பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

சாமி ஆடுதல் - சிங்காரவேலர்


குடங்களை சிங்காரித்து அவைகளை தலைமேலேந்திக் கொண்டு அதற்குக் கரகம் எனப் பெயரிட்டு தெருக்களில் ஆடித்திரியும் வேடிக்கையை நமது நாட்டில் அன்றாடம் பார்க்கலாம். அதனுடன் தெய்வம் ஆடுவதுமுண்டு.
தெய்வம் ஆடுவதென்றால் ஒரு புருஷனோ, பெண்ணோ தன் மேல் சாமி வந்ததாகச் சாதாரணஸ்மரணையை மறந்து, வேறுவிதமாகப் பேசுவதும் ஆடுவதுமான காட்சி சாமி ஆடல் அல்லது தெய்வமாடல் என வழங்கும். இவ்விதமாக சில மனிதர்கள் நடிப்பதை மெஞ்ஞானத்தில் (Artificial) அதாவது, தானே வரவழைத்துக் கொண்டு ஓர்வித வெறி என்பர்.
சாதாரண ஹிஸ்டிரியாவில் மூர்ச்சை அடக்க வலி வருவதுண்டு. காக்காய் வலி என்ற நோவும் இந்த நரம்பு நோயைப் பற்றியதே. அதே மாதிரியாகவே ஒருவன் தானாகவே வரவழைத்துக் கொள்ளும் இவ்வித வலியைத் தான் நமது நாட்டுப் பாமர ஜனங்கள் சாமி ஆடுகிறது சாமி பேசுகிறது, சாமி விமர்ச்சித்தது என்று பயபக்தியோடு சொல்கின்றனர்.
இந்த வலியை வரவழைத்துக் கொள்வதற்குத் தகுந்த ஆடம்பரங்கள் செய்வதுண்டு. உடுக்கை, சிலம்பு, கரகம், வேப்பிலை, மேளம், தாளம், விபூதி, மணி முதலிய (Accompaniments)  ஆடம்பரங்கள் கூடவே இருக்கின்றன. இத்தியாதி ஆடம்பரத்தில் சில நரம்பு வியாதியுடையோர் எளிதில் ஓர்வித மயக்கம் அடைகின்றனர்.
இவ்வித வலியில் (எக்சைட்மெண்ட்) விழுந்தோரை ஆயிரக்கணக்காக அல்லாசாமி பண்டிகையில் ஆலி, ஜூலா என்ற சப்தத்திற்கு ஏற்றவாறு சிறிய பையன்களும், இந்த மயக்கத்தை வரவழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் மேல் மஞ்சள், சாம்பிராணித்தூளை வாரி வாரி எறிகின்றனர்.
அல்லாசாமி கோஷத்தில் யாருக்குத்தான் இவ்வித வலியுண்டாகாமல் இருக்கும்? ஒருவனைப் பார்க்க மற்றொரு வனுக்கு தொத்து வியாதியைப் போல் இந்த வலி தொத்திக் கொள்வதுண்டு அதே மாதிரியாகவே இந்தப் பண்டிகையில் மாரடித்துக் கொள்ளும் பயங்கரமான காட்சியொன்றுண்டு.
மூடநம்பிக்கையால் தங்களை மறந்து மதவெறியால் தூண்டப்பட்டு இரத்தம் ஒழுக மாரை அடித்துக் கொள்ளு கின்றனர். ஒருவன் தானே கோபத்தை வரவழைத்துக் கொண்டு தன்னையே அடித்துக் கொள்ளும் பாவனையை யொத்தது இவ்வித தெய்வமாடலும் சாமி ஆடலும் மாரடித்துக் கொள்ளலும் என அறிக. இந்த விபரீத நிலைமையில் உளறும் சொற்களை தெய்வ வாக்கென நம்புகின்றார்கள்.
அம்மா ஆடு கேட்கிறாளாம்!
உண்மையாகவே ஒருவனுக்கு ஜன்னி நோய் பிறந்தால் தாறுமாறாக அவன் உளறுவான். இவ்வித உளறலைப் பேயின் வாக்கெனக் கொள்ளுவதுமுண்டு. காட்டுமிராண்டி நிலைமையில் நிற்கும் கூட்டங்களில் ஜன்னி கண்டவனை அடித்துக் கொன்றுமிருக்கிறார்கள். அதனால் தானே ஜன்னி யை உண்டாக்கிக் கொண்டு உடுக்கை, சிலம்புகளுக்குத் தக்கப்படி ஆடிக் கொண்டு தாறுமாறாக உளறுவானேயாகில் அதனைத் தெய்வ வாக்காக கருதி அதன்படி நடக்க எத்தனிக்கின்றார்கள்.
அம்மா ஆடு கேட்கின்றாள் என்றால் ஆடுகளைக் காவு இடுகின்றார்கள். கோழி கேட்கின்றாள் என்றால் கோழி காவு கொடுக்கின்றார்கள். இவ்விதமாக சில கொடூர செய்கை களையும் அம்மா சொன்னாளெனவும், சாமி சொல்லிற்று எனவும் நம்பி செய்து விடுகிறார்கள். இத்தியாதி கொடிய மூடநம்பிக்கைகளால் சில இடங்களில் கொலைகளும் நடந்திருப்பதைப் படிக்கின்றோம்.
நான் இருக்கும் மீன் பிடிக்கும் குப்பத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பந்துக்களில் ஒரு பெண்ணானவள் பிள்ளை பெற்ற பிறகு சரியான சிகிச்சையின்றி ஜன்னி பிறக்கவும், அவளுக்குப் பேய் பிடித்துக் கொண்டதென்று தெய்வம் வந்தவள் சொன்னதாக செருப்பாலும், முறத்தாலும் அந்த நோயாளியை அடித்துக் கொன்றார்கள்.
அதே மாதிரியாகவே நோயில் மெலிந்த பெண்களை தெய்வம் ஆடுகின்றவள் சொல்லைக் கேட்டு கடலில் முழுக வைப்பதும் தெய்வம் ஆட வைப்பதும், அடி தண்டமிட்டு நடக்கச் சொல்வதும், உடுக்கைச் சிலம்புடன் வெகுதூரம் நடந்து பிரார்த்தனை செலுத்துவதுமான கொடுமையான வேலைகளைச் செய்யச் சொன்னதின் பயனாக எத்தனை சிறு பெண்கள் மாண்டனர்.
இத்தியாதி கொடிய பழக்கங்கள் மூட பக்தியால் நேரிடுவதைக் கண்டறிந்து அதனைப் போக்கும் நல்லவழிகளைத் தேடாமல் சிவ சிவ என்று முணு முணுப்பதும் ஆன்மா உண்டா என்று வீண் வாதமிடுவதும் கர்மம் உண்டா என்று வாதிப்பதுமான பயனற்ற செயல்களைச் செய்து காலம் கழிப்பதா மானுஷீகமெனக் கேட்கின்றேன்.
வீண் காலம் கழிக்கும் மதவாதிகள்
சைவ கூட்டங்களிலும், வைணவ கோஷ்டியிலும், காலட்சேபங் களிலும், கிறிஸ்துவ சபைகளிலும், புத்த கூட்டங்களிலும் நமது புத்திக்கு எட்டாத கற்பனைகளைப் பற்றி பேசி வாதித்து வீண் காலத்தைக் கழிக்கின்றனரே ஒழிய மற்றபடி உயிரை இவ்வுலகில் வீணே மடியாமல் செய்வதற்கு வேண்டிய பரிகாரங்களைத் தேடி உழைக்காத காட்சியைக் காண மனம் புண்படுகிறது.
அரசாங்கம் மூட நம்பிக்கைக்கு ஆதரவு
துர்ப்பழக்கங்களால் மடியும் மக்களுக்கு நமது நாட்டில் கணக்கே இல்லை. எத்தனை குடும்பங்கள் இத்தியாதி மூட நம்பிக்கைகளால் நாசமடைந்தன.
காட்டுமிராண்டிப் பழக்கங்கள், நாகரீக மற்ற வழக்கங்கள், உலகமெங்கும் அங்கும் மிங்கும் பரவியிருந்த போதிலும், நமது இந்திய நாட்டில் மாத்திரம் இக்கொடிய மூட பழக்கவழக்கங்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அரசாங்கமும் இம்மூட வழக்கங்களுக்கு ஜாடையாகவே இருந்து வருகின்றது.
கடுமையான சட்ட திட்டங்களால் இம்மகா பாதகங்களைத் தடுப்பதை காணோம். இதற்கொரு காரணமுண்டு. அதுயா தெனில், இம்மூடப்பழக்கங்களை மதச்சார்பாக அனுஷ்டித்து வருவதால் மதநடு நிலைமை என்ற மூடத்திட்டத்திற்கு விரோதமாகாமல் பார்க்கின்றனர். சதி என்னும் துர்ப் பழக்கத்தைச் சட்ட திட்டத்தால் நிறுத்தினார்கள்.
(அதாவது, உடன்கட்டை ஏறுவது சென்ற 100 ஆண்டிற்கு முந்தியே தடுக்கப்பட்டது) ஏன்; தெய்வமாடுவதையும், காவு கொடுப் பதையும், ஆலி ஜூலா என்று மூர்ச்சித்துப் போவதையும், மந்திர தந்திரங்கள் செய்வதையும், பில்லி, சூனியம் வைப்பதையும், நல்ல சகுனம், கெட்ட சகுனமென்பதையும் சட்டதிட்டங்களால் நிறுத்தலாகாது.
உடன் கட்டை ஏறிமடிவது ஏகதேசம். ஆனால் சரியான சிகிச்சையின்றி இந்தக் கும்பம் போடுவதினாலும், தெய்வமாடு வதிலும், மந்திரம் செய்வதினாலும் மடியும் ஏழை மக்கள் ஆயிரக்கணக்கென்று சொல்லலாம். இதனைத் தடுப்பார் இவ் வுலகில் (இந்தியாவில்) யாருமில்லையா?
சுயமரியாதையோருக்கு இதை விட முக்கிய வேலை என்ன இருக்கிறது?
-விடுதலை,2.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக