பக்கங்கள்

வியாழன், 4 அக்டோபர், 2018

"சிண்டு முடிந்திடுவோய் போற்றி!"

* மின்சாரம்


அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட "ஆரிய மாயை" என்னும் நூலில் காணப்படுவதுதான் இந்தத் தலைப்பு.

தினமலர், விஜயபாரதம், 'துக்ளக்' முதலிய பார்ப்பன ஏடுகள் திராவிடர் கழகத்துக்கும், திமுகவுக்கும் சிண்டு முடியும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த இரண்டு இயக்கங்களும் ஆரியத்தின் ஆணி வேர் வரை அறிந்தவை. ஆதலினால் இதில் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல - கத்தரிக்கோலின் இடையில் மாட்டி சிண்டு அறுந்து போவதுதான் நிகர லாபம்!

"இது உங்கள் இடம்" எனும் பகுதியில் தினமலர் அனாம தேயப் பெயர்களால் ஆரியத்துக்கே உரித்தான பூணூல் வேலையில் இறங்கி வருகிறது. அவ்வப்பொழுது 'விடுதலை' சூடு கொடுத்தும் புத்தி கொள் முதல் பெறுவதாகத் தெரிய வில்லை. 'விடுதலை' எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க இயலாமல் வியர்த்து விறுவிறுத்து வேறு கிளைக்குத் தாவுவது அதன் உடன்பிறந்த நோயோ!

30.9.2018 நாளிட்ட 'தினமலர்' 8ஆம் பக்கத்தில் அதே இது உங்கள் இடம் பகுதியில் தன் பூணூல் புத்தியை வெளிப் படுத்திக் கொண்டுள்ளது.

சிறீரங்கம் கோயிலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்றார் - கோயில் அர்ச்சகர்கள் அவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை உடனே அழித்து விட்டார் என்பதோடு நிறுத்தி இருந்தால் தினமலர் நிதான அறிவோடு எழுதியுள்ளது என்று கூட ஏற்றுக் கொள்ளலாம்.

திமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பதால், கொள் கையை விட்டுக் கொடுக்காமல் ஸ்டாலின் அப்படி செய்தி ருக்கலாம் என்கிறது தினமலர். அப்படியே வைத்துக் கொள் வோம் - அதில் என்ன தப்பு? திமுக கொள்கைப்படி அதில் உடன்பாடு இல்லாமல், அதே நேரத்தில் அர்ச்சகர்கள் அநாகரிக முறையில் நடந்து கொண்டாலும் பண்பாடு கருதி தளபதி மு.க. ஸ்டாலின் நடந்து கொண்ட முறையை அறிவும், நாகரிகமும் தெரிந்தவர்கள் பலபடப் பாராட்டவே செய்வார். ஆனால், அதைத் தலை கீழாக்கி சேற்றை வாரி இறைப்பதுதான் பார்ப்பனப் புத்தி.

ஸ்டாலின் குடும்பத்தினர் கோயிலுக்குச் செல்வதைக் கிண்டல் செய்கிறது தினமலர் - பகுத்தறிவை அறிந்தவர்க ளுக்கு ஒன்று தெரியும் - எந்தக் கொள்கையையும் யார்மீதும் திணிக்கக் கூடாது என்பதுதான் பகுத்தறிவின் பால பாடம்.

அதற்காக ஸ்டாலினைப் பாராட்ட மனம் இல்லாவிட்டாலும்   அக்கப் போராக எழுதுவது எந்த ஊர் நியாயம்?

பழுத்த ஆர்.எஸ்.எஸ்.காரரான "இந்துத்துவா" என்பதன் பிதா மகானாகிய வி.டி. சவர்க்கார் கடவுள் நம்பிக்கைக்காரர் அல்லவே - பழுத்த நாத்திகர்தானே, அந்நிலை காவிக் கூட்டத்திற்கு, சங்பரிவார் சங்கதிக்கு எதிர்நிலைதானே. அவரைக் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டார்களா?

வெட்கம் கெட்ட முறையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வைத்து அவரின் பிறந்த நாளிலும், மறைந்த நாளிலும் மரியாதை  செய்கிறார்களே!

இவ்வளவுக்கும் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் மூளையாக இருந்த மூலகர்த்தா சட்டத்தில் சந்து பொந்துகளில் நுழைந்து கோட்சேவை மாட்டி விட்டு தான் மட்டும் தப்பித்துக் கொண்டார் என்பதுதானே உண்மை.

இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்று பிரச்சாரம் செய்தவர் என்று பிரமாதமாகப் பேசுகிறார்களே அவரது 150ஆம் ஆண்டு என்று கூறி ஊர் ஊராக ரத ஊர்வலம் நடத்திக் கொண்டு திரிகிறார்களே - பள்ளிகளுக்கெல்லாம் கொண்டு செல்லுகிறார்களே! அந்த விவேகானந்தர் பூணூலைப் பற்றியும், பசு பாதுகாப்புப் பற்றியும், பார்ப்பனர்களைப் பற்றியும் வண்டி வண்டியாக சொல்லியிருக்கிறாரே - அவற்றை எல்லாம் திரிநூல் தினமலரும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், பிஜேபி காவிக் கூட்டம் ஏற்றுக் கொள்கிறதா என்று கேட்க விரும்புகிறோம்.

அடேயப்பா! பூணூல் உயர் ஜாதியினர் சின்னமல்ல - துவி ஜாதியினர் நாங்கள் என்று காட்டிக் கொள்வதற்கு ஆவணி அவிட்டம் கொண்டாடுவதில்லை. பூணூலைப் புதுப்பிப்ப தில்லை என்று மண்ணில் உருண்டு புரண்டு ஒப்பாரி வைத்து எழுதுகிறார்களே மனுதர்மத்திலிருந்து நாம் எடுத்துக்காட்டிய தற்குப் பிறகு மரியாதையாக உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமே.

பூணூல் என்பது சிஷ்யன் கோவணம் கட்ட இடுப்பில் கட்டிக் கொண்ட கயிறு என்கிறாரே விவேகானந்தர் - ஏற்றுக் கொள்ளுமா திரிநூல் தினமலர்?

"முஞ்சா' என்னும் புல்லினை குரு சீடனின் இடுப்பிலே கட்டி தீட்சை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய  முப்புரியாகிய அப்புல்லினை சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்! என்கிறாரே சிறீமான் விவேகானந்தர் ஆதாரம் வேண்டுமா? அவாளின் இராம கிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள நூலான ("சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்" பக்கம் 26-28).

திமுகவுக்குள் முரண்பாடுகள் இருப்பதாக ஏகடியம் பேசும்  இந்தக் கூட்டம் இந்து மதத்திலே இருக்கக் கூடிய இந்தப் பிரச்சினைக்கு என்ன பதில் சொல்ல உத்தேசம்?

பூணூலை விடுவோம்.  பிராமணர்களை பற்றி திராவிடர் கழகம் சொன்னால் 'அய்யயோ துவேஷம் துவேஷம்" ஆயிரம் டிகிரி தோஷம்! உஷ்ணம் தாங்க முடியவில்லை என்று கொய்யோ முய்யோ என்று கூச்சல் போடும் அந்தக் கூட்டத்தை நோக்கி இதோ விவேகானந்தர் பேசுகிறார் - கேண்மின்! கேண்மின்!!

"பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை; உங்கள் குலப் பெருமையும் பாரம்பரியப் பெருமிதம் வீணே. அதை விட்டொழியுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி பார்த்தால் இப்பொழுது உங்களிடம் பிராமணத்துவம் இல்லை. ஏனெனில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள். உங்கள் முன்னோ ரின் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு மானால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட்டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். குமாரில பட்டர் அதையே செய்தார். பௌத்தர்களை அழிக்க அவர் விரும்பினார். எனவே முதலில் அவர் பௌத்தர் ஆனார்.

பின்னர் பலரை வாதத்தில் வென்றார்; பலரது மரணத் திற்குக் காரணமானார்.  தனது பாவங்களைக் கழுவுவதற்காக தூஷாக்கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அதற்கான நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லாவிடில், உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள்; எல்லோருக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள், அறிவின் கதவைத் திறவுங்கள், தாழ்த்தப்பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகைகளையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்!" என்றாரே விவேகானந்தர்.

(சிறீராமகிருஷ்ண மடம் வெளியீடு - "கொழும்பு முதல் அல்மோரா வரை" பக்கம் 583).

இத்தோடு நிறுத்தி விட முடியுமா? கல்வி விடயத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் சிண்டை அறுக்கும் வகையில் விவேகானந்தர் முழங்கி இருப்பதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

"ஏ, பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர் களுக்குக்கீழ் ஜாதியினரை விட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால், பிராமணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காக செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்குக் கொடுங்கள்.

ஏனெனில் அவர்களுக்குத்தான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும்; பிறவியிலேயே அறிவாளியில்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும்; இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும்"

(சிறீராமகிருஷ்ண மடம் வெளியிட்ட "கொழும்பு முதல் அல்மோரா வரை" பக்கம் 139,140).

பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கும்பல், 'தினமலர்', 'விஜயபாரதம்', 'துக்ளக்' வகையறாக்கள் திராவிடர் கழகத்தைப் போலப் பேசுகிற விவேகானந்தரை என்ன செய்ய முடிவு?

திமுகவுக்குள் முரண்பாடுகள் பற்றிப் பேசுபவர்களே, உங்களுக்குள்ளிருக்கும் இந்த முரண்பாடுகளுக்கு என்ன பதில்?

இந்து மதத்தில் தெய்வ காரியம், பகவான் கிருஷ்ணன் அருளியது என்று பீலா விடும் பார்ப்பனப் பிரமுகர்களே - அந்தக் கீதையைப் பற்றி உங்கள் விவேகானந்தர் கூறுவதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பீர்களாக!

"கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையை சரி வரப் புரிந்து கொள்ள மிக மிக முக்கியமாக பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா? இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர்  வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருச்சேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக  அர்ஜூனனும், ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன, கீதையை சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி, குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால், இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனைய பெயர்கள் பயன்படுத்தப்பட் டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருச்சேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

("விவேகானந்தர் கீதையைப் பற்றி கருத்து" ஏ.எஸ்.கே. எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." பக்கம் 117)

இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு இருக்கக் கூடிய உங்களிடத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள் வண்டி வண்டியாக குவிந்து கிடக்கும்போது  தி.க. - தி.மு.க.வுக்கும் ஏதோ முரண்பாடுகள் இருப்பதாக மூக்கை நுழைப்பது புத்திசாலித்தனமா?

தி.மு.க.வை அண்ணா உருவாக்கியபோது, 'தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி' எனச் சொன்னார். தாய்க் கழகமான திராவிடர் கழகம், கொள்கையில் தி.மு.க. தவறு செய்கிறது என்று கண்டால் சுட்டிக் காட்ட வேண்டியது அதன் கடமை. பல கால கட்டங்களில் இத்தகு நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தாய்க் கழகம், சேய்க் கழகத்திடம் சிலவற்றைச் சுட்டிக் காட்டினால் இடித்துச் சொன்னால் கண்டித்தால் சம்பந்தமே யில்லாத பார்ப்பனர் கூட்டத்துக்கு என்ன வேலை அங்கி ருக்கிறது?

"தி.மு.க.வின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வீரமணியை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால், ஸ்டாலின் அதற்குரிய விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும். வீரமணி போன்றோரை பொருட்டாக நினைத்தால் தன் தலையில் ஸ்டாலின் மண்ணை அள்ளிப் போடுவதற்குச் சமமாகி விடும்" என்று மண்ணைவாரி இறைத்து தன் கடையை மூடிக் கொண்டு இருக்கிறது தினமலர்.

உண்மையிலேயே மூக்கை நுழைப்பவர்கள் யார்? திராவிடர் கழகம் தாய்க் கழகம். திமுக அதன் சேய்க் கழகம் - தாய்க் கழகத்திற்கென்று சில கடமைகள் உண்டு. அந்த கடமையைச் செய்வது எப்படி திமுகவின் உள்கட்சி விவகாரத்தில் திராவிடர் கழகம் மூக்கை நுழைத்ததாகும்?

தந்தை பெரியார் காலத்திலேயே அண்ணா அவர்கள் மறைந்த நிலையில், யார் முதல் அமைச்சர் என்ற பிரச்சினை வந்தபோது தந்தை பெரியார் தலையிட்டுத் தீர்வு காணவில்லையா?

திமுகவிலிருந்து அதிமுக பிரிந்த நிலையில் எம்.ஜி.ஆரைக் கூப்பிட்டு தந்தை பெரியார் பேசவில்லையா?

திமுகவுக்குள் கலைஞர், நாவலருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நேரத்தில் பெரியார் திடலுக்கு அழைத்து அன்னை மணியம்மையார் பேச்சு வார்த்தை நடத்த வில்லையா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களே கட்சியின் உள் பிரச்சினையில் திராவிடர் கழகத் தலைவரை அழைத்து கருத்துக் கேட்டதுண்டே!

திராவிடர் கழகம் -திமுகவுக்குள் இருப்பது எங்கள் குடும்ப விஷயம். இதில் உண்மையிலேயே மூக்கை நுழைப்பது. 'தினமலர்' போன்ற பூணூல் கும்பல்தான் "ஆரிய மாயை" எனும் நூலில் அறிஞர் அண்ணா வெகு அழகாக ஆரியத்தைப் பற்றி  படம் பிடித்துக் காட்டினாரே அதுதான் இந்தநேரத்தில் நினைவிற்கு வருகிறது.

திராவிடத்தைக் கைவிட வேண்டும்; திராவிட இயக்கத்தின் காலாவதியான கொள்கையிலிருந்து விடுபட வேண்டும். குறிப்பாக தி.க. வீரமணியிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்று தொடர்ந்து இந்தக் கூட்டம் தூபம் போட்டுக் கொண்டு இருக்கிறது.

இதற்கொரு முடிவு கட்டும் வகையில் விடப்பட்டதுதான் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நேற்றைய "முரசொலி" அறிக்கை.

"இது பெரியார் மண் திராவிடக் கோட்டை. இங்கே அமைதியைக் குலைக்கும் வெறியுடன் குரோத வால்கள் ஆடினால், கொள்கை வாள்கள் உயரும்; பெரியாரின் இலட்சியப் புகழ் காக்க எங்கள் தலையை கொடுத்தேனும் அவரது சிலையைக் காப்போம்!" என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக

அறிவித்துவிட்ட பிறகு (கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அந்தத் தருணத்திலேயே பிரகடனப்படுத்தி விட்டார்) திராவிடர்  சித்தாந்த தொடர்பு வேண்டாம், வீரமணி சகவாசம் வேண்டாம் என்று எழுதினால் இதைவிட வெட்கம் கெட்ட, மானங் கெட்டத்தனம் வேறு உண்டா? 'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.. களத்தில் நேராகச் சந்திக்கலாம் - கவட்டுத்தனங்கள் வேண்டாம்!

- விடுதலை நாளேடு, 2.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக