பக்கங்கள்

ஞாயிறு, 11 ஜூன், 2023

அயோத்திதாச பண்டிதர் – மஞ்சை வசந்தன்

 

அயோத்திதாச பண்டிதர் – மஞ்சை வசந்தன்

2023 பெட்டி செய்திகள் மே 1-15,2023

1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் புத்தம் மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர்.

ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர்.
அமெரிக்க மக்கள் உரிமைப் போராட்ட வீரர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களின் நெருங்கிய நண்பர். தீண்டத் தகாதவர்களாய் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். சென்னை அடையாறு பகுதியில் ‘தியோசபிகல் சொசையிட்டி’ யை 1884இல் நிறுவக் காரணமாய் அமைந்தவர்.

1894இல் கர்னல் ஆல்காட் அவர்களுடன் இலங்கை போன்ற பவுத்த நாடுகளுக்குச் சென்று பவுத்த தர்மக்
கொள்கைகளை விளக்கிப் பேருரையாற்றியவர். ‘தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இந்தச் சங்கம்தான் பிற்காலத்தில் ‘தென்னிந்திய பவுத்த சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய, ‘தமிழன்’ என்ற இதழை நடத்தினார்.
ஆதிதிராவிடர்கள் பவுத்தர்கள்; அவர்களை இந்துக்களுடன் சேர்த்து ‘சென்செஸ்’ கணக்கெடுக்கக்கூடாது என ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்த ஆங்கில அரசு, 1910ஆம் ஆண்டு ‘சென்செஸ்’ முதல், ஆதிப் பழங்குடியினர் ஒரு ‘தனித் தேசிய இனம்’ என்று கணக்கிடப்பட்டது.

1954-இல் சென்னைக்கு வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அயோத்திதாசரின் பவுத்த இலக்கியங்களைத் தேடிச் சேகரித்து, தம்முடன் கொண்டு சென்றார். அம்பேத்கரின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அயோத்திதாசர் என்றால், அவர் பணி எத்தகையது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பவுத்தம் பற்றிய சிந்தனை அம்பேத்கர் உள்ளத்தில் வேரூன்றவும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பவுத்தம்தான் தகுந்த பாதுகாப்பிடம் என்பதை அவர் உணரவும் அயோத்திதாசரே காரணமாய் அமைந்தார். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் எங்கு பறிக்கப்படுகிறதோ, எங்கு அவர்கள் இழிவாக, அடிமைகளாக நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும். பின்னால் வந்த சமூகத் சீர்திருத்தத் தலைவர்களுக்கு இவர் முன்னோடியாகவும் அமைந்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால், அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும், அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வந்தவர்கள் செய்த விரைவான நடவடிக்கைகளுக்கு விதையிட்டவர் இவரேயாவார்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், அறிவைத் திருடவும், தமிழ் இலக்-கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும் பண்டிதர் இவர்.எனவேதான் திரு.வி.க. அவர்கள், அயோத்திதாசரை, “நூல் பல கற்ற சால்பினன்’’ என்றும், “வல்லவர் போற்றும் கல்விமான்’’ என்றும், “இல்லறம் என்னும் நல்லறம் ஏற்று விருந்தினரை ஓம்பி இருந்தவன்’’ என்றும், “செந்தமிழ் பூண்ட அந்தணன்’’ என்றும், “பொறுமைக்கோர் உறைவிடம்’’ என்றும் பாராட்டினார்; சிறப்பித்
தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தச் சிறப்புகளைப் பெற எவ்வளவு கற்றிருக்க வேண்டும். எவ்வளவு எதிர்ப்புகளுக்கும், இடர்பாடு-களுக்கிடையேயும் கற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் வியப்படைய வேண்டியே வரும். உயர்குடியில் பிறந்த கல்வியாளர்களுக்கு இணையாகவும், ஆய்வுநுட்பத்தில் அறிவாற்றலில் அவர்களுக்கு மேலாகவும் விளங்கினார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார்.

மேலும்,
“ஆகமம் புராணம் இதிகாசம் மறைகோசங்கள்
அத்வைதம் வசிட்டாத்வைதம்
சமண முனிவர்களின் பஞ்சகாவியம் கலைஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோகநிலை சாத்திரம் சித்தர்நூல் பக்தி நெறி
யுகமோடு பலது மாய்ந்து சிறந்தவர்..’’
என்று அவரைப் பற்றி சிறப்பித்துப் பாடினர்.

பாலி மொழியிலிருந்த திரிபிடகம், வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) இருந்த வேதங்கள் உபநிடதங்களையும், தமிழில் ஓலைச்சுவடிகளில் இருந்த தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், சிவ வாக்கியம், தேவாரம், பெருந்திரட்டு, சிறு திரட்டு, பெருங் குறவஞ்சி, ஏரெழுபது போன்ற இலக்கியங்களையும், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், அறநெறிச்சாரம், நல்வழி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நீதிவெண்பா, மூதுரை போன்ற அற நூல்களையும், பட்டினத்தார், பத்திரிகிரியார், தாயுமானவர், மச்சமுனி, இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற துறவியாரின் பாடல்களையும், ஞானத்திரட்டு, ஞானபேதம், ஞானவாசிட்டம், பதஞ்சலியார் ஞானம், சொரூபசாரம், தருக்க கௌமுகி, சிவயோக சாரம் போன்ற சமய நூல்களையும், அரிச்சந்திர புராணம், வாதவூர் புராணம் போன்ற புராணங்களையும் தெளிவாகக் கற்றார். எட்வின் ஆர்னால்டு எழுதிய ‘ஆசியாவின் ஒளி’ என்ற நூலிலிருந்தும் மற்றைய மொழி நூல்களிலிருந்தும் அவர் மேற்கோள்களை எடுத்துக் காட்டி எழுதியது, பேசியது, அவருக்குள்ள படிப்பறிவைக் காட்டியது.

ஆதிக்கவாதிகளான மேல்ஜாதியினருடன் எதிர்த்து மோத இந்த அறிவு அவசியம் என்ற கட்டாயத்தில் எல்லா-வற்றையும், பயின்றார். காரணம் இவர் வன்முறைப் போரை விரும்பாமல், அறிவாயுதம் ஏந்தி எதிரியை வீழ்த்த முடிவு செய்தார்.

“நம்மை நெடுநாளாக ஏமாற்றி வருகிற பிராமணக் கொள்கை மிகத் தந்திரமானது. அதன் லட்சணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந்தியா என்னும் பெரிய மரமாகும். அம்மரத்திற்குக் கடவுள், மதம், வேதம், ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளைகள் நடுவில் ‘இந்து’ என்னும் கூடு கட்டியுள்ளது.

அக்கூட்டில் மும்மூர்த்தி மதம் என்னும் ‘கல்’ முட்டை இட்டு’, அதை ஆரியப் பார்ப்பனர் என்ற கழுகு அடைகாத்துள்ளது. தன் கல் முட்டையைப் பொன்முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும், காதாற் கேட்டும், மனதில் உணர்ந்தும் கவலையற்றிருக்கிறோம். ஆராய்ச்சி என்னும் கல்லெறிந்து அந்தக் கழுகைக் துரத்தாமலும், சமதர்மம் என்னும் வாள்கொண்டு மரத்தை வெட்டிக் கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும் சஞ்சீவியை அக் கல் முட்டைமீது செலுத்தி, முட்டையை உடைத்து உண்மையை அறியாமல் அமைதியாய் இருக்கிறோம்’’ என்று ஆய்வு நுட்பத்தோடும், அறிவுநுட்பத்தோடும், இலக்கிய நயத்தோடும், எளிய எடுத்துக் காட்டோடும் பேசினார்.

– (ஆதாரம்: அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், தொகுதி – 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக