பக்கங்கள்

திங்கள், 23 டிசம்பர், 2019

இந்த ஏழை ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி....

தந்தை பெரியாருக்கு அன்று பிறந்தநாள். அய்யாவை வாழ்த்தவும், அவரிடம் வாழ்த்துப் பெறவும், தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் ஏராளமான தமிழர்கள் கூட்டம் அந்த நாளில் அலைமோதியது. அன்று காலையில் சேலம் திரு.வரதராஜுலுநாயுடு, அய்யா பெரியாரைப் பார்க்க வந்தார். இவர், சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து பெரியாரின் நெருங்கிய நண்பர். தலைவர் காமராசருக்கும் நெருக்கமானவர். வந்தவர், “முதலமைச்சர் காமராசர் அய்யாவைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல விரும்புகிறார். நான் போய் அழைத்துக் கொண்டு இருவருமாக வருகிறோம்!” என்று பெரியாரிடம் சொன்னார். பெரியார், “அய்யா காமராசர் முதல் மந்திரியா இருக்கிறவங்க... பல வேலைகள் இருக்கும். அவங்க இங்கே வந்து சிரமப்படக்கூடாது. நான் வந்து அவுங்களைப் பார்க்கறதுதான் மொற... மரியாதை” என்று மறுத்தார்.

வரதராஜுலு நாயுடு பிடிவாதமாய்ப் பேசினார், “பிறந்த நாளைக் கொண்டாடும் உங்களை, நல்ல நாளும் அதுவுமா வந்து வாழ்த்த நினைக்கிறார் ஒரு முதலமைச்சர். அது எப்படிய்யா நாம வேண்டாம்னு சொல்ல முடியும்?” என்று வற்புறுத்தி, மாலையில் காமராசரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சம்மதம் வாங்கிக் கொண்டு போனார். சொன்னதுபோலவே, மாலையில் காமராசரும், நாயுடுவும் ஒரே காரில் வந்து இறங்கினர். எந்தப் படாடோபமுமில்லை.

முதலமைச்சர் வருகிறார் என்னும் எந்த ஆடம்பரமும், ஆரவாரமுமில்லாமல் வந்தார் காமராசர். மிகுந்த மகிழ்ச்சியோடு பெரியார் அவரை எழுந்து வரவேற்றார். முக்கியமான ஒரு சிலர் மட்டுமே அங்கே நின்று கொண்டிருந்தனர். இரண்டு பெரியவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வரதராஜுலு நாயுடு பெரியாரிடம் சொன்னார். “அய்யா என்னென்ன காரியம் ஆகணும்னு சொல்றீங்களோ, அதச் செய்து கொடுக்க காமராஜ் சித்தமாயிருக்கார். என்ன செய்யணும்னு சொல்லுங்கய்யா....” என்றார்.

இதைக் கேட்ட பெரியார், “நான் என்னய்யா கேக்கப் போறேன். தனிப்பட்ட மொறையில் எனக்கு என்ன தேவையிருக்கு..? இந்தத் தமிழ் ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி, அந்த நாலாஞ்ஜாதிய கைதூக்கிவிடற மாதிரி, அய்யா ஏதாவது செஞ்சாங்கன்னா அதுவே போதும்...” என்றார். பெரியார் தன் வார்த்தையை முடிப்பதற்குள், காமராசர் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, “அய்யா, நானும் தமிழன்தான். நாலாஞ்ஜாதிதான்...!” என்றார்.

மெத்தப் பூரிப்போடு பெரியார் காமராசரின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அதுதாங்கய்யா வேணும்... அந்த ஞாபகம் தாங்கய்யா வேணும்!” என்றார்.

உடனே தன்கையுடன் கொண்டு வந்திருந்த ஒரு உறையைப் பிரித்து, அதிலிருந்த ஒரு பழைய புகைப்படத்தைப் பெரியாரிடம் கொடுத்தார் காமராசர். அதை அய்யா பெரியார் வாங்கிப் பார்த்தார். நெகிழ்ந்து போனார். அந்தப் படம் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தபோது எடுத்தது. அதில், பெரியார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க அந்த நாள் காங்கிரஸ்காரர்கள் பலரும் அதில் இருக்கின்றனர். காலடியில் காமராசர் ஓர் இளைஞராக, மிகச் சாதாரணத் தொண்டராக அமர்ந்திருக்கிறார்.

சற்று நேரம் அங்கே கனத்த மவுனம். இரண்டு பெரியவர்களும் தங்கள் கடந்த கால நினைவுகளில் கரைந்து போயிருக்கலாம். தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்துவிட்ட முதலமைச்சர் காமராசர் இவ்வளவு ஞாபகமாக, அந்தப் பழைய படத்தை இப்போது அய்யாவிடம் கொண்டு வந்து ஏன் கொடுக்க வேண்டும்...? “அய்யா, அன்று உங்கள் காலடியில் உட்கார்ந்த அதே பழைய தொண்டன்தான் நான். கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்!” என்று சொல்லாமல் சொல்லியிருப்பாரோ கர்மவீரர்...?

- திரு. உ.நீலன்

(தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்)

(சன் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய “ஆகட்டும் பார்க்கலாம்“ என்ற நூலிலிருந்து. பக்கம் 160-161).

-  விடுதலை ஞாயிறு மலர், 14.12.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக