பக்கங்கள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

எது தமிழ்த் திருமணம்

புதிய தொடர் :

எது தமிழ்த் திருமணம்

- சு.அறிவுக்கரசு

மாதர்கள் கருப்பந் தரிப்பதற்கும், ஆடவர்கள் கருப்பமுண்டு பண்ணுகிறதற்கும், பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்கிறது மனுசாஸ்திரம் ஒன்பதாம் அத்தியாயம், 96ஆம் பாடல். இந்த மனு சாத்திரத்தின் அடிப்படையில்தான் இந்து சட்டம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுயராஜ்யம் வந்தால் மனுஸ்மிருதிதான் சட்டமாக இருக்க வேண்டும் என்றார் பாலகங்காதர் திலக். என் வழி திலகர் வழியாக இல்லை என்பதால் என்னைச் சிலர் எதிர்க்கிறார்கள் என்று காந்தியார் மனம் நொந்து கூறினார். திலகர் வன்செயலாளர். காந்தி வன்செயல் தவிர்த்தவர். ஆகவே காந்தியாரை எதிர்த்தவர்கள் பிறகு கொன்றே விட்டார்கள். வன்செயல் விரும்பிகள் தற்போது பதவிக்கு வந்துவிட்டனர். முழு மனுஸ்மிருதியே சட்டமாக வரலாம். பாடமாக வரலாம்.

பிள்ளை பெறுகிற எந்திரமா பெண்கள்? என்று கேட்டார் பெரியார். பிள்ளை தரிக்கிற உறுப்பையே வெட்டி அப்புறப்படுத்திட வேண்டும் என்கிற அளவுக்கே போனார் பெரியார். ஆனால் இந்து சாத்திரம் பெண்கள் பிள்ளை பெற்றுப் போடுவதற்கே படைக்கப்பட்டவர்கள் என்கிறது. இந்தக் காரியத்தைச் செய்வதற்காக ஆடவர், பெண்டிர் இணைவதற்கான சடங்கை விவாகம் என்கிறது சாத்திரம். திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர் குறிப்பிடுவர். கலியாணம் என்று குறிப்பிடுகிறது வடமொழி.

நாலடியார் கல்யாணம் (பாடல் 86) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48) கலியாணம் என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61) என்கிறது. மன்றல் என்கிறது அகநானூறு (136) தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி என்றும் குறிப்பிடுகிறது. வரைவு என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம் (383). வதுவை எனும் சொல்லும் தொல்காப்பியத்தில் குறிக்கப் பெறுகிறது.

திருமணம் என்று சொன்னால், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடி வாழ்க்கை நடத்துவதுதான். அதற்கு ஒரு குறிப்பு இருக்க வேண்டும் என்பதுதானே தவிர மற்றபடி வேறு ஒன்றும் வேண்டியது இல்லை. விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் காரியமே ஆகும் என்றார் தந்தை பெரியார்.

ஆரியத் திருமணம்

இந்தத் திருமண முறைகள் எட்டு வகைப்படும் என்றது மனுஸ்மிருதி. இந்த எட்டு வகைகள்தான் இந்து சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அவை, இவை: பிராமம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், தாழ்ந்ததான பைசாசம் என 8. (மனுஸ்மிருதி 2:21) பிராமணனுக்கு பிராமம் முதல் காந்தருவம் வரையில் கிரமமாக ஆறும் சத்திரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையில் நான்கும் வைசிய சூத்திரனுக்கு மேற்சொன்ன நான்கில் ராட்சசம் நீங்கலாக மூன்று தருமத்தைக் கொடுக்கத்தக்க விவாகங்களென்றறிய வேண்டியது என்கிறது மனுஸ்மிருதி (2_23).

வேதம் ஓதுகிறவனை அழைத்து, கன்னிகையைத் தானம் செய்வது பிராம விவாகமாம். யாகம் செய்யும்போது தனக்கு உதவியாளாக இருப்பவனுக்குத் தன் பெண்ணைத் தருவது தெய்வ விவாகமாம். யாகம் செய்யும் செலவுக்காக ஒரு பசு அல்லது இரண்டு பசு வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது ஆருஷ விவாகமாம். ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைத் தந்து தருமங்களைச் செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுப்பது பிரஜாபத்யமாம். பெண்ணின் தந்தை கேட்கும் தொகைதந்து பெண்ணுக்கு நகைபோட்டு வாங்கிச் செய்து கொள்வது ஆசுர விவாகமாம். ஆணும் பெண்ணும் விரும்பி, உறவு கொண்டு, தாங்களே செய்து கொள்வது காந்தருவ விவாகமாம். உடல் வலுவால் உறவினர்களைத் தாக்கிப் பெண்ணைத் தூக்கிச் சென்று விவாகம் செய்வது ராட்சச விவாகமாம். தூங்குபவளையோ, குடியினால் மயங்கியிருப்பவளையோ, பித்துப் பிடித்தவளையோ வன்கலவி செய்து விவாகம் செய்வது பைசாச விவாகம் என்கிறது மனுஸ்மிருதி.

தொல்காப்பியச் சப்பைக்கட்டு

இதையே தமிழ்த் தொல்காப்பியம், மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் எனக் கூறுகிறது. தமிழ் படித்த பண்டிதர்கள் இந்த எட்டுக்கும் எடுத்துக்காட்டு கூறுகின்றனர். பிராம விவாகத்திற்கு மீனாட்சி_சொக்கநாதன் திருமணம் எடுத்துக்காட்டு. பிரசாபத்ய விவாகத்திற்கு சீதா_ராமன் திருமணம். ஆருஷம் என்பது பழங்கால பண்டமாற்றுமுறை விவாகமாம். தெய்வ விவாகத்திற்கு எடுத்துக்காட்டு ரிஷ்யசிருங்கர்_சாந்தை விவாகமாம். பராசரர்_மச்சகந்தி புணர்ச்சியும், துஷ்யந்தன்_சகுந்தலை உடலுறவும் கந்தருவ விவாகமாம். ஆசுர விவாகத்திற்கு வில் ஒடித்துச் சீதையை ராமன் மணந்ததும், வில் எய்து துரோபதையை அருச்சுனன் மணந்ததும் எடுத்துக்காட்டாம். அம்பை முதலிய பெண்களைத் தன் தம்பியர்க்கு மணமுடித்த வீடுமன் செயல் இராட்சச விவாகத்திற்கு எடுத்துக்காட்டாம். பைசாச விவாகத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் புராணங்களில் உள்ளன.

தொல்காப்பியக் கூற்றுகளின்படி தமிழர் மணம் காதலால் கட்டுண்ட ஆணும் பெண்ணும் தம் களவொழுக்கம் பெற்றோர்க்கும் உற்றார்க்கும் தெரியும் முன் மணம் முடித்தல், களவுக்காதல் தெரிந்தபின் உடன்போக்கு நிகழ்ந்து மணம் முடித்தல் என்ற வகையில் ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை காணக் கிடைக்கிறது. ஆரிய முறைகளில்...?

ஆகா, என்ன பொருத்தம்?

தனிச்சிறப்பு கொண்ட தமிழர், இந்துக்கள் என்ற நாமகரணம் செய்விக்கப்பட்டதன் கெட்ட விளைவாக எட்டுவகைத் திருமணங்கள் அவர்களின் தலையில் கட்டப்பட்டுள்ளன. பத்து வகைப் பொருத்தங்கள் அவர்களின் விவாகங்களுக்குப் பார்க்கப்படுகின்றன. தினம், கணம், மகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என்பன தசா பொருத்தங்களாம். இந்தப் பொருத்தங்கள் அமைந்துள்ளனவா என்பதைக் கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் பார்த்தே கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் பேஷாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும், அவன் ஆண்மை அற்றவன் என்பது. அதுபோலவே அவள் வயதுக்கு வரவில்லை என்பது! எத்தனை பார்க்கிறோம், குடும்ப நீதிமன்றத்தில்! மணவிலக்கு வழக்குகளில்?

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே

என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது.

இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது.

நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.

தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றனர் தமிழர்!

வாழ்வில் இணைந்து தொடக்க நிலையில் இருப்போர்க்கான வாழ்வியல் தேவைகளையும் இருக்கக் கூடாத பண்புகளையும் தெளிவாக்கித் தருகிறது தமிழர் பண்பாடு!

(தொடரும்)

-  உண்மை இதழ், 1-15.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக