பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2024

மகா மகா சாணக்கியர் என்று பார்ப்பனர்களால் கூறப்பட்ட பானகல் அரசர் (9.7.1866)

 


விடுதலைஞாயிறு மலர்

-முனைவர் க.அன்பழகன் கிராம பிச்சார குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

மனித இனம் தோற்றம் கண்டபின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், குடும்பம் தோன்றியபின் குடும்பத் தலைவர், அதன்பின் பல குடும்பங்கள் இணைந்த தொகுப்பிற்கு ஒரு தலைவர், அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியில் வாழும் மக்களின் தலைவர், தொடர்ந்து குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் இனக்குழுவின் தலைவர், பிறகு பெருநிலப்பரப்பின் தலைவர் – அவரே மன்னர் அல்லது அரசர் என்றும், அவரது ஆட்சி மன்னராட்சி என்றும் இருந்து – இற்றை நாளில் மக்களே தங்களை ஆளும் மக்களாட்சி வரை ஆட்சிகள் வளர்ந்து வந்துள்ளன.

அரசர்கள் காலம் முடியாட்சியாக விளங்கிய காலத்தில் அனைத்தும் அரசனுக்குச் சொந்தமானது. அரசர்கள் அவ்வளவு பெருமையும் உரிமையும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.

இச்சிறப்பிற்குரிய அரச குடும்பத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள பானகல்லு கிராமத்திற்குரிய அரச குடும்பத்தில் பிறந்தவர்தான் பானகல் அரசர். இவரது பெயர் பி. இராமராய நிங்கர் என்பதாகும்.

பானகல் அரசரின் மூதாதையர்கள் பானகல்லு என்ற கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து காளாஸ்திரியில் குடியேறியபின், காளாஸ்திரியில் தான் பானகல் அரசர் பிறந்தார்.

இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றிருந்தார்.

இவர் பிறந்த நாள் 9.7.1866. இவர் பின்னாளில் சென்னை இராஜதானியின் பிரதம அமைச்சராக (Premier of Madras Presidency) பொறுப்பேற்று புரட்சிகரமான சாதனைகளை நிகழ்த்தி சரித்திரம் படைத்தார். சாகாச் சரித்திரம் ஆனார்.
அரச குடும்பத்தில் பிறந்து, அடிமைகளாய் – உரிமை இழந்தவர்களாய் – நாடோடி ஆரிய இனத்தின் சுரண்டல் கொடுமையைச் சுகமாக ஏற்றிருந்த திராவிடர் இன மக்களுக்கு உரிமை இரத்தத்தை உடலில் செலுத்தி, உணர்ச்சியூட்டி அவர்களை உயர்த்திய உத்தமர்.

பானகல் அரசரின் ஆட்சிச் சிறப்பை- ஆளுமை நெருப்பை- அதனால் விளைந்த திராவிடர் செழிப்பைக் கண்டோம்.
டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய முப்பெரும் மேதைகள் – திராவிடர் இனத்தை வாழ்விக்க வழிகண்ட வரலாற்று நாயகர்கள் – இணைந்து உருவாக்கிய அமைப்புதான் – 1916இல் உருவான தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதன் சிறப்புப் பெயர் நீதிக்கட்சி. இந்த அமைப்பு ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் பத்திரிகை ஒன்று நடத்தியதால் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களான திராவிடர் இன மக்கள் கல்வி மற்றும் அரசு உத்தியோகங்களில் உரிய விகிதாச்சார அளவில் சட்டப்படியான வாய்ப்பைப் பெறப் பாடுபடுவது என்ப தேயாகும்.
நீதிக்கட்சி தொடங்கு வதற்கு அடித்தளமிட்ட முதல் சிறப்புக் கூட்டம் 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அன்று சென்னை வேப்பேரி எத்திராஜுலு (முதலியார்) இல்லத்தில் நடைபெற்றது.

நீதிக்கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை” (The Non-Brahmin Manifesto December – 1916) என்ற பெயரில், புதியதோர் வரலாற்றை திராவிடர் இனத்து மக்களுக்கு வழங்கிடும் புகழ்மிக்க புரட்சிகர அறிக்கையாக வெளியானது.

மாண்டேகு – செம்ஸ்போர்டு வழங்கிய இரட்டை ஆட்சித் திட்டத்தின் கீழ் நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டு தேர்தலை முதன்முதல் சந்தித்து – வெற்றியும் பெற்று சென்னை இராஜதானியில் திராவிடர் ஆட்சியை நிறுவியது.

நீதிக்கட்சியின் தந்தை என்ற பெருமைக்குரிய சர்.பிட்டி தியாகராயர் அவர்களை ஆங்கிலேயக் கவர்னர் லார்டு வெல்லிங்டன் முதலமைச்சராகப் பொறுப்பேற்க அழைத்தார். தான் முதலமைச்சராக விரும்பவில்லை என அறிவித்து கடலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை முதலமைச்சராக்கினார்.

இந்திய அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்திட்ட- மக்கள் பணியே மகத்தான பணி என்று வாழ்ந்திட்ட வணக்கத்திற்குரிய முதல் மனிதர் சர்.பிட்டி தியாகராயர் ஆவார்.

அந்த வரிசையில் இரண்டாமவராக ஏன், இறுதி மனிதர் என்றே கருதிடும் ஆங்கிலேய கவர்னரால் இரண்டு முறை (வெவ்வேறு காலகட்டங்களில்) சென்னை ராஜதானிக்கு முதல்வர் பொறுப்பேற்க (Premier) அழைத்தும் பதவியைவிட மானமுள்ள சமுதாயமாக திரா விடர் சமுதாயத்தை மாற்றும் தொண்டு என்ற மாபெரும் பணி என்று வாழ்ந்து காட்டிய புதிய வரலாற்றுக்குப் புகழ் சேர்த்த தந்தை பெரியார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்ற திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்கள் ஆட்சி பெறுப்பேற்ற சில மாதங்களில் உடல் நலம் குன்றிய நிலையில் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் திரு.பி. இராமராய நிங்கர் எனும் பெயர் கொண்ட பானகல் அரசர் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1921 முதல் 1926 வரை முதலமைச்சராக இருந்த பானகல் அரசர் நீதிக்கட்சியின் கொள்கை வழிநின்று ஆற்றிய தொண்டுகள் ஏராளம். அவற்றில் சில இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

நீதிக்கட்சியின் சாதனைகள்

பார்ப்பனரல்லாதார் என்பவர்கள் யார் என்பதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி – வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வருவதற்கான அடிப்படையை உருவாக்கினார்.

பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமையில்லை என்றிருந்த தடையை அரசாணை எண்.108 சட்டம் (legislative) (நாள்: 10.05.1921) மூலம் நீக்கி பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார்.

1921 ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்திற்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் அனைத்து சமூக மாணவர்களும் கல்லூரிப் படிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 636 சட்டம் (கல்வி) நாள்: 20.8.1922 மூலம் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பார்ப்பனர் இனத்து மாணவர்களே படித்திடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை பார்ப்பனரல்லாதார்க்கு 60% பார்ப்பனர்களுக்கு 40% என வரையறை செய்து அரசாணை எண்.1880 சட்டம் (கல்வி) (நாள்: 20.05.1922) ஒன்றைப் பிறப்பித்தார். பார்ப்பன ஏகபோகக் கொள்ளைக்கு முடிவு கட்டினார்.

அரசாணை எண்: 817 சட்டம்(பொது) (நாள்: 25.03.1922) மூலம் பஞ்சமர் – பறையர் என்று தொல் திராவிடர் குடியினரை அழைக்கும் – எழுதும் நிலைக்கு முடிவுகட்டி, தமிழில் “ஆதிதிராவிடர்” என்றும் தெலுங்கில் “ஆதி தெலுங்கர்” என்றும் அழைத்திட – எழுதிட ஆணையிட்டார்.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பட்டியலை அனுப்பும்போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 205 சட்டம் (கல்வி) (நாள்: 11.12.1924) ஒன்றைப் பிறப்பித்தார்.

முதன்முதல் சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை நிறுவிய பெருமைக்குரியவர் பானகல் அரசரே ஆவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக பானகல் அரசர் காலத்திலே தான் அடிப்படைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் பானகல் அரசர் ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அரசாணை எண்: 29 சட்டம் (legislative) (நாள்: 27.01.1925)

அரசு அலுவல்களுக்கு அந்தந்த துறையினரே நியமனங்கள் செய்து வந்தனர். பெரும்பாலும் உயர் ஜாதியினரே இருந்த நிலையில் அவர்களுக்கே வாய்ப்பு கிடைத்தது. பனகல் அரசர் ஆட்சிக்கு வந்தவுடன் நியமனங்களை ஒருமுகப்படுத்த (Staff Selection Board) “அலுவலர் தேர்வு வாரியம்” அமைத்தார். இதுவே இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வு வாரியம் ஆகும். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும் முன்னோடி அமைப்பு இது. வகுப்புரிமை ஆணை அமலுக்கு வந்த பின் இதன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு 1929ஆம் ஆண்டைய சென்னை சர்வீஸ் கமிஷன் சட்டம் ஏற்பட்டது. மேன்மைமிகு இந்திய கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்தார். அரசு ஆணை எண் 484 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) (18.10.1929) இதைக் குறிப்பிடுகிறது.

பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு – அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை, இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.

மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டார்.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக்கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

பி அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளை வுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற – மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறைச் செலவுகளை ஏற்றல். சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.

மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

பானகல் அரசர் நிறைவேற்றிய மேற்கண்ட சட்டங்கள்தான் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்பதோடு – இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமை ஏற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆணிவேருமாகும் என்றால் அது மிகையாகாது.

நீதிக்கட்சியின் சார்பில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு கோவை ஜில்லா மாநாடாக- ஒப்பனைக்காரத் தெரு நாடக மேடையில் 1917 ஆகஸ்ட் 19ஆம் நாள் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் அன்றைய நாளில் இம்பீரியல் கவுன்சில் மெம்பராக இருந்திட்ட திரு.பானகல் அரசர் ஆவார். இந்த மாநாட்டில் அவரது எழுச்சி உரை திராவிடர் இனத்து மக்களின் சமூகநீதிச் சாசனமாகும்.

பானகல் அரசரின் மறைவு 1928 டிசம்பர் 15 அன்று திடீர் உடல்நலக் குறைவால் நிகழ்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் பானகல் அரசருக்குச் சிலை வைத்து – பானகல் பூங்காவும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பானகல் அரசர் காலமானபின் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தியின் தலைப்பு

“மறைந்தார் நம் அருமைத் தலைவர்!
எனினும் மனமுடைந்து போகாதீர்!”

பெரியார் தனது இரங்கல் செய்தியில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது,
“நாயர் பெருமான் அவர்களும் இதே மாதிரி நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார்.
தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார்.

பானகல் வீரரும் அவர்களைப் பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள் கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அதுபோலவே தியாராய வள்ளல் மறைந்தவுடன் நமது பானகல் வீரர் தோன்றினார். பானகல் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக் காணோம். அவர் மறைந்த பிறகு சந்றேறக் குறைவாக இரவும் பகலுமாக 192 மணி நேரம் – லட்சக்கணக்கானவர்கள் காலஞ்சென்ற தலைவரைப்போல் ஒரு தலைவரைத் தேடித்தேடி களைத்தாய்விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே நம் பானகல் வீரர், ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது.”

தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி குறிப்பிட்டுள்ள திலிருந்து பானகல் அரசர் – பானகல் வீரர் வாழ்வும் தொண்டும் நம்மினத்திற்கு எந்த அளவிற்குப் பயன் தந்தது என்பதும், அவரது மறைவும் இழப்பும் யாரும் நிரப்ப முடியாத இடமென்பதும் அறிந்திடும் நிலையில் அப்பெரும் வரலாற்று நாயகர் பானகல் அரசர் பிறந்த நாளில் (9.7.1866) சமூகநீதி

நிலைக்க – திராவிடம் வெல்ல சூளுரைப்போம்!

வாழ்க பானகல் அரசர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக