பக்கங்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கடவுள் ஒருவர் இருந்தால்!

28.9.1930 - குடிஅரசிலிருந்து...
கடவுள் உண்டா? இல்லையா? என்று கேட்பதும்,
கடவுளை ஒப்புக் கொள்ளுகிறாயா இல்லையா என்று கேட்பதும், கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒரு வருக்குகொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?
ஒருவர் பணக்காரனாகவும் ஒருவர் ஏழையாகவும் ஏன் இருக்க வேண்டும்?
ஒருவர் கூன், குருடு, நொண்டி, குஷ்ட ரோகி முதலியவனாயும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?
ஒருவனுக்கு ஏன் பத்துப் பிள்ளை? ஒருவனுக்கு ஏன் நாலு பிள்ளை? ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை? என்றும்
இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித்தால் ஒருவர் நஷ்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடையவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் கேட்டு அதன் மூலம் மேல்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.
இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலால் வாயை அடைக்க வேண்டுமானால் இம்மாதிரியாக தோற்றங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் காணப் படுவதாலேயே (மேல் கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி விடலாம்.
எப்படியெனில் சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப் படுவதாலேயே சர்வசக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பதுதான் பதிலாகும்.
ஏனெனில், நொண்டிக்கும், முடவனுக்கும், நல்ல வனுக்கும், கஷ்டப்படு பவனுக்கும், கஷ்டப்படுத்துகிற வனுக்கும் கடவுளே காரணதனாயிருந்தால் கடவுளை சர்வ தயாபரத்துவமுடையவனென்றும் பாரபட்சமில்லாத சர்வசமத்துவ குணமுடைய வனென்றும் எப்படிச் சொல்ல முடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக் கூடிய சமாதானங்கள் ஒரு புறமிருக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக் கூடிய சமாதானங்களைப் பற்றி சற்று கவனிப்போம். ஒரே கையால் கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய் வைத்து ஒவ்வொரு தடவை அள்ளி அரிசியைத் தனித் தனியாய் எண்ணிப் பார்த்தால் அவற்றுள் ஒன்றுக்கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப் பானேன்? அதே மனிதன் அதே கையால் அதே நிமிஷத்தில் அதே குவிய லிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படுகின்றது? ஒரே பூமியில், ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும், சில முளைக்காமலும் முளைத்தனவைகளில் சில வளராமல் கூளையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணிகள் கொண்ட கதிராகவும் சில குறைவான மணிகள் (தானியங்கள்) கொண்ட கதிராகவும் சில முளைத்து நன்றாய் தளைத்தும் ஒரு மணி கூட இல்லாத வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன? ஒருவினாடியில் ஒருபூமியில் நட்ட செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சுவல்ப்ப கிளைகளும் வளரு வதும் ஒன்று பதினாயி ரக்கணக்காக காய்ப்பதும், ஒன்று நூற்றுக்கணக்காக காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும் ஒன்று பூ விடாமலும் பிஞ்சு விடாமலும் வறடாயிருப்பதும் என்ன காரணம்? கடவுள் ஒருவர் இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்றுபோல் இருக்கக் கூடாது?
ஒரு சமயம் கடவுளே இந்தப்படி செய்திருப்பார் என்று சொல்வதானால் அம்மரம் செடி தானியம் முதலியன வைகள் இப்படி பலன் அடைவதற்குக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்களைப் பற்றிய சம்பந்தமான கேள்விகளுக்கும் சமாதானம் என்பது தானாகவே புலப்படும்.

-விடுதலை,9.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக