பேய் இருக்கா? இல்லையா? பேய் அல்லது பிசாசு அல்லது கடவுள்(?) எதுவாக இருந்தாலும் அதைப் பார்த்ததாகக் கூறுவதற்கு உணரப்பட்ட இருப்பு (sensed presence) என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இதுபோன்று உணரப்படுதல் பொதுவாக, தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள், மிக அசாதாரணமான சூழலில் தனியாக இருக்கும்போது ஏற்படுவதாகும்.
இது, சூழ்நிலையின் தன்மை, மன அழுத்தத்தின் தீவிரத்தன்மை, துணைக்கு உள்ளவர்களின் பலம் அல்லது பலவீனம் ஆகியவற்றைப் பொறுத்து, பேய்களைப் பார்ப்பது, என்பது தெளிவற்றதாகவோ தெளிவானதாகவோ இருக்கும்!
சிலருக்கு ரத்தமும் சதையுமாகக் கோரமாகக் காட்சியளிக்கலாம். சிலர் தங்கள் முன்னோர்களைப் பார்த்ததாகச் சொல்வார்கள். சிலர் ஆவி போன்ற உருவத்தைப் பார்த்ததாகச் சொல்வார்கள், சிலர் கடவுள் நேரில் வந்ததாகச் சொல்வார்கள்.
அது இருப்பதாக உணர்வதற்கு, உடல் கோளாறு, சமூகச் சூழலில் மாற்றம், குளிர்ச்சியான சூழல் போன்றவை ஒரே நேரத்தில் அமைவது, முக்கியக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாகவும், ஆக்ஸிஜன் பற்றாக் குறையாலும் சலிப்பான மனநிலையாலும் ஹார்மோன்களின் தூண்டல்களாலும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் அது இருப்பதாக உணரப்படுகிறது.
சூழலியல் உளவியலாளர் பீட்டர் சீட்பெல்ட் (Peter Suedfeld) என்பவர், சில சூழல்களைச் செயற்கையாக உருவாக்குவதன் மூலமாக இதுபோன்ற மாயக் காட்சிகளை சிலர் உணரும்படி செய்யலாம் என்கிறார்.
பொதுவாகத் தன்னந்தனிமையில், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படுவதுண்டு.
தனியாகக் கடலில் கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பலருக்கும் மாயத் தோற்றங்கள் ஏற்படுவதுண்டு. நம்மூர் லாரி ஓட்டுனர்கள் அனேகம்பேர் பேயைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஏனென்றால், இரவு நேரங்களில் தூக்கம் கெட்டுச் செல்வதோடு, ஆள் நடமாட்டமில்லாத பலவிதமான சூழல்கள் கொண்ட சாலைகளில் அவர்கள் செல்வது அவர்களுக்கு மாயக்காட்சிகளை உருவாக்குவது இயல்பே! வழிவழியாகப் பல பேய்க் கதைகளைக் கேட்பதும் முக்கியக் காரணம்.
ஜோஷ்வா ஸ்லோகம் என்பவர் 1895 முதல் 1898 வரை மூன்று ஆண்டுகளில், முதன்முதலாகத் தனியாகக் கடலில் படகில் சுற்றி வந்தவர். அவர், 1492இல் கொலம்பஸ் குழுவினர் பயணம் செய்தக் கப்பல்களில் ஒன்றான பின்டா (Pinta) என்ற கப்பலின் மாலுமியைக் கடலில் பார்த்ததாகவும் பேசியதாகவும் கூறினார்.(உளறினார்) அப்போது அவர், (ஜோஷ்வா ஸ்லோகம்) உணவுக் கோளாறால் (Food Poisoning) உடல்நலம் கெட்டிருந்தார் என்பதையும் சொன்னார். மாலுமிகள், மலையேறுபவர்கள், துருவங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள் போன்றவர்கள் இதுபோன்ற,(யாரோ பின் தொடர்வது போலவும்,யாரோ அபயக் குரல் எழுப்புவதுபோலவும் உணர்ந்ததாக) கதைகளைச் சொல்வது வாடிக்கையே! காரணம், தனிமை, உடல்நலமில்லாமை, போதிய சத்தான உணவில்லாமையால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் என்பது விளங்கும். கூட்டமாக இருக்கும் இடத்தில் பேயைப் பார்த்ததாக யாராவது சொல்லியிருக்கிறார்களா? தனிமையிலும், ஆபத்தான இடங்களிலும் இருப்பவர்கள்தான் அதைப் பார்த்ததாகச் சொல்வார்கள்.
தன் அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டுத் தனிமையில் வாடும் அனுதாபத்துக்கு உரியவர்களுக்கு இதுபோன்ற, மாயத் தோற்றங்கள் அடிக்கடி ஏற்படும். இழப்பும், தனிமையும் மன அழுத்தத்தின் அளவை அதிகரிப்பதால், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, பிழையானக் காட்சிகளை உணர்கிறார்கள். மதங்களின் பாதிப்பு!
மதரீதியானச் சிந்தனைத் தாக்கங்களும் மாயக் காட்சிகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. தியானங்கள் என்ற பெயரில், ஏதேனும் ஒரு உருவத்தை (கடவுளை) நினைத்துக் கொள்ளச் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்கள் தியானத்தில் கற்பனை செய்யும் உருவம் உண்மையில் வந்ததுபோல் உணர்வார்கள். ஏன், மோசஸ், ஜீசஸ், முகமது போன்ற மதத் தலைவர்கள் தாங்கள், பாலைவனத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது, சில அமானுஷ்ய உருவங்களைச் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில். (உண்ணா)விரதம், நீண்டகால தியானம், உடலை வருத்தும் பிரார்த்தனைகள் போன்றவற்றால் மாயக் காட்சிகளை ஏற்படுத்துவதில் மதங்களின் பங்கு மிக முக்கியம்.
பேய், பிசாசு, அல்லது கடவுள் அல்லது வேற்றுலகவாசி என எதுவாக இருந்தாலும், அவற்றை நம்பாதவர்கள் அவற்றைக் காணவே முடியாது. ஆனால், அதை நம்புகிறவர்கள் அதைப் பார்த்ததாகச் சொல்வது உண்மை! ஆம்! அவர்கள் உண்மையில் பார்க்கிறார்கள்; ஆனால் உண்மையில் அது இல்லை.
ஒரு சிலர் இதுபோன்ற கதைகளை நம்புபவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்படியென்றால். ஓரிடத்தில், சட்டவிரோதமான செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள், அந்த இடத்திற்கு வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது, அதை நானே பார்த்திருக்கிறேன் என்று அளந்து விடுவார்கள். இதனால் மற்றவர்களின் தொல்லையில்லாமல் அவர்களின் தொழிலைச் செய்ய முடியும்.
நடு இரவில், வீடு விட்டு வீடு பாயும் மைனர்கள் இதுபோன்றக் கதைகளை நிறைய பரப்புவதுண்டு.
(தொடரும்...)