பக்கங்கள்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

25 ஆண்டுகளில் 1,200 ‘கடவுளர்' சிலைகள் திருட்டு உயர்நீதிமன்றத்தில் அறநிலைய துறை தகவல்


சென்னை, ஜன.26 தமிழகத்தில், 25 ஆண்டுகளில், 1,200 ‘கடவு ளர்'சிலைகள்திருட்டு போயுள் ளன;  சிலைகளை, கண்டுபிடிக்க முடியவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில், அறநிலை யத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கு களை, நீதிபதி, மகாதேவன் விசாரிக்கிறார். மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றவும், அய்.பி.எஸ்., அதிகாரி, பொன்.மாணிக்கவேல் தலை மையிலான குழு, சிலை கடத்தல் புகார்களை விசா ரிக்கவும், நீதிபதி உத்தரவிட்டி ருந்தார். சிலை கடத்தலை தடுக்க, அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி, மகாதேவன் முன், நேற்று (25.1.2018) மீண்டும் விசார ணைக்கு வந்தது. இந்துசமய அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர், மகாராஜா ஆஜரானார். அறநிலையத் துறை ஆணையர், ஜெயா தாக்கல் செய்த கூடுதல் அறிக்கை வருமாறு:
கோவில்களில், சிலைகள் திருடு போவது குறித்து, அற நிலையத் துறை கவலை கொள்கிறது.  -
சிலைகளை பாதுகாக்க வும், கோவில்களின் உள்ள மதிப்புமிக்க பொருட்கள் திருடு போவதைத் தடுக்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. காவல் துறை, சிலை தடுப்பு துறையுடன், அறநிலையத் துறை ஒருங் கிணைந்து செயல்படுகிறது. திருட்டுப் போவதை தடுப்பது தான், அறநிலையத் துறையின் நோக்கம். சிலை தடுப்பு பிரி வுக்கும், அதிகாரிகளின் புல னாய்வுக்கும், அறநிலையத் துறை தேவையான ஒத்து ழைப்பை வழங்குகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவு களை பின்பற்ற, அனைத்து நடவடிக்கைகளையும் துறை எடுக்கிறது. சிலை தடுப்பு பிரிவுக்கு, சட்டத்துக்கு உட் பட்டு, அனைத்து ஒத்துழைப் பையும் வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை, 29 ஆம் தேதிக்கு, நீதிபதி, மகாதேவன் தள்ளி வைத்தார்
-விடுதலை, 26.1.18

ஆஸ்திகர்களே எது நல்லது?


21.12.1930- குடிஅரசிலிருந்து...
கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?
அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?
-விடுதலை, 26.1.18

புதன், 3 ஜனவரி, 2018

மத நம்பிக்கையின் விளைவு

.


27.05.1934 - புரட்சியிலிருந்து

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப் பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டுமென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசியேட்டட் பிரஸ்) செய்தி கூறுகின்றது. இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்? மத நம்பிக்கை யினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்.

இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம் என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.

காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போ மானாலும் இன்று உலகில் புருஷனைச் சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ, இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனே இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்குத் தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்று கேட்கின்றோம்.

ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.

புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - பகுத்தறிவிலிருந்து..

நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் ஒட்டு மொத்தம் பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவை களுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர்களின் கஷ்டத்தையும், அனு பவிக்கும் வேதனைகளையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப்பெற்ற தெய்வீகக் கலியாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள் 20 வயதுக்குட் பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண் டிருக்க வேண்டும் இது தெய்வீக மதத்தின் பலனா?  அல்லது அசுர மனத்தின் பிசாச மனத்தின் பலனா என்று யோசித்துப் பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாஸ்திரம் என்கின்ற வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந் திரத்துக்கும், ஜென்ம விரோதியான வார்த்தைகளாகும். (ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதியான வார்த்தைகளாகும்.) ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக்கும் இடமில்லை.

இந்தக் காரணங்களால்தான். பழமை விரும்பிகள், வைதிகர்கள் பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்க மென்றாலும், சுயமரியாதைக் கலியாண மென்றாலும் முகத்தைச் சுழித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர் களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமுகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.

ஆகையால்தான் இந்தப் பிரச்சாரம் செய்து வருகின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன்றாருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக்காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

- விடுதலை நாளேடு, 29.12.17