அயோத்திதாச பண்டிதர் – 20.5.1845-5.5.1914
பேராசிரியர் சுப.வீ.
1845ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார் அயோத்திதாச பண்டிதர். சிறந்த ஆய்வு நுட்பங்கொண்ட மருத்துவர். தென்னநாட்டில் புத்தம் மறுமலர்ச்சியடையக் காரணமாய் அமைந்தவர். ஜாதி, மதம், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராய் மிகத் தீவிரமாகப் போராடியவர்.
ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல்
நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர். சென்னை அடையாறு பகுதியில் ‘தியோசபிகல் சொசையிட்டி’யை 1884இல் நிறுவக் காரணமாக அமைந்தவர். தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இச்சங்கம் பிற்காலத்தில் ‘தென்னிந்திய பவுத்த சங்கம்’’ என்ற பெயரில் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய ‘தமிழன்’ என்ற இதழை நடத்தியவர்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், அறிவைத் திருடவும், தமிழ் இலக்கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும் பண்டிதர் இவர்.
‘தமிழன்’ வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்திதாசர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ‘சுதேசமித்திரன்’ ‘இந்தியா’ போன்ற தமிழ் இதழ்கள் வெளியிட்ட கட்டுரைகளுடன் அயோத்திதாசர் எழுதிய கட்டுரைகளை ஒப்பிட்டு நோக்கினால், அவரது கட்டுரைகள் நுட்பமும் திட்பமும் நிறைந்தவை என்பதை அறியலாம். அயோத்திதாச பண்டிதர் 5.5.1914 அன்று மரணம் அடைந்தார்.
– பொ. அறிவன்,
கழனிப்பாக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக