பக்கங்கள்

திங்கள், 7 மே, 2018

இதுதான் உ.பி. அரசின் சாதனை

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி  நடை பெற்று வருகிறது. அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ஆவது மற்றும் 12ஆவது  அரசுப் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த 29.4.2018 அன்று வெளியானது. அதில்,மாநிலத்தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் நிகழ்ந்துள்ளது மிகப் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த 150 பள்ளிகளில், 98 பள்ளிகளில் எந்த மாணவரும் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும், மேலும்  52 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. உ.பி.யின் காஷிப்பூர் மாவட்டத்தில்தான் அதிக அளவிலான பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், ஆக்ரா மாவட்டத்தில் 9 பள்ளிகளிலும் பூஜ்ய சதவிகித அளவிலான தேர்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காஸிபூர், மிர்ஸாபூர், அலிகார் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி .சதவிகிதம்  மோசமான நிலையில் இருக்கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளும் இதில் அடக்கம். மேலும் 237 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 20 சதவிகிதம் மட்டுமே என்றும் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் வினோத் குமார் ராய் தெரிவித்துள்ளார். உ.பி. அரசு கல்வித் துறையில்  எவ்வளவு அழகாக செயல்பட்டு வருகிறது என்பதை  இந்தத் தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.  மாணவர்கள் இந்த அளவு மிகவும் மோசமான முறையில் தேர்ச்சி பெறாமல் போனது இதுவே முதல் முறை ஆகும். இது சாமியார் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு நடக்கும் இரண்டாவது பொதுத்தேர்வாகும். 2016-2017 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த போது "நான் ஆட்சி ஏற்று இரண்டு மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆகவே அடுத்த பொதுத்தேர்வுகளில் உ.பி. மாணவர்கள் தேர்விற்காக எனது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்" என்று கூறிய நிலையில், அவரது ஆட்சியிலே உத்தரப்பிரதேச வரலாற் றிலேயே மிகவும் மோசமான தோல்வியை பள்ளிக் கல்வித் துறை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உ.பி.யில் சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற நிலையில், இரகளையில் ஈடுபட்டு முதல் அமைச்சர் பதவியைப் பிடித்தவர் இந்த சாமியார் ஆதித்யநாத்.

இவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மதச் சச்சரவுகளும், ஜாதிக் கலவரங்களும் தான் தலைதூக்கி நிற்கின்றன. ஒருக்கால் இவற்றைத்தான் தன் ஆட்சியின் சாதனையாகக் கூறுவார் போலும்!

அரசு அலுவலகங்களுக்கெல்லாம் காவி வண்ணம் பூசுதல் என்பதில் ஆரம்பித்து வேறு வளர்ச்சித் திட்டம் எதிலும் கவனம் செலுத்தாத சீரழிவு ஆட்சிக்குப் பெயர்தான் சாமியார் ஆதித்யநாத் ஆட்சி!

நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஜேபிக்குத் தோல்வியைக் கொடுத்து சாமியார் ஆட்சிக்கு மக்கள் தக்கப் பாடம் கற்பித்தனர்.

போதும் போதாதற்கு 10ஆம் வகுப்பு அரசு தேர்வில் பூஜ்ஜியம் வெற்றி!

கல்வி தானே நல்லாட்சிக்கான நற்சான்றுப் பத்திரம்! அதிலே பூஜ்ஜியம் என்றால் ஆட்சியே பூஜ்ஜியம் என்றுதான் பொருள்.

2019 மக்களவைத் தேர்தலில் உ.பி. மக்கள் மரண அடியைப் பிஜேபிக்குக் கொடுக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.
- விடுதலை நாளேடு, 5.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக