பக்கங்கள்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

பாரதியின் ஜாதி வெறி - எதிர்வினை (79)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (79) : 

ஜுலை 1-15,2021

நேயன்

ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது குறித்து பாரதி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை நாம் இழந்ததனால். அறிவை அபிவிருத்தி செய்தல்; பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள், அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை (மனுதர்மத்தை) அஞ்சாது போதனை செய்தல் முதலியன பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையைப் பரிபாலித்தல் போன்ற க்ஷத்ரிய தர்மங்களையும், வியாபாரம், கைத்தொழில் போன்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்… இதுவே நம் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார். (பாரதியார் புதையல் பெருந்திரட்டு)

பாரதி ஓர் வர்ணாஸ்ரம வெறியர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய்விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை’’ என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார்.

நம் நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு “கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது என்பதுதான் அவரின் இறுதிக்காலக் கொள்கையாகும்.’’

ஜாதிப்பற்று இல்லையென்றால், ஜாதி ஒழிப்பில் முனைப்பும், ஈடுபாடும் அவருக்கு இருந்திருந்தால், தன்னை ஆரிய பிராமணன் என்று ஏன் அவர் அழைத்துக் கொள்ள வேண்டும்? அவ்வாறு அழைக்கிறார், தன் இனம் ஜாதி மேலெழ ஆர்வம் காட்டுகிறார். வர்ணாஸ்ரம தர்மம் ஒழிந்ததே; வர்ணாஸ்ரம தருமம் பின்பற்றப்படாததே!

இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர பாரதியார் கூறும் ஒரே தீர்வு என்ன தெரியுமா?

“கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது’’ என்பதே. (பாரதி தமிழ் _ பெ.தூரன்)

அப்படியென்றால் என்ன பொருள்? கலியுகத்தில் ஜாதி ஒழிந்து வருகிறது. நால் வருணம் மறைந்து வருகிறது. எல்லா வருணத்தாரும் எல்லா தொழிலையும் செய்யும் அளவிற்கு பெரும்பாலும் மாறிவிட்டனர். அதனால்தான் உலகில் பல பிரச்சினைகள்.

எனவே, மீண்டும் உலகம் வளப்பம் அடைய, தவறாது மழை பொழிய, பஞ்சம் விலக மீண்டும் கிருதாயுகம் வந்து, வர்ணாஸ்ரம தர்மம் நடைமுறைக்கு வரவேண்டும் என்கிறார். அதாவது உலக வளப்பத்திற்கும், வளர்ச்சிக்கும் வர்ணாஸ்ரம தர்மம் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்கிறார்.

பிராமணர் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார். இந்துமத சாஸ்திரங்களைப் பயின்று பரப்ப வேண்டும் என்கிறார். அவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும் என்கிறார். அவனவன் அவன் குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்கிறார். இதைவிட வர்ணாஸ்ரம, சனாதன, இந்துத்துவா வெறி வேறு என்ன இருக்க முடியும்?

மனுதர்மம் பிராமணர்களுக்கு மட்டுமே உயர்வு, நன்மை தரக்கூடியது. மற்றவர்களுக்கு இழிவையும், தாழ்வையும், கேவலத்தையும் தரக் கூடியது. அப்படிப்பட்ட மனுதர்மத்தை அஞ்சாது பரப்ப வேண்டும் என்கிறார்.

மனுதர்மம் அநீதியானது, மனித நேயத்திற்கு எதிரானது என்று நன்றாகத் தெரிந்தும், அதை அஞ்சாது பரப்ப வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார். இதன் மூலம் இவரது வர்ணாஸ்ரம வெறியும், மனுதர்மம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பும் இருந்தது நன்கு உறுதியாகிறது.

“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், “அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிர்வாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றம் மேற்படி தொழில் நிருவாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனைபேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள். இது அப்பட்டமான வர்ணாஸ்ரம முறை ஆதரவு அல்லவா?

பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, “பாரதி, நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன?’’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, “கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப் பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11:00 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப்  பொருட்படுத்தாமல் இருந்தார்.

வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் “உன் போன்ற மானங் கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று’’ என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டார்.

அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக் கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக்கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் நாராயணப்பிள்ளை.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக