பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

பாரதியின் வழக்குரைஞர்கள்! - எதிர்வினை (98)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (98)

ஏப்ரல் 16-31,2022

பாரதியின் வழக்குரைஞர்கள்!

நேயன்

தமிழ் அறிஞர்கள், இலக்கிய மேதைகள், பொதுவுடைமை இயக்கத்தவர், பத்திரிகை-யாளர்கள், பாரதியின் விசிறிகள் என்று பலர், பாரதியின் கருத்துகளுக்கு முட்டுக்கொடுத்து முற்போக்குக் கருத்துகளாக நிறுத்த அவரது வழக்குரைஞர்களாகவே மாறி வாதங்களை வைக்கின்றனர்.

அப்படி அவர்கள் உளச்சான்றுக்கு எதிராய், பாரதியை முற்போக்காளராய்க் காட்டும் முனைப்பில் தப்பான முடிவை மக்கள் முன் வைப்பதோடு, தங்களின் தகுதியை தாழ்த்திக் கொள்வதோடு, தங்களின் ஒருதலைச் சார்பையும் வெளிக் காட்டுகின்றனர். அதனால்தான் அவர்களை வழக்குரைஞர்கள் என்று நான் அழைக்கிறேன். தான் எடுத்துக்கொண்டதை எப்படியாவது நிலைநிறுத்திக் காட்ட வேண்டும் என்றுதான் வழக்குரைஞர் முனைவார். அவர் சொல்வது சரியா, நேர்மையா, உண்மையா என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். அப்படித்தான் இந்தப் பாரதியின் வழக்குரைஞர்களும் உண்மைக்கு மாறான கருத்துகளை உளச்சான்றுக்கு எதிராய்க் கூறி வருகின்றனர்.

பொதுவுடைமைப் போராளி ஜீவா தொடங்கி, பேராசிரியர் சிவத்தம்பி, முனைவர் கோ.கேசவன், பேராசிரியர் கைலாசபதி, ஞானிகள், பேராசிரியர் பாரதிபுத்திரன், பார்த்திபராஜா போன்றவர்கள்தாம் பாரதியின் வழக்குரைஞர்கள். ஒன்றுமில்லா அபத்தக் குப்பையான வேதங்களை உலகில் உயர்ந்தவை என்று உயர்த்திக் காட்டி, மற்றவர்களையும் நம்ப வைத்து, ஏற்க வைத்ததுபோல, இந்து சனாதன பாரதியை புரட்சிக் கவியாய், தேசியக் கவியாய் தூக்கி நிறுத்திப் பாராட்டுகின்றனர்.

பாரதியின் இந்து சனாதன, பிற்போக்குக் கருத்துகளை நாம் எடுத்துக்காட்டி அவரின் உண்மை உள்ளத்தை உரித்துக் காட்டும்போது, இவர்கள் (இந்த வழக்குரைஞர்கள்) பாரதியின் காலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும் என்கின்றனர். இதைவிட பைத்தியக்கார உளறல் வேறு இருக்க முடியுமா?

என்ன பாரதியின் காலம்? அய்யாயிரம் ஆண்டா? பத்தாயிரம் ஆண்டா? நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவர் பாரதி. அது என்ன பத்தாம் பசலி காலமா?

பாரதியின் காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களே எவ்வளவு முற்போக்குப் பேசியுள்ளவர்கள்?

2000 ஆண்டுகளுக்கு முன் “பிறப்பொக்கும்’’ என்று சமத்துவ, உயர் நேய உணர்வோடு திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். 750 ஆண்டுகளுக்கு முன் பெம்மான் பசவர் ஜாதி, வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு எதிராய் புரட்சி செய்திருக்கிறார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள உத்தரநல்லூரில் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உத்தர நல்லூர் நங்கை என்பவர் 500 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதிக்கு எதிராய் எவ்வளவு புரட்சிகரமாய்ப் பாடியுள்ளார் பாருங்கள்.

“குலங்குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணு நூலும்

சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ

நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்துண்டோ

பலந்தரு பொருளுமுண்டோ பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

 

ஊருள பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி

நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யை விட்டுக்

கார்வயல் தவளை போலக் கதறிய வேதந் தானும்

பாரை விட்டகன்ற தோதான் பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

 

சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும்

அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர்மணம் வீசக் காணேம்

செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேற தாமோ

பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

 

ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு

அறிவினில் அறிந்தவற்கு அதுவுங்கள் இதுவுங் கள்ளே

ஒருகுலை உயர்ந்த தேனோ ஒருகுலை தாழ்ந்த தேனோ

பறையனைப் பழிப்பதேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

 

ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே

சாதியும் ஒன்றே யல்லால் சகலமும் வேற தாமோ

வேதியன் படைத்த தல்லால் விதியினை வெல்ல லாமோ

பாதியிற் பழியே சூழ்ந்த பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

ஜாதிக்கு எதிராய் எவ்வளவு நுட்பமாக கேள்விகளை எழுப்பி, புரட்சி செய்துள்ளார் பாருங்கள். 500 ஆண்டுகளுக்கு முன் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பெண் பாடிய இப்புரட்சிப் பாடல்களுக்கு, உயர்குலம் என்றும், கற்ற பரம்பரை என்றும் கூறிக் கொள்ளும், பார்ப்பன பாரதி 100 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் இணையாகுமா? 500 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஜாதி ஒழிப்புக்கு களம் இறங்கிக் கர்ஜித்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரதியைக் காலத்தை வைத்து கணக்கிட வேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டுவதும், முட்டுக் கொடுப்பதும் அறிவு நாணயத்திற்கு அழகா?

பாரதிக்கு முன் வாழ்ந்த தமிழ் சித்தர்கள் பாடாத புரட்சிப் பாடல்களா?

சிவவாக்கியர்

சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே

வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ

மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்

சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே. (14)

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே

ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே. (35)

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரெலாம்

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னென்றலோ

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. (47)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்

பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ

ஆதி பூசை கொள்ளுமோ அநாதி பூசை கொள்ளுதோ

காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. (254)

ஓதும்நாலு வேதமுறைத்த சாத்தி ரங்களும்

பூததத்து வங்களும் பொருந்துமாக மங்களும்

சாதிபேத வுண்மையுந் தயங்குகின்ற நூல்களும்

பேதபேத மாகியே பிறந்துழன்றி ருந்தவே. (475)

நட்டகல்லைத் தெய்மென்று நாலுபுட்பஞ் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்த்ர மேதடா

நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்

சுட்டசட்டி சட்டடுவங் கறிச்சுவைய றியுமோ (520)

 

பட்டினத்தார்

சாதிபே தங்கள் தமையறிய மாட்டாமல்

வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே (35)

பத்திரகிரியார்

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்

சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம் (156)

தாயுமானவர்

சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி

               அருவுருவத் தன்மை நாமம்

ஏதுமின்றி யெப்பொருட்கும் எவ்விடத்தும்

               பிரிவறநின் றியக்கஞ் செய்யுஞ்

சோதியைமாத் தூவெளியை மனதவிழ

               நிறைவான துரிய வாழ்வைத்

தீதில்பர மாம்பொருளைத் திருவருளே

               நினைவாகச் சிந்தை செய்வாம்.

பாம்பாட்டிச்சித்தர்

உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி

உலகத்தின் மூடர்களுக் குண்டோ வுணர்ச்சி

புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்

போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே. (92)

சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல

தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்

விதம்வித மானவான வேறு நூல்களும்

வீணான நூல்களெயென் றாடாய் பாம்பே (98)

சமயபேதம் பலவான சாதி பேதங்கள்

சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ

சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ

சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே (99)

கடுவெளிச்சித்தர்

காசிக்கோ டில்வினை போமோ – அந்தக்

               கங்கையா டில்கதி தானுமுண் டாமோ

பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல

               பேதம் பிறப்பது போற்றினும் போமோ 

என்று சித்தர்கள் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களுள் இவை சில. கிராமப்புறத்தில், கல்வி கற்க வாய்ப்பில்லா காலத்திலே பிறந்து வளர்ந்த சித்தர்களே இந்த அளவிற்குப் பகுத்தறிவுச் சிந்தனையோடு கருத்துகளை பாரதிக்குபல நூற்றாண்டுகளுக்குமுன்பே  கூறியிருக்கும்போது, காசிக்குச் சென்று கல்வி பயின்று, பத்திரிகைத் துறையில் பணியாற்றிய பாரதி எத்தனை மடங்கு புரட்சிச் சிந்தனையைக் கூறியிருக்க முடியும்? கூறியிருக்க வேண்டும்? ஆனால், அவர் ஏன் கூறவில்லை? கூற முடியாமல் இல்லை. கூறக் கூடாது என்றே கூறவில்லை. அவர் முழுமையான சனாதனவாதி என்பதாலேதான் கூறவில்லை என்பதே உண்மை.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக