பாரதியார் எழுதியது என்ன? என்ற கேள்விக்கு திருவாளர் குருமூர்த்தி அய்யர் என்ன சொல்ல வருகிறார்?
கேள்வி: ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய பாரதியின் வாக்கு, பொய்யாகி விட்டதே?
பதில்: எப்போதாவது இதைப் பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன். உங்கள் கேள்வி இதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. உண்மையில் பாரதியார், சாதிகள் இல்லையடி பாப்பா' என்று எழுத வே இல்லை. 'சாதி பெருமை இல்லை பாப்பா, அதில் தாழ்ச்சியுயர்ச்சி செய்தல் பாவம்' என்றுதான் 1913இல் அவர் துவங்கிய 'ஞானபாநு' (1915- மார்ச், பக்கம்.287-88) இதழில் எழுதினார். அது நெல்லையப்பர் பதிப்பில் (1917இல்) சாதிகளில்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சியுயர்ச்சி சொல்லல் பாவம்' என்று மாறி விட்டது. இந்த விவரங்களை பாரதியாரைப் பற்றி ஆய்வு செய்து, தன் வாழ் நாளையே அர்ப்பணித்த சீனி. விஸ்வநாதனின் 'காலவரிசையில் பாரதி படைப்புகள்' - (அல்லயன்ஸ் பதிப்பகம்) என்கிற தலைப்பில், 16 - தொகுதிகளாக பல ஆயிரம் பக்கங்களில் வெளிவந்த பாரதியின் களஞ்சியத்தில், 9ஆவது தொகுதியில் 148- ஆம் பக்கத்தில் இந்த உண்மை விவரம் கூறப் பட்டிருக்கிறது. எனவே பாரதியார் ஜாதியில் பெருமை ஒன்றும் இல்லை. அதை வைத்து உயர்ச்சி தாழ்ச்சி செய்யக் கூடாது' என்றுதான் எழுதினார். ஜாதிகள் இல்லை என்று எழுதவில்லை என்பதே உண்மை. (துக்ளக், 22.8.2018 - பக்கம் 15)
ஜாதி பெருமை இல்லை பாப்பா என்றுதான் பாரதியார் எழுதி னாரே தவிர, ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதவில்லை என்று குருமூர்த்தி அய்யர் எழுதியிருப்பது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
ஜாதிகள் இருக்க வேண்டும். அவை ஒழிக்கப்பட கூடாது என்ற புள்ளியில் குருமூர்த்தி அய்யரும், சுப்பிரமணிய பாரதி அய்யரும் ஒன்றாக சங்கமமாகி இருப்பதைக் கவனிக்க வேண்டும்.
இதில் இன்னொன்றும் முக்கியமானது. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லக் கூடாது என்று சொல்லவில்லை - பாவம் என்றுதான் சொல்லுகிறார். ஒரு பிரச்சினையை கருத்தியல் அடிப்படையில் அழுத்திச் சொல்ல வேண்டுமே தவிர, பாவ - புண்ணியம் என்ற அடிப்படையில் சொல்லுவது - அய்யோ பாவமாகும்.
ஜாதிப் பற்றிய பார்வையில் பாரதி எங்கே நிற்கிறார்?
வேதமறிந்தவன் பார்ப்பான் -பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதிநிலை தவறாமல் - தண்ட நேமங்கள்
செய்வான் நாய்க்கன், பண்டங்கள் விற்பவன்
செட்டி - பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை - தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை - இந்த
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்ததால்
வேலைத் தவறி சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிட சாதி
சாதிப் பிளவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
(பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே- பக்கம் 5-6)
என்று பாடுகிறார்.
எந்தெந்த ஜாதிக்காரன் என்னென்ன தொழிலை செய்ய வேண்டும் என்பது பார்ப்பனீய வேதத்தின் சாரமாகும். இன்னும் புரியும்படிச் சொன்னால் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தையொத்தது. இந்த நாலு வருணத்தில் உள்ளவர்கள் அந்தந்த ஜாதிக்குரிய தொழிலை செய்யாவிட்டால் மானிட ஜாதி என்றோ ஒழிந்துவிடும் என்று பாரதி எழுதுகிறார் என்றால் இது பச்சைப் பார்ப்பனத் தனம் அல்லாமல் வேறு என்னவாம்? குருமூர்த்தி அய்யரும் பாரதியை சரியாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லிப் பாராட்டலாம்!
- விடுதலை ஞாயிறு மலர், 18.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக