ஆன்மீக, தேவபாஷை என்று அடை யாளப்படுத்திக் கொண்டு, மடமை வளர்க் கும் புராண இதிகாசங்களுக்கு மாதாவாக அறியப்பட்ட ஆதிக்க அடித்தளத்தை கொண்ட மொழி சமஸ்கிருத மொழி. அதனுடைய அழிவு சக்திக்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று, 1823இல் ராஜா ராம்மோகன், கொல்கத்தா ஆளுநருக்கு விண்ணப்பித்த செய்தி, வரலாற்று நூலில் இடம் பெற்றிருப்பதை, 19.6.2022, ‘விடு தலை’ ஞாயிறு மலரில் கண்டேன்.
அத்தகைய விண்ணப்பம், இன்றும் விண்ணப்பமாக அல்லாமல், எதிர்ப்புப் போராட்டத்துக்கு குரலாக ஒலிக்க வேண் டிய நிலையுள்ளதை 4.6.2022 அன்று சென்னை சைதாப்பேட்டை இந்தி எதிர்ப்பு மாநாடு வெளிச்சம் போட்டு காட்டியது. ஒன்றிய அரசும், மாநில ஆளுநரும் அதனைக் காணும் வகையில் ஊடகங்கள் கடமையாற்றாதது ஏனோ?
நிற்க, இராஜா ராம்மோகன் ராய் அவர் வாழ்ந்த காலத்தில், முற்போக்கும் சீர் திருத்த சிந்தனையும் கொண்டவராக செயல்பட்டார். அதன் வெளிப்பாடே அவர் 1823இல் சமற்கிருத கல்விக்கு எதிராக விண்ணப்பம் கொடுத்தது. அத்து டனல்லாது நாம் மேற்கொண்ட இரண்டு சீர்திருத்தங்களைக் கூறலாம். ஒன்று இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றியது. ஆங்கில வழிக் கல் விப் பள்ளிகளின் தேவையை வலியுறுத் தினார். அதற்கு ஆட்சியிலிருந்த கவர்னர் ஜெனரல் லார்ட் பெண்டிங் ஆதரவும், ஊக்கமும் அளித்தார். ஆங்கிலக் கல்விப் பள்ளிகள் தோன்றின.
இரண்டாவது, இந்து சமுதாயத்தின் சனாதன தர்மத்தின் அடிப்படையில், நடந்து வந்த, விதவைகளை, உயிருடன் எரிக்கும் உடன் கட்டை ஏறுதல் என்ற ‘சதி’ என்ற கொடூர கொலை வழக்கத்தைத் தடுக்க, நிறுத்த எடுத்த முயற்சி. இந்த வழக்கத்தின் தீயவற்றை ஆங்கிலேயர் கண்டும், இந்து மத வழக்கத்தில் தலையிடா கொள்கையால் ஏதும் செய்யாமல் இருக்கும் நிலையில் ராம் மோகன் ராய் போன்ற சீர்திருத்த சம சிந்தனை உடை யோர் கருத்தறிந்து, லார்ட் பெண்டிங்க் கொடிய திட்டத்தை ஒழிக்க சட்டம் இயற்ற முடிந்தது.
ராஜா ராம் மோகன் ஒரு சீர்திருத்த சிந்தனையைக் கொண்டவர் என்று கூறும் வேளையில், அவரின் வாழ்க்கைப் பற்றிய சில குறிப்புகள் குறிப்பாக ‘சதி’ பற்றிய பார்வைப் பற்றி அறியலாம்.
ராஜாராம் மோகன், மேற்கு வங் காளத்தில், கல்கத்தாவிலிருந்து 70 கி.மீ. தூரத்திலுள்ள ஹுக்ளி மாவட்டத்தில் ரத்தநகர் என்ற ஊரில், ராம்கண்டா, தானிதேவி ஆகியோரின் மகனாக 1772 ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் வாழ்ந்த வீட்டின் பக்கத்தில் அவர் தந்தையார் அமைத்த மாந்தோப்பு இருந்தது. 19 ஆவது நூற்றாண்டு வரை அது சுடு காடாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பக்கத்தில் ஒரு குளமும் இருந்தது. இந்த குளத்தின், விதவையான பெண் குளித்து, உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பற்றி எரியும் இறந்த கணவன் உடலின் மேல் படுக்க அழைத்துச் செல்லப்படுவர். அதற்கு அவர்கள் மறுத்தால், கழிகளால் தாக்கப்பட்டு, கை, கால்களை உடைத்து தப்பிச் செல்லாத வகையில், தீயில் படுக்கச் செய்தனர்.
இத்தகைய கொடிய வழக்கத்தைக் கண்டித்தும், இந்து மதத்தைக் குறைபடித் தியும் ராம்மோகன் பேசி வந்ததால், அவரை அவரின் தந்தையார் அவரை மகனாக ஏற்க மறுத்தார். ராய் தீவிரமாக செயல்பட அவர் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சியின் தாக்கமே காரணம்.
ராயின் மூத்த சகோதரர் இறந்த பிறகு அவரின் மனைவி அலக் மஞ்சரி தேவிக்கு கட்டாயத்தில் போதை மருந்து கொடுத்து உடன்கட்டை ஏறச் செய்தனர். இது 1811ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
கடைசி உடன்கட்டை, 176 ஆண்டுகள் கடந்து ரூப் கன்வாருடன் முடிந்தது. ராம் மோகன் ராய் 1833இல் இங்கிலாந்தில் இறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக