பக்கங்கள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

எது தமிழ்த் திருமணம் - 10

பொருளற்ற சடங்குகள் :

இதைப்போலவே இன்னுமொரு அர்த்தம் அற்ற சடங்கை பொரியிடுதல் என்கிறார்கள். நெருப்பில் பொரியைப் போடுகிறார்கள். மணமகளின் கைகளை ஒன்றாக வைத்து அவளின் சகோதரன் பொரியைப் போடுவான். பொரியுடன் நெய் சேர்த்து மணமகள் கையைப் பிடித்துப் பொரியை நெருப்பில் போடுவான். கணவன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் எனப் பொருள்படும் மந்த்ரம் கூறுவார் புரோகிதர். இதனால் ஆயுள் நீளுமா?

 

பொரி மங்களகரமான பொருளாம். மன்னர்கள் தெருவலம் வரும்போது பொரியைத் தெருக்களில் இறைப்பார்களாம் அக்காலத்தில்! கொங்குவேளிர் எழுதிய பெருங்கதையில் வரும் நன்னெய் தீட்டிய செம்மலர் அங்கைப் பொம்மல் வெண்பொரி பொலியப் பெய்தபின் என்ற வரிகளால் அறியலாம்.

பிணத்தைச் சுடுகாட்டுக்கோ/இடுகாட்டுக்கோ எடுத்துச் செல்லும்போது சிலர் பொரியை ஒரு முறத்தில் வைத்துத் தெருவில் இறைத்துக் கொண்டு போகிறார்கள்! பொரியை மங்களம் என்கிறார்கள். சாவுப் பயணத்தில் மங்களப் பொருள் எப்படி இடம் பிடித்தது?

ஆண்டாள் திருமணத்திலும் அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து/பொரிமுகத் தட்டக் கனாக்கண்டேன் எனப் பாடப்படுகிறது.

ஒருவர்க்கு அணிவித்த மாலையை மற்றவர்க்கு அணிவிப்பதோ, அணிவதோ கூடாது என்கிறார்கள். ஆனால், மணமக்கள் தத்தம் மாலையை மாற்றிக்கொள்ளும் சடங்கும் நடக்கிறது. அதுவும் மூன்று முறை கழற்றிக் கழற்றிப் போட்டுக் கொள்கிறார்கள். கணவனும் மனைவியுமாக ஆகிவிட்ட இவர்களது பந்தம் இதனால் உறுதியாகிறதாம். இருவரும் ஒன்றாகி விடுகின்றனராம். மனதளவில்கூட வேறுபாடு வராமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்காம்.

ஏன் மணவிலக்கு?

பின் ஏன் விவாகரத்து வழக்குகள்? பின் ஏன் ஜீவனாம்சம் கோரும் வழக்குகள்? சடங்குகளுக்குப் பொருள் இல்லாமல் போய் விட்டதால்தானே! அப்புறமும் ஏன் இந்தச் சடங்குகள்? சிந்திக்க வேண்டாமா?

வைணவப் பார்ப்பனர்கள் கூடுதல் கோமாளிகள். சிலர் ஊஞ்சலில் நின்று மாலை மாற்றிக் கொள்கின்றனர். சிலர் அவர்களின் தாய்மாமன்களின் தோளில் ஏறிக்கொண்டு மாலை மாற்றிக் கொள்கின்றனர். குதிர்போல வளர்ந்த ஆணும் பெண்ணும் இப்படி ஆட்டம் போடும் காட்சியினை சாவி எனும் பார்ப்பனர் எழுதிய வாஷிங்டனில் திருமணம் எனும் கதையில் படிக்கலாம். மாமன் அல்லாத வேறு நபர்களும் தூக்கிக் கொண்டு ஆடும் நிகழ்ச்சியும் இக்குடும்பங்களில் இன்றும்கூட நடக்கின்றது. வைணவர்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் இப்படித் தோள் கொடுப்பதற்காகவே நன்றாகத் தின்று கொழுத்த அய்யங்கார்கள் நிறையப் பேர் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். (படிக்க: உ.வே.சா. நினைவு மஞ்சரி) இந்தச் சடங்குகளுக்கெல்லாம் என்ன நோக்கம்? பழங்காலப் பழக்கம், கம்ப்யூட்டர் காலத்திலும் கடைப்பிடித்துவரும் காட்டு விலங்காண்டிகள் என்பதைத் தவிர வேறு என்ன?

மணமக்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது ஒரு சடங்கு. ஊஞ்சலின் தொங்கு சங்கிலி மேலிருந்து தொங்குவதால், மானுடப் பிறவியை மேலே இருக்கும் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறதாம். ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆட்டுவது, வாழ்க்கை சலனமுள்ளது என்பதைக் காட்டுகிறதாம். வாழ்க்கை ஆடினாலும் மனம் சஞ்சலம் அடையாமல் இருக்க வேண்டும் எனும் உயரிய தத்துவத்தை ஊஞ்சல் ஆடி உணர்த்துகிறார்களாம். இந்த அரிய தத்துவத்தை(?) இக்காலத்தில் தொட்டில் ராட்டினம், ஜயன்ட் வீல், ரோலர் கோஸ்டர் போன்றவை இன்னும் சிறப்பாக உணர்த்துமே! சடங்கைச் செய்பவர்கள் இதைப் பரிசீலிக்கலாம்.

அட்சதை யோக்கியதை

மணமக்கள் தாலிகட்டும்போது அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்களாம். மணச் சடங்குகள் முடிந்த பிறகு அவர்கள் தரையில் விழுந்து வணங்கும்போதும் அட்சதைபோட்டு ஆசி கூறுகிறார்களாம். இந்த அட்சதையில் மஞ்சள் தடவிய அரிசியும் மலர்ந்த பூக்களும் இருக்கும். எதற்கு இந்த அட்சதை? தரையில் விழும் தானியம் முளைத்துச் செழுமை தருவது போலவும் மலர் மணம் வீசுவதுபோலவும் மணமக்களின் வாழ்வு இருக்க வேண்டும் என வாழ்த்துகிறார்களாம், இந்த அட்சதை போட்டு! யோசித்துப் பாருங்கள்! அரிசி முளைக்குமா? முன்னமேயே மலர்ந்துவிட்ட மலரின் மணம் நிறைவாக இருக்குமா? பழந்தமிழர் திருமணத்தில் கூறப்பட்ட நீர் தெளித்த நெல் முளைத்துச் செழுமை தரும். அரும்பு மலராகி மணம் பரப்பும். அதை விடுத்து, பார்ப்பனப் பழக்கமான அட்சதை எவ்வளவுக்கு அர்த்தம் கெட்டுப் போய்விட்டது என்பதை உணர வேண்டாவா? திருந்த வேண்டாவா? இது எப்படித் தமிழ்த் திருமணமாகும்?

எல்லாம் முடிந்தபிறகும் கொசுறுச் சடங்காக நாகவல்லி முகூர்த்தம் என்று செய்கிறார்கள். நாகவல்லி என்றால் வெற்றிலை எனும் பொருளும் உண்டு. வெற்றியைத் தருவதற்காக வெற்றிலையின் முக்கியத்துவத்தைக் கொண்டாடித் தாம்பூலம்  கொடுக்கிறார்களாம். வெற்றிலை எப்படி வெற்றி தரும்? அது வெற்றி இலை என்கிறார்கள். ஆனால் வெற்று இலை என்பதுதான் சரி! ஏன் வெற்று இலை தெரியுமா? வெற்றிலைக் கொடியில் பூ பூக்காது, காய் காய்க்காது, எனவே பழமும் கிடையாது. வெறும் இலை மட்டுமே வளரும் கொடியானதால் பூவாத, காய்க்காத தன்மையைக் குறிக்க வெற்று இலை, வெற்றிலை என்கிறார்கள். வெற்றியைத் தரும் இலை என்றாக்கி ஒரு சடங்கைச் செய்கிறார்கள்! மருமகன் கையில் மாமனார் குங்குமப் பூவை இழைத்துப் பூச வேண்டுமாம்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மங்கல வீதிவலம் செய்து மணநீர் அங்கு அவனோடும் உடன் சென்றங்கானை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் என்று ஆண்டாள் பாடுகிறாள். ரங்கமன்னார் எனும் திருமாலைத் திருவில்லிபுத்தூரில் திருமணம் செய்துகொண்ட விதங்களைப் பாடி வைத்திருக்கிறாள். இந்தச் சடங்குகள் எல்லாமே விடாமல் செய்பவர்களாக வைதீக வைணவர்கள் இருக்கிறார்கள். இதுவும் தமிழ்த் திருமணமாம்!

பின்னர் மணமக்கள் எதிர் எதிரே உட்கார வைக்கப்பட்டுத் தேங்காயை உருட்டி விளையாடுகிறார்கள். பூவைப் பந்துபோல் சுருட்டி ஒருவர் மீது மற்றவர் எறிந்து விளையாடுகிறார்கள். பல்லாங்குழி ஆட்டம் ஆடுகிறார்கள். வெற்றிலை பாக்குப் போட்டு மடித்துக் கொடுத்தும் விளையாடுகிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கணவனும் மனைவியும் போட்டி போட்டுக் கொண்டு தேட வேண்டும் எனும் தத்துவார்த்தம் கூறுகிறார்கள். இருவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற செய்தியை மறைவாக உணர்த்தும் சடங்குகளோ?

தமிழ்க் களஞ்சியக் களங்கம்

அறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார்: நம்முடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் பலன் என்னவென்றால், மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு விஞ்ஞான ரீதியான காரணங்களைக் கற்பித்துக் கூறுகிறார்கள் என்றார். அதைப்போலவே மேற்கண்ட மூடச்சடங்குகளுக்கு என்ன பொருள் என்று கலைக் களஞ்சியம் கூறுகிறது தெரியுமா? 1961இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் பக்கம் 66இல் எழுதப்பட்டுள்ளது கீழே:

மணச் சடங்குகளில் தம்பதிகளுக்கு உண்டாகும் புதிய நிலையையும், மாறுதல்களையும், பந்தல் அமைத்தல், ஊர்வலம் வருதல், மத்தளம் கொட்டல், சங்கம் ஊதல் போன்றவைகள் விளம்பரப்படுத்துகின்றன. பரிசமிடுதல், நிச்சயம் செய்தல், கோத்திரம் கூறல் போன்ற சடங்குகள் மண ஒப்பந்தத்தையும் அதற்கு வேண்டிய சான்றுகளையும் அளிக்கும். தீபம் ஏந்தல், ஆரத்தி, நலங்கு முதலிய சடங்குகள் கண்ணேறு படாமல் காப்பதற்காகச் செய்யப்படுபவை. விரதம், உபநயனம், காப்பு போன்ற சடங்குகள் தம்பதிகள் இதுவரையிலிருந்த நிலையில் இருந்து விலகி இருத்தலைக் குறிக்கும். புத்தாடை அணிதல், தாலி, மெட்டி போன்ற நகைகளை அணிதல், மாலை, மோதிரம் மாற்றல் தம்பதிகள் புதிய நிலைக்கு மாறுதலை அறிவிக்கும். தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், குங்குமம் அப்பல், பட்டம் கட்டுதல், மஞ்சனமாடல், தாரை வார்த்துத் தருதல், கைத்தலம் பற்றல் போன்ற சடங்குகள் தம்பதிகளுடைய புதிய கடமைகள், உரிமைகள், நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும். ஆசிர்வாதம், விருந்தளித்தல் போன்ற சடங்குகள் தம்பதிகளுடைய புதிய வாழ்க்கைக்கு வேண்டிய ஆதரவு அளிப்பனவாகும்.

இந்த வியாக்கியானங்களினால் தமிழர் வாழ முடியுமா? தமிழ் வளருமா? முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் சடங்குகள்! தமிழர்க்கும் ஆனவை எனப் புகுத்தப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இதனைத் தமிழர் திருமணம் என்றோ, தமிழ்த் திருமணம் என்றோ கூறமுடியுமோ? கூறுகிறார்கள். அதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தமிழ்முறைத் திருமணம் என்கிறார்கள். வகுப்பு உணர்ச்சியின் அடிப்படையில் நடத்தப்படுவது தமிழ்த் திருமணம். அறிவு உணர்ச்சியின் அடிப்படையில் நடத்தப்-படுவது சுயமரியாதைத் திருமணம் ஆகும் என்று தந்தை பெரியார் 1940ஆம் ஆண்டே கூறியுள்ளார். எதனால் கூறினார்? பார்ப்பனப் புரோகிதர் கூடாது என்கிற வகுப்பு (ஜாதி) உணர்ச்சியினால் அவரை நீக்கித் தமிழ்த் திருமணம் என்ற பெயரில் நடத்துகிறார்கள். ஆனால் அர்த்தம் அற்ற சடங்குகளையெல்லாம் செய்கிறார்கள். கடைப்பிடிக்கிறார்கள். எந்த வகையில் இது தமிழ்த் திருமணம்?

தேங்காய் உருட்டுவது ஏன் என்றால், வாழ்க்கைக்குத் தேவையானவற்றை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தேட வேண்டும் என்கிறார்கள். இது தமிழ்த் திருமணச் சடங்குக்குப் பொருள் என்கிறார்கள்.

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழும்சோறு உள்ளான்
ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமதுகையளே

என்று திருமணமான மகளிர் வாழ்ந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது. கணவனின் குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த அவளின் தந்தை தந்த உணவுப் பண்டங்களை மறுதலித்துவிட்டாள். கணவனைப் போலவே அவளும் நடக்கிறாள். வேளை தவறி உணவு உட்கொள்கிறாள். இத்தகைய உறுதியை உடையவளாக இருக்கும் அவள் விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள். திருமணத்திற்குப் பின்பு மனைவிக்குரிய ஒழுக்கம் கற்றுக்கொண்டு கணவன் தேடித் தரும் வருவாயைக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டாள் எனப் பாடுகிறது.

இன்றைய நிலை என்ன? மணம் செய்து கொள்ளும் முன்பே மணமகளின் தந்தையிடம் வரதட்சணை பெறுகிறதும், மணம் செய்தபின் மேலும் கேட்பதும் பழக்கமாக உள்ளது.

தமிழ்த் திருமண கர்த்தாக்கள்

19ஆம் நூற்றாண்டில் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கசகாயன் என்பவர் முதலில் பார்ப்பனப் புரோகிதரை விலக்கிய திருமணம் செய்வித்தவர் எனும் குறிப்பு உண்டு. அதன் பின்னர் தமிழ்முறைத் திருமணம் எனும் வகையில் சுவாமி வேதாசலம் என்று அழைக்கப்பட்டு மறைமலை அடிகள் என்று பெயர் மாற்றம் செய்துகொண்ட தனித்தமிழ்த் தந்தையால் திருமணங்கள் நடத்துவிக்கப்-பட்டன. பார்ப்பனப் புரோகிதர் மட்டுமே விலக்கப்பட்டார். பார்ப்பன மந்திரங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓதப்பட்டன. பார்ப்பனரின் திருமணச் சடங்குகள் எவையும் விலக்கப்படவில்லை. நெருப்பு மூட்டுதல், நெருப்பைச் சுற்றி வருதல், மணவறை அமைத்தல், மங்கலப் பொருள்கள் வைத்தல் போன்ற எல்லாமும் கடைப்-பிடிக்கப்பட்டன. வடமொழிக்குப் பதிலாக தமிழ்மொழி என்பதைத் தவிர வேறு எவ்வித அறிவு வயப்பட்ட மாற்றமும் இவரால் செய்யப்படவில்லை. மொழி மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டது. புரோகிதர் பார்ப்பனராக இல்லாமல் தமிழராக இருந்தார். அவ்வளவே! வகுப்பு (ஜாதி) உணர்ச்சி அடிப்படையில் இந்த மாற்றமும்கூடச் செய்யப்பட்டது. அறிவு உணர்ச்சியின் அடிப்படையில் எந்த மாற்றமும் இவரால் கைக்கொள்ளப்படவில்லை. இவர் சிவனியக் கருத்துகள் கொண்டவராக இருந்தது காரணி!

மறைமலை அடிகளாரைப் போலவே தமிழ்த் திருமண முறையைப் போற்றியவர் மற்றொரு தமிழறிஞரான திருவாரூர் வி.கலியாணசுந்தரம் எனும் திரு.வி.க. அவர்கள். அடிகளாரின் முறைக்கும் இவரது முறைக்கும் வேறுபாடே கிடையாது. செந்தமிழ் மாமறை மந்திரப் பாடல்கள் கொண்டு இறைவழிபாடு செய்து திருமணம் செய்தல் தமிழ்த் திருமணம் என்கிறார்கள்.

திருமணம் நிகழிடம் அலங்காரம் செய்தல், மணமுரசு முழங்குதல், விளக்குகள் ஏற்றல் (பகலில்கூட) முதலியன உண்டு. திருமணம் நடத்தி வைக்கும் (தமிழ்ப் புரோகிதர்) நபர் வடக்கு நோக்கியே அமர வேண்டும். மலர், மஞ்சள், குங்குமம், அரிசி, தேங்காய், பழம், வெற்றிலை முதலிய பொருட்கள் எல்லாம் அவரது வலப்பக்கத்தில் ஓர் இலை அல்லது தட்டில் இருக்கும். முப்புரி நூலில் ஓர் அடி அளவில் இரண்டு துண்டுகள், மஞ்சள் பூசி நடுவில் மஞ்சள் துண்டு ஒன்றினை வைத்துக் கட்டி முடித்துத் தேங்காய் மீது சுற்றி, ஒரு தட்டில் அரிசிபோட்டு அதன் நடுவில் இந்தத் தேங்காய் வைக்கப்படும். மேலே மலர் தூவப்பட வேண்டும். தாலிக்கு உள்ள நூலும் மஞ்சள் பூசப்பட்டு அதில் தாலி கோக்கப்பட்டு இரு பக்கங்களிலும் மூடிபோட்டு மஞ்சள் பூசி, குங்குமம் இட்ட தேங்காயின் மீது சுற்றி ஒரு தட்டில் வைக்கப்பட வேண்டும். இந்தத் தட்டிலும் அரிசி வைக்கப்பட வேண்டும். மணமக்களுக்குத் தரப்பட வேண்டிய புத்தாடைகள் தனித்தனியாக இரு தட்டுகளில் வைக்கப்பட வேண்டும்.

இவை பார்ப்பனப் புரோகிதர் நடத்தி வைக்கும் வைதீக அல்லது புரோகித முறைத் திருமணங்களிலும் செய்யப்படுகின்றன. தனியாகத் தமிழ்முறை எங்கே வாழ்கிறது?

மணமக்கள் கிழக்கு நோக்கி அமர வைக்கப்படுவர். தமிழ்ப் புரோகிதர் ஓர் இலையில் அரைத்த மஞ்சளால் பிள்ளையார் போல் பிடித்து வைப்பார். (பிள்ளையார் பிடிக்கக் குரங்காக அமைந்துவிடாமல் கவனம் தேவை!) அதில் குங்குமம் பூசுவார். ஈண்டு எழுந்தருளுக எந்தாய் போற்றி என்றும், இவ்வடிவம் அமர்க ஈச போற்றி என்றும் அருளது புரிக அண்ணால் போற்றி என்றும் கூறிக் கடவுளை வணங்கி தூப தீபங்காட்டுவார் தமிழ்ப் புரோகிதர். நமஹ என்பதற்குப் பதில் போற்றி! அவ்வளவே!

- சு.அறிவுக்கரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக