பக்கங்கள்

செவ்வாய், 5 மே, 2020

அயோத்திதாசர்



சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் தமிழ் என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்ளுவ நாயனார்  பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.

தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து  விடுதலை தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல சுரோனிதம் கலப்பறியாது என்று குறிப்பிட்ட போது, அக்கூட்டத்தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றார்.

அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே, அவர்கள்யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்? என்று கேட்டார் அயோத்திதாசர். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.

தொடர்ந்து, பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்? என்று அடுத்து வினாக்களைத் தொடுத்தார்.

திருதிருவென்று விழித்தார் சாஸ்திரிவாள். ஏன்பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஆனரபிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராகவாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தினர்.  கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.

அதுமட்டுமல்ல இன்றும் பார்ப்பனர்கள் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மையில்தான் உள்ளனர்.

இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் தமிழினத் தன்மான உணர்வோடு உஞ்சவிருத்திக் கூட்டத்தை  உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!
- கவிஞர் கலிபூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக