பக்கங்கள்

ஞாயிறு, 11 ஜூன், 2023

தேவதாசி என்னும் புனித விபச்சாரம். தோற்றமும் சில குறிப்புகளும்.



பிறருக்கு மிகவும் கொடுமையாகத் திகழும் சில விஷயங்களைப் பற்றி பேசும்போதும், கருத்து தெரிவிக்கும்போதும் நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. நாம் அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதில்லை. மிஞ்சிப்போனால் எவரோ எழுதியதைப் படிக்கிறோம், அல்லது எவரோ யாரிடமோ சொல்லும்போது கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலும் கருத்துத் தெரிவித்தலுக்கு முன்பு நடக்கும் இந்த 'தெரிந்துகொள்தல்' படலம் மிகுந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நம்மை உட்படுத்துவதில்லை, குளிர்சாதன அறையிலேயே நடந்து முடிகிறது. தேவதாசி முறையைப் பற்றிய சில கலை ஆர்வலர்களின் கருத்துக்கள் இதுப்பொன்றவைதான். 

16 வயதே நிரம்பிய ரூபா தேவதாசி முறையில் கர்நாடகாவின் எல்லம்மா கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். அவர் சொல்கிறார், "11வயதில் நான் பருவத்திற்கு வரும் முன்பே என் கன்னித்தன்மையை அர்ப்பணித்துவிட்டேன். முதல் முறை மிகவும் வலிதருவதாக இருந்தது. என்னுடன் இரவைக் கழித்தவர் ரேசர் ப்ளேடுகளால் என் பிறப்புறுப்பில் கீறலகளைப் போட்டார். இப்போது எனக்கு பழகிவிட்டது". இது 'ஒரு' தேவதாசியின் கதை. இந்தியக் கோவில்களின் வரலாறு நெடுகே கோடிக்கணக்கான ரூபாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புறுப்புகளும், உடல்களும் உயர்சாதி ஆண்களால் பொழுதுபோக்கு மைதானங்களைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஆழமாய்த் தேடினால், தேவதாசிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நெஞ்சை உறைய வைப்பதாக, கண்ணில் நீர் தழும்ப வைக்கும் கொடூரத்துடனேயே இருக்கின்றன.

இந்தியாவெங்கும் தேவதாசிகள் உருவானது புத்தமதம் அழிந்தபின்புதான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காமத்தை தன் மூலப்பொருளாகக் கொண்டு எழுதிய வாத்சாயனரோ, ஜடாகா கதைகளிலோ தேவதாசிகளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றுக்குப் பின், அதாவது புத்தமதம் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டு சைவ-வைணவம் தழைத்தோங்கத் துவங்கிய காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும்,  குறிப்புகளிலும் தேவதாசிகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, புத்த துறவிகளாக இருந்தப் பெண்களை தேவதாசி முறையில் விபச்சாரப் பெண்களாக அக்காலத்திய சைவ-வைணவ புரோகிதர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கினார்கள் என்ற தகவலும் உள்ளது. ஜைன மதத்துறவிகளையும், புத்தமதத் துறவிகளையும் (ஆண் துறவிகளை) கழுவிலேற்றும், கொதிக்கும் சுண்ணாம்பில் எறியும் காட்சிகள் புடைப்போவியங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் உள்ளதை இன்றும் காணலாம். இப்போது பெண் துறவிகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியையும், மேலே சொல்லப்பட்டுள்ள புத்தமத வீழ்ச்சியின் காலத்தையும், தேவதாசி முறையின் துவக்கத்தையும் ஒன்றிணைத்தோமானால் நமக்கு பதில் எளிதில் கிடைத்துவிடுகிறது.இப்படித் தோன்றிய இந்த முறை பின் வழிவழியாக தொடர தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் #ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். பெரும்பாலும் ஏழைக் கூலிகள், விவசாயிகளின் குழந்தைகளான இவர்கள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டிருக்கிறார்கள். ராஜராஜசோழனின் காலம் பார்ப்பனர்களுக்கும், அரசகுடும்பங்களுக்கும் பொற்காலமாக விளங்கியதேயொழிய ஏழைகளுக்கும், சாதிய படிமத்தில் கீழே இருந்தவர்களுக்கும் அல்ல. பார்ப்பனர்களுக்கு கிராமம் கிராமமாக அள்ளிவழங்கிய சோழர்கள்தான் வண்ணார்களின் சலவைக்கல்லுக்கு வரி விதித்த கேலிக்கூத்தையும் செய்தார்கள். பெண்களை உடன்கட்டை ஏறச்செய்வது, வர்ணாசிரம தர்மத்தை முறைப்படி கடைபிடிப்பது, தாழ்த்தப்பட்டோர் பள்ளங்களிலும், உயர்சாதியினர் மேடான இடங்களிலும் வாழவேண்டும் என உத்தரவிட்டது,  பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்று ஏழைகளைப் பிரித்து தனிச்சேரிகளில் வைத்தது என ராஜராஜசோழன் நிறுவனமயமாக்கிய அசிங்கங்கள் ஏராளம், ஏராளம். அவன் ஆரம்பித்து வைத்த அவளங்கள் தான் இன்னும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.  இதைப் பற்றிப் பேசினால் தனிப்புத்தகமே வேண்டுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஏழைக் குடும்பப் பெண்களை கடவுளின் பேரால் விபச்சாரிகளாக மாற்றியாகிவிட்டது. இப்போது இழப்பீடு வழங்கவேண்டுமல்லவா? அப்போதுதானே தொடர்ந்து தேவதாசியாக பெண்கள் வருவார்கள்! அதற்காக சோழர் காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
தரிசு நிலங்களை தேவதாசிகளுக்கும், விளைநிலங்களை பூசாரிகளுக்கும் ஒதுக்கிய பாரபட்சமும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது கோவில் நகைகளை அணிந்து இவர்கள் ஆடியிருக்கின்றனர். திருமணம் போன்ற சடங்குகளில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. பின் கால ஓட்டத்தில் உடலுக்கு காசு என்ற அளவில் இந்த மரியாதை சுருங்கியது தனிக்கதை. இப்படி வழிவழியாக கோவிலில் தேவரடியார்களாக இருக்கும் இப்பெண்களின் ஆண் குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகளைக் கற்று கோவிலிலேயே பணி செய்திருக்கிறார்கள். விபச்சாரம் ஒழிந்துவிட்டாலும் இன்னமும் கோவில்களில் இசைப்பணி புரியும் சமூகத்தவர்கள் இவர்கள் வழி வந்தவர்களே.

தேவதாசி முறை குறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்று, ஆளும் வர்க்கம் மற்றும் கடவுளை முழுதாய் கையில் வைத்திருந்த (வைத்திருக்கும்) பார்ப்பன வர்க்கத்திற்கும் நிலவிய காமத்தேவைக்கு வடிகாலாக தேவதாசி முறை பயன்பட்டதாகவும், அதன்காரணமாக தங்களிடமிருந்த கடவுள் மற்றும் மதத்தை பயன்படுத்தி தேவதாசி முறையை தோற்றுவித்தனர் என்றும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட அத்துணை பெண் குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட சாதியை, சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூத்திர ஆண்கள் மனுதர்மப்படி தீண்டப்படக்கூடாதவர்கள், ஆனால் காமத்தில் ஏது தீண்டாமை? எல்லாவற்றுக்கும் தான் மனுதர்மத்தில் பரிகாரமும் இருக்கிறதே!!!

இப்படி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார்கள் அங்கேயே பகல் நேரத்தில் ஆடல், பாடல்களைக் கற்று இரவு நேரங்களில் விபச்சாரம் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள். பணம் மிகுந்த சில செல்வந்தர்கள் ஒரே பெண்ணை வைத்திருந்த கதைகளும் உண்டு. இந்தத் தொழிலில் வரும் வரும்படியில் ஏழ்மையில் உழலும் தங்கள் குடும்பத்தைக் காக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லம்மா தெய்வத்திற்கு இன்னமும் பெண் குழந்தைகள் தேவதாசிகளாக நேர்ந்துவிடப்படுகிறார்கள். ஏழ்மையான சூழ்நிலையில் இப்படி ஆக்கப்படும் குழந்தைகள் தங்கள் உடலை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஏழு, எட்டு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் ஓரவிற்கு உடல் ஒத்துழைக்கும் வரை இத்தொழிலைச் செய்துவிட்டு 45வயதிற்கு மேல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அரசால் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட பழக்கமாக இருந்தாலும், கோவில் பூசாரிகள் இன்னமும் இச்சடங்குகளைச் செய்து பெண்களை தேவதாசிகளாக அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலும் தேவதாசிகளாக தங்கள் குழந்தைகளை ஆக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விபச்சாரம்தான் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தும், கடவுள்-மதம் எனக் காரணங்களைச் சொல்லி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பல நேரங்களில் பச்சிளங்குழந்தைகள் கூட நேர்ந்துவிடப்படுகின்றன. இந்த குழந்தைகளை அங்கு ஏற்கனவே இருக்கும் ஜோகினிக்கள் (தாசிகள்) வளர்த்து, ஏழெட்டு வயதிலேயே படுக்கையறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்திய தேவதாசி முறை குறித்து எழுதியிருக்கும் ஜோகன் ஷங்கர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இம்முறைக்கான மூலகாரணம் அக்காலத்திய புரோகித சமூகம் (பார்ப்பன சாதி) ஏனைய சமூகங்களை தனக்குக் கீழாக எப்போதும் வைத்திருக்க வேண்டுமென்பதால் அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம் உருவாக்கியதே தேவதாசி முறை ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள். சாதி அடுக்கை காப்பாற்றும் அதே நேரம், காமவேட்கையையும் தீர்த்துக்கொள்ளும் முறையாகவே இது இருந்திருக்கிறது. கடவுளின் மனைவிகள் என நேர்ந்துவிடப்பட்டப் பெண்களை உயர்சாதி மனிதர்கள் மாறி மாறி புணர்ந்ததை கலாச்சார வளம் பொருந்தியதாய் பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நகைமுரண்.

தேவதாசி முறைக்கு எதிராக பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இந்தியாவில் 2.5லட்சம் மேலான தேவதாசிகள் இருக்கிறார்கள் என இந்திய பெண்கள் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திராவில் 16,625 தேவதாசிகளும், கர்நாடகவாவில் 22,941 தேவதாசிகளும், மஹராஷ்ட்ராவில் 2479 தேவதாசிகளும் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ராஜராஜசோழனால் முழுவீச்சில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவதாசி முறை இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. இதில் பெரியார், முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரது பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இப்படி சாதியின் பேரால், கடவுளின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அசிங்கமான வழக்கத்தை பரதத்தில் பட்டம் பெற்ற சிலர் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அந்த முறை எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்திருந்தால் நாம் காஞ்சிகாமகோடி போன்றோரின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியதில்லையே என அவர்கள் உள்ளுக்குள் நினைத்தார்களோ என்னவோ!!

எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஊரில் மிகப்பெரிய கெட்டவார்த்தையாக கருதப்படுவனவற்றில் முக்கியமான ஒன்று "தேவடியா மகனே" என்பது. ஒருவேளை தேவரடியார்கள் நம் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன், வளத்துடன் நடத்தப்பட்டிருந்தார்களேயானால் அவர்களின் பெயரில் எப்படி ஒரு கெட்டவார்த்தை உருவாகியிருக்க முடியும்? இன்று தேவதாசி முறையை போற்றிப்புகழக் கிளம்பியிருக்கும் மேட்டுக்குடி கூட்டத்தை நாம் "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவடியா மகன்களே.. தேவடியா மகள்களே" எனக் குறிப்பிட்டால் பொறுத்துக் கொள்வார்களா?

விபச்சாரம் புனித விபச்சாரமாக சித்தரிக்கப்பட்டாலும் விபச்சாரம், விபச்சாரம் தானே! இல்லை அது புனிதம் தான் என்றால் அந்தத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கும் மேட்டுக்குடி கலை ஆர்வலர்கள் உடனடியாக அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்களை தேவதாசிகளாக பதிவுசெய்துகொண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

- டான் அசோக்
- அன்புச்செல்வன் முகநூல் பதிவு, 11.06.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக