பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

நூல்:     டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும்         எழுத்தும்



நூல்:     டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும்         எழுத்தும்

தமிழில்:  டாக்டர் எஸ்.பெருமாள் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி

விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்    பிரைவேட்          லிமிடெட், 136, அண்ணா சாலை,              சென்னை - 600002.

விலை: ரூ.30/-           பக்கங்கள்: 458
சீர்திருத்தக்காரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும்

தமது போதனையில் புத்தர் கொண்டு வந்த மாபெரும் சீர்திருத்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது காலத்தில் ஆரிய நாகரிகம் சீரழிந்த காட்சியைக் காண்பது மிகத் தேவையாகும்.

அவர் காலத்தில் சமூக, அரசியல், ஆன்மிகத் துறைகளில் வரம்பு மீறிய ஒழுக்கக் கேட்டில் ஆரிய இனம் மூழ்கித் திளைத்தது.

சமூகச் சீர்கேடுகள் சிலவற்றைக் குறிப்பிடும் வகையில் சூதாட்டத்தை இங்குக் கூறலாம். மது அருந்துவது போல் சூதாட்டமும் ஆரியரிடையே பரவிக் கிடந்தது.

மன்னர்கள் அனைவரும் தமது அரண்மனைகளில் சூதாடுவதற்கென்றே அரங்குகளைக் கட்டி வைத்தனர். தம்மோடு சூதாடுவதற்கென்றே அந்தக் கலையில் தேர்ந்தவர்களைத் தமது பணியாளர்களாக மன்னர்கள் வைத்துக் கொண்டிருந்தனர். விராட தேசத்து மன்னன் இவ்வாறு தன்னிடம் கங்கன் என்னும் சூதாட்ட விற்பனனைப் பணியாளனாகக் கொண்டிருந்தான். மன்னர்களுக்குச் சூதாட்டம் ஒரு பொழுதுபோக்காக மட்டும் இருந்ததில்லை, பெரும் பொருளை ஈடுவைத்துச் சூதாடினர். தமது நாடுகள், தமது உற்றார் உறவினர், தம்மைச் சார்ந்தோர், அடிமைகள், பணியாளர்கள் ஆகியோரை வைத்துச் சூதாடினர்.

நளன் புஷகரனுடன் ஆடிய சூதாட்டத்தில் தனக்குரிய அனைத்தையும் ஈடாக வைத்து எல்லாவற்றையும் இழந்தான். சூதாட்டத்தில் தன்னையும் தன் மனைவி தமயந்தியையும் ஈடுவைத்து ஆடாதது ஒன்றுதான் அவன் செய்தது. இந்தச் சூதில் தோற்று அவன் காட்டிற்குச் சென்று இரந்துண்டு வாழ்ந்தான்.

சூதாட்டத்தில் பல மன்னர்கள் நளனையும் மிஞ்சியவர்கள். பாண்டவர்களின் மூத்தோனான தருமன் சூதாடித் தனக்கும் தம்பிகளுக்கும் மனைவியான துரோபதை ஆகியோர் உட்பட அனைத்தையும் இழந்ததை மகாபாரதம் கூறுகின்றது. ஆரியர்கள் சூதாடுவதை ஒரு கௌரவமாகவே கருதினர். சூதாட அழைப்பதை ஏற்க மறுப்பது மானம், மரியாதைக்கு இழுக்கு என்றே கருதினர். சூதாட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட போதிலும் தருமர் சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பேரழிவைத் தந்த விளைவுகளைச் சந்தித்தார். தன்னைச் சூதாட அழைத்ததாலேயே தான் அதற்கு இசைந்ததாகக் கூறியது அவர் அளித்த சமாதானம். மரியாதைக்குரியவராக இருந்த போதிலும் அவரால் மறுத்துரைக்க முடியாமற் போனது.

இந்தச் சூதாட்டப் பழக்கம் மன்னர்களோடு நின்றுவிடவில்லை. குடிமக்களிடமும் இந்தப் பழக்கமிருந்தது, ஏழை ஆரியனொருவன் தான் சூதாடி அழிந்துபோனதை எண்ணிப் புலம்புவதாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌடில்யரின் காலத்தில் சூதாட்ட இல்லங்கள் மன்னரின் அனுமதியுடன் நடைபெற்றன.

மன்னன் சூதாடுமிடங்களுக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் மிகுந்த வருவாய் ஈட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

மது அருந்தும் பழக்கமும் ஆரியரிடையே பெருவழக்காக இருந்தது. சோமபானம், சுராபானம் என மது இருவகைப்பட்டது. சோமபானம் யாகங்களுக்குப் பயன்பட்டது. சோமபானம் அருந்துவது ஆரம்ப காலத்தில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகியோருக்கு மட்டுமே உரியது. பின்னர் அந்த உரிமை பிராமணர், க்ஷத்திரியர் ஆகியோருக்கு மட்டுமே என்றாயிற்று. வைசியர் இதிலிருந்து விலக்கப்பட்டனர். சூத்திரர் மது அருந்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சோமபானம் தயாரிக்கும் முறை பிராமணர்க்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகக் காப்பாற்றப்பட்டது. சுராபானத்தைப் பிராமணர் உட்பட அனைவரும் அருந்தினர்.

பெண்களும் மது அருந்தும் வழக்கமுடையவர் என்பது பெரிதும் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். எடுத்துக்காட்டாக விராடனின் மனைவி சுதேஷனை தன்னுடைய பணிப்பெண் சைரந்திரியைக் கீசகனின் அரண்மனைக்கு அனுப்பித் தனக்கு சுராபானத்தைக் கொண்டு வரச் சொன்னதைக் குறிப்பிடலாம். அரசர்களின் தேவியர் மட்டுமல்லாமல், பிராமணப் பெண்கள் உட்பட அனைத்து வருணங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் மது அருந்துதல் இயல்பான பழக்கமாக இருந்தது.

மது அருந்துவதிலும் நடனமாடுவதிலும் ஆரியப் பெண்கள் ஈடுபட்டதைக் கௌஷீதகி கிருஹ்ய சூத்திரம் 1:11_12இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “விதவைகளல்லாத நான்கு அல்லது எட்டுப் பெண்கள் திருமணத்திற்கு முன்னாள் இரவு மதுவும் உணவும் அருந்திய களிப்புடன் நான்கு முறை நடனமாட வேண்டும்.’’

ஆரிய சமூகத்தில் வர்க்கப் போராட்டமும் வர்க்க தாழ்ச்சியும் தெள்ளத் தெளிவாகக் காணப்பட்டன. அந்தணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவாக மக்களை ஆரிய சமூகம் அங்கீகரித்தது. இவை ஒன்றோடு ஒன்று சேரும் பிரிவினர் அல்லர்; மாறாக, ஒன்றின் மேல் ஒன்று அமைந்தவையாக சமூக உறவில் கருதப்பட்டன. மேல் அல்லது கீழ் என்பதால், இவற்றிடையே போட்டியும் காழ்ப்புணர்ச்சியும் தலைதூக்கின. இவை பகைமைக்கும் வழி கோலின. அந்தணர், க்ஷத்திரியர் எனும் உயர்குலத்தவரிடையே நிலவிய பகைமையுணர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

கடவுளுக்குப் பதிலாகத் தன்னை வணங்கி வழிபட வேண்டும், தனக்குப் பூசை புனஸ்காரம் செய்ய வேண்டும் என்பதே மன்னன் வீணனுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த தகராறு. ஒரு க்ஷத்திரிய மன்னன் பிராமணர்களுடைய சொத்தைப் பறிமுதல் செய்ய முடியுமா என்பதே புரூரவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த விவகாரம். ஒரு க்ஷத்திரிய மன்னன் ஒரு பிராமணனை எடுபிடி வேலை செய்யும்படிக் கட்டாயப்படுத்த முடியுமா என்பதே நகுஷனுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த சச்சரவு.

ஆரியரின் இன்றைய வழித் தோன்றல்களுக்கு அன்றைய ஆரிய சமூகத்திலிருந்த பாலியல் ஒழுக்கக்கேடு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். புத்தருக்கு முற்பட்ட ஆரியரிடையே இன்று நம்மிடையே வழக்கில் இருந்துவரும் பாலியல் அல்லது மணஉறவு பற்றிய கட்டுப்பாடுகள் போன்றவை அன்று இருந்ததில்லை.

ஆரியரின் புராண மரபின்படி பிரம்மா படைப்புக் கர்த்தா ஆவார். பிரமனுக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவர்களில் ஒரு மகனான தக்ஷன் தன்னுடைய சகோதரியை மணந்தான். சகோதரனும் சகோதரியுமான இவர்களுக்குப் பிறந்த பெண் மகளிரை பிரமனின் மகன் மரீசிக்குப் பிறந்த காசிபன் மணந்தான். சிலரைப் பிரமனின் மூன்றாவது மகனான தருமன் மணந்தான்.

ரிக் வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின்படி யமி, தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள்; இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள்.

அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்தியபோது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான்.

ஒரே பெண் பல ஆண்களைக் கணவராகக் கொள்ளும் விநோதமானதொரு முறை அவர்களிடையே வழக்கத்திலிருந்தது. ஒரே பெண்ணை இரத்த உறவுடைய பலர் கூடும் பல கணவர் முறை ஆரியர்களிடையே இருந்தது. தஹா பிரசேத்னியும் அவனுடைய மகன் சோமனும், சோமனின் மகள் மரீஷையைக் கூடினர்.
பாட்டன் தன் பேத்தியை மணந்து கொண்டதற்கான சான்றுகளுக்கும் குறைவில்லை. தக்ஷன் தன் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான். அந்தத் திருமணத்தின் விளைவாகப் பிறந்தவரே பிரசித்தி பெற்ற நாரதர். தௌகித்திரன் தன்னுடைய 27 பெண்மக்களைத் தன் தந்தை சோமனுக்கு அளித்தான்.
அவர்களுக்குப் பிள்ளைகள் பலர் பிறந்தனர்.

ஆரியர்கள், பலரும் காணும் வகையிலும், வெட்ட வெளிகளிலும் பெண்களோடு கூடுவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். வாமதேவ்ய விரதம் என்னும் ஒரு சமயச் சடங்கினை யாக பூமியில் ரிஷிகள் நடத்தும் போது அந்த வழியாகப் போகும் பெண்ணொருத்தி தன் விருப்பத்தைத் தெரிவித்தால் அவளது விருப்பத்தை நிறைவேற்ற அந்த யாக பூமியிலேயே ரிஷிகள் அவளோடு கூடுவர். இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறலாம். பராசர முனிவர், சத்தியவதியோடும், திர்கதாபையுடனும் இத்தகைய உறவு கொண்டவர். அயோனி என்ற சொல்வழக்கின் மூலம் இத்தகைய பழக்கம் நிலவியதை அறியலாம். அயோனி என்னும் சொல்லுக்குக் களங்கமற்று, தூய்மையாகக் கருவுறுதல் என்று பொருள்.

தம் மனைவியரைச் சிறிது காலத்திற்கு அயலாருக்கு வாடகைக்கு விடும் வழக்கமும் ஆரியரிடையே இருந்துவந்தது. மாதவியின் கதையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். யயாதி மன்னன் தன் மகள் மாதவியைக் குரு காலவருக்குத் தானமாக அளித்தான். காலவ முனிவரோ மாதவியைக் குறிப்பிட்ட காலங்களுக்கு மூன்று மன்னர்களுக்கு அளித்தார். பின்னர் அவளை விசுவாமித்திரருக்கு மணமுடித்து வைத்தார். ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை மாதவி அவருடன் இருந்தாள். பின்னர் காலவ முனிவர் அவளை அழைத்துச் சென்று மீண்டும் அவளுடைய தந்தை யயாதிக்கே அளித்தார்.

இவ்வாறு மகளிரை மாற்றாருக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கும் வழக்கத்தைப் போலவே சிறந்த ஆடவர் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் பழக்கமும் ஆரியரிடையே இருந்தது. குடும்பம் என்பது அவர்களிடையே பிள்ளைகளைப் பெருக்குவது என்றே இருந்தது. ஆரியர்களிடையே வலிமையிலும் அந்தஸ்திலும் உயர்ந்தவர்களாக விளங்கிய பிரிவினர் தேவர்கள் எனப்பட்டனர். சிறந்த பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தேவர்களோடு கூடுவதற்குத் தம் மகளிரை ஆரியர் அனுமதித்தனர். ஆரியப் பெண்களை இவ்வாறு முதலில் சுகிப்பது தங்களுடைய உரிமை எனத் தேவர்கள் கருதிய வழக்கம் பரவலாக இருந்தது.

இந்து திருமணங்களில் இடம் பெற்றுள்ள சப்தபதி சடங்கும் மணமகள் மணமகனுடன் ஏழு அடியெடுத்து வைத்து நடத்தல் என்னும் சடங்காகும். இதற்கு அவசியமென்ன? தேவர்கள் அந்தப் பெண்ணை விடுவிப்பதற்குத் தமக்கு அளிக்கப்படும் நஷ்ட ஈடு போதுமானதல்ல என்று கருதினால், அந்தப் பெண் ஏழாவது அடியெடுத்து வைப்பதற்குள் தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது. மணப் பெண் ஏழாவது அடியெடுத்து வைத்த பின்பு அவள் விடுதலை பெறுகிறாள். அதன் பின்பே மணமகன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள முடியும்; தேவர்களின் தொல்லையோ, தடைகளோ இல்லாமல் அவர்கள் கணவன், மனைவியராக வாழ முடியும்.

பெண்களின் கற்பு சம்பந்தமான விதிகளேதும் அச்சமயம் இருக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண் எவருடனாவது கூடிப் பிள்ளைகளும் பெற்றுக் கொள்ளலாம். கன்யா என்னும் சொல்லின் வேர்ச்சொல்லுக்குரிய பொருளே இதற்குச் சான்றாகிறது. கன்யா என்னும் சொல்லின் வேர்ச் சொல்லான கம் என்பது ஒரு பெண் தன்னை எந்த ஆடவனுக்கும் உரியவளாக்கும் சுதந்திரமுடையவள் என்னும் பொருளுடையது. எனவே பெண்கள் முறையான திருமணத்திற்கு முன்பு எந்த ஆடவனுடனும் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டனர் என்பதற்குக் குந்தியும், மச்சியகந்தியும் சான்றாக உள்ளனர். பாண்டுவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் குந்தி பலருடன் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாள். மச்சியகந்தி பீஷ்மரின் தந்தையான சந்தனுவை மணப்பதற்கு முன் பராசரனுடன் கலவி செய்தவள்.

ஆரியர்கள் விலங்குகளையும் புணரும் பழக்கமுடையவர். தாமரிஷி பெண் மானுடன் கூடிய கதை யாவரும் அறிந்தது. சூரியன் பெண் குதிரையுடன் கூடியது இன்னுமொரு எடுத்துக்காட்டு. இவையெல்லாவற்றையும்விட வெறுக்கத்தக்க உறவு அசுவமேதயாகத்தில் பெண்டிர் குதிரையுடன் உறவு கொள்வதுதான்.
யாகம் அல்லது வேள்வி அல்லது பலி என்பது ஆரியரின் மதத்தில் மிகவும் முக்கியமானதாக இடம் பெற்றிருந்தது. தெய்வீகத் தன்மையை அடைவதற்கும் கடவுளரைக் கட்டுப்படுத்தவும் ஒரு வழியாக இத்தகைய யாக வேள்வி பயன்பட்டது. பாரம்பரியத்தின்படி மொத்தம் 21 பலி ஒவ்வொரு பிரிவுக்கும் ஏழு வீதம் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

மேலுலகப் பேரின்பத்தை அடைவதற்கு மட்டுமின்றி, இந்தப் பூமியில் பலவற்றைப் பெறுவதற்காகவும் பலி தரப்பட்டது. எதையும் எதிர்பாராமல் பலி தரவேண்டும் என்னும் கருத்து நிலவவில்லை.

பலன் எதிர்பாராத காணிக்கையைப் பிராமணீய இந்தியா அறியாது. எந்தத் தெய்வத்துக்குப் பலி தரப்படுகிறதோ அந்தத் தெய்வத்திடமிருந்து ஏதேனும் எதிர்பார்த்தே இது செய்யப்படுகிறது பலிகள் பின்வரும் மந்திரத்துன் தொடங்குவன: “நீ இதை எனக்குக் கொடு; நான் உனக்கு இதைத் தருவேன்; எனக்கு நீ இதை அளிப்பாயாக; இதை நான் உனக்கு அளிப்பேன்’’.

பணம் பெறுவதற்காகத்தான் இத்தகைய பலியிடும் சடங்குகளை வேதியர் நடத்திக் கொடுத்தனர். பசுக்கள், குதிரைகள், தங்கம், உயர்ந்த ஆடைகள் முதலானவை கட்டணமாகச் செலுத்தப்பட்டன. கட்டணம் வாங்குவதில் வேதியர் கண்ணுங் கருத்துமாய் இருந்தனர். இத்தகைய கட்டணம் ஆயிரம் பசுக்கள் என்ற அளவுக்கும் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்தல் _ அதாவது ஆயிரம் பசுக்களைக் கொடுத்தால் _ அவனுக்கு மோட்சப் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்று கூறப்பட்டது. மேலோகத்தில் உள்ள கடவுளர், ஒருவருக்கொருவர் உதவும் போது, பரிசுப் பொருள் கேட்பதாகக் கதைகள் கூறுகின்றன. புரோகிதர் இதைப் பயன்படுத்திக் கடவுளுக்குத் தேவைப்படுவதாகக் கூறி, உரிமையாகவே இவ்வாறு கேட்கத் தொடங்கினார்.

மனிதபலி மிகுந்த செலவு செய்வதற்குரியது. இவ்வாறு பலியாக வேண்டியவன் புரோகிதனாகவோ, அடிமையாளாகவோ இருக்கக் கூடாது; க்ஷத்திரியனாகவோ வைசியனாகவோ இருக்க வேண்டும். ஒரு மனிதனின் விலை ஆயிரம் பசுக்களாகும். பலியிடப்பட்ட மனிதரைப் பலியிடுவோர் தின்ன வேண்டும் என்னும் பழக்கமும் இருந்தது. அடுத்தபடியாக, குதிரை இடம் பெற்றிருந்தது. இதற்கும் அதிகம் செலவாகும். இந்தியாவை வெற்றி கொள்வதற்கு ஆரியர்களுக்கு குதிரைகள் மிகவும் தேவைப்பட்டன. பலிதரும் ஆடவனின் மனைவியுடன் பலியாகும் குதிரை உடலுறவு கொள்ள வேண்டும் என்பது மகா கொடூரம்.

விவசாயத்திற்குப் பயன்பட்ட பசுக்களும் காளைகளும்தான், மிக அதிக அளவு பலி தரப்பட்ட கால்நடைகளாகும்.

பௌத்த இலக்கியத்தின் வாயிலாக, கசாப்புகாரர்களாகச் செயல்பட்ட அந்தணர் பற்றி அறிய முடிகிறது. சுத்த நிபாதத்தில் வருணித்துள்ளபடி கோசல நாட்டு மன்னன் பசேன்தி கொடுத்த பலியின் விவரம் இது: 500 எருது, 500 காளை, 500 பசுக்கள், 500 செம்மறி ஆட்டுக்குட்டி ஆகியவை பலியிடுவதற்காகக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. அந்தணர் இட்ட கட்டளையை, கண்ணில் நீர் ததும்ப, அரசனின் ஏவலாட்கள் நிறைவேற்றினார்களாம்.

இது படுகொலை என்றாலும், கேளிக்கைக் களியாட்டமாகவும் இருந்தது. வறுத்த இறைச்சியை உண்டு, மது அருந்தினர். அந்தணர் சோமபானமும் சுராபானமும் குடித்தனர். மற்றவர்கள் சுராபானம் குடித்தனர். பிறகு, சூதாட்டம். தவிர, திறந்த வெளியில் உடலுறவு கொண்டனர். பலி என்பது ஒழுக்கக் கேடாக மாறிவிட்டது; மதத்துக்கும் அதற்கும் சிறிதளவு கூடத் தொடர்பே இல்லை.

நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்தம் மதம் இருந்தது. சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும், ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரியர் மதம் ஆகிவிட்டது. ரிக்வேதத்தில் காணப்படும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்.

இலட்சக்கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன. அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும், அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும் அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தனர்.

கொடூரமான எண்ணங்களின், கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன; நாணயமான _ ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரிய மதம் எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது. புத்தர் பிறந்தபோது இருந்த ஆரிய சமூகத்தின் நிலை இதுதான். இதை மாற்ற புத்தர் முயற்சி மேற்கொண்டார்.

-  உண்மை இதழ், 1-15.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக