பக்கங்கள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா? - எதிர்வினை (96)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (96)

மார்ச் 16-31,2022

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா?

நேயன்

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதி, சென்னை அரசு டி.அய்.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து, அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார்.

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசன்ட், சி.பி.இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். மாநில அரசு மீண்டும் டி.அய்.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை,

நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும். இந்த மூன்று நிபந்தனை-களையும் எழுத்துப் பூர்வமாகப் பாரதி ஒப்புக் கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918இல் பாரதியை விடுதலை செய்தார்.

பாரதியை ஆதரிப்போர் பார்வைக் கோளாறு

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள், “ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்ற பாரதி வரியால் பெரியார் ஈர்க்கப்பட்டு, ரஷ்யா சென்றார்’’ என்று தமது “சுயமரியாதை இயக்கம்’’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது உண்மைக்கு மாறான பதிவு. பாரதியின் பாடலை “குடிஅரசு’’ மேலட்டையில் போட்ட பெரியார் 8.11.1925 முதல் நீக்கிவிட்டதோடு, அதன்பின் பாரதி பாடல்களைப் போடவில்லை. உண்மை இப்படியிருக்க 1931இல் பெரியார் ரஷ்யா சென்றது பாரதி பாடல் உந்துதலால் என்பது பிழை. பாரதி புரட்சியை ஆதரித்தவர் அல்ல என்பதையும் மேலே விளக்கிவிட்டேன். பெரியார் 1929 முதலே தமது சொந்த பொதுவுடைமைக் கருத்துகளை வெளியிடத் தொடங்கி, ரஷ்யா செல்கிறார்.

அடுத்து ஜீவா, “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே’’ என்கிறார்.  இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால், பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா.

‘ஜனசக்தி’ பொன்விழா மலரில் “நான் ஒரு நாஸ்திகன்’’ என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது,

“நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யூனிஸ்டு களும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்ட மாகக் கூறவில்லை. நேர்மாறாக, தொழிலாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்’’ என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும்.

அது மட்டுமல்ல, ஜாதிக்கு எதிராய் சில வரிகள் தொடக்க காலத்தில் எழுதிய பாரதியை ஜாதி ஒழிப்பு வீரராய்க் காட்டும் ஜீவா, பெரியாரை ஜாதி ஒழிப்புப் போராளி என்று ஏற்க மறுக்கிறார். மறுப்பதோடு நிறுத்தி-யிருந்தாலும் குற்றமில்லை. அதையும் தாண்டி பெரியாரை கேவலமாக, நக்கலாகவும் விமர்சித்து கருத்துகள் கூறியுள்ளனார்.

“நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா. கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதியப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடு-கிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்” என்று கூறியுள்ளார்.

இப்படி ஜீவாவிடம் விருப்பு _ வெறுப்புப் பார்வைகள் பல உண்டு. ஒரு சிறந்த பேச்சாளரான பொதுவுடைமைவாதியான ஜீவாவிடம் காணப்பட்ட இந்த நேர்மையற்ற நிலைகள்தான் பின்னாளில் வந்த பொது-வுடைமைவாதிகளுக்கும் தவறான வழியைக் காட்டிற்று எனலாம்.

ஜாதி ஒழிப்புக்கு பெரியார் ஆற்றிய பணிகள் கொஞ்சமா? ஊர் ஊராய் பரப்புரைகள். ஏராளமான மாநாடுகள், தியாகத்தின் உச்சத்திற்கே சென்று போராட்டங்கள் நடத்தியவர் பெரியார். அதற்காக ஏராளமான இன்னல்களை ஏற்றவர்கள் பெரியாரும் அவருடைய தொண்டர்களும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் புரையோடிக் கிடக்கும் ஜாதி உணர்வை சில பத்தாண்டுகளில் ஒழிக்க முடியவில்லை என்று எண்ணுபவன்தான் பைத்தியக்காரன். 10 ஆண்டுகளில் ஜாதியை ஒழிப்பேன் என்று பெரியார் எப்போதும் சொன்னதில்லை. ஆழ வேரோடி நிற்கும் ஜாதியை தகர்க்க முயன்று அதில் அவர் காலத்திலே பெருமளவு வெற்றியும் பெற்றார். பெரியாரின் போராட்டங்களும், பரப்புரைகளும் ஜாதிப்பற்றை, வெறியை பெருமளவிற்குத் தகர்த்துள்ளன. ஜாதி மறுப்பு மணங்கள் அதிக அளவில் செய்யப்படுவதே அதற்குச் சான்று. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போடுவது பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. தாழ்த்தப்-பட்டவர்கள் மற்றவர்களோடு சரிசமமாக வாழும் நிலை வந்துள்ளது. தமிழ்நாட்டை மற்ற வடமாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும்.

அப்படியிருக்க பெரியாரின் ஜாதி ஒழிப்பு முயற்சிகளைக் கொச்சைப்படுத்தி, ஜாதிக்கு எதிராய் நாலு வரி பாட்டு எழுதிவிட்டு, வர்ணாஸ்ரமத்தை வரிந்துகட்டிக்கொண்டு ஆதரித்த பாரதியை ஜாதி ஒழிப்பு வீரர் என்று கூறுவது எப்படிச் சரியாகும்?

பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் ஜீவாவுக்கு இருந்த வெறுப்பின் வெளிப்-பாட்டினைத்தான் இது காட்டுகிறதே யன்றி, உண்மையான மதிப்பீட்டை அல்ல.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை உண்மையில் வன்மையாகக் கண்டித்தவர் வ.உ.சி. படுகொலையை ஆதரித்தவர் அன்னிபெசன்ட் அம்மையார். அன்னிபெசன்டை ஆதரித்தவர் பாரதி.

அது மட்டுமல்ல, இப்படுகொலை நடந்த-போது பாரதி புதுவையிலிருந்து கொண்டு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு விடுதலை பெற்று கடயத்தில் வாழ்ந்தார். இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதுவதில் சாவர்க்கருக்கு முன்னோடியாய் இருந்த பாரதியைப் போராட்ட வீரராகக் காட்டி, வ.உ.சி. வீர, தீர, தியாக வரலாற்றை மறைப்பதுதான் நடுநிலையா?

பொதுவுடைமைக் கொள்கையில் சிறிதும் உடன்பாடில்லாத வர்ணாஸ்ரமம், ஜாதி, மதவெறி, சனாதனம், பெண்ணடிமை, உடன்கட்டை, சமஸ்கிருதத் திணிப்பு, ஆதிக்கக் கட்டமைப்பு, தனியுடைமை போன்றவற்றை ஆதரித்த, ஓர் இந்துத்துவாவாதியை புரட்சி-யாளராய், முற்போக்காளராய் பொதுவுடைமை-வாதிகள் காட்டுவது வரலாற்றுப் பிழையுமாகும்!

மேலும், இப்படிப்பட்ட ஒரு சனாதன-வாதியை உயர்த்திக் காட்டுவதால் பொது-வுடைமைக் கட்சிக்கு என்ன பயன்?

“லெனினைப் பற்றி கன்னாபின்னா என்று பாரதி விமர்சித்திருந்தாலும், அவரை ஒரு கம்யூனிஸ்ட்டாய் பார்ப்பது, வர்க்க விடுதலை, ஜாதி மறுப்பு, பெண் விடுதலை என எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுபிடித்து அதற்கான மருந்துகளை டப்பாக்களில் போட்டு வைத்திருக்கும் டாக்டர் பாரதியாக அவரைப் பார்ப்பது என்பதெல்லாம் அறிவுடைமை-யாகாது’’ என்று எழுத்தாளர் பாமரன் கூறியுள்ளதை பொதுவுடைமைவாதிகள் பகுத்தாய்ந்து சிந்தித்து, தங்கள் பாதையைப் பழுது நீக்கிச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நமது தோழமை எதிர்பார்ப்பு.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக