* ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் அல்லர்!
* ஈ.வெ.ரா. அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்.
* அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன.
* திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொது மேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது... எதிரிகளை உருவாக்கி, அவர்கள்மீது உச்சக் கட்ட வசைகளைப் பொழிந்து, அந்தக் கருமைச் சித்திரம் முன்பு தன்னை வெண்மையாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு ஹீரோ _- வில்லன் என்ற நாடகத் தன்மை தேவையாகிறது.
* ஈ.வெ.ரா. என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை.
* திராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டு சென்றவர் கவர்ச்சிப் பாவாதியான சி.என். அண்ணாத்துரை அவர்களே.
* காந்திய யுகத்தின் இன்னொரு பெருந் தலைவர் அல்ல ஈ.வெ.ரா.
* வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்பு, சரிகளின் ஆட்டமாக அல்லாமல், சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக் கொள்வது உகந்தது.
* கேரளம் புறத்தொடர்பு இல்லாமல் பழங்குடி மனநிலையை அப்படியே நீட்டித்துக் கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.
அறிவு நாணயம் அறவே இல்லாமல், மாபெரும் உண்மைகளை முழுப்பூசணிக்காயை பிடிசோற்றில் மறைக்கும் வகையில், உண்மை கலவா அப்பட்டமான பொய்களைக் கூறி, மாபெரும் இமயத்தை மணற்குன்றாகக் காட்ட முயலுவதோடு, பெரியார் என்னும் மாபெரும் மனிதரின் மதிப்பீடுகளை வரலாறு அறிய வாய்ப்பில்லா இணையதள இளைஞர்களின் மத்தியில் தகர்த்து, தரம் தாழ்த்தும் அற்பத்தனமான அறிவு நாணயமில்லா வழியிலான முயற்சியில் இறங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் இணையதளத்தில் ஏற்றியுள்ள கருத்துகளே மேற்கண்டவை.
“காந்தியும் வைக்கமும்’’ என இருபது பக்கம் கொண்ட அக்கட்டுரையில், அக் கைக்கூலி,
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை காந்தி என்றும் இராஜகோபாலாச்சாரியாரை இராஜாஜி என்றும் மக்கள் அன்போடு அழைக்கும் வகையிலே மதிப்போடு குறிப்பிடுகிற அந்த ஆள், கோடானுகோடி மக்களால் உலக அளவில் அண்ணா என்று அழைக்கப்படும் அந்த அறிஞர் பெருந்தகையை அண்ணாத்துரை என்றே எழுதுகிறார். உலகமே ஏற்றுக் கொண்ட பெரியார் என்ற மதிப்பிற்குரியவரை ஈ.வெ.ரா. என்று மட்டுமே குறிப்பிடுகிறார். தப்பித் தவறிக்கூட அந்த இருபது பக்கத்தில் எந்த இடத்திலும் பெரியார் என்று குறிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் திட்டமிட்டு எச்சரிக்கையுடன் இருக்க ஈ.வெ.ரா. என்றே குறிப்பிடுகிறார்.
காந்தியாரை காந்திஜி என்று எல்லோரும் மதிப்போடு அழைப்பது வழக்கில் இருக்கையில் காந்திஜி என்று அவரைக் கூற மறுக்கும் அந்த ஆள் இராஜகோபாலாச்சாரியாரை மட்டும் இராஜாஜி என்று அழைக்கிறார்.
முழுப்பெயரைச் சொன்னால் சிறுமையா? பகுத்தறிவுப்படி தவறா? என்ற கேள்வி எழலாம். அப்படியாயின் இராஜகோபாலாச்சாரியாரையும் பெயர் சொல்லியிருக்கலாம் அல்லது ஈ.வெ.ரா. என்று பெரியாரைச் சொன்னது போல சி.ஆர். என்று இராஜாஜியை அழைத்து மகிழலாம் அல்லவா? ஏன் அழைக்கவில்லை?
இங்குதான் சனாதன தர்மத்தைத் தாங்கும் இவர்களின் உண்மை உருவம் புலப்படுகிறது. அண்ணா, பெரியார், காந்திஜி என்று கூற மறுக்கும் அவரது உள்ளம் இராஜாஜி என்று குறிப்பிட மட்டும் தாராளமாக இடம் கொடுக்கிறது. இது வெறும் பெயர் பிரச்சினையல்ல. இது உளவியல் சார்ந்த அணுகுமுறை. ஓர் ஆள் யார் என்பதை அடையாளம் காட்டும் கருவி. அவர்கள் உணர்வை வெளிப்படுத்தும் தடயம்.
‘துக்ளக்’ சோ இராமசாமி அப்படித்தான் தன்னை நடுநிலையாளர் போலக் காட்டிக் கொண்டு, எல்லோரையும் விமர்சிப்பார். சங்கராச்சாரி _ அதுவும் பெரியவாள் என்று அவாள் அழைக்கும் _ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமியாரை மட்டும் அவர் விமர்சிக்க மாட்டார். இராஜாஜி பெயர் வைத்தால் அதை ஏற்பார். அண்ணா பெயரை வைத்தால் ஏற்க மாட்டார். அண்ணா சாலையென்று பெயர் வைத்தால் அதை ஏற்காது மவுன்ட்ரோடு என்றே எழுதுவார்.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். அடிமனம் என்பது ஆரிய மனம் அல்லது ஆரிய அடிமனம் என்றும் கொள்ளலாம்.
ஆய்வாளர்கள் இருவகை:
1. எது சரியென்று தேடல் மேற்கொண்டு, அரிய தரவுகளைப் பெற்று, ஆய்வு செய்து, உண்மையை, சமரசத்திற்கு இடமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி வெளியிடுவோர் ஒரு வகை.
2. முன் முடிவு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதற்குத் தேவையான வகையில், கற்பனைகளை, யூகங்களை, திரிபுகளை, ஆதாரமற்ற செய்திகளைக் கூறியும், தொடர்பில்லா செய்திகளைத் தொடர்புபடுத்தும் முயற்சிகளைச் செய்தும், தனக்குச் சாதகமில்லாத செய்திகளை முற்றாக மறைத்தும் தனது கருத்தை (முடிவை) நிலை நாட்டுகிறவர்கள் மற்றொருவகை. இவர்களுள் இந்த நபர் இரண்டாம் வகை.
இவர் எடுத்துக் கொண்டு நிறுவ வந்தது பெரியார் வைக்கம் வீரர் அல்லர் என்பதே. அப்படியாயின் அந்தக் கோணத்தில் அதற்கான ஆதாரங்களைச் சொல்ல வேண்டும் என்ற கோணத்தில் சொல்லாமல், பெரியாரின் உழைப்பை, தியாகத்தை, தொண்டை, புரட்சியை, உயர்வை, பங்களிப்பை, சாதனைகளை, பெருமையை, புகழை, உலகமே ஏற்றுப் போற்றிய இணையிலாப் பெருமையை ஒட்டு மொத்தமாக மறைத்து, மாற்றி, ஒன்றுமே இல்லை, அவர் ஒரு சாதாரண ஆள் _ திராவிட இயக்கத்தவர். அவரை ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர் என்கிறார்.
மேலும் “ஈ.வெ.ரா. வரலாற்றைப் பற்றிய புரிதலோ, தன் கருத்துகளின் விளைவுகள் பற்றிய புரிதலோ இல்லாமல் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம் போலன்றி, பெரியார் என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங் குழுவாகவே இருந்தது. இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனாலே ஈ.வெ.ரா. அவர்களின் ஆளுமை இன்றுள்ள வடிவை அடைகிறது” என்கிறார் இவர்.
இதைவிட, பைத்தியகாரப் பிதற்றல் வேறு என்ன இருக்க முடியும்?
மக்கள் செல்வாக்கில்லாதவரா பெரியார்? அவர் கொள்கையை மக்கள் ஏற்கவில்லையா? அண்ணாதான் பெரியாரை பெரியவராக்கினாரா? அற்பத்தனமும், அயோக்கியத்தனமும் இருந்தாலன்றி இப்படி எழுத முடியாது.
1. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் (பி.ஜே.பி. தவிர) பெரியார் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்கின்றனவே அதன் அடித்தளம் என்ன? அவசியம் என்ன?
2. இடஒதுக்கீட்டில் எம்.ஜி.ஆர். கை வைத்ததும் மக்கள் அவரைப் புறக்கணிக்க, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் செல்வாக்கு பெற்றாரே அதன் உட்பொருள் என்ன?
3. பி.ஜே.பி. என்ன தகிடுதத்தம் போட்டாலும் தமிழகத்திலும் காலூன்ற முடியவில்லையே அதன் காரணம் யார்?
4. உலகத்திற்கே உரித்தான தமிழ் நூல் திருக்குறள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி, அதை மாநாடுகள் போட்டு மக்கள் மத்தியில் பரப்பியவர் யார்?
5. இளம் வயது திருமணத்தை எதிர்த்து, விதவைத் திருமணத்தைத் தூண்டும் விதத்திலே செயல்பட்டவர் யார்? அதுவும் தன் குடும்பத்திலே செய்து காட்டியவர் யார்?
6. பெண்ணுரிமைக்காகவே தன் வாழ்க்கையைச் செலவிட்டு பெண்களுக்கென அனைத்து உரிமைகளும் கிடைக்க வழி செய்தவர் யார்? நன்றியுள்ள பெண்கள் அவருக்கு அளித்த பெயர்தானே ‘பெரியார்’ என்கிற சிறப்புப் பெயர். பெரியாரைப் பேசாத பெண்ணுரிமைப் போராளிகள் உண்டா?
7. ஆரிய ஆதிக்கத்தை ஒழித்து, ஆரிய பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கியது யார்?
8. இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தை ஏற்படுத்தச் செய்து இலட்சோப லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர வழி செய்தது யார்?
9. மூடநம்பிக்கை ஒழிய மூலைமுடுக் கெல்லாம் மூத்திரப்பையோடு சுற்றி, தன்மானமுள்ள தமிழர்களை உருவாக்கியது யார்?
10. மானம் கெட்ட மணமுறையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து காட்டி இன்று பெருவாரியான மணங்கள் அப்படி நடக்கச் செய்த சிற்பி யார்?
11. கருவறைக்குள் செல்ல அனைத்து ஜாதியினருக்கும் உரிமை கிடைத்தது யாரால்?
12. உலக அளவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மக்களிடம் ஆழப்பதிந்த கடவுள் நம்பிக்கையை அவர் அகற்றவும் முயற்சித்தார். அதுவும் “மலையை மயிரைக் கட்டி இழுக்கிறேன்; வந்தால் மலை போனால் மயிர்!’’ என்று அடைவு (முடிவு) அறிந்தே முயற்சித்தார்.
மக்கள் பெருவாரியாகக் கடவுளைக் கைவிடவில்லை என்பதை மட்டும் வைத்து பெரியார் கொள்கைகளை மக்கள் ஏற்கவில்லை, நிராகரித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.
கடவுள் நம்பிக்கையை விடமுடியாமல் மக்கள் உள்ளனர் என்பதுதான் உண்மையேயன்றி, கடவுள் நம்பிக்கை ஆட்டங்கண்டு, கலகலத்து நிற்பது நிதர்சன உண்மையல்லவா?
ஆனால், பெரியாரின் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகள், முட்டாள் தனங்கள், சாமியார் பின் செல்லல், மானம் இழத்தல் என்று எத்தனையோ இழிவுகள் இன்று அகலவில்லையா?
கடவுள் இல்லையென்ற பெரியார் கருத்தை மக்கள் பெருமளவு ஏற்காததால் பெரியாரை மக்கள் நிராகரித்ததாகப் பொருளா? பெரியாரின் கொள்கைப் பிரச்சாரத் தொண்டில் கடவுள் மறுப்பு என்பது ஒரு விழுக்காடு மட்டுமே!
ஆனால், மனித நேயத்தோடு அவர் மக்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக, இழிவு அகற்ற அவர் ஆற்றிய தொண்டுக்கு அளவுண்டா?
கடவுள் நம்பிக்கை கொண்ட கோடானு கோடி மக்கள், பெரியாரின் இந்த அளப்பரிய தொண்டுகளை ஏற்று, அவரை அளவு கடந்து மதித்ததை கண்கூடாகக் காணலாமே!
தமிழகத்தில் கடவுளை ஏற்றுக்கொண்ட மக்களில் 90 விழுக்காடு மதிப்பதை விழுக்காடு மக்கள் பெரியாரை அவரது தூய தொண்டுக்காய் மதிக்கக் கூடியவர்களாயிற்றே! பெரியாரை மனமார ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே!
இன்று பக்தர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தாங்கள் பெற்றிருக்கும் வாழ்வு பெரியார் போட்ட பிச்சையென்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்களே, தெரியாதா?
அடுத்து, “எப்போதுமே ஈ.வெ.ரா. அவர்கள் தங்கள் மொழியில் பேசியதில்லை. முழுக்க மிகையாக உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார். எந்த உரையிலும் அவர் சமநிலையுடனும் எதையும் அணுகியதில்லை. அனைத்தையுமே அப்போது அவருக்குட்பட்ட உச்சநிலைக்குக் கொண்டு செல்வதுதான் அவரது வழிமுறை. ஆகவேதான் அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன.” என்றும் பெரியாரின் பெருமையைக் குலைக்க முயன்றுள்ளார் இவர்.
- நேயன்
(தொடரும்...)
- உண்மை இதழ், 16-31.1.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக