'மாத்ருபூமி' நாயகரின் பேட்டி
கேரளத்தின் முதுபெரும் சோசலிஸ்டுகளில் ஒருவரும், 'மாத்ருபூமி' என்ற கேரளாவின் புகழ் பெற்ற ஏட்டின் தலைவ ராகவும், நிருவாக இயக்குநராக இருந்தவருமான தோழர் வீரேந்திரகுமாரின் பேட்டி ஒன்று மொழி பெயர்க்கப்பட்டு 'இந்து தமிழ்திசை' ஏட்டில் நடு பக்கக் கட்டுரையாக வெளி வந்தது (6.6.2020) (அண்மையில்தான் இவர் மறைந்தார்).
அந்தக் கட்டுரையில் வீரேந்திர குமார் அளித்துள்ள பேட்டியில் சில முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளன; அவை பல சிந்தனைக் கணைகளையும் ஏவி விட்டன.
(1) 'இந்தியாவின் பிரதானமான பிரச்சினை ஜாதி - அதற்கு முகம் கொடுக்காமல் சமூகத்தின் ஆழமான பிரச்சினைகளை நம்மால் கையாள முடியாது என்பதை முழுமையாக உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார்.
- இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது - உண்மையானது. பிறப்பின் அடிப்படையில் பேதம் என்ற கொடுமையின் கேவலமான பெயர்தான் ஜாதி - எந்தப் பேதங்களும் இந்தக் கோர வடிவத்தின் முன் நிற்க முடியாது.
அதனால்தான் பகுத்தறிவு பகலவனான தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தன் முதன்மையான முன்னணிப் பணியாகக் கொண்டு, கண்ணின் கடைசி இமையைச் சிமிட்டும் வரை பெரும்பாடுபட்டார்.
ஜாதிக்கு மூல ஆதாரம் கடவுள், மதம், வேதம், ஸ்மிருதி, இதிகாசம், புராணங்கள் என்ற பட்டியல் நீளும் நிலையில், அவற்றை எல்லாம் நிர்மூலப் படுத்தும் மகத்தான பணியில் தந்தை பெரியார் ஈடுபட்டார் - அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகமும் இந்த வகையில் எந்த விலை கொடுத்தும் ஜாதியை ஒழித்திட ஓயாது உழைத்து வருகிறது.
இன்னும் சொல்லப் போனால் மதப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஜாதியைப் பாதுகாத்து வருகிறது.
அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி ஒரு மாநாட்டின் மூலம் வேண்டுகோள் விடுத்தும், அதனை செயல்படுத்த மத்திய அரசு முன் வராத நிலையில், ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்புப் போராட்டத்தினை நடத்தினார் தந்தை பெரியார். பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டு வரை கடுங்காவல் அனுபவித்தனர்.
ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் ஒரு நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு இதுவரை எந்தவித பதிலுமில்லை.
இந்த நிலையில் இன்றைக்கு மத்தியிலும், பல மாநிலங் களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய பிஜேபி என்னும் அமைப்பு நாட்டில் இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் - ராமராஜ்ஜியத்தை நிறுவப் போகிறோம் என்று பிரகடனப்படுத்துவதன் பொருள் என்ன?
ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பை மேலும் கெட்டிப்படுத்துவதுதானே! இப்பொழுதே அதன் செயல்பாடு களை நுகரவும் முடிகிறது. உயர் ஜாதியினர்களை உயர் பதவிகளில் நிலை நிறுத்துவது - ஜாதிகளின் காரணமாக நீண்ட காலமாகக் கல்வி வாய்ப்பு அறவே மறுக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் வேரை வெட்டும் விபரீத வேலைகளில் ஈடுபடுவது எதைக் காட்டுகிறது?
மீண்டும் மனுதர்ம ஜாதி அடிப்படையிலான ஒன்றை நிறுவுவதுதானே இதன் அடிப்படை! இந்த நிலையில் இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அறிவு நாணயமாக எண்ணும் எவரும் - அவர்கள் எந்த சாரிகளாக இருந்தாலும் அவர்களின் தலையாய பணி ஜாதி ஒழிப்புப் பணிதானே!
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுள் ஒருவரும், தலை சிறந்த தொழிற்சங்க வாதியுமான சிந்தன் அவர்கள் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் மனந்திறந்து தன் வேதனைகளை வெளிப்படுத்தியதுண்டு.
தொழிற்சங்கங்களைக் கட்டுவதில்கூட ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று சொல்லவில்லையா?
ஜாதி ஒழிப்பில் கூர்மையான நோக்கும், இலக்கும் உடைய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர் களில்கூட - குறிப்பாக வட புலங்களில் ஜாதியும் பின்னோட் டமாக இருப்பதை எண்ணிப் பார்த்தால் இந்த ஜாதிதான் எத்தகைய மூர்க்கமானது - கொடூரமானது - இதனை ஒழிக் காமல் இந்த நாட்டுக்கு வேறு எது முதன்மையான - முக்கியமான தொண்டாக இருக்க முடியும்?
மறைந்த வீரேந்திரகுமாரின் கருத்து மிக முக்கியமானதே!
- கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக