பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2024

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது? - எதிர்வினை (51)

 

ஜனவரி 01-15 2020

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது?

கேள்வி: ஈ.வெ.ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்கிற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்கிற பயமா?

பதில்: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கிப் பரப்பலாமே? ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டு.

பெரியாரின் மூத்த தொண்டர் ஒருவர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டதே அது!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக இப்படிக் கேட்க மாட்டீர்!

கேள்வி : பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்புச் சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில் : அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை என்பது ஓர் இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் எப்போதும் இழிவு படுத்தாது.

ஆனால், பூணூல் என்பது பெரும்பாலான மக்களை இழிவுபடுத்தும் அடையாளம். 3% ஆரியப் பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இழிமக்கள்; தீட்டு உள்ளவர்கள் என்று இழிவு செய்யும் ஏற்பாடு பூணூல். ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக அவர்களால் அணியப்படுவது.

ஒரு தெருவில் இது பத்தினியின் வீடு என்று ஒரு வீட்டில் எழுதி வைத்தால் அதன் பொருள் என்ன? மற்ற வீடெல்லாம் விபச்சாரிகளின் வீடுகள் என்பதுதானே! நான் மட்டும் உயர்ந்தவன் என்று ஆரிய பார்ப்பனர்கள் பூணூல் மாட்டிக்கொள்வது மற்றவர்கள் இழிமக்கள் என்று கூறத்தானே?

அப்படியிருக்க கருப்புச் சட்டை போடுவது போல்தான் பூணூல் போடுவது என்கிற உமது வாதம் அறிவற்ற, அடிமுட்டாள்தனமானது என்பதை இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். கருப்புச் சட்டை இழிவு நீக்கப் பாடுபடும் தொண்டர்களின் அடையாளம். அப்படிப் பாடுபடும் எவரும் அதை அணியலாம். ஆனால், பூணூலை எல்லோரும் அணிய முடியுமா?

பூணூல் அணிவது உரிமை என்கிறீரே… அந்த உரிமையைக் கொடுத்தது யார்? அந்த உரிமை ஆரியப் பார்ப்பானுக்கு மட்டும் எப்படி வந்தது? உம்மால் பதில் சொல்ல முடியுமா?

97% மக்களை ஏமாற்ற சாஸ்திரங்களை தாங்களே எழுதி, அதில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் இழிவானவர்கள், எங்களுக்கு மட்டுமே பூணூல் என்று எழுதிக்கொண்ட மோசடிக் கூட்டம்தானே ஆரிய பார்ப்பனக் கூட்டம். அப்படிப்பட்ட ஏமாற்றுக்கும், பித்தலாட்டத்திற்கும் உரிமை என்று பெயரா?

கேள்வி : ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதைப் பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் திட்டியே பொழப்பு நடத்துகிறீர்களே, உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில்: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி  பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இதில் பிழைப்புக்கு, வருவாய்க்கு வழியேது? மூடநம்பிக்கையால் அறிவு, மானம், உரிமை, உயர்வு இழந்து, அடிநிலையில் உழலும் மக்களை சிந்திக்கச் செய்து அவர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக்கி, அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, பார்ப்பனர்களை விடவும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து, உயர்ந்து வர பாடுபடுபவர்கள் நாங்கள்.

 இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்கிற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று பகற்கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!

நேயன்

                                                                  (தொடரும்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக