01.07.1928- குடிஅரசிலிருந்து....
சர்வ வல்லமையுள்ள என்று சொல்லப்படுவதான ஒரு கடவுள் இருக் கின்றார் என்பதை (அது என்னது என்று புரியாவிட்டாலும்) விவகாரமில்லாமல் ஒப்புக் கொள்ளுவ தாகவே வைத்துக் கொண்டாலும் மனிதனின் வாழ்க்கைக்கு அக்கடவுளின் சம்பந்தமோ வழிபாடோ அவசியமா? அல்லது மனிதனுக்குச் சில குணங்களைக் கைக்கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை அவசியமா என்பதே நமது கேள்வி. அன்றியும் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தன்னை மக்கள், வழிபட வேண்டும் என்றாவது தனக்குக் கோவில் கட்ட வேண்டுமென்றாவது பூசை, அபிஷேகம், தேர், திருவிழா, உற்சவம் ஆகியவைகளைச் செய்ய வேண்டும் என்றாவது ஆசைப்படுமா? அல்லது மக்கள் சில குணங்களைக் கொண்டு மற்ற ஜீவன்களிடத்தில் இன்ன இன்ன விதமாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தால் கடவுள் என்பது வாழ்க்கைக்கு வேண்டுமா வேண்டாமா என்று விளங்காமல் போகாது. அன்றியும் அச்சர்வ வல்லமை உள்ள சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும் சமயங்களும் வேண்டுமா? என்றும் அந்தச் சாமிகளை இல்லை என்பவர்களுக்கு ருஜுபடுத்த இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா? என்றும் கேட்கிறோம்.
இது போலவே ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாக உலகத்திற்கும், மக்களுக்கும், கடவுளுக்கும், சம்பந்தம் கற்பிக்கப் பட்டிருந்தாலும் புத்த மதம் என்பதில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கங்களைத் தவிர வணக்கம் என்பதை அம்மதத் தலைவர் ஒரு சிறிதும் வலியுறுத்தியிருப்பதாகக் காணப்பட வில்லை.
அன்றியும் அவர் கடவுளைப் பற்றியோ கடவுளை வணங்குவது பற்றியோ, கடவுள் நெறி உணர்த்திய பெரியோர்களை மரியாதை செய்வது பற்றியோ கவலை கொண்டு ஒரு கடுகளவு நேரமாவது செலவழித்திருப்பதாகவும் காணக் கிடக்கவில்லை. அன்றியும் அதைப்பற்றிய வார்த்தைகளையாவது அவர் எங்காவது உபயோகித்திருப்ப தாகச் சொல்பவர்களும் காணக்கிடக்கவில்லை. அப்படிப் பட்ட ஒருவரை மதத் தலைவராகவும் அக்கொள்கையை - அம்மதத்தை அச்சமயத்தை இன்றைய தினம் உலகத் திலுள்ள மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அதாவது 50 கோடி மக்களுக்கு மேல் தம்மதமாகவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக் கின்றார்கள்.
அன்றியும் அப்படிப்பட்ட புத்தரைத் தங்கள் கடவுள் அவதார மென்றும் தீர்க்கதரிசி என்றும் பகவான் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்ற ஜனங்கள் இந்துமதம் என்பதிலே சைவமதம் என்பதிலே வைணவ மதம் என்பதிலே பல கோடிக் கணக்கானவர்கள் இருப்பதோடு அதற்குப் பல ஆதாரங்களும் வைத்துக் கொண்டிருக் கின்றார்கள். இதை யாராவது மறுக்க முன்வருகின்றார்களா?
மனிதனுக்கு ஏதாவது ஒருமதமோ சமயமோ வேண்டியது அவசியம் என்று யாராவது சொல்ல வருவார்களானால் புத்த மதம் என்பதும் உலகாயுத மதம் என்பதும், சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம் என்பதும் மதங்கள் என்று தானே சொல்லப்படுகின்றன? அப்படி இருக்கையில் அம்மதங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டவர்கள் பலர் இருக்கலாம். எனவே அது எப்படி குற்றமுடைய தாகும். எப்படி பல மதங்களுக்கும் சமயங்களுக்கும் தலைவரும் காலமும் இல்லாமல் இருக்கின்றதோ அது போலவே இம்மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாமலிருக்கலாம்.
ஆகவே ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ, இன்ன சமயக் காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகின்ற வனாகவோ இருக்க வேண்டும் என்பதாகக் கட்டளை இடவும், இன்ன மதக்காரனாக இருக்கக்கூடாது என்று நிர்ப் பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு என்று கேட்கிறோம்.
மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்தந்த மனிதனின் தனி இஷ்டத்தைப் பொறுத்ததா? அல்லது மற்றொருவனுடைய நிர்ப்பந்தமா? என்று கேட்கிறோம்.
துறவிக்கு மதம் ஏது? ஞானிக்கு சமயம் ஏது? கடவுள் ஏது? வேதாந்தத்திற்கு மதம் ஏது? கடவுள் ஏது? சகலத்தையும் துறந்தவர்தானே துறவி? சகலத்தையும் சரி என்று எண்ணு கின்றவர் தானே ஞானி?
சகலமும் மித்தை, பொய், மாய்கை என்று எண்ணுகின்றவன் தானே வேதாந்தி என்பவன்? இவைகளை உலகம் ஒப்புக் கொள்ளுகின்றதா இல்லையா? அங்ஙன மாயின் இம்மூவர்களும் நாஸ்திகர்களா என்று கேட் கின்றோம்.
உலகத்தில் துறவி ஆவதற்கோ, ஞானி ஆவதற்கோ வேதாந்தி ஆவதற்கோ எவனுக்கு உரிமை இல்லை? என்று கேட்பதோடு எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரிடம் உபதேசம் பெற்று அல்லது எந்தச் சமயத்தை ஏற்று, எந்தக் கடவுளைத் தொழுது துறவியாகவோ, வேதாந்தியாகவோ ஆக வேண்டும் என்கின்ற நிர்பந்தமுண்டா? என்று கேட்கிறோம்.
இவ்விஷயங்களை நாம் வலியுறுத்துவதால் பல நண்பர்களுக்குச் சற்று மனக்கசப்பு ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் நம் நாட்டின் விடுதலை கண்டிப்பாய் இந்த விஷயங்கள் விளக்கமாவதில்தான் இருக்கின்ற தேயொழிய வெள்ளைக்காரரிடமும், பார்ப்பனர் களிடமும் நேரில் முட்டிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லுவோம்.
வெள்ளைக்கார அரசாங்க முறையும் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், தரித்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றன என்பது சத்தியமானாலும் அவ்வக்கிரமும் ஆட்சியும் ஆதிக்கமும் இந்த மதம், கடவுள், சமயம் என்பவைகளான மூடக் கொள்கைகளின் பேரில்தான் கட்டப் பட்டிருக்கின்றது என்பது நமது முடிவு. இம்மூடக் கொள்கைகளை வைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களையும், பார்ப்பனர்களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்து விட்டாலும் மறுபடியும் வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர் களும் வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அன்னிய அரசாங்கமோ இல்லாமல் நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே நாம் அடிமைகளாக தற்குறிகளாக தாசிமக்களாக, தீண்டாதார்களாக இருந்து வந்திருக் கின்றோம் என்பதைத் தயவு செய்து நம்புங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.
நம்புவதற்கு ஏதாவது கஷ்டம் இருந்தால் நம் நாட்டில் நம்மக்களால் சாமுண்டீஸ்வரி பேராலும், பத்மநாபசாமி பேராலும், கிருஷ்ணசாமி பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும் தயவு செய்து சற்றுத் திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.
எனவே, நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண் டியது என்னவென்றால் மூடநம்பிக்கை ஒழியவேண்டும்; அறிவுக்குச் சுதந்திரமும், விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும்; சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும். இம்மூன்றும் ஏற்பட வேண்டுமானால் மதமும், சாமியும் சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்து தீரவேண்டுமல்லாமல் இதற்கு வேறு பர்த்தியோ, ராஜியோ இல்லையென்றே சொல்லி இதை முடிக்கின்றோம்.
திராவிடன், இழிவு தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு, ஆரியத்திற்கு - ஆரிய மதம், கலை, ஆச்சாரம், அனுட்டானங்களுக்கு - அடிமைப்பட்ட தல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
- தந்தைபெரியார்
- விடுதலை நாளேடு, 18.5.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக