பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2019

"நம்புங்கள் - நம்புங்கள்!" -"நானே அறிவாளி... வந்தேனே...!!'

மின்சாரம்


திருவாளர் 'சோ' இராமசாமி மறைந்தபின் 'துக்ளக்' இதழைக் கபளீகரம் செய்து கொண்ட கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் "நானே அறிவாளி" என்று கோமாளியாக ஆகாயத் துக்கும் பூமிக்கும் ரொம்பத்தான் துள்ளிக் குதிக்கிறார். கிணற்று வாளியாவது பயன்படும். இந்தக் கிணற்றுத் தவளையோ "நானே அறிவாளி - அறிவாளி" என்று அக்ர காரத்துக்கே உரிய "கல்யாணக் குணத்தோடு" அரைக்கால் சட்டை பையன்போல அரட்டைக் கச்சேரி நடத்துவதான் பரிதாபம். (இப்பொழுது சங்கரமடம் வரை நாட்டாண்மை செய்ய ஆரம்பித்து விட்டார் - பார்ப்பனர்கள் சங்கரமடம் பக்கம் நிற்பார்களா? அல்லது இந்த சவுண்டிப் பக்கம் நிற்பார்களா என்பதை வேடிக்கைப் பார்க்கப் போகிறோம்.)


எத்தனை முறை பதிலடி கொடுத்தாலும் இந்த சவுண்டிகளுக்கு உறைப்பதில்லை. ஒரு வரி பதில் எழுத வக்கில்லாத இந்த வெட்கம்கெட்டதுகள், திராவிட இயக்கத்தின் மீதும் (குறிப்பாக தி.க. - தி.மு.க. வின் மீது), தந்தை பெரியார், கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி, தளபதி ஸ்டாலின் மீதும் அக்கப்போர் அவுட்டுத் திரிகளாக சேற்றை வாரிப் இறைப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.


நேற்று வெளிவந்த "துக்ளக்," கில் (19.6.2019) இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி எதை எதையோ கிறுக்கித் தள்ளி இருக்கிறார் இந்தக் கிறுக்கர்.


தமிழ்நாட்டின் சமுக அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு எழுதிட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி ஏதுமின்றி பொடித்தனமாக எழுதுவதை எண்ணினால் வயிறு குலுங்க சிரிக்கத்தான் வேண்டும்.


"1949: திமுக பிரிந்த பிறகு பெரியார்  - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவில்லை!"


இப்படி எழுதியிருக்கிறாராரே - இதனைப் படிக்கும் எலிமண்டரி அரை டிராயர் பையன்கூட கேலி செய்ய மாட்டானா?


எத்தனை எத்தனைப் போராட்டங்கள் - பட்டியல் தேவையா? இந்த அய்யருக்காக இல்லாவிட்டாலும் 'துக்ளக்'கை வாராவாரம் வாங்கும் நமது பரிதாபத்துக்குரிய 'பஞ்சமர்', களும், 'சூத்திரர்'களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? 1949க்கு பின் தந்தை பெரியார், திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டப் பட்டியல் கழகத்தின் அம்பறாத் தூணிலிருந்து அம்பாக இதோ புறப்படுகிறது.


இரயில்வே நிலையங்களிலும், ஊர்ப் பெயர் பலகைகளிலும் இந்தி முதல் இடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும், ஆங்கிலம் இரண்டாம் இடத்திலும், இருந்த நிலையை எதிர்த்து நடத்தப் பட்ட போராட்டத்தில் இந்தி எழுத்துக்கள் தார் கொண்டு அழிக்கப்பட்டன (1.8.1952) தந்தை பெரியார் திருச்சி ஜங்சனில் ஒரு முனையிலும்,  கலைஞர் (திமுக) அதே ஜங்சனில் இன்னொரு முனையிலும் அழித்தனரே!


தொடர்ந்து 1953, 1954 ஆண்டுகளிலும் அப்போராட்டங்கள் நடத்தப்பட்டதன் காரண மாகவே தமிழ் முதல் இடத்திற்கு வந்தது என்ற வரலாறு தெரியுமா இந்த வன்கணாளர்களுக்கு? அதுவரை இந்தி முதலிடம், ஆங்கிலம் இரண்டா மிடம், தமிழ் கடைசி இடத்தில் எழுதப் பட்டிருந்ததே!.


திராவிடர் கழகத்தின் போராட்டம் காரண மாகதான் தமிழ் முதல் இடத்திற்கு வந்தது என்பதை வந்தேறிகள் அறியட்டும்!


1955 ஆகஸ்டு முதல் தேதியை அவ்வளவு எளிதாக எவராலும் மறந்து விடத்தான் முடியுமா?


அரசுப் பள்ளிகளில் இந்தி - கட்டாயத் தேர்வு என்று அறிவித்த நிலையிலே தந்தை பெரியார் அறிவித்த போராட்டம் என்ன தெரியுமா? அகில இந்தியாவே நடுநடுங்கியதே - இப்படியொரு போராட்டமா? திகைத்து நின்றதே இந்தியா!


அதுதான் தேசியக் கொடியை கொளுத்தும் போராட்டம். இவ்வளவுக்கும் பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் பலபடப் பாராட்டப்பட்ட காமராஜர்தான் முதல் அமைச்சர்.


பிரதமரோ பண்டி ஜவகர்லால் நேரு. முதல் அமைச்சர் காமராஜரிடம் தொடர்பு கொண்டு  கேட்கிறார் பிரதமர்." உங்கள் நண்பர் நாயக்கர் இப்படியொரு போராட்டத்தை அறிவித்துள்ளாரே - நீங்கள் தலையிட்டு தடுக்கக்கூடாதா?" என்று கேட்கிறார்.


அதற்குப் பச்சை தமிழர் காமராஜர் சொன்ன பதில்தான் பிரமாதம்! பிரமாதம்!!


"ஆமாம் உண்மைதான்; நாயக்கர் எனக்கு நண்பர்தான் ஆனால் இந்திக்கு நாயக்கர் நண்பரா? இல்லையே, என்ன செய்வது!" என்பதுதான் அந்தப் பதில்.


வேறு வழியின்றி பிரதமர் நேரு இறங்கி வந்து இந்தி கட்டாயம் ஆக்கப்படாது என்ற உறுதி மொழியை கொடுத்த நிலையில் மாநில அரசின் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும் இந்தி மொழி எப்போதும் எப்படியும் திணிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் காமராசர் கொடுத்த உறுதி மொழியை அறிவாரா அக்கிரகாரத்து ஆசாமி?


அந்த உறுதி மொழியை வெளியிடுவதற்கு முன் அதன் நகல் தந்தை பெரியாரிடம் காட்டப்பட்டு, அவர் செய்த திருத்தங்களுடனும், அதே போல போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன் என்ற தந்தை பெரியார் அறிக்கையும் முதலமைச் சரிடம் காட்டப்பட்டு வெளியிடப்பட்ட வரலாறு (விடுதலை 3.8.1955) எல்லாம் அரை வேக்காடு களுக்குத் தெரியுமா?


வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று புளியோதரைகள் உளறக்கூடாது. தொலைக்காட்சிகளில் இந்தியின் ஆதிக்கம் தலை தூக்கும் காலக்கட்டத்தில் சென்னை திருச்சி, கோவை, குடந்தை, வேலூர் ஆகிய இடங்களில் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களிலும், அஞ்சல் அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதே. (4.5.1985)


"நவோதயா" என்ற பெயரில் இந்தித் திணிப்பு சூழ்ச்சியாகத் திணிக்க முயன்ற தருணத்தில் திராவிடர் கழகம்தான் கிளர்ந்து எழுந்தது.


திருச்சியில் அதற்காகவே மாநாட்டினை திராவிடர் கழகம் நடத்தியது (10.6.1986) கல்வி நெறிக் காவலர் தாமரைத் திரு. நெ.து.சுந்தர வடிவேலு அவர்களும், பங்கேற்று குடிசைகள் மத்தியில் அரண்மனையா? என்ற கேள்வியை எழுப்பினார். அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி 21.6.1986 அன்று நாடு தழுவிய அளவில் நவோதயா கல்விக் கொள்கை அறிக்கைக்கு தீ மூட்டப்பட்டது. திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர்


கி.வீரமணி அவர்கள் உட்பட நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டனர்.  14 நாள் சிறைவாசத்துக்குப் பின் விடுவிடுக்கப் பட்டனர்.


1986ஆம் ஆண்டில் இந்தி வாரம் என்று கூறி கோப்புகளிலும், கடிதங்களிலும் இந்தியிலேயே கையெழுத்து இடுமாறு பணியாளர்களை  மத்திய அரசு பணித்த நேரத்தில் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை அறிவித்தாரே அன்றை கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்ட ரயில் சுற்றுப் பயணத் தையும் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் போராட்ட வீரர்களின் பட்டியல் குவிந்ததே!


21.9.1985: சென்னை பெரியார் திடலில் போராட்டத்திற்கு முந்தய நாள். இரவு இந்தி அழிப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.


இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்


கி.வீரமணி அவர்களுக்கும், புலவர் மா.நன்ன னுக்கும் பொன்னாடைகள் போர்த்திய திமுக தலைவர் டாக்டர் கலைஞர், "தார் டப்பா" ஒன் றையும் பெரும் ஆரவாரத்திடையே தந்தாரே!


22.9.1985 அன்று இந்தி எழுத்தை புகை வண்டி  நிலையப் பெயர்ப் பலகைகளில் அழிக்க நாடு முழுக்க கருஞ்சட்டை சேனை திரண்டது; இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை மீறி ஆயிரமாயிரமாய்த் தோழர் -தோழியர்கள் கைதாகி சிறை சென்றனர்.


சென்னை பெரியார் திடலில் டாக்டர் கலைஞர் போராட்டத்திற்கு வாழ்த்தி  வழிய னுப்பினார். பொதுச் செயலாளர் கி.வீரமணி, புலவர் மா.நன்னன் உட்பட ஏராளமான தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். (22.9.1986)


மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் காலத்திலும் திராவிடர் கழகம் இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதுண்டு.


"சமஸ்கிருத வாரம்" என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டதே. (1.8.2014)


1949க்கு பின் பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவில்லை என்று எழுதும் குருமூர்த்தியாரே, இதற்கு பிறகாவது தத்துபித்து என்று எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இந்தி எதிர்ப்பு என்பது திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் பொன்பூத்த அத்தியாயம் ஆகும்.


இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழி எதிரப்புப் போராட்டம் அல்ல - கலாச்சார எதிர்ப்புப் போராட்டமாகும்!


1931ஆம் ஆண்டில் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன கூறுகிறது?


"பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நம் மக்களைப் படிக்கும் படிச் செய்வது பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகும் என இம்மாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடைப் பரப்பவும், புத்தம் புதிய தொழில்முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும், உலக மொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே, தாய்மொழிக்கு அடுத்தப்படியாக நமது இளைஞர்கள் கற்க வேண்டும்" என்று இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கு முன் 1931இல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதை எண்ணும் பொழுது இந்த குடுமிகளிடம் எவ்வளவு காலத்திற்குத்தான் மாரடைப்பது என்று தெரியவில்லை.


இந்தி ஏன் என்பதற்கு முதலமைச்சர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா?


" இந்தியைப் படித்தால் சமஸ்கிருதம் படிக்க எளிதாகும்" (குடிஅரசு - 30.7.1939) என்று கோணிப் பைக்குள்ளிருக்கும் பூனைக்குட்டியை வெளியில் விட்டாரே!"


"வாயாடி" சத்தியமூர்த்தி அய்யர் அதற்கு ஒரு படி மேலே போய், இந்தித் திணிப்புக் குள்ளிருக்கும் பார்ப்பனீய நஞ்சைக் கூச்ச மில்லாமல் கொட்டினாரே!


"என் கைக்கு அதிகாரம் வந்தால் - நான் சர்வாதிகாரியானால்-  இந்தியர்களை இந்தி யுடன், சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம் சமஸ்கிருதும் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை யையும் உடனே ஏற்படுத்தி விடுவேன். ஏனெனில் காந்தியார் உயிருடன் இருக்கும் போதே இராமஇராஜ்ஜியம் ஏற்பட்டு விட வேண்டும் என்பது என் ஆசை. இராம இராஜ்ஜியம் வருணா சிரம தர்மத்தை அவரவர்தம் ஜாதி முறைப்படியே தொழில் செய்ய வேண்டும் என்று தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகியே கம்பரே இதை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். இதைப் பற்றிய வடமொழி இலக்கியத்தைத் தமிழில் மொழிப் பெயர்த்தும் இருக்கிறார்.


இராமஇராஜ்ஜியம் ஏற்பட வேண்டுமானால் எல்லோரும் சமஸ்கிருதம் படித்தே தீர வேண் டும்" (மா.இளஞ்செழியன் தீட்டிய "தமிழன் தொடுத்த போர்!") என்று வெளிப் படையாக பச்சைப் பார்ப்பனத்தனத்தை நிர்வாணமாக காட்டிவிட்டாரே!


சத்தியமூர்த்தி முதல் குருமூர்த்தி அய்யர் வரை இந்தியைக் கொண்டு வந்தே தீரவேண்டும் என்று குடுமியை அவிழ்த்து விட்டு கும்மாளம் போடுவதன் நோக்கம் - போக்கிரித்தனம் என்ன வென்று  இப்பொழுது விளங்கியிருக்குமே!


பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா!

- விடுதலை நாளேடு, 12.6.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக