பக்கங்கள்

ஞாயிறு, 12 மே, 2024

புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 )


புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று- 22.04.1870

விடுதலை நாளேடு
Published April 22, 2024

உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை ரஷ்யாவில் ஏற்படுத்தி, இந்தியா உள்பட பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கிய புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் இன்று.

பள்ளிப்புத்தகங்கள் லெனின் வரலாற்றை கட்டாயம் தாங்கி வர வேண்டிய காலகட்டத்தில் இந்த உலகம் உள்ளது.

1. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பேராயுதங்கள் என்பது புரட்சியாளர் லெனினின் புகழ் பெற்ற வாசகம். புத்தகங்களை ஆயுதங்களாக ஏந்தியவர் அவர்.
2. கற்றுக் கொள்ளல், ஒழுங்கமைத்தல், ஒன்று படல், போராடுதல் இவற்றின் மூலம் இளைஞர் சக்தி தம்மையும் தயாரித்துக் கொண்டு, உலகையும் ஒழுங்கமைக்க வேண் டும் என்று இளைஞர்களை செதுக்கியவர் அவர்.
3. 1870 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 இல் பிறந்து, விளாடிமிர் இலியிச் உல்யானவ் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டு, ரஷ்யாவில் ஓடிய லீனா நதியின் பெயரால் லெனின் என அழைக்கப்படலாயினார்.
4.1905ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, ரஷ்யாவில் ஜார் மன்னரின் அரண்மனையை நோக்கி நடந்த தொழிலாளர் கூட்டத்தில், ஓர் ஞாயிறன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொழி லாளர்கள் உயிரிழந்தனர்.
சிவப்பு ஞாயிறு என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலையே 1917ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்த மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு காரணமாயிற்று.
5. சமூகம், அரசியல், பொருளாதாரம், மதம் இவற்றில் அடிப்படை மாற்றங்களை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், புதுமையான வாழ்வியல் முறைகளோடு, அவற்றிற்கான செயல்களை நடைமுறைப்படுத்துவதே புரட்சி என்றார்.
6. நிலத்தின் மீது உரிமை கொண்டாடும் தனி உடைமை உரிமையை அகற்றினார்.
7. பெரிய பண்ணைகள், தேவாலய நிலங்கள், அரச குடும்ப நிலங்கள் இனி அரசின் சொத்தென அறிவித்தார்.
8. உலகின் மாபெரும் தத்துவமேதை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை முதலில் நடைமுறைப்படுத்திய ஆட்சி லெனி னுடையது.
9. சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, பாட்டாளி மக்களின் பொதுவுடைமை அரசை நிறுவி, மாபெரும் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் இன்றுவரை உலகை நிர்மாணிக்கும் சக்தியாக பார்த்துக் கொண்டார், அதனைத் தொடரச் செய்தார்.
10. உலகின் 60 சதவீத வளங்களை, 10% முதலாளித்துவ வர்க்கம் ஏகபோகமாய் ஆளுமை புரியும் இந்த வேளையில், புரட்சி யாளர் லெனின் இன்னும் அதிகமாகவே உலகிற்குத் தேவைப்படுகிறார்.

புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 ) விடுதலைஞாயிறு மலர்

Published April 6, 2024

மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை ரஷ்யப் புரட்சி அந்தப் புரட்சியின் நாயகன் லெனின். அவர் பிறந்த நூற்றாண்டு விழா 22.4.1970இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இச்சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள வோல்கா கரையில் சிம்பிர்ஸ்க் என்னும் நகரில் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி விளதிமிர் இலியிச் லெனின் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர் லெனின் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். ஆனால், மாணவர்களது புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டமைக்காக ஜார் அதிகாரி களால் அவர் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக வகுப்புகளுக்குச் செல்லும் உரிமை அவருக்கு மறுக்கப் பட்டது. வீட்டில் இருந்தே கல்வி கற்று 1891இல் அவர் பல்கலைக்கழகத் தேர்வை எழுதி அதில் சிறந்த முறையில் தேறினார். சட்டத் துறைப் பட்டமும் பெற்றார்.

முதல் புரட்சி
1895இல் அவர் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள தொழிலாளர் மார்க்சிஸ்ட் குருக்கள் அனைத்தையும் ஒரேஸ்தாபனமாகத் திரட்டினார். அதற்கு தொழிலாள வர்க்க விடுதலைக்கான போராட்டம் லீக் என்ற பெயரிடப்பட்டது. ரஷ்யாவின் பிரசித்தி பெற்ற புரட்சிகர தொழிலாளர் கட்சியின் வித்து அதுவேயாகும்.

1895 டிசம்பரில் லெனின் நாடு கடத்தப்பட்டார். 1900 ஜனவரியில் நாட்டை விட்டே வெளியேறி சில காலம் சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் வசித்தார்.
1905 ஜனவரியில் ரஷ்யாவில் முதலாவது பூர்ஷ்வா – ஜனநாயகப் புரட்சி வெடித்தது. போராட்டம் உச்சக் கட்டத்திலிருந்தபோது லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். கட்சியின் எல்லா வேலைகளையும் அவரே நேரடியாக இயக்கினார். புரட்சியை நசுக்குவதில் ஜார் மன்னனின் அதிகாரிகள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் கட்சியின் முடிவின்படி அவர் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறினார்.

பிப்ரவரியில் இரண்டாவது பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி தொடங்கிற்று தொழிலாளர்கள் விவசாயிகளது தாக்குதலின் கீழ் ஜார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்ந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கம், நாடு, மக்களின் நலன்களைப் புறக்கணித்தது. ரஷ்யாவை அந்நிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்ற அந்த அரசாங்கம் முயன்றது.
லெனின் வெளிநாட்டிலிருந்து திரும்பினர். ரஷ்யாவில் பாட்டாளி மக்கள் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான போராட்டத்திற்கு மக்களைத் தட்டி எழுப்பினார். இடைக்கால அரசு லெனினை குறி வைத்தது. எனவே, அவர் தலைமறைவானார்.

அக்டோபர் புரட்சி
ரஷ்யாவில் அக்டோபர் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்றது மனிதகுல வரலாற்றிலேயே முதன் முறையாக அதிகாரம் தொழிலாளர் விவசாயிகள். போர் வீரர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் வசம் வந்தது.
உலகின் முதலாவது சோஷலிச அரசின் முதலாவது அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் லெனின் அமர்ந்தார். அன்றிலிந்து 1924 ஜனவரி 21இல் அவர் இறக்கும் வரை ஒரு ராஜியவாதிக்குரிய மேதாவிலாசத்துடன் அவர் நடந்து கொண்டார்.
ரஷ்யாவில் புதியதொரு சமூகத்தை அமைப்பதற்கு முதற்கண் ஒரு நவீன தொழில்துறையை உருவாக்குவதிலும் சிறிய தனியார் பண்ணைகளைப் பெரிய எந்திர முறைக் கூட்டுப் பண்ணைகளாக்க விவசாயிகளுக்கு உதவுவதும் ஒரு கலாச்சாரப் புரட்சியை நடத்துவதும் அவசியமென லெனின் நம்பினார்.
மெய்யான ஜனநாயகம் சுதந்திரத் தினடிப்படையிலான புதிய சமூகத்தின் அஸ்திவாரம் மனிதன் மனிதனை சுரண்டுவதை ஒழிப்பதும் எல்லாப் பொருளாதாரங்களையும் மக்களின் உடைமையாக மாற்றுவதுமே ஆகும். இதுவே லெனினது போதனைகளின் சாராம்சமாகும்.
(‘விடுதலை’ – 22.4.1970)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக