பக்கங்கள்

சனி, 13 ஜூன், 2020

ஜெயேந்திரர் கம்பி எண்ணியதும் கர்மப் பலன்தானா !


மின்சாரம்
'நீ உன் தாய் வயிற்றில் பத்து மாதம் இருந்து தானே பிறந்தாய் ஏன் கீழ் ஜாதி?'
"அது எனது கர்மபலன் சாமி!"
"பார்ப்பானும் பத்து மாதம் தாயின் வயிற்றிலிருந்து தானே பிறந்தான் - அவன் ஏன் உயர் ஜாதி - பிராமணன்?
"அது அவன் கர்ம பலன்சாமி"
"நீ ஏன் உழைத்து உருக்குலைந்து போனாய்?"
"அது என் தலை எழுத்து அய்யா! பகவான் பிண்டம் பிடித்துப் போடும் பொழுதே எங்கள் தலையில் எழுதி விட்டானே!' அதனை மாற்றி எழுதிட முடியுமா அய்யா?"
"அவன் உழைக்காமல் உப்பரிகையிலே வாழ்கிறானே - அது எப்படி?"
"அதற்குப் போன ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் - மகராசன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்"
"நீ ஏன் படிக்கவில்லை?"
"எல்லோரும் படிக்க முடியுமா? படிப்புன்னா - அதற் காகப் பிறந்தவன் பிராமணன் - அவன் பிறந்த நேரம்!"
"நீ ஏன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓலைக் குடிசையில் வாழ்கிறாய்?"
"எல்லாம் அவன் செயல் - அதை யாரே மாற்றிட முடியும்?"
- இப்படி எதற்கெடுத்தாலும் தன் தாழ்மைக்கும், இழி நிலைக்கும் தாங்களே தர்ம - நியாயம் பேசும் விசித் திரத்தை வேறு எங்காவது கண்டதுண்டா?
பாதிக்கப்பட்டவனே அந்தப் பாதிப்புக்கான நியாயத்தைப் பதிலாகக் கூறும் பரிதாபத்திற்குரிய பஞ்சமர்களை எந்த நாடு கண்டது?
இந்தக் கீழ்ஜாதி மனப்பான்மையை எப்படி மாற் றுவது?
வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து கெட்டவனை மேலே தூக்கி விடுவது எப்படி?
உழைத்தும் உருக்குலைந்து கிடக்கும் இந்த மக்களை உன்னத நிலைக்குக் கொண்டு வருவது எப்படி?
இப்படி சிந்தித்தவர் புத்தர் - புத்தருக்குப்பின் ஆரியர் களின் முன் ஜென்மம், தலைவிதி, கர்மபலன் என்னும் சதிக் காட்டின் வேரை வெட்டிவீழ்த்தியவர்தான் வெண் தாடி வேந்தர் பெரியார்.
நீ கீழ் ஜாதியல்ல - ஜாதி என்பதற்கு அடையாளம் என்ன? அவன் உயர் ஜாதிக்காரனும் அல்ல. பிர்மா முகத்தில் அவன் பிறந்தவன் என்று சொல்லுவதெல்லாம் அசல் பித்தலாட்டம்.
பிர்மா ஆண் கடவுளா - பெண் கடவுளா? ஆண் கடவுளின் முகத்தில் ஒருவன் பிறக்க முடியுமா? இல்லை இல்லை பிர்மாவின் முகத்தில்தான் பிராமணன் பிறந்தான் என்றால் அவன் முகத்தை ஓவியமாகத் தீட்டினால் அது எப்படி இருக்கும்?
விதியை நம்பாதே. அது வீணர்களின் கூற்று. கர்ம பலன் என்பது கயவர்களின் ஏற்பாடு.
ஒரு பொழுதும் உனக்கு உரிமை உணர்ச்சி வந்து விடக் கூடாது என்பதற்காக வந்தேறிகள் செய்த வடிகட்டின பித்தலாட்டம். கர்மவினை என்பதெல்லாம் உன் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக் கருவி.
உன் தலையில் எழுதியவன் யார்? எந்த மொழியில் எழுதினான்? அவன் எழுதியது உண்மை என்றால், அந்த எழுத்துக்கள் இப்பொழுது எங்கே - எங்கே! என்று எண்ணற்ற கேள்விக் கணைகளை ஏவி ஏவி ஆமைகளாய் கிடந்த மக்களை அரிமாவாக ஆர்ப்பரித்து எழச் செய்ய, ஊமைகளாகக் கிடந்தவர்கள் மத்தியில் உரிமைக் கனலைத் தட்டி எழுப்பினார். அறிவார்ந்த வினா வெடி குண்டுகளை வீசி வேதியக் காட்டை எரித்துச் சாம்பலாக்கினார். வீழ்ந்துபட்ட மக்களை வேங்கைகளாய்ச் சிலிர்த்து எழச் செய்தன் விளைவு - உழைத்தவன் உரிமைச் சங்கு ஊதுகிறான். உழைப் பாளியைப் பங்காளியாக்கு என்று உரத்தக் குரலில் முழங்குகிறான்.
கல்வியைக் கொடு - கை நாட்டுப் பேர்வழிகளாக நாங்கள் இருந்தது போதும் போதும் என்று கர்ச்சனை புரிந்து பஞ்சமர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள் சூத்திரர்கள் ஆட்சி செய்தால் அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசு போல் அழிந்து விடும் என்னும் சாத்திரக் குப்பைகளைச் சாம்பலாக்கி -
"சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி இது - இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை" என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் கேட்டதே!
ஆதி திராவிடர் அய்.ஏ.எஸ். ஆகி விட்டாரே! ஏன் குடியரசு தலைவராக ஆகி விட்டாரே!
குப்பன் மகன் சுப்பன் குளு குளு காரில் வந்து இறங்குகிறாரே!
பேயென்று இழித்துப் பேசப்பட்ட பெண்கள் இன்று, பேண்ட் - சூட் அணிந்து ஆணா, பெண்ணா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்சியினைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிய நிலைக்கு வந்து விட்டார்களே!
பார்ப்பனர்களின் தனிக் குத்தகையாக்கிக் கொண்ட கோயில் கருவறைக்குள்ளும் கறுப்பர்கள் நுழைந்து அர்ச்சனை செய்யும் நிலை ஏற்பட்டு விட்டதே. அடுத்துப் பெண்களும் அர்ச்சகர்.உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனரே!
பஞ்சகச்சம் கட்டி திறந்த பூணூல் மேனியுடன் அவிட்டுத் திரியுடன் வீதிகளில் வீறு நடைபோட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டதே! அப்படி இப்பொழுது சென்றால் கோலி விளையாடும் சிறுவன்கூடக் கேலி பேசுவானே!
ஆமாம்.. கலிகாலம் முற்றி விட்டதுஎன்ன செய்யலாம்?
பார்ப்பனர்கள் கூடிக் கூடி "குசுகுசு"வென்று பேசு கிறார்கள். மத்தியில் நம்மவர்கள் ஆட்சி வந்தாலும் இந்தப் பாழாய்ப் போன தமிழ்நாட்டில் மட்டும் நம் ஜம்பம் பலிக்கவில்லையே!
என்ன செய்யலாம்! ஒரு கை பார்ப்போம் - ஊடகங்கள் தான் நம் கைகளில் இருக்கிறதே! பத்திரிக்கை நடத்தும் 'சூத்திரவாள்கள்'கூட இன்னும் ஆன்மிகச் செய்திகளை அள்ளி விட்டுக் கொண்டு தானே இருக்கின்றனர்.
இவாளை வீழ்த்த வேண்டுமானால் மீண்டும் நம் வேதியப் புத்தியைக் காட்ட வேண்டும். விதி, கர்மபலன், பாவம், புண்ணியம், தலையெழுத்து சங்கதிகளை அவிழ்த்துக் கொட்டுவோம்!
'அடிக்க அடிக்க அம்மியும்கூட அசையத்தானே செய்யும் என்ற முடிவுக்கு' அக்கிரகாரம் வந்து விட்டதாக தெரிகிறது?
இந்தக் காலத்திலேகூட அப்படிஒரு எண்ணம் வந்து விட்டதா? நம்ப முடியவில்லையே என்று எண்ண வேண்டாம்.
திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தான் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். 'ஆன்மிகக் கண்காட்சி' - 'விவேகானந்தர் ரத ஊர்வலம்' இன்னோ ரன்ன ஏற்பாடுகளை ஜாம்ஜாமென்று முடித்து விட்ட நிலையில் - அடுத்த கட்டத்துக்குத் தாவியி ருக்கிறார். 'சோ' குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கைப் பறித்துக் கொண்ட திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் 'துக்ளக்'கை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்து விட்டார்.
இது 'துக்ளக்'கில் (10.6.2020) அவர் பெயரால் எழுதப் பட்ட கட்டுரையின் சில பகுதிகள்:
பிறவிக் குருடன், செவிடனாக மனிதன் ஏன் பிறக் கிறான்? இதற்கெல்லாம் விளக்கம் இருக்கிறது. ஹிந்து மதத்தில். மறுபிறப்பு என்கிற தத்துவத்தில் நம்பிக்கை இருந்தால்தான் இதற்கு விளக்கம் கிடைக்கும்.
றீவினைப் பயனையும், மறுபிறப்பையும் பிரிக்க முடியாது.
றீமறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் வினைப் பயனில் நம்பிக்கை இருக்க முடியாது.
இவ்வளவையும் எழுதிவிட்டு, கடைசியில் முடிக்கும் வரிகள்தான் முக்கியம்.
"இறை நம்பிக்கையை ஒழித்து, மனிதச் சிலை களையும், நினைவகங்களையும் வழிபடும் திராவிட பகுத்தறிவு விபரீதத்தால், நம் மகான்கள் கூறிய ஆன் மிகக் கருத்துகளை நாம் மறந்து விட்டோம் - எனவே முற்பிறப்பின் நம் வினைகளில் இந்தப் பிறவிப் பயன் களை ஓர வஞ்சனைகளாகப் பார்க்கிறோம்" என்று மங்கலம் பாடி முடித்துள்ளார் திரு. குருமூர்த்தி அய்யர்வாள்!
கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே பார்த்தீர்களா?
கர்ம பலன், தலை எழுத்து என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக் களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தோம். அதன் அடிமடியில் கை வைத்து நம் தலையில் மிளகாய் அரைக்கும் அளவுக்குத் தலைகீழாகப் புரட்டியடித்தது திராவிட பகுத்தறிவு என்பதை அவர்களை அறியா மலேயே ஒப்புக் கொண்டு விட்டனரே!
அப்படிப்பட்ட தலைவர்களுக்குச் சிலைகளும், நினைவகங்களும் உருவாகி விட்டதாம். வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கதறும் கண்கொள்ளாக் காட்சி இது.
ஒரு பக்கத்தில் பெரியார் மண்ணா இது என்று கிண்டலடிப்பது, இன்னொரு பக்கத்திலே ஆம், இது பெரியார் மண்தான் என்று மனப்புழுக்கத்தோடு புலம் புவது - பலே, பலே படிப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சி யாகத்தானிருக்கிறது - மண்டியிடும் ஆரியத்தின் மண் மேட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களின் உப்பரிகை மாளிகை தான் எழும்!
எல்லாம் தலை எழுத்தின்படிதான் நடக்கும் என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பூணூல் பேனா பிடிக்கும் குருமூர்த்திகளுக்குச் சில கேள்விகள்.
உணர்ச்சி வயப்பட்ட யாரோ சில இளைஞர்கள் சில பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தனர் என்ற செய்தி வந்ததே - அதுகூட தலை எழுத்தின்படிதானே நடந்தது என்று ஏற்றுக் கொள்வீர்களா? கோயில் சிலைகளின் திருட்டும்கூட தலை எழுத்தின்படிதானா? வெடிகுண்டு வீச்சுகளும்கூட சம்பந்தப்பட்டவர் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பரிசா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் கம்பி எண்ணினாரே - அதுவும் கர்மபலனின் விளைவு தானா? பார்வதியிடம் ஞானப்பால் உண்ட, தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் 16 வயதில் அற்பாயுசாக மாண்டானே! அதுகூட கர்மப் பலனின் விளைவா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த 2020ஆம் ஆண்டிலும் இப்படி, விதியையும், கர்ம பலனையும் கட்டிக் கொண்டு அழுதால் - எழுத ஆரம்பித்தால் அனேகமாக அவர்களுக்கு அனர்த்த மாகத் தான் முடியும் .. ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம்!
விநாசகாலே விபரீத புத்தி!'
- விடுதலை நாளேடு,13.6.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக