடியுமா?

இது அப்பட்டமான ஆவண அடிமை முறை (Bonded Labour) அல்லவா? ஒரு தொழிலாளி-யின் தலைமுறையையே ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அடிமைப்படுத்துவது அல்லவா? இது வருணாஸ்ரம தர்மத்தின் மறு வடிவம் அல்லவா?

ஏழை ஏழையாய் இருக்க வேண்டும்; முதலாளி முதலாளியாய் இருக்க வேண்டும்; தொழிலாளியின் பிள்ளை படித்து உயர் பதவிகளுக்கு வரக் கூடாது; அவன் அப்பன் தொழிலையே தலைமுறை தலைமுறையாய் செய்ய வேண்டும்.

உழைப்பதற்குப் பதிலாய் வயிறு நிறைய சோறு கிடைக்கும். சோத்துக்கு உத்தரவாதம் தந்து தொழிலாளிகளை முதலாளிகளுக்கு அடிமையாக்கும் இந்தப் பாரதிதான் புரட்சிக்காரராம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கும் பாரதியை புரட்சியாளர் என்றும், பொதுவுடைமைவாதி என்றும் பொது வுடைமைக் கட்சியினர் பாராட்டிப் பேசி வருவதுதான்.

வேதத்தையே படிக்காமல் வேதம் உயர்ந்தது என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் போற்றி வருவதைப் போன்ற ஓர் அறியாமையே _ பாரதியை புரட்சியாளர் என்பதும். பாரதியை முழுமையாகப் படித்துவிட்டு, ஏன், இதுவரை நான் எழுதியவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, பொதுவுடைமைவாதிகள் தங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லத் தயாரா? இப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு வாதியை முற்போக்காளராய் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடைமை சித்தாந்தத்திற்கே செய்திடும் துரோகம் ஆகும்! எந்த ஒன்றையும் சரியாக அறியாமல், ஆய்வு செய்யாமல் பாராட்டுவது, போற்றுவது பொதுவுடைமை இயக்கத்தவருக்கு அழகு அல்ல.

ஒரு சிந்தனையாளர் வாழ்வில் பரிணாம வளர்ச்சி இருக்க வேண்டும். காந்தியார் வாழ்வில்கூட, தான் தொடக்க காலத்தில் கொண்டிருந்த  பல கருத்துகளை, பின்னாளில் மாற்றிக்கொண்டார்.

சமூகநீதி, இடஒதுக்கீட்டை பின்னாளில் ஆதரித்தார். ஆரிய பார்ப்பனர்கள் வேதந்தானே ஓத வேண்டும். ஸ்டெதாஸ்கோப் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்டார். இராமராஜ்ஜியம் பேசிய காந்தி பின்னாளில் மதம் அரசியலில் கலக்கக் கூடாது என்றார். இது பாராட்டப்பட வேண்டிய கொள்கை வளர்ச்சி.

இராமலிங்க வள்ளல், 5 திருமுறைகள் முடித்த பின் ஆறாம் திருமுறை எழுதிய காலத்தில் புரட்சிச் சிந்தனைகளை அதிகம் பேசினார். இது அவரது கொள்கை, சிந்தனையில் பரிணாம வளர்ச்சி. இப்படி உலகில் பலரைச் சொல்லலாம்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் புரட்சியாளராய் கருத்துகளைக் கூறிவிட்டு, இறுதிக் காலத்தில் சனாதனவாதியாய், பிற்போக்குவாதியாய், ஆதிக்கவாதியாய் மாறிப் போனார். இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய மாற்றம்.

ஆக, பாரதி வர்ணாஸ்ரமவாதி; சனாதனவாதி, பெண்ணடிமை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தவர்; முதலாளித்துவத்தை ஆதரித்து, கொத்தடிமை முறையை வலியுறுத்தியவர்; பிற மத வெறுப்பும், இந்து மத வெறியும் கொண்டவர்; சமஸ்கிருதப் பற்றும், ஆரிய மேலாண்மையில் நாட்டமும் கொண்டவர்.

உண்மை இப்படி இருக்க ஒரு சில வரிகளைப் பிடித்துக்கொண்டு உண்மைக்கு மாறாய் ஏற்றிப் போற்றுவது _ ஒன்று, அறியாமை அல்லது மோசடிச் செயலேயாகும்!

(தொடரும்…)