பக்கங்கள்

திங்கள், 7 மே, 2018

இந்து மதக் கோயில்களுக்குள் ஏன் வேறுபாடு?

அயோக்கியன்


கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் - புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். ("குடிஅரசு", 18.5.1930)

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் என்றாலே பார்ப்பனிய மேலாண்மைமிக்க கோயில்களுள் ஒன்றாக இருந்து வருவதாகும். அந்தக் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதத்தை இந்துக்கள் அல்லாதவர்களும் பெற்றுக்கொண்டு சாப்பிடலாம் என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டது என்றதும் பரவாயில்லையே, கோயில்களில் மதப் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டதோ என்று பாராட்டத் தோன்றும்.

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதத்தை இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சாப்பிடலாமாம். ஆனால், பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோயிலுக்குள் பிரசாதம் அளிக்கப்படுகின்ற பகுதிக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது எனும் உத்தரவு கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் கோயிலுக்கு வெளிப்புறமாக  பிரசாதம் உண்ணுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 500 பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு  ஊட்டுப்புரா எனும் உணவருந்துமிடம் குருவாயூர் கோயில்  தேவஸ்வம் நிர்வாகத்தின் சார்பில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்குள்  பேண்ட், சட்டை, காலணி அணிந்து செல்லவும் மறுக்கப்பட்ட நிலையில் உணவருந்தும் பகுதிக்கு அணிந்து செல்வதற்கு தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவு அருந்துமிடமாக இரண்டு கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பழைமையானதாக உள்ள ஒன்று இந்துக்களுக்கு மட்டும் என்றும், கோயிலில் பின்பற்றப்பட்டு வருகின்ற பழைமையான  நடைமுறையின்படி, அப்பகுதிக்குள் பேண்ட், சட்டை காலணிகள் அணிந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள உண்ணுமிடத்தில் எல்லோரும் உணவருந்தலாம். புதிய உணவுக்கூடத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. சாப்பிடுவதற்காக மட்டுமே வேகமாக வருபவர்களுக்கு வாய்ப்பாக கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் நோக்கம் என்ன வென்றால், அனைவருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்  என்று கோயில் நிர்வாகி பிரவீன் கூறுகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு ஆண்டுக்கு ஏழு லட்சம் பேர் செல்கிறார்கள்.  கேரள மாநில அரசு சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினர்களை உள்ளடக்கி, குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகக் குழு கோயில் நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தலைமை அர்ச்சகர் (தந்த்ரி) தினேசன் நம்பூத்ரி கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாத வர்களையும் அனுமதிக்கும் பரிந்துரையை அளித்தார். கேரள மாநில இடதுசாரி அரசின் அமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சியினரும் அப்பரிந்துரையை வரவேற்றனர். இந்துக்கள் அல்லாதாரை கோயிலுக்குள் அனுமதிப்பது என்பது எப்போதுமே விவாதத்துக்குரியதாக இருந்து வருகிறது. இந்துமத பக்திப்பாடல்களை பாடிவருபவரான கே.ஜே.ஏசுதாஸ் கோயில்களுக்கு செல்லவேண்டும் என்பதில் விருப்பம் தெரிவித்து வருபவராவார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வரான ஏசுதாஸ் இந்து மத நம்பிக்கை உள்ளவராகவே கூறிவந்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்துவரான பாடகர் கே.ஜே ஏசுதாஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருவனந் தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலுக்குச்  சென்றார். அப்போது, அவரிடம் உறுதிமொழிப்பத்திரம் பெற்றுக்கொண்ட பின்னரே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப் பட்டது. அவர் அளித்த உறுதிமொழிப்பத்திரத்தில், இந்துமத நம்பிக்கை கொண்டவர் என்றும், கோயிலுக்குள் சென்று தரிசித்திட விரும்புவதாகவும் தெரிவித்திட வலியுறுத்தப்பட்டு அதன்படியே அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரே அவர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குள் செல்வதற்கு பாடகர் கே.ஜே.ஏசுதாசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைப் போன்று, திரும்பத்திரும்ப அவர் கோரிக்கை விடுத்தபோதிலும், குருவாயூர் கோயிலுக்குள் செல்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய  பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் கூறியதாவது: கரப்பான் பூச்சியாகவோ, ஈ ஆகவோ நான் பிறந்திருந்தால் குருவாயூர் கோயிலுக்குள் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

இந் நிலையில் குருவாயூர் கோயில் நிர்வாகி பிரவீன் கூறியதாவது:

கோயிலின் பழைமையான நடைமுறைகளை நாங்கள் இன்னமும் கடைப்பிடித்து வருகிறோம். இப்போதைக்கு நாங்கள் மாற்றங்கள் எதையும் செய்வதாக இல்லை என்றார்.

ஓர் இந்துக் கோயிலில் அனுமதி - இன்னொரு இந்துக் கோயிலில் அனுமதி மறுப்பு? இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் இல்லையா? இல்லை என்றால் ஒரு மதத்துக் கடவுள் இன் னொரு மதக்காரனுக்கு இல்லை என்று ஆகிவிடவில்லையா?

அப்படியானால் ஒரு மதத்துக்காரன் இன்னொரு மதக்காரனுக்கு நாத்திகன் தானே!

கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்ற தந்தை பெரியார் அவர்களின் கணிப்புதான் என்னே!

- விடுதலை நாளேடு, 4.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக