பக்கங்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தொல்காப்பியத்தில் சாதி

- ஊரான் அடிகள்

தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் சிறப்பு. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொல்காப்பியம், எழுத்ததிகாரம் எழுத்திலக்கணத்தைக் கூறுவது. சொல்லதி காரம் சொல்லிலக்கணத்தைக் கூறுவது. பொருளதிகாரம் வாழ்விலக்கணத்தைக் கூறுவது. யாப்பிலக்கணமும் அணி இலக்கணமும் பொருளதிகாரத்தில் அடங்கும்.

பொருளதிகாரத்தில் சில இடங்களில் சாதியைப் பற்றிய செய்திகள் உள்ளன. குறிப்பாக மரபியலில் 71 முதல் 85 முடியப் 15 சூத்திரங்கள், புறத்திணை இயலில் 16ஆவது சூத்திரம். இவற்றுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

"நூலே, கரகம், முக்கோல், மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய"

- தொல், பொருள், மரபு - 71

"படையும், கொடியும், குடையும், முரசும் நடை நவில் புரவியும், களிறும், தேரும் தாரும் முடியும், நேர்வன பிறவும் தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய". - 72

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை - 78

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி - 81

என்னும் நான்கு சூத்திரங்களும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு சாதிக்குரிய தொழில் களைக் கூறுகின்றன.

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய என்னும் சூத்திரம் அந்தணருக்குரிய அடையாளங்களைக் கூறுவதாகும்,

நூலே பூணூல்

அரகம் குண்டிகை (கமண்டலம்)

முக்கோல் திரி தண்டம் (தண்டு) இருக்கை (ஆசனப் பலகை)

மனை

பூணூலும் தண்டு கமண்டலங்களும் ஆசனப்பலகையும் அந்தணர்க்குரியனவாம். மணை என்பதற்கு "யாமை மணை" என்று உரை கூறுவார் பேராசிரியர். யாமை மணை - ஆமை வடிவ ஆசனம், கூர்மாசனம். நூல்களில் கோல் முக்கோலாகவே (திரி தண்டமாகவே) கூறப் பெறுகின்றதெனினும், வைணவ அந்தணத் துறவிகள் முக்கோல் ஏந்துவர் (முக்கோற்பகவர்), சைவ அந்தணத் துறவிகளும் மாத்வ அந்தணத் துறவிகளும் ஒரு கோலே (ஏக தண்டமே) ஏந்துவர் என்பதும் ஈண்டறியத்தக்கது. சங்கர மடத்தார் மத்வ மடத்தார் ஏகதண்டமும், ஜீயர்கள் திரி தண்டமும் தாங்கியிருப்பர்.

"உறித்தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்" என்னும் கலித்தொகையும் (9), "தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்னும் குறுந்தொகையும் (156) பேராசிரியரால் உதாரணமாக எடுத்துக் காட்டப் பெற்றன.

படையும் கொடியும் குடையும் முரசும் குதிரையும் யானையும் தேரும் மாலையும் முடியும் இவை போன்று பொருந்தும் பிறவும் செங்கோல் அரசர்க்குரியன என்பது ஆம் சூத்திரப் பொருள்.

"வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (78) என்பது வணிக வாழ்வு வைசியர்க்கு உரியது என்பதாம்.

"வேளாளர்க்கு வேளாண்மை தவிர வேறொன்றும் இல்லை" என்று கூறுவது 81-ஆம் சூத்திரம்.

"அறுவகைப்பட்ட பார்ப்பணப் பக்கமும் அய்வகை மரபின் அரசர் பக்கமும் இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறு இல் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும் பால் அறி மரபின் பொருநர் கண்ணும் அனை நிலை வகையொடு ஆங்கு ஏழு வகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்"
என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் ஆவது - சூத் திரம் இதன் முதல் மூன்றடிகளில் அந்தணர் (பார்ப்பணர்), அரசர், ஏனோர் (வணிகர் வேளாளராகிய மற்றை இருவர்) பக்கமும் குறிக்கப் பெறுகின்றன.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்

1. ஓதல், 2 ஓதுவித்தல், 3. வேட்டல், 4. வேட் பித்தல், 5. ஈதல், 6. ஏற்றல்.

அய்வகை மரபின் அரசர் பக்கம்;

1. ஓதல், 2. வேட்டல், 3. ஈதல், 4. காத்தல் 5.தண்டஞ்செய்தல்

இரு மூன்று (2x3) மரபின் ஏனோர் பக்கம்:

வணிகர்க்குரிய 6 பக்கம்:

1. ஓதல், 2. வேட்டல், 3. ஈதல், 4. உழவு. 5. நிரையோம்பல், (ஆநிரை ஓம்பல் - பசுக்காத்தல்) 6. வாணிகம்

வேளாளர்க்குரிய 6 பக்கம்

1.வேதம் ஒழிந்த ஓதல், 2. ஈதல், 3.உழவு, 4. நிரையோம்பல், 5. வாணிகம், 6, வழிபாடு - என்பார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் நிரை யோம்பலைப்  பகடு புறந்தருதல் என்பார்.  வாணிகத்தைத்
தவிர்த்து   விருந்தோம்பலைக்   கூறுவார்.

திவாகரம் பிங்கலம் முதலிய நிகண்டுகளிலும் நான்கு சாதியாருக்கும் ஆறு ஆறு தொழில்களே கூறப்பெற்றன. எனினும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழிலே முதன்மையான தாகும், சிறப்புத் தொழிலாகும்.

அந்தணர்க்குக் கல்வி 
அரசர்க்குக் காவல்
வணிகர்க்கு வணிகம் வேளாளர்க்கு வேளாண்மை.

"வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். 
மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை. 
வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்.
உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல்."

என்னும் அதிவீரராமபாண்டியர் வெற்றிவேற்கை ஈண்டு நினையத்தக்கது.

‌நூல் :- சாதியும் மதமும்
ஆசிரியர் :-ஊரான் அடிகள்
வெளியீடு :-சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், கடலூர்,
முதல் பதிப்பு- 2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக