அபாண்டமாய் பொய்பரப்பியவர்களின் பித்தலாட்டம் அம்பலம்.
ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர், 'இந்திய வரலாறு' என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அது கல்லூரி பாடப் புத்தகமாகவும் இருந்தது. "திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்ற முயன்றதால், அதை எதிர்த்து 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்'' என்று அந்நூலில் எழுதப் பட்டிருந்தது.
திப்புசுல்தான் ஆட்சி பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த, காந்தி தர்ஷன் சமிதியின் தலைவர் B.N. பாண்டே என்பவர், அந்நூலின் ஆசிரியர் ஹரிபிரசாத்துக்கு உடனே ஒரு கடிதம் எழுதி, மேற்கண்ட செய்திக்கு ஆதாரம் என்ன என்று கேட்டார்.
"மைசூர் கெசட்டரில் இருந்து எடுத்தேன்" என்று ஹரி பிரசாத் பதில் எழுத, திரு. B.N. பாண்டே அவர்கள் உடனே மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்குக் கடிதம் எழுதி இச்செய்தி உண்மையா? மைசூர் கெசட்டரில் உள்ளதா என்று கேட்டார்.
"3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட எந்தத் தகவலும் மைசூர் கெசட்டரில் இல்லை ...' என்று பதில் வந்தது.
இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் காலங் காலமாய் இட்டுக் கட்டும் கதைகள்தான் கண்ணியம் மிக்க முகலாய மன்னர்களை மதவெறியர்களாய் கொடுங்கோலர்களாய் காட்டின.
500 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள், அடக்குமுறையில் மற்ற மதத்தாரை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சி செய்திருந்தால், இந்தியாவே இஸ்லாமிய நாடாக ஆகியிருக்கும் என்பதை ஓரளவு சிந்திக் கின்றவர்களால்கூட உணர முடியும். ஆனால், அபாண்டமான பொய்களைச் சொல்லி, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்த, ஹரிபிரசாத் போன்ற எத்தர்கள் காலங்காலமாய் வரலாற்று ஆசிரியர் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு சதி செய்து வருகின்றனர்.
உண்மையில் திப்புசுல்தான் இந்துக்களையும், இந்துக்களின் கோயில்களையும் மிகவும் மதித்ததோடு, ஏராளமாய் உதவியும் உள்ளார். 156 இந்து ஆலயங்களை திப்பு சுல்தான் நேரடியாகப் பராமரித்து வந்தார். அவற்றை யெல்லாம் உள்ளே நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். திப்பு சுல்தானின் பிரதம மந்திரி பூர்ணியா ஒரு பிராமணர். அவரது படைத்தளபதி கிருஷ்ணராவ் ஒரு பிராமணர். மராட்டிய இந்து மன்னரால் படித்து நொறுக்கப்பட்ட சிருங்கேரி மடத்தைச் செப்பனிட்டதோடு, அம்மன்னனால் கொள்ளையடித்து எடுத்துச் செல்லப்பட்ட, சிருங்கேரி மடத்து சாரதாதேவி சிலைக்குப் பதிலாய் புதிய சிலையை அமைத்துக் கொடுத்தார் திப்பு சுல்தான்.
- மஞ்சை வசந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக