பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2024

இராமன் ஆண்டாலும்… இராவணன் ஆண்டாலும்…!

 


-கி.தளபதிராஜ்

சூத்திரன் தவம் செய்தான் என்பதால் அவன் தலையைக் கொய்தவன்தான் இராமன். வருணாசிரம தருமத்திலிருந்து வழுவாமல் ஆட்சி புரிந்தவன். அவாள் தருமப்படி பெண்களும் சூத்திரர்கள் தானே? அதனால்தான் கட்டிய மனைவியையே தீக்குளிக்கச் சொன்னான். இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை என்றனர் பல்வேறு ஆய்வாளர்கள். ஆரியத்தின் அடையாளச் சின்னமான இராமனை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.

1956 இல் புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழா அரசு சார்பில் சென்னை கோகலே அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தந்தை பெரியார் அவர்கள் இராமாயணத்தில் புத்தரை திருடன் என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இராமனை விமர்சித்துப் பேசினார். இந்த விழா நிகழ்ச்சியை சென்னை வானொலி நிலையம் பதிவு செய்து அன்று இரவே ஒலிபரப்புவதாக இருந்தது. பெரியாரின் உரையை சர்ச்சைக்குரியதாக கருதி அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப் படவில்லை. “ஒரு வாரத்திற்குள் நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும். அல்லது ஒலிபரப்பாததற்கான காரணத்தையாவது சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இராமன் படம் தமிழ்நாடு முழுவதும் கொளுத்தப்பட்டு அந்த செய்தி மக்கள் அறியும்படி செய்யப்படும்!” என்று அறிவித்தார் பெரியார்.

1.7.1956 அன்று திருச்சியில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை நாள் விழாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் வால்மீகியின் குடிகார ராமன், சீதை, அனுமார் வேடங்களைத் தரித்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் அவர்கள் உடல்நிலை நலிவுற்ற நிலையிலும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசினார்.

“ராமனை துடைப்பக் கட்டையால் அடிக்க வேண்டும் என்று சொன்னேன்! ஏன்? இதனால் எங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கப் போகிறதா? அப்போதாவது ராமனை ஒரு கடவுள் என்று கும்பிடுபவர்களுக்கு புத்தி வராதா என்பதற்காகத்தான்! நம்மை மானங்கெட்டவர்களாக ஆக்கிவிட்டார்களே! அதற்கு ஒரு படிப்பினை!” என்றார்.

விடுதலையில், “அயோக்கிய ராமனுக்கு கொடும்பாவி! திராவிடர்களைக் கொன்று குவித்து வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டிய ராமனுக்குக் கொடும்பாவி! திராவிடப் பெண்ணின் மூக்கு, காது, முலையை அறுக்கச் செய்த ராமாயண ராமனுக்குக் கொடும்பாவி! சூத்திரனைக் கொன்றால் பாவம் இல்லை என்று சொல்லிய ராமனுக்குக் கொடும்பாவி! சூத்திரர்களை, அசுரர்களை, அரக்கர்களைக் கொல்வதற்காகவே அவதாரம் எடுத்த ராமனுக்கு கொடும்பாவி கட்டி இழுத்து கொளுத்த தயாராக இருங்கள்!” என்ற அறிவிப்பு வந்தது! (விடுதலை 2.7.1956)

21ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் ராமர் படத்தை கொளுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது!

“ஆகஸ்ட் 1ஆம் தேதி கழகத் தோழர்கள் ஹிந்தி எதிர்ப்புக்காகவும், ராமன் கடவுள் அல்ல என்ற கருத்தில் ராமன் உருவத்தை அழிப்பதற்காகவும் பொதுக்கூட்டங்களை நடத்தி, அந்தக் கூட்டத்தில் ‘ஹிந்தித் திணிப்பில் அரசாங்கத்தார் வாக்குறுதிக்கு விரோதமாக நடந்து கொள்வார்களேயானால் அரசாங்கக் கொடி எரிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு அடுத்த காரியமாக ராமன் உருவத்தை தட்டியிலோ, அட்டையிலோ, துணியிலோ, காகிதத்திலோ எழுதி, ‘இராமன் எந்த ஆதாரப்படியும் நமக்கு கடவுள் அல்ல! என்றும், ஆரியர்கள் நம்மை இழிவு படுத்துவதற்காகவும் மடமையாக்குவதற்காகவும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் செய்து கொண்ட ஒரு கற்பனைச் சித்திரமே அன்றி வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்வதால் இந்த எண்ணத்தை பொதுமக்களிடையே பரப்ப வேண்டும்!’ என்றும் கூறி ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்!” என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

‘ராமன் உருவம் கொளுத்தப்பட்டாக வேண்டும் ஏன்?’ எனத் தலைப்பிட்டு பெரியாரின் அறிக்கை விடுதலையில் வெளிவந்தது.

“ராமன் வர்ணாசிரம தர்மத்தை, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு வேத சாஸ்திர ஆதாரமாக மக்களிடையில் இருப்பதற்கென்றே ஆரியரால் பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்! அதுவும் பார்ப்பன மூல ஆதாரமாகிய வேதத்தின் படியும் மனுதர்ம சாஸ்திரத்தின் படியும் பார்த்தால் ராமன் ஒரு கடவுளே அல்ல! ஜாதி முறையையும் வருணாசிரமதர்ம முறையையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற தமிழ் மக்கள் ஜாதி முறையையும் வருணாசிரம தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக பார்ப்பனர் பயன்படுத்துகிற ராமனை கடவுளாகக் கருதும்படி விட்டு வைப்பது பெரும் பழியும் மானக்கேடும் ஆகும்!” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். (விடுதலை 25.7.1956)

“ராமாயண கதைப்படி ராமன் தமிழன் அல்ல! ராமன் தமிழ்நாட்டவனும் அல்ல! அவன் வட நாட்டான்! ராமாயணக் கதை தமிழனை இழிவு படுத்துவதைத் தவிர அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் ராமாயணத்தையோ ராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும் இன சுயமரியாதைக்கும் தமிழ்நாடு சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும் இழிவுமானதாகும். ராமாயண ராமன், சீதை ஆகியவர்களைப் பொறுத்த வரைக்கும் கடுகளவு கடவுள் தன்மை என்பது காணப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்றவுடன் நாட்டில் உள்ள இடங்களுக்கும் பல

ஸ்தாபனங்களுக்கும் வெள்ளையர் பெயர்களை மாற்றி இந்நாட்டவர் பெயர்களை வைத்தது போலும் வெள்ளையர் உருவங்களை பெயர்த்து அப்புறப்படுத்தியிருப்பது போலவும் தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு தமிழர்களை இழிவு படுத்தி கீழ் ஜாதி மக்களாக்கிய ஆரிய சின்னங்களையும் ஆரிய கடவுள்கள் என்பதான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த ரத்த ஓட்டம் உள்ள தமிழன் கடமையாகும்.” என்றார். (விடுதலை 27.7.1956)

மேலும் ஒரு அறிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், “ராமாயண பாத்திரங்களில் ஒன்றான ராமாயண ராமனிடம் நானும் கடவுள் லட்சணப்படி ஏதாவது கடவுள் தன்மையோ, ஒழுக்கமோ, நாணயமோ, சாதாரண அறிவோ இருக்கிறதா என்றும் இல்லாவிட்டாலும் துரோகம், வஞ்சகம், பேராசை, மதுவருந்தல், புலால் உண்ணல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்க குணங்கள் என்பவைகளாவது இல்லாமல் இருக்கிறதா என்றும் துருவித் துருவிப் பார்த்து, இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆகவே அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் கடவுளாக, வழிகாட்டியாக, பிரார்த்தனை பக்தி செலுத்தத்தக்கவனாக கருதக்கூடாது என்பதற்காகவே ராமாயண ராமனை கொளுத்துங்கள் என்கிறேன்.” என்று குறிப்பிட்டார். (விடுதலை 28.7.1956)

சென்னையில் ராமர் பட எரிப்பு போராட்டம் 22 இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு விடுதலையில் வெளிவந்தது. தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் கலந்து கொள்வார் என்றும் குறிப்பிட்டிருந்தது (விடுதலை 29.7.1956)

ராமர் பட எரிப்பு போராட்டத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் தடை விதித்ததைத் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் விளக்கம் அளித்தார்.

“நான் சர்க்கார் உத்தரவை, போலீஸ் உத்தரவை மீறக்கூடாது என்கின்ற லட்சியம் உடையவன் என்றாலும் என்னுடைய பல நாளைய எழுத்துக்கும் பேச்சுக்கும் நடத்தைக்கும் திருச்சி 21ஆம் தேதி தீர்மானத்திற்கும் பெரிய இழிவையும் சுயமரியாதைக்கு ஈனத்தையும் கொடுக்கத் தக்கதாய் இந்த உத்தரவு இருப்பதாலும் சுதந்திர ஆட்சி என்பதில் வாசம் செய்யும் மனிதனின் உரிமைக்கு கேடாய் இருப்பதாலும் இதை லட்சியம் செய்ய என் மனம் இடம் கொடுக்கவில்லை.

தமிழர்கள் இழிவையும் தன்மானமில்லா தன்மையையும் நீக்குவதில் என் உடல் பொருள் ஆகியவற்றை ஒப்புவித்து விட்டு ஆவியை ஒப்புவிக்க வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவன் நான். இந்த உண்மை நிலையில் நான் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என்றார் (விடுதலை 29.7.1956)
தமிழ்நாடு முழுவதும் பெரியார், குத்தூசி குருசாமி, கடலூர் வீரமணி (தமிழர் தலைவர்) உட்பட பல கழகத் தோழர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் ராமர் படம் எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுதும் தொடர்ந்து ராமர் பட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போகும் வீரர்களின் பட்டியல் விடுதலையில் வெளிவந்து கொண்டிருந்தது தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்த ராமர் பட எரிப்பு போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை மட்டுமின்றி தமிழ்நாடு முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி தோழர்கள் ஆங்காங்கே ஆரிய இராமனுக்குத் தீயிட்டு சிறை புகுந்தனர். முக்கிய கழக பிரமுகர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டும் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் ராமர் படத்தை எரித்து தமிழ்நாடு முழுதும் கைதாகினர்.

“ராமன் பட எரிப்புக் கிளர்ச்சியில் இமாலய வெற்றி!” என்று விடுதலை தலைப்புச் செய்தி வெளியிட்டது. “வெற்றி வெற்றி இமாலய வெற்றி!” எனத் தலையங்கம் எழுதி வெற்றியைக் கொண்டாடியது.

“கொளுத்தியது குற்றமல்ல!” என பெரியார் விடுத்த அறிக்கையில், “ராமன் கடவுள் அல்ல! ராமாயணக் கதையின் பாத்திரமான ராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியன் அல்ல! என கருதுபவர்கள் யாரும், நாட்டு நன்மையை சமுதாய சுயமரியாதையை கருதுபவர்கள் யாரும் ராமன் படத்தை கொளுத்தலாம்!” என்று எழுதினார். (விடுதலை 2.8.1956)

அதனைத் தொடர்ந்து, “நான் ஏன் ராமனை எரிக்கச் சொன்னேன்” என ஒரு தலையங்கம் எழுதினார். அதில், “இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால் ராமனின் முதல் செய்கையும் கடைசி செய்கையும் ஜாதியைக் காப்பாற்ற பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டு செத்ததே ஆகும். நம் நாட்டில் சமுதாய சீர்திருத்த வேலையோ, ஒழுக்கப் பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும் முதல் இலட்சிய செய்தியாக, ஸ்லோக சொல் காரியமாக, துவக்கக் குறியாக ராமாயணம் ராமன் அழித்து ஒழிக்கப்பட்டாக வேண்டும்!

தமிழனுக்கு இன்று தன்மானம் தான் தேவை! இது தாயினும் (மதத்தினும்) உயிரினும் (கடவுளினும்) சிறந்ததாகும். தாயை வெறுத்தாவது உயிரை விட்டாவது மானத்தை மனிதத்தன்மையை ஒழுக்கத்தை காப்பாற்றவே ராமாயண ராமனை கொளுத்தச் சொன்னேன்! என்று குறிப்பிட்டார்.(விடுதலை (3.8.1956)
அண்ணா, ‘கம்ப ரசமா? காமரசமா?’ என்றார்! ‘தீ பரவட்டும்!’ என்றுரைத்தார். சேது கால்வாய் திட்டத்திற்கு ‘இராமர் பாலம்’ என்ற கற்பனை தடையாக இருந்த போது கலைஞர், ‘இராமன் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தான்?’ என்று வினா எழுப்பினார்.

“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!” என்றொரு வழக்கு சொல் உண்டு. இந்த வரியில் ஒரு திரைப்பாடலும் உண்டு. அதைக் கேட்கும் போதெல்லாம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடைகளில் முழங்கும் ஒரு வரி நினைவில் வரும். “இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று நாங்கள் பொறுப்பற்று இருந்து விட முடியாது. இந்த நாட்டை இராவணன்கள் தான் ஆள வேண்டும் என்பார்.” அதில் எத்தனை பொருள் அடங்கியிருக்கிறது. காலம் முழுவதும் நமக்கு வரலாறு ஆரிய திராவிட போராட்டத்தைக் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. நாம் ஒரு அடி பிசகினாலும் மீண்டும் பார்ப்பனீயம் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விடும் என்பதை மனதில் கொள்வோம். எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக