பக்கங்கள்

திங்கள், 16 நவம்பர், 2015

தனிமை தரும் மன உனர்வே பேய்த்தோற்றம் - க.அருள்மொழி

பேய் இருக்கா? இல்லையா? பேய் அல்லது பிசாசு அல்லது கடவுள்(?) எதுவாக இருந்தாலும் அதைப் பார்த்ததாகக் கூறுவதற்கு  உணரப்பட்ட இருப்பு (sensed presence) என்று உளவியலாளர்கள்  கூறுகிறார்கள். இதுபோன்று உணரப்படுதல் பொதுவாக, தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள், மிக அசாதாரணமான சூழலில் தனியாக இருக்கும்போது ஏற்படுவதாகும்.
இது, சூழ்நிலையின் தன்மை, மன அழுத்தத்தின் தீவிரத்தன்மை, துணைக்கு உள்ளவர்களின் பலம் அல்லது பலவீனம் ஆகியவற்றைப் பொறுத்து, பேய்களைப் பார்ப்பது, என்பது தெளிவற்றதாகவோ தெளிவானதாகவோ இருக்கும்!
சிலருக்கு ரத்தமும் சதையுமாகக் கோரமாகக் காட்சியளிக்கலாம். சிலர்  தங்கள் முன்னோர்களைப் பார்த்ததாகச் சொல்வார்கள். சிலர் ஆவி போன்ற உருவத்தைப் பார்த்ததாகச் சொல்வார்கள், சிலர்  கடவுள் நேரில் வந்ததாகச் சொல்வார்கள்.
அது இருப்பதாக உணர்வதற்கு, உடல் கோளாறு, சமூகச் சூழலில் மாற்றம், குளிர்ச்சியான சூழல் போன்றவை ஒரே நேரத்தில் அமைவது, முக்கியக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாகவும், ஆக்ஸிஜன் பற்றாக் குறையாலும் சலிப்பான மனநிலையாலும் ஹார்மோன்களின் தூண்டல்களாலும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் அது இருப்பதாக உணரப்படுகிறது.
சூழலியல் உளவியலாளர் பீட்டர் சீட்பெல்ட் (Peter Suedfeld) என்பவர், சில சூழல்களைச் செயற்கையாக உருவாக்குவதன் மூலமாக இதுபோன்ற மாயக் காட்சிகளை சிலர் உணரும்படி செய்யலாம் என்கிறார்.
பொதுவாகத்  தன்னந்தனிமையில், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படுவதுண்டு.
தனியாகக் கடலில் கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பலருக்கும் மாயத் தோற்றங்கள் ஏற்படுவதுண்டு. நம்மூர் லாரி ஓட்டுனர்கள் அனேகம்பேர் பேயைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஏனென்றால், இரவு நேரங்களில் தூக்கம் கெட்டுச் செல்வதோடு, ஆள் நடமாட்டமில்லாத பலவிதமான சூழல்கள் கொண்ட சாலைகளில் அவர்கள் செல்வது அவர்களுக்கு மாயக்காட்சிகளை உருவாக்குவது இயல்பே! வழிவழியாகப் பல பேய்க் கதைகளைக் கேட்பதும் முக்கியக் காரணம்.
ஜோஷ்வா ஸ்லோகம் என்பவர் 1895 முதல் 1898 வரை மூன்று ஆண்டுகளில், முதன்முதலாகத் தனியாகக் கடலில் படகில் சுற்றி வந்தவர். அவர், 1492இல் கொலம்பஸ் குழுவினர் பயணம் செய்தக் கப்பல்களில் ஒன்றான பின்டா (Pinta) என்ற கப்பலின் மாலுமியைக் கடலில்  பார்த்ததாகவும் பேசியதாகவும் கூறினார்.(உளறினார்) அப்போது அவர், (ஜோஷ்வா ஸ்லோகம்) உணவுக் கோளாறால் (Food Poisoning)   உடல்நலம் கெட்டிருந்தார் என்பதையும் சொன்னார். மாலுமிகள், மலையேறுபவர்கள், துருவங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள் போன்றவர்கள் இதுபோன்ற,(யாரோ பின் தொடர்வது போலவும்,யாரோ அபயக் குரல் எழுப்புவதுபோலவும் உணர்ந்ததாக) கதைகளைச் சொல்வது வாடிக்கையே! காரணம், தனிமை, உடல்நலமில்லாமை, போதிய சத்தான உணவில்லாமையால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் என்பது விளங்கும். கூட்டமாக இருக்கும் இடத்தில் பேயைப் பார்த்ததாக யாராவது சொல்லியிருக்கிறார்களா? தனிமையிலும், ஆபத்தான இடங்களிலும் இருப்பவர்கள்தான்  அதைப் பார்த்ததாகச் சொல்வார்கள்.
தன் அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டுத் தனிமையில் வாடும் அனுதாபத்துக்கு உரியவர்களுக்கு இதுபோன்ற, மாயத் தோற்றங்கள் அடிக்கடி ஏற்படும். இழப்பும், தனிமையும் மன அழுத்தத்தின் அளவை அதிகரிப்பதால், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, பிழையானக் காட்சிகளை உணர்கிறார்கள். மதங்களின் பாதிப்பு!
மதரீதியானச் சிந்தனைத் தாக்கங்களும் மாயக் காட்சிகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. தியானங்கள் என்ற பெயரில், ஏதேனும் ஒரு உருவத்தை (கடவுளை) நினைத்துக் கொள்ளச் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டவர்களுக்கு  அவர்கள் தியானத்தில் கற்பனை செய்யும் உருவம் உண்மையில் வந்ததுபோல் உணர்வார்கள். ஏன், மோசஸ், ஜீசஸ், முகமது போன்ற மதத் தலைவர்கள் தாங்கள், பாலைவனத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது, சில அமானுஷ்ய உருவங்களைச் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில். (உண்ணா)விரதம், நீண்டகால தியானம், உடலை வருத்தும் பிரார்த்தனைகள் போன்றவற்றால் மாயக் காட்சிகளை ஏற்படுத்துவதில் மதங்களின் பங்கு மிக முக்கியம்.
பேய், பிசாசு, அல்லது கடவுள் அல்லது வேற்றுலகவாசி  என எதுவாக இருந்தாலும், அவற்றை நம்பாதவர்கள் அவற்றைக் காணவே முடியாது. ஆனால், அதை நம்புகிறவர்கள் அதைப் பார்த்ததாகச் சொல்வது உண்மை! ஆம்! அவர்கள் உண்மையில் பார்க்கிறார்கள்; ஆனால் உண்மையில் அது இல்லை.
ஒரு சிலர் இதுபோன்ற கதைகளை நம்புபவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்படியென்றால். ஓரிடத்தில், சட்டவிரோதமான செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள், அந்த இடத்திற்கு வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது, அதை நானே பார்த்திருக்கிறேன் என்று அளந்து விடுவார்கள். இதனால் மற்றவர்களின் தொல்லையில்லாமல் அவர்களின் தொழிலைச் செய்ய முடியும்.
நடு இரவில், வீடு விட்டு வீடு பாயும் மைனர்கள் இதுபோன்றக் கதைகளை நிறைய பரப்புவதுண்டு.
(தொடரும்...)

ஆய்வாளர்கள் சொல்வது என்ன? உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள், மனித இயல் ஆய்வாளர்கள் ஆகியோர், மைக்கேல் ஷெர்மெர் (Michael Shermer) என்பவர் எழுதிய, மக்கள் ஏன் இயற்கைக்குப் புறம்பானவற்றை நம்புகிறார்கள்? என்ற நூலின் அடிப்படையில் பல கருத்துகளைச் சொல்லி-யிருக்கிறார்கள்.
மைக்கேல் ஷெர்மெர், இயற்கையைக் கடந்த, தெய்வீகமான, விஷயங்களில் நம்பிக்கை-யில்லாதவர். அவர், மரபுவழி செயல்களை உளவியல் கண்ணோட்டத்தில், விளக்கியுள்ளார். நிலையற்ற சூழ்நிலைகளால், வாழ்க்கை அச்சுறுத்தலான நிலைக்குள்ளாவதால், மூடநம்பிக்கைகளும்  குழப்பங்களும் மக்களுக்கு ஏற்படுகின்றது. மறுபிறவி நம்பிக்கைகளோ, சொர்க்கலோகம் பற்றிய நம்பிக்கையோ அவர்களுக்கு ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்கிறது. புராணங்கள், மதங்கள், அமானுஷ்யங்கள் எல்லாமே அறிவியல் வளர்வதற்கு முன் உண்டானவை. பகுத்தறிவு வளர்ந்த பின்னர் இதுபோன்ற கதைகள் அல்லது கடவுள்கள் புதிதாகத் தோன்றவில்லை என்பதை கவனிக்க வேண்டும். முழுமையான அறிவியல் அறிவு இல்லாத இடங்களில் இதுபோன்ற பொய் நம்பிக்கைகள் வளர்வது தவிர்க்க முடியாததாகிறது. சிலர், ESP (Extrasensory perception)  புலனுக்கப்பால் உள்ள புலன்காட்சி என்றும், சிலர் அடையாளம் தெரியாத பொருள் UFO (Unidentified flying object) என்றும் அறிவியல் போர்வையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வென்டி கமினேர் என்ற சமூகவியல் ஆய்வாளர், மறுபிறவி கலாச்சாரம்,  மத நிறுவனங்களைச் சார்ந்து வாழ்தல் ஆகியவற்றின் விளைவுதான் 'அமானுஷ்யங்கள் மீதான நம்பிக்கை என்று, Sleeping with Extra Terrestrials என்ற நூலில் விவரிக்கிறார். மேலும் முற்பிறவிப் பயன், நமக்கும் மேலான ஒரு சக்தி போன்ற நம்பிக்கைகளால் நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது மூளையினால் யோசிப்பதைவிட்டு, இதயத்தால்(!) யோசிக்கிறோம். உண்மைக் காரணங்களைக் கண்டுபிடிக்காத நிலையில் (மூட)நம்பிக்கை வெளிப்படுகிறது. சிலர் தன்னைத்தானே கடவுள் என்று உண்மையிலேயே நம்புகிறார்கள். புராணங்களை நம்புவதால் இதுபோன்ற மாயத் தோற்றங்களை மக்கள் உண்மையென நினைக்கிறார்கள்.
மனித இனஇயல் அறிஞர்கள் நாம் ஏன் நம்புகிறோம் என்பதை நன்கு விளக்குகிறார்கள். பரிணாம வளர்ச்சி, நம்மை கட்டுப்படுத்தி (conditioning) வைத்திருக்கிறது. அதாவது, உறுதியாகச் சொல்ல முடியாதவற்றையெல்லாம், அப்படி நம்பு என்று சொல்கிறது. இது ஒரு உயிர்வாழும் உத்தியாகச் செயல்பட்டது. அதாவது, தூரத்தில் தெரியும் கருப்பு உருவம், வெறும் பாறைதான் என்று நினைப்பதைவிட  பசி கொண்ட கரடி என்று நம்பி, அருகில் போகாமல்  உஷாராக  இருக்கலாம். இப்படியே தலைமுறை தலைமுறையாக உண்மையைக் கண்டறியாமலே, இருட்டில் அசையும் வெள்ளைத் துணி பேயாகவே நம்மைப் பின் தொடர்கிறது. மேலும் உண்மையை எல்லோரும் உணர்ந்துவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போகுமே!?
பயம் பதட்டம் அல்லது, மோசமான பொருளாதார  சூழல், அவசரமாக ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளச் செய்கிறது. கன்னி மேரி ஏசுவைப் பெற்றதுபோல ஏதேனும் அதிசயம் நடக்காதா என்று நம்புவது போல்தான் கடவுள் நம்பிக்கையும் பேய் நம்பிக்கையும். சில நல்ல பேய்களைப் (பரிசுத்த ஆவி) பற்றிய நம்பிக்கைகள் வளர்ந்துள்ளதும் அதனால்தான்.
Jhon F.Schumaker என்பவர், மாயாஜாலம், மதம் மற்றும் எல்லாவிதமான உண்மைக்கு மாறான வடிவங்களும் மனிதன் என்னும் விலங்கு வாழும் சூழலுக்கு ஏற்ப, மாறுபட்ட, தனித்தன்மை கொண்டதாகும். என்கிறார். அப்படி நம்பிக்கை என்ற பெயரில் ஏற்றுக்கொள்வது, பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. வழக்கமான, காரண காரிய  சிந்தனையைக் காட்டிலும், மூடநம்பிக்கைகளால் புராணங்களும் கடவுள்களும் தோன்றியிருப்பது பலருக்கும் பிழைப்பைக் கொடுத்திருக்கிறது அல்லவா? மாயத் தோற்றங்களை உருவாக்குவதால் தன்னைப் பெரிய ஆளாக ஆக்கிக் கொள்ளலாம்; மதிப்பை அதிகரித்துக் கொள்ளலாம்; அதிகாரம் உள்ளவராக ஆக்கிக் கொள்ளலாம் என்பதோடு, அறிஞனாக காட்டிக் கொள்ளலாம்.
schizophrenics எனப்படும் மனப்பிளவு நோய் உள்ளவர்களுக்கு மாயக் குரல் கேட்பதும், மாயக் காட்சிகள், திரிபுக் காட்சிகள் தெரிவதும் வழக்கமானது. அவர்களின் அருகில் யாரோ இருப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
அறிவியலாளர்கள் மாயக்காட்சிகள் என்பது நரம்பியல் நோய்க் காரணமாகவே மாயக்காட்சிகள் உருவாவதைத் தெரிவித்து-வந்துள்ளனர். ஆனால்,   மூளையின் எந்தப் பகுதியில் அந்த மாயக் காட்சிகள் தூண்டப்படுகின்றன என்பதை மிகத் துல்லியமாக அறிய முடியாமலிருந்தது.
இப்போது, Olaf Blanke மற்றும் அவரது, சகாக்கள் யாரோ இருப்பதாக உணர்வதை (Feeling of Presence)  உண்டாக்கும் மூளையின் பகுதியைச் சரியாகக் குறிப்பிட்டிருப்பதோடு, நல்ல நிலையிலுள்ள மனிதர்களுக்கு பேய் பயத்தைக் காட்டும் ஒரு ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கண்டு-பிடிப்பின் மூலம் மாயத் தோற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிந்து-கொள்வதோடு, அந்த நோயை குணமாக்கும் வழியையும் எளிதாக்கலாம்!
2006 ஆம் ஆண்டில், Olaf Blanke  வலிப்பு நோயாளிக்கு மூளையின் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதியை (temporoparietal junction) மின்சாரத்தின் மூலம் தூண்டுவதன் மூலம் மாயக்காட்சியை உருவாக்க முடியும் என்று நிருபித்தார். மூளையின்  temporoparietal junction என்ற அந்தப் பகுதி நம் உடலின்  உணர்வு மற்றும் அசைவு ஆகியவற்றை மூளையோடு தொடர்புபடுத்தும் பகுதியாகும். மேலும் schizophrenics எனப்படும் மனப்பிளவு நோய் உள்ளவர்களுக்கு அது மிகையாக வேலை செய்வதும் கண்டறியப்-பட்டது.
மேலும் சுவையான தகவலையும் அவர் கண்டுபிடித்துள்ளார். உணரப்படும் காட்சிகள் நோயாளியின் உடல் இருக்கும் நிலையிலேயே கண்ணாடி பிம்பம்போல் உணரப்படுகிறது என்பதுதான் அது! அதாவது, நோயாளி உட்கார்ந்து கொண்டிருந்தால், அந்த உருவமும் உட்கார்ந்து கொண்டிருக்கும்!
உடல் உணர்வதை நரம்பு செல்கள் மூளையோடு சரியாக ஒருங்கினைக்காத நிலையில் மாயக் காட்சிகள் தோன்றுவதாக Giulio Rognini என்பவர் கூறுகிறார்.
மாயத் தோற்றங்கள் மூளையின் மூன்று பகுதிகளில் ஏற்படும் காயங்களால் ஏற்படுகின்றன. முக்கியமாக, Frontoparictal Cortox    என்ற பகுதி பாதிப்படையும்போது. பேய் பிசாசுகள், அருவங்கள், கடவுள்கள் எனப்-படுபவை எல்லாக் கலாச்சார சமூகங்களிலும் காணப்படுகிறது. உண்மையில் யாரும் அருகில் இல்லாத நிலையில் இருப்பதாக உணர்வது மூளையின் கவர்ச்சிகரமான கற்பனை. இது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள புனித நூல்கள், கற்பனை காவியங்கள் கதைகள் போன்றவற்றைச் சார்ந்து இருக்கும்.
நரம்பியல் மற்றும் உளவியல் பிணியாளர்கள் அடிக்கடி மாயக் காட்சிகளைக் காண்கிறார்கள். நல்ல நிலையில் இருப்பவர்கள், அசாதாரணமான சூழலில் யாரோ இருப்பதாக உணர்கிறார்கள்!
மனநல பாதிப்பே பேய்களும் பிசாசுகளும் இருக்கிறது என்று நம்பக் காரணம். பகலிலும் ஒருவருக்கு மேற்பட்டவர்களும் இருக்கும்போது பேய் வராததற்குக் காரணம் என்ன?
தனியாக இருக்கும்போது பேய் வருவதற்கு, மன பிராந்திதான் காரணம்!
மன பிராந்தி, மது பிராந்தி இரண்டும் மனிதர்க்குக் கேடு!
உண்மை இதழ்,15-31.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக