பக்கங்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பார்ப்பனர்கள் தமிழர்களா?


===============================================
 -பாவலரேறு பெருஞ்சித்திரனார் பதில் அளிக்கிறார்.

 சீமான்கள் சிந்திக்கட்டும்!

பொது வாழ்க்கையில் இவர்களின் கட்டுப்பாடு தனி. இவர்கள் வாழும் பகுதிகளில் வேறு இனத்தவர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு வீடுகள் கிடைப்பதே அரிது. பல குடியிருப்புகள் கொண்ட பெரிய வீடுகளில் இவர்களைத் தப்பித் தவறிக் குடியமர்த்தினால் ஒரிராண்டுகளில் அங்குள்ள தமிழ்க் குடும்பங்களைச் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டுப் பார்ப்பனர் குடும்பங்களாகவே பார்த்துக் குடியமர்த்திக் கொள்ளுதல் இவர்கள் பழக்கம்.

சில வீட்டுப் பகுதிகளில் பிராமணர்களுக்கே வீடு விடப்படும். (To let only for Brahmins) என்று எழுதப்பட்ட பலகைகள் தொங்குவதைப் பார்க்கலாம். இவர்கள் வீடுகளில் பணியாற்றும் வேலைக்காரர்களை இவர்கள் என்றும் மதிப்பு வைத்தே அழைப்பதில்லை. அவர்களையும் சரி, பார்ப்பன அதிகாரிகளின்கீழ்ப் பணியாற்றும் பணியாட்களையும் சரி, அடே, அடி என்னும் சொற்களால்தாம் அழைக்கின்றனர். அவர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களும்கூட அவர்களை வாய்கூசாமல் 'அடே, அடி' எனக் கூப்பிடுவதைக் கண்டு மனம் நோக வேண்டியுள்ளது.

நிலா மண்டிலம் போகும் இக்காலத்திலும் பிற இனத்தவரைத் தொட்டால் தீட்டு என்று கடுமையாகக் கருதும் பார்ப்பனர்கள் பெரும் பகுதியும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் வீடுகளில் பிற இனத்தவரை உள்ளேவிட இன்றுகூட இசைவதில்லை.

இராசாசியின் தீண்டாமைப் போராட்டத்தைப் பாராட்டும் தினமணிச் சிவராமன்கள் இவ்வகையில் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கண்டால், இவர்கள் பேசுவதும் எழுதுவதும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கே என்பது தெற்றெனப் புலப்படும். துக்ளக்கில் இவர்களுக்காகப் பரிந்து எழுதிவரும் அரைப் பிராமணனான செயகாந்தனுக்குப் பார்ப்பன இனத்தவரின் முழுக்கேடுகளும் தெரிய வழியில்லை. அவர்களின் நச்சுத்தனத்தை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அகற்ற வழியில்லையானால் அவர்களை எப்படித் தமிழ் இனத்தோடு ஒப்ப எண்ணுவது? தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழன் என்று கருதப்பட வேண்டும் என்றால், ஆங்கிலம் பேசுகின்ற தமிழரை ஆங்கிலேயர் என்றன்றோ கருதுதல் வேண்டும்? ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்கரைக்கூட ஆங்கிலேயர் என்று அவர்களே ஒப்புக்கொள்ளாத போது, தமிழ் பேசும் எவரும் எப்படித் தமிழர் ஆவார்? வேண்டுமானால் செயகாந்தன் என்னுடன் வரட்டும்; எனக்குத் தெரிந்த 'சமசுக்கிருத' ஆசிரியர் பலர் தமிழர்களாய் உள்ளனர். அவர்களை 'பிராமணர்கள்' என்று அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா என்று பார்ப்போம். சமசுக்கிருதம் பயிற்றும் ஆசிரியர் ஒருவர் தமிழராகவிருந்தார்  என்பதற்காக, அவரிடம் அம்மொழியைக் கற்க விரும்பாத பார்ப்பன மாணவர்கள் அத்தனை பெயரும் இந்தி வகுப்புக்குச் சென்றதை நானறிவேன்.

இப்பொழுதும் நிலை மாறிவிடவில்லை. அண்ணாமலையில் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த ஒருவர், வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தும் பார்ப்பனர் அவரைப் போற்றவில்லை.

பார்ப்பனப் பெண்களில் சிலர் நம் தமிழ இளைஞர்களை வறிதே வந்து மணந்து கொள்கின்றனர். பார்ப்பன வீடுகளில் பணியாற்றும் தமிழ இளைஞர் சிலர் பார்ப்பனப் பெண்களை விரும்பி மணந்து கொள்வதையும் பார்க்கின்றோம். எனினும் பார்ப்பன இளைஞர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து கொண்ட செய்தி மிகவும் அரியது. தமிழ் இளைஞர்கள் பார்ப்பனப் பெண்களை மணந்து கொள்ளும் வகையில் பல அடிப்படைக் கோளாறுகளே கரணியங்களாக இருக்கின்றன. அவ்வாறு மணந்து கொண்ட பெண்களும் அவ் விளைஞர்களின் கொள்கைகளையும் போக்குகளையும் அறவே திசைதிருப்பி விட்டு விடுகின்றனர். இவற்றிற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.

பார்ப்பனத்தமிழினக் கலப்பு தவிர்க்க முடியாததே! அதனால் பார்ப்பனர்கள் தமிழர்களைத் தழுவிக் கொண்டனர் என்று கூற முடியாது. மக்களினம் எல்லாம் ஒன்றுதான். அதை வரவேற்கவே செய்வர். ஆனால் கொள்கை வேறுபாடு போன்றவையே இன, மொழி வேறுபாடுகள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றினாலன்றி ஒரு நிலத்தில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை ஓரினத்தவர் என்று கூறிவிட முடியாது.

பார்ப்பனர்களை நாம் தமிழர்கள் என்று ஒப்பினாலும் அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இன்னும் சமசுக்கிருதத்திற்கு அவர்கள் மதிப்பு வைப்பது போல் தமிழ் மொழிக்கு வைப்பதில்லை. எங்கோ ஒரு பாரதியார் பரிதிமாற் கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை. சமசுக்கிருதத்தைக் கலக்காத தமிழை அவர்கள் ஒப்புக்கொள்வதேயில்லை! பார்ப்பனர்களில் தமிழுக்காக உழைத்தவர்கள் போல் ஆங்கிலேயர்களிலும், பிரஞ்சுக்காரரிலும், செருமானியரிலும், அரபியர்களிலும், தமிழுக்குழைத்தவர்கள் ஏராளமான பெயர்கள் உளர். அவர்களெல்லாரும் தமிழர்கள் என்று கூறி விட முடியாது. இதைச் செயகாந்தன்கள் உணரவேண்டும்.

ஒரு மொழியில் புலமை பெறுதல் வேறு. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கருதுதல் வேறு. ஒரு பெண் வேறொரு குழந்தையைத் தன் குழந்தைப் போலவே கருதி வளர்க்கலாம். ஆனால் அக்குழந்தை அவளைத் தன் தாய் என்று கருத வேண்டும். பார்ப்பனர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாதவரை அவர்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது; அவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கருதிக் கொள்ளவும் மாட்டார்கள். 
அவர்கள் அவ்வாறு தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கருதினால் அதில் கலப்பு நேர்வதைப் பொறுக்கமாட்டார்கள். சமசுக்கிருதத்தில் ஆங்கிலச் சொற்களையோ பிரஞ்சுச் சொற்களையோ கலந்து பேச விரும்பாத ஒருவன், தமிழில் அவ்வாறு கலப்புச் செய்வதை விரும்புகின்றான் எனில், அவன் தமிழைத் தாய்மொழியாகக் கருதுகிறான் என்று எப்படி ஒப்புக்கொள்வது? செயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்மொழியைத் தூய்மையாக எழுதத் தெரியாத கரணியத்திற்காக அவர் எழுதுவதுதான் தமிழ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் சென்னையில் உள்ள ஓர் உயர் விடுதியின் பரிமாறி (Butllor) பேசும் ஆங்கிலத்தையும் ஆங்கிலம் என்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும். 'காவிரி ஜலம், கலாசார பலவினம்', 'பாரத ஞானபூமி' என்பவற்றைத் தமிழாகக் கொள்ள வேண்டுமானால், ‘பானை வாட்டர்' 'இருதய வீக்னசு' 'பாரத நாலெட்ச் பூமி' என்பவற்றை ஆங்கிலமாகக் கொள்ளவும், 'வாய்மை மேவ் செய்தா' 'பண்பாட்டு ஞானீபட' என்பவற்றைச் சமசுக்கிருதமாகக் கொள்ளவும் முன்வரவேண்டும்!

தமிழ்மொழியை மட்டும் அவர்கள் வந்து ஒண்டுதற்குரிய குட்டிச் சுவராக்கலாம். அவர்கள் மொழியான சமசுக்கிருதத்தை மட்டும் சிதைக்கக்கூடாது என்பதில் என்ன நடுநிலை உள்ளது? மொழித் துய்மையும் இனத் தூய்மையும் எல்லா மொழிக்கும் இனத்துக்கும் தானே. மொழியிலும் இனத்திலும் தூய்மை பார்க்க வேண்டா என்பதும் எல்லா மொழிக்கும் இனத்துக்குமான பொது அறமாகத் தானே இருத்தல் வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குச் சார்பானவர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தங்களுடைய மனம் போனவாறு எழுதவும், மக்களிடையே எளிதில் பரப்பவும் ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்பதற்காகவே பிறர் கருத்து வலிவிழந்து போய் விட்டதாகக் கருதிவிட முடியுமா?

தேசிய மொழித் திருட்டு விளையாடல்!

இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன. தமிழைவிடச் சமசுக்கிருதம் பேசுபவர்கள் மிகுதியாக உள்ளனரா? இந்தியாவில் உள்ள நாலரைக் கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் ஏழு கோடிக்குக் குறையாது. (கணக்கெடுப்பவரிலும்? கணக்குப் பார்க்கும் அதிகாரிகளிலும் பெரும்பாலோர் தமிழர்க்கு மாறானவர்களாக இருப்பதால் இத்தகைய புள்ளி விளத்தங்கள் சரியாகவே இருப்பதில்லை). சமசுக்கிருதம் பேசுபவர் ஏறத்தாழ ஐநூறு பேர்களே ! இந்த ஐநூறு பேர்களின் மொழியைக் கற்றுக்கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்பிக்க 12 பல்கலைக் கழகங்கள் இதுதான் தேசிய மொழித் திருட்டு) விளையாடலா?

மேலும் தமிழ்மொழிப் புலமையிலும் வேறுபாடு காட்டப் பெறுகின்றது. வடமொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழ்மொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழே தெரியாத சமசுக்கிருதப் பார்ப்பனப் புலவராகிய சுனிதி குமார் சட்டர்சி போன்றவர்கள் தமிழுக்கதிகாரிகள்! தமிழையும் பிற திரவிட மொழிகளையும் சமசுக்கிருதம், இலத்தீன், கிரேக்கம், சாக்சானியம் போன்ற மொழியிலக்கணங்களையும் பழுதறக் கற்ற பாவாணர் போன்றவர்கள் வெறும் தமிழ்ப்புலவர்கள். இந்த வேறுபாட்டு நிலை உள்ள வரை பார்ப்பனர்களைத் தமிழர்களோடு மொழி, இன நிலையில் இணைத்துக் கருதமுடியுமா?

மொழித் தூய்மையைப் பார்ப்பனர்களும் அவர் அடிவருடிகளும் ஒப்புக்கொள்வதே இல்லை. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு மொழி கற்க வரும் மாணவ அறிஞர்களிடம் தங்களுக்குள்ள மேனிலை வாய்ப்புகளால் பிறரினும் முந்திக் கொண்டு போய்த் தாங்கள் பேசுவதே மொழியென்றும் எழுதுவதே எழுத்து என்றும் அவர்களிடம் இட்டுக்கட்டி உரைப்பதும், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தீபம் முதலிய தமிழ்க்கொலை செய்யும் ஏடுகளையே இலக்கிய ஏடுகள் என்று அவர்களிடம் காட்டி விதந்துரைப்பதும், அம் மாணவ அறிஞர்களின் பரிவால் மொழி ஆய்வுக்கென்றும் இலக்கிய வளர்ச்சிக் கென்றும், அமெரிக்கா, செருமனி முதலிய மேலை நாடுகளினின்று அனுப்பப் பெறும் அளவிறந்த பொருளுதவிகளைத் தாங்களே அமுக்கிக் கொள்வதும் அன்றாட நடைமுறைகளாகவிருக்கின்றன. இத்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் கள்ளத்தனங்களுக்கும், முல்லை மாறித்தனங்களுக்கும் ஒரு வரம்பே கிடையாது. சாகித்திய அகாடமி என்றும் சங்கீத நாடக அகாடமி என்றும் நேரு பரிசு, கலிங்கா பரிசு, ஞானபீடப் பரிசு என்றும், பல வகையிலும் தரப்பெறுகின்ற அறிவியல், கல்வி, கலைப் பரிசுகள் யாவும் அவர்கள் இனத்தவர்க்கே தேடிப் பிடித்துத் தரப்பெறுகின்றன. ஓரிரண்டு பரிசுகள் தமிழர்களுக்குத் தரப் பெறுவதானாலும் அவர்களின் அடிமைகளுக்கே தரப்பெறுகின்றன.

இலைகளிடைக் காய்போல் எங்கோ ஒரு பரிசு இவர்களின் கொள்கைக்கு மாறானவர்களுக்குத் தரப்பெற நேர்ந்தால், பிறர் நகைக்குமளவிற்கு நூல்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற வாழ்வியல், இயற்கை, சீர்திருத்தம் ஆகிய கூறுபாடுகளைக் கொண்டனவும், நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றனவும், அவர் புலமைக்கே கொடுமுடி போன்றனவுமான நூல்கள் இருக்க, அவர் நூல்களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறுபட்ட நாடக வடிவில் உள்ளதுமான பிசிராந்தையார் என்னும் நூலுக்கு - அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே சாகித்திய அகாடமி பரிசு கொடுக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களையும் அவர்தம் ஆற்றல்களையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியாரைவிடப் பாரதிதாசன் இலக்கியத் திறனிலும், பா வன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும் அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப்பெறும் வகையில் உள்ள மாறுபாடுகளுட்ம கொஞ்ச நஞ்சமல்ல.

மேலும், தேசிய விருதுகளாகிய 'பாரத ரத்னா', 'பத்மவிபூசண்' 'பத்மபூசண்' போலும் உயர்ந்த பாராட்டுகளும் பெரும்பாலும் அவர் இனத்தவர்களுக்கும் வடநாட்டவர்களுக்குமே கொடுக்கப் பெறுகின்றன. எங்கேனும் தகுதி வாய்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு அவ்வரிசையில் கடைநிலையதான 'பத்மஸ்ரீயே' தரப் பெறுகின்றது. இதுவரை மிக உயர்ந்த விருதான 'பாரத ரத்னா'வை பெற்ற பதினைவரில் ஒருவரும் தமிழரல்லர். தமிழ் பேசுபவராகக் கருதிக் கொடுக்கப் பெற்ற திரு. இராசாசியும் பிராமணரே. மற்றுத் தமிழர் தொடர்புள்ள திரு. இராதாகிருட்டிணன் அவர்களும் சி.வி. இராமனும் கூடப் பிராமணர்களே. இந்தியா விடுதலை பெற்ற 25 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரிலும் பாரத மணியாகத் திகழத் தக்கவர் ஒருவரும் இலர் என்று அவர்கள் கருதுவார்களானால், இந்தத் தமிழர்களும், தமிழ்நாடும் வடநாட்டுத் தலைமையின்கீழ் இருந்துதான் ஆகவேண்டும் என்பதில் என்ன கட்டாயம் இருக்கின்றது?

இவர்கள் விளக்கணி (தீபாவளி )விழாவைக் கொண்டாடுவது போல் பொங்கலைக் கொண்டாடுவது இல்லை. மேலும் சிலை (மார்கழி) மாதங்களில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகளைப் போட்டுக்கொண்டு பாவைப் பாடல்களை இப் பார்ப்பனப் பூசாரிகள் முழக்குவதும் கொட்டுமுழக்கோடு கூடிப் பாடிக்கொண்டு தெருவலம் வருவதும் ஊரை இவர்களுக்காகவே ஆக்கிக் கொள்வதும் போல இல்லையா? அக்கால் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கவும் இடையூறு நேர்வதை அரசும் கவனிப்பதில்லை. இந்தப் பாவைப் பாடல் வழக்கம் தேவைதானா? இந்தப் பாடலைப் பாடாத நாட்களில் விடிவதே இல்லையா? இவர்களின் இதழ்களும் விளக்கணி  (தீபாவளி )விழாவுக்காக மலர்கள் வெளியிடுகின்றனவே தவிர, பொங்கலுக்கு வெளியிடுவதில்லை .

தனிப்பட்ட ஒருவர் செய்யுந் தீங்கைவிடக் கொடியது. குறிப்பிட்ட ஓரினம், பொதுவான ஒருவகை மொழி, இன வெறுப்புடன், பல நூற்றாண்டுகள் இத் தமிழகத்தில் இயங்கி வருவது பார்ப்பனப் பதடிகள் தமிழையும் தமிழகத்தையும் பாழ் செய்வதை மனமார உணர்ந்த ஒருவன் அவர்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே மாட்டான். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராக வேண்டும். அப்படி அவர்களைத் திராவிடர்கள்தாம் என்றால் ஆரியர் என்பவர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர் திறத்தாலும், மொழியாலும், பழக்கவழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும்! இவை யெல்லாவற்றையும் விடுத்து, மாந்தர் குலம் எல்லாமும் ஒன்றுதான் என்றால் மத, இன, குல வேறுபாடுகளும் மாந்தரின் உயர்வு தாழ்வு முறைகளும் அடியோடு தொலைக்கப்பட வேண்டும். பார்ப்பனர் தமிழர் என்பதால் பார்ப்பனர்க்கு ஊதியமென்றால், தமிழர்களுக்கு இழப்பன்றோ ஏற்படுகின்றது. மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும் ஏற்படும் அவ்விழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? மேலும் பார்ப்பான் தமிழனென்றால் அவன் வீட்டுப் பெண்ணையும் நம் வீட்டுப் பையன் கட்ட அவனிசைய வேண்டும்; நம் வீட்டுப் பெண்ணை அவன் வீட்டுப் பையன் கட்டிக்கொள்ள மறுப்புச் சொல்லுதல் கூடாது. அவன் தன்னை உயர்வு என்பதையும், தன் தாய்மொழி சமசுக்கிருதம் என்பதையும் அவற்றிலுள்ள ஈடுபாட்டையும் அறவே விட்டுவிடுதல் வேண்டும். வாழ்க்கைப் பொதுநிலையில் அவன் எல்லாரையும் போலவே வாழ்தல் வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும்வரை அவனுந் தமிழன்தான் என்னும் பேச்சை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.
-  மஞ்சை வசந்தன் முகநூல் பக்கம், !8.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக