பக்கங்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அவாள் கூறும் ஆன்மிகம் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர் என்பதை நிலை நிறுத்துவதே!

கலி. பூங்குன்றன்


 

ஆன்மிகம், ஆன்மிகம் என்றும் ஆன்மிக அரசியல் என்றும் சதா சாவி கொடுத்த பொம்மை போல ஆடிக் கொண்டு இருக்கிறார்களே. கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப் போல பாடிக் கொண்டிருக்கிறார்களே - அது என்ன அந்த ஆன்மிகம்!

இதுவரை அதனை விளக்கியதுண்டா?

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடந்த தக்ஷிணகாளி ஹோமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள் 'திருவாய்' மலர்ந்து சொன்ன 'வார்த்தை அமுதத்தை' திருவாளர் 'தினமணி'யார் தட்டில் வடித்துப் பிரசாத கமாக தந்துள்ளார் ('தினமணி' 8.6.2018 பக்கம்  5)

"தமிழகத்துக்கு தற்போதைய தேவை ஆன்மிக அரசியல்தான். ஆன்மிக அரசியல் யார் பேசினாலும் அவர்கள் தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அந்த  ஆன்மிகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவம் உண்டா? ஜாதிக்கு அதில் இடம் உண்டா இல்லையா? பூணூல் போடும் ஜாதி, பூணூல் போடத் தகுதியில்லாத ஜாதி என்பதற்கெல்லாம் அந்த ஆன்மிகத்தில் இடமில்லை என்ற நிலைப்பாடு உண்டா?

ஆணும் - பெண்ணும் சமத்துவம் என்று சொல்லுமா அந்த ஆன்மிகம்?

அந்த ஆன்மிகமும் -ஆத்திகமும் ஒன்றா - வேறு வேறா? ஆன்மிகம் பற்றித் தண்டோரா போடும் இந்த அக்கிரகாரத் திருமேனிகள் இடைஇடையே ஆத்திகம், நாத்திகம் என்பதையும் இதற்குள் கொண்டு வந்து திணிக்கிறார்கள் - ஊடு இழையாகப் பின்னுகிறார்கள்.

வெறும் கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கையின்மை என்பதோடு இது முடிந்து விடுகிறதா? வேதம் (சுருதி) ஸ்மிருதி, உபநிஷத்தின், இதிகாசங்கள், புராணங்களில் கூறப்படும் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற கசமாலங்கள் இந்த ஆன்மிகத்தில் உண்டா இல்லையா?

'அதெல்லாம் ஒன்றும் இல்லை - நாங்கள் கூறும் ஆன்மிகம் மனித சமத்துவ தர்மம் நிறைந்தது, ஏற்றத் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை இது சத்தியம் - இது சத்தியம்' என்று கூற முன் வருவார்களா? அப்படி வந்தால் அவற்றையெல்லாம் வெறுங் குப்பைகள் என்று கூறி அவற்றைக் கொளுத்தி சாம்பலாக்குவதற்கு ஒரு நாளைக் குறிப்பிட முன்வருவார்களா?

பிரம்மா என்ற கடவுள் தனது முகம், தோள், தொடை, பாதங்களிலிருந்து முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களைப் படைத்தான் - சூத்திரன் என்றால் ஏழு வகைப் படுவான்; அந்த எழில் ஒன்று விபச்சாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்னும் மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி 'துக்ளக்'கில் எழுதிக் கொண்டே, ஆன்மிகம் பேசினால் ஆத்திகம் பேசினால் இது அப்பட்டமான பார்ப்பனத்தனம், பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் புதுப்பிக்கும் பலப்படுத்தும் வஞ்சகம் - அயோக்கியத்தனம் என்று முடிவு செய்வது தானே அறிவுடைமை?

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கீதை சொல்லுகிறதே' (அத்தியாயம்  9 சுலோகம் 32) இது குருமூர்த்தி கம்பெனி கூறும் ஆன்மிகத்தில், ஆத்திகத்தில் ஏற்கப்படுமா - எரிக்கப்படுமா?

ஒரு சூத்திரன் வேத மந்திரங்களை காதால் கேட்க நேர்ந்திடின், அவன் காதுகளில் உருக்கிய ஈயத்தை  ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால், அவன் நாக்கை வெட்ட வேண்டும். அவன்  வேதங்களை மனப்பாடம் செய்திருந்தானேயானால் அவனைக் கோடரியால் வெட்ட வேண்டும் என்கிறதே அவாளின் கவுதம தர்ம சூத்திரம் (கவுதம சூத்திரம் 2-3-4) இவை எல்லாம் அவர்கள் கூறும் ஆன்மிகத்திற்குள் வருமா - வராதா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட்டும் (ராஜாஜி 1937இல் ஆட்சிக்கு வந்த போது 2500 பள்ளிகளையும், 1952-1954இல் 6000 பள்ளிகளையும் இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்யும் குலக்கல்விக் கொண்டு வந்ததையும் இந்த இடத்தில் நினைவு கூர்க!)

தெய்வாதீனம் ஜகத்சர்வம்

மந்த்ரா தீனம் துதெய்வதம்

தன்மந்த்ரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

என்று கூறுகிறது ரிக் வேதம் (பிரிவு 62-  சுலோகம் 10)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை - எனவே பிராமணர்களே நமது கடவுள். அவனை வழிபட வேண்டும் என்று கூறும் வேதங்கள் பார்ப்பனர்கள் கூறும் ஆன்மிகத்தில்,  ஆத்திகத்தில் இடம் பெறுமா அல்லது ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்படுமா?

இதெல்லாம் எந்தக் காலத்திலோ எழுதப்பட்டது - இப்பொழுது ஏன் புதைக்கப்பட்ட பிணத்தைக் குழி தோண்டி வெளியில் எடுக்கிறீர்கள் என்று கேட்டால் - அவர்களின் லோக குருவைக் கூண்டில் ஏற்ற வேண்டியிருக்குமே.

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் பார்ப்பன சங்கத்தின் ஏற்பாட்டில் "அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தாரே -

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான்  நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமன் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும் கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம் தான். அந்தணன் தான் முதலில்" ('நக்கீரன் 15.11.2002)

அவாள் சொல்லும் ஆன்மிகத்தில் இந்த சங்கராச்சாரியாரை கை கழுவப் போகிறார்களா? அல்லது கரம் கூப்பி 'ஹர ஹர சங்கரா' கோஷம் போடப் போகிறார்களா? (ஒரு கொலை வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, இந்த விஷயத்தில் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்று 'துக்ளக்' எழுதியதை நினை வூட்டுகிறோம்.) இரட்டை வேடம் போடாமல் இரட்டை நாக்கால் பேசாமல் பதில் சொல்லட்டும் - பார்ப்பன குருமூர்த்திகள்.

வேதம், புராணம், இதிகாசங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றுமே மனிதனைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தியோ கூறு போட்டோ, அவர்களை ஏறி மிதித்து நாட்டாண்மை செய்வதுதான் பார்ப்பன மேலாண்மை!

வேத, புராண, இதிகாசங்களைக் கிழித்தெறிந்து மனித தர்மம் பேசப் போகிறார்களா? இல்லை -இல்லை - வேதங்களையும், இதிகாச புராணங் களையும் எங்களால் கைவிட முடியாது என்று கறார் பேசப் போகிறார்களா?

சரி, நாத்திகம் நாத்திகம் என்று நாக்கைச் சுழற்றுகிறார்களே, இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டா இல்லையா?  உண்டு என்று அவர்களே சொல்லுவதுண்டே! மேலும் நாத்திகம் என்றால் என்ன?

அதற்கு விளக்கம் சொல்லுவதைவிட அவாளின் ஜெகத்குருவை விட்டே அதுவும் 'மகா பெரியவாளை' விட்டே பதில் கூறச் செய்வோம்.

"நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்லுகிற நிதீச்வர வாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்"

"அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படி யானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்"

"வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கை யாகவும் இருந்திருக்கிறது - ஈஸ்வர பக்தி இல்லா மலிருப்பதில்கூட அல்ல"  இப்படி சொல்லியிருப்பது சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (தெய்வத்தின் குரல் இரண்டாம்  தொகுதி பக்கம் 407-408).

கடவுள் மறுப்பு நாத்திகம் இல்லை - வேத மறுப்புதான் நாத்திகம் என்கிறாரே அவர்களின் மகா பெரியவாள்.

ஆத்திகம் - நாத்திகம் - பேசும் அன்பர்கள் இப்பொழுது எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறார்கள்?

கடவுள் இல்லை என்ற சொல்லித் தொலை யட்டும், கடவுள்  ராமனை செருப்பால்கூட அடிக்கட்டும், பிள்ளையாரை நடு வீதியில் போட்டு உடைக்கட்டும் - அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை - அப்படி கடவுளை அவமதிக்கிற வர்களும் ஆத்திகர்கள்தான்! அதே நேரத்தில் வேதங்களில் கை வைக்கக் கூடாது - எதிர்க்கக் கூடாது. அப்படி எதிர்ப்பது நாத்திகம் என்றால் இதன் பொருள் என்ன? வேதங்கள்தான் பிறப்பின் அடிப்படையில் பிராமணன் பிரம்மாவின் நெற் றியில் பிறந்தவன் - பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 8 - சுலோகம் 413) இந்த சுகமான ஆதிக்கம் பார்ப்பனர்களுக்கு இருப்பதால் வேதங்களை யாரும் எதிர்க்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார் என்று நினைக்க வேண்டாம்; அவாளின் மனுதர்ம சாஸ் திரங்கள் சொல்லியிருப்பதைத்தான் அவர்கள் வழி மொழிகிறார்கள்.

வேதம், தரும சாஸ்திரம், இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன் ஆகின் றான் (மனுதர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 11).

பெரும்பாலான மக்களை விபச்சாரி மக்கள் என்று சொன்னாலும், அதற்குக் கட்டுப்பட்டு 'சரணம் சாமி' என்று சொன்னால் தான் நாம் ஆத்திகராக இருக்க முடியும் - அவர்கள் கூறும் ஆன்மிகப் பந்தியில் இடமும் கிடைக்கும் - அப்படித் தானே! அது எப்படி? என்ன நியாயம்? என்று தர்க்கம் செய்யக் கூடாது என்று இந்த 2018ஆம் ஆண்டிலும் கூறும் ஒரு கும்பல் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆணவக் கொழுப்பு அவர்களின் உள்ளங்கால் முதல் உச்சித்தலைவரை படம் எடுத்து ஆடும்!

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் அவர்கள் கூறும் ஆன்மிகம் - ஆத்திகம் என்ப தெல்லாம் பழைய வருண தருமமுறை பிராமணர் - சூத்திர பேதங்களை, சிந்தாமல், சிதறாமல் அப்படியே நிலைக்கச் செய்வதுதான்.

இன்று "ஆஸ்திகம்" என்பது உயர்ஜாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்?

- தவத்திரு குன்றக்குடி அடிகளார் விடுதலை 19.2.1971

"எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கிறது"

- தந்தை பெரியார், (குடிஅரசு 7.9.1930

- விடுதலை நாளேடு, 13.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக