பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

"இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத்ததுஇந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது- காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புதல்!


காரை சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டு


காரைக்கால், டிச.26  'இந்து' என்ற சொல் வெள்ளைக் காரன் கொடுத்தது; இந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது - காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புதல் என்று ஆதாரத்துடன் எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


19.12.2019 அன்று புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள காப்பா காலனி அருகில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழா வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


இசுலாமியர்கள் எல்லாம் யார்?


இசுலாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது என்கிறார்கள்; இசுலாமியர்கள் எல்லாம் யார்?


சரி, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை உண்டா? அவர்கள் எல்லாம் இந்துக்கள்தானே! இந்து என்ற வார்த்தை எங்கேயாவது இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை.


இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம். இந்த புத்தகத்தில் எங்கேயாவது இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா?


சங்கராச்சாரியாரின்  ''தெய்வத்தின் குரல்''


வேதங்களில் இந்து மதம் என்ற பெயர் இருக்கிறதா?


சாஸ்திரங்களில் இந்து மதம் என்று இருக்கிறதா?


இதை நான் சொல்லவில்லை; காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார். இது என்னுடைய குரல் இல்லை, மேடையில் அமர்ந்திருப்பவர்களின் குரல் கூட கிடையாது. ''தெய்வத்தின் குரல்''.


நாங்கள் பேசினால் மனிதர்களின் குரல். இன்னுங்கேட்டால், அசுரன் குரல். ஆனால், அது ''தெய்வத்தின் குரல்'' - அதில் அவர் சொல்கிறார்,


இந்து மதம் என்ற பெயரே அந்நியன் கொடுத்தது; வெள்ளைக்காரன் வெளியில் இருக்கிறவன் நமக்குக் கொடுத்தது   அந்தப் பெயர். நமக்கு ஓரிஜினலாக இருந்த பெயர் பிராமண மதம் - சனாதன மதம் என்பதுதான்.


பிறகு என்ன, இந்து நாடு என்று பெயர் வைப்பதற்கு, சட்டம் இடம்தராதது மட்டுமல்ல, உன்னுடைய சாஸ் திரத்திலும் இடம் கிடையாது; உன்னுடைய பாரதத்திலும் இடம் கிடையாது.


அதேநேரத்தில் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், திராவிடன் என்கிறீர்களே, வெள்ளைக்காரன், கிறித்த வர்கள் எல்லாம் வந்து இவர்களைக் கெடுத்துவிட்டார்கள்; இஸ்லாமியர்கள் ஒருபுறம் கெடுத்தார்கள்; யாரை, திராவிட இயக்கத்தவர்களை. அதனால்தான் அவர்கள் இவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.


''திராவிடமா? தமிழா?''


அதேபோன்று, கால்டுவெல் என்கிற ஒரு பாதிரியார் வந்தார், அவர் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தபொழுது, அவர்தான் திராவிடன், திராவிடன் என்று சொன்னவுடன், இவர்களும் திராவிடன் என்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.


அதைக் கேட்டுவிட்டு, நம்மாளில் 'அதிபுத்திசாலி'யாக இருக்கக்கூடிய சிலர், ''திராவிடமா? தமிழா?'' என்றார்கள். நாலணா முக்கியமா? ஒரு ரூபாய் முக்கியமா? ஒரு ரூபாய்க்கும், நாலணாவுக்கும் சண்டை என்று யாராவது சொல்வார்களா? ஒரு ரூபாய்க்குள் இருப்பதுதான் நாலணா? நாலணாவிற்கும், ஒரு ரூபாய்க்கும் போட்டியில்லை. நான்கு நாலணா சேர்ந்ததுதான் ஒரு ரூபாய். அதுவும் புதுச்சேரியில் அணா என்பது வேறு; வயதானவர்களுக்கு அது தெரியும்.


அப்படிப்பட்ட நிலையில், இந்து நாட்டை உரு வாக்குவோம் என்று நிதின்கட்காரி சொல்கிறாரே, அவருக்காக சொல்கிறோம்; அவர் தெளிவு பெறட்டும்; குழப்பமில்லாமல் மற்றவர்கள் சிந்திக்கட்டும்.


அசல் மனுதர்மம்


 


10 அத்தியாயம்; 44 ஆவது சுலோகம்!


இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம்; இந்தப் புத்தகத்தில் இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? என்று கேட்டோம்.


மனுதர்மம் எவ்வளவு காலத்திற்கு முன் உண்டானது என்றால், அவர்கள் சொல்வார்கள்,  அனாதி காலம் தொட்டு, அது சொல்ல முடியாது என்றார்கள்; பிரம்மா அந்தக் காலத்தில் சொன்னார்; மற்றவர்கள் சொன் னார்கள்; இது தானாக உண்டானது என்று சொன்னார்கள்.


இந்த புத்தகத்தில்  10 ஆவது அத்தியாயத்தில், 44 ஆவது சுலோகத்தில் உள்ளதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்.


நாங்கள் எதைச் சொன்னாலும், திராவிடர் கழகத்துக் காரர்கள் ஆதாரமில்லாமல் பேசி பழக்கப்பட்டவர்கள் கிடையாது. இதற்காக வழக்கு எங்கள்மீது போட்டால், மிகவும் நல்லது. அடிக்கடி எங்களிடம் வழக்குப் போட்டிருக்கிறோம் என்று நோட்டீஸ் கொடுப்பார்கள்; அதனை நாங்கள் வரவேற்போம். ஏனென்றால், பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைவிட, நீதிபதிமுன் பேசி னால்தான், அது எல்லாவற்றிலும் பதிவாகும்.


அந்த அடிப்படையில் வரும்பொழுது, மனுதர்மத்தில் உள்ளதைப் படிக்கிறேன் கேளுங்கள்.


''பெண்டம், ஔண்டாரம், திராவிடம், காம்போசம், யவஞம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் ஆகிவிட்டார்கள்.


அப்படியென்றால், இவை எல்லாம் தேசங்கள். எது? பாரதம் ஒரு தேசம்; திராவிடம் ஒரு தேசம். பாரதம் வேறு தேசம்; திராவிடம் வேறு தேசம்.


India that is Bharath - இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது; அதுதான் ஒன்றாவது விதி.


Shall be a union of State


இதுதான் ஒன்றாவது விதியின் தொடக்கமே, அரச மைப்புச் சட்டத்தில்.


பாரதம் என்ற வார்த்தையாவது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது. திராவிடம் என்கிற வார்த்தையும், பாரதம் என்கிற வார்த்தையும் மனுதர்மத்தில் இருக்கிறது. ஆனால், இந்து என்ற வார்த்தை மனுதர்மத்திலும் இல்லை; கீதையிலும் இல்லை; இராமாயணத்திலும் இல்லை; வேதத்திலும் இல்லை.


பிறகு யார் சொன்னது?


வெள்ளைக்காரன் சொன்னது - இதை யார் எடுத்துச் சொன்னது?


காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார்; அதுவும் எந்த சங்கராச்சாரியார்? ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருந்தாரே, அந்த சங்கராச்சாரியார் அல்ல. அவருக்கும் குருநாதரான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்தான்.


''இந்து மதம் எங்கே போகிறது?''


இன்னொரு ஆதாரம் இதோ பாருங்கள். அக்னி ஹோத்திரம் இராமானுஜம் தாத்தாச்சாரியார், இவர் வைஷ்ண சம்பிரதாயத்தில் இவர்தான் தலைவர். அவர் எழுதிய ''இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூல் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அந்த புத்தகத்தில் அவர் சொல்கிறார், ''அந்நியர்கள் நமக்கு வைத்த பெயர்; நமக்கு அது சொந்த பெயர் கிடையாது'' என்று சொல்லியிருக்கிறார்.


இந்து நாடாக்குவோம் என்று சொல்வதின் அடிப்படை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய தலைவர் கோல்வால்கர் சொல்கிறார், இந்துராஷ்டிரத்தை உரு வாக்குவோம்; இந்து நாட்டை உருவாக்குவோம்; பெரும்பான்மை நாங்கள். இஸ்லாமியர்களாக இருக்க வேண்டுமா சிறுபான்மையினராக உள்ளவர்கள்; நாங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். இராமனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால், நீங்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாகத் தொடரலாம்.


கிறித்தவர்கள், கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால், கிறித்துவர்களாக நீங்கள் இந்த நாட்டில் குடியுரிமை பெற்றவர்களாகத் தொடரலாம். இல்லையானால், எங்களைப் பொறுத்தவரையில், நீங் கள் அந்நியர்கள். குடியுரிமைக்கு தகுதியில்லாதவர்கள்.


ஞானகங்கை - பஞ்ச் ஆஃப் தாட்ஸ்


இதை யார் எழுதியிருப்பது We The Nation என்று சொல்லி, அதனை புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். ஞானகங்கை என்ற பெயரில், பஞ்ச் ஆஃப் தாட்ஸ் என்று கொள்கை முழக்கமாக, கொள்கை ஏடாக.


அரசாங்கத்திற்குஎப்படி அரசமைப்புச் சட்டம் முக்கியமோ,அதேபோன்றுஆர்.எஸ்.எஸ்.அமைப் பிற்கு இருக்கின்ற ஒன்று அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்ற நூல் - இன்றைக்கு ஆட்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது; அதைத்தான் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அதுதான் இராமர் கோவில்.


சரி, இன்னொரு கேள்வி கேட்கிறேன், வித்தி யாசப்படுத்தக் கூடாது என்று சொன்னால், மத அடிப்படையில் ஏன் வேறுபாடு காட்டுகிறீர்கள். மனிதாபிமான அடிப்படையில், அகதிகளாக யார் வந்தாலும் பாருங்கள்.


ஈழத் தமிழர்களுக்குக் கிடையாதாம்?


இந்துக்கள் என்று வரும்பொழுது, அது  ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது. ஏன் கிடையாது என்று கேட்டால்,


தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சரும், அமைச் சர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால்,


''பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?'' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோன்று


தளபதி ஸ்டாலின் கேட்கிறாரா? தி.மு.க.காரர்கள் கேட்கிறார்களா? திராவிட இயக்கத்துக்காரர்களை நாங்கள் கேட்கிறோம் - நீங்கள்  ஆட்சியில் இருக் கும்பொழுது என்ன செய்தீர்கள்? அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்தீர்களா? என்று கேட்கிறார்கள்.


முன்பு ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தீர்கள்? காங்கிரஸ் என்ன செய்தது? என்றெல்லாம் கேட்கவே கூடாது; அந்த வாதமே கூடாது. ஏனென்றால், அதற்காகத்தானே அவர்களை மாற்றிவிட்டு, உங்களைக் கொண்டு வந்து ஆட்சி யில் வைத்திருக்கிறார்கள்; பிறகு ஏன் நீங்கள் அவர் களைப்பற்றி பேசுகிறீர்கள்? இதை நான் சொல்ல வில்லை; காங்கிரஸ்காரர் கருத்திருமனே சொன்னார்.


அன்றைய தமிழக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன்!


அண்ணா முதலமைச்சராக இருக்கும்பொழுது, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப் பொழுது அவர் சொன்னார், நாங்கள் ஆட்சியில் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்? என்ன செய்தீர்கள்? என்று கேட் கிறீர்களே, நாங்கள் செய்யாததால்தானே உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அதனை நீங்கள் செய்யவேண்டியதுதானே! நாங்கள் ஏன் செய்ய வில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? அதனால் தான் எங்களுக்கு தண்டனை கொடுத்தார்கள் மக்கள்; எங்களை வேண்டாம் என்று நினைத்தார்கள் என்று கேட்டார்.


அந்த வாதமே சரியில்லை!


அப்படி இருந்தாலும், தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்; இந்து என்று சொல்லி மற்றவர்களை ஏன் பிரிக்கவேண்டும்; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் தனியாகத் தடுக்கவேண்டும்.


நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்களாம்!


அந்த புத்தகத்தில் கோல்வால்கர் எழுதுகிறார்,


முதல் எதிரி யார் என்றால், இஸ்லாமியர்


இரண்டாவது எதிரி என்றால் கிறித்துவர்கள்


மூன்றாவது எதிரி யார் என்றால், பொதுவுடை மைக்காரர்கள், கம்யூனிஸ்டுகள்.


நான்காவது யார் என்றால், நாத்திகர்கள்.


மேற்சொன்ன நான்கு பேர்கள்தான் இந்த நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்கள் என்று எழுதுகிறார்.


அதற்கான ஒத்திகைதானே இப்பொழுது நடை பெறும் சம்பவங்கள். இல்லை என்று அவர்கள் மறுக்க முடியுமா?


நூறு சதவிகிதத்தில்


 


37.8 சதவிகிதம் பெரும்பான்மையா?


அடுத்தபடியாக நண்பர்களே, மோடி தலைமையில் உள்ள மத்திய பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் வாங்கியிருக்கிறது தெரியுமா?


37.8 சதவிகிதம்; நூறு சதவிகிதத்தில் 37.8 சத விகிதம் பெரும்பான்மையா? அல்லது நூறில் பாதி யாவது வாங்கியிருக்கிறீர்களா?


அதேபோன்று பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தை எடுத்துக்கொண்டால், எதிர்க்கட்சியில் வெற்றி பெற்று வருபவர்களை அப்படியே மொத்த விலை பேசி வாங்கிக் கொள்கிறார்கள். மொத்தக் குத்தகை பேசுவதுபோல, மொத்த விலை. மாட்டுத்தரகர்கள் தவறாக நினைக்கக்கூடாது; அவர்கள்கூட கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டு, கைகளின் மேல் துண்டை போட்டுக்கொண்டு, விரலால் விலை பேசுவார்கள். ஆனால், இவர்கள் அதுபோன்று கூட செய்வதில்லை; வெளிப்படையாகவே மொத்தமாக விலைக்கு வாங்குகிறார்கள். மந்தையை ஓட்டிக்கொண்டு போவதுபோல, போகிறார்கள்; கூடவே, விலைக்கு வாங்கப்பட்டவர்களும் போகிறார்கள்.


ஒரே நாளில், கட்சி மாறுகிறார்கள்; அரசியல் கட்சி நண்பர்கள் தயவு செய்து தவறாக நினைக்கக்கூடாது. எங்களுக்கு ஒரு பெரிய நிம்மதி என்னவென்றால், நல்ல வேளையாக நாங்கள் பெரியாரிடம் போய்ச் சேர்ந்தோம்; தேர்தலில் நிற்கமாட்டோம்; அதனால், எங்களை யாரும் விலை பேசுவது இல்லை.


ஒரே நாளில் தூய பரிசுத்தமாக ஆகிவிட்டார்!


ஒரே நாளில் கட்சி மாறுகிறார்;  ஏற்கெனவே அவர்மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் கட்சி மாறியவுடன், அண்டாவில், குண்டாவில் 'கங்கா ஜலம்' வைத்திருப்பார்கள் போலிருக்கிறதே, அதனை எடுத்து அவர்மீது தெளித்தவுடன், அந்த வழக்குகள் எல்லாம் வாபஸ். தூய பரிசுத்தமாக ஆகிவிட்டார் அவர். திருவாளர் பரிசுத்தம். அடுத்த நிமிடம் அவருக்கு பகல் 1.30 மணிக்கு காவி ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; மாலை 4.30 மணிக்கு வெளியே வந்துவிடுகிறார்.


மறுபடியும் அவர் வேறு கட்சிக்கு வந்துவிடுகிறார். இது என்ன அர்த்தம்? இவ்வளவு அசிங்கமான ஒரு சூழலை உருவாக்கி, ஜனநாயகத்தையே சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


நம்முடைய நாட்டில் இப்பொழுது


 


விலை உயர்ந்த பொருள் வெங்காயம்!


எந்தக் காலத்திலாவது வெங்காயத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்களா? விலை உயர்ந்த பொருள் எது நம்முடைய நாட்டில் என்றால், தங்கமா? பிளாட்டினமா? இல்லை, வெங்காயம்தான்.


பெரியார்தான் சொல்வார், வெங்காயம் என்று. அய்யா ஏன் அடிக்கடி வெங்காயம் என்று சொன்னார் என்று இப்பொழுது புரிந்திருப்பார்கள்.


மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம்தான் திரும்பினேன்.


அங்கே நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ''சார் என்ன வாங்கிக் கொண்டு போகிறீர்கள்?'' என்றார்.


நான் புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறேன் என்றேன்.


ஏன் சார் நீங்கள் அதையெல்லாம் வாங்கிக் கொண்டு போகிறீர்கள்; வெங்காயத்தை வாங்கிக் கொண்டு போங்கள் என்றார்.


கஸ்டம்சில் பிடித்துக் கொள்வார்கள் என்றேன்.


அதுதானே உங்கள் நாட்டில் விலை உயர்ந்த பொருள் என்றார்.


ஏனென்றால், தங்கத்தைக் கொள்ளையடிப்பார்கள்; பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்; வெங்காயத் தைக் கொள்ளையடித்த ஒரே ஆட்சி மோடி ஆட்சியை தவிர, பா.ஜ.க. ஆட்சியை தவிர வேறு ஆட்சி உண்டா?


இன்று வெளிவந்த 'தினத்தந்தி' நாளிதழின் தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள். விலைவாசி வானுயர வந்துவிட்டது.


இன்றைக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சியில்


 


ஜி.டி.பி. 4.5 சதவிகிதம்


காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது என்று சொன்னீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஜி.டி.பி. என்பது ஒட்டுமொத்த 8 சதவிகிதமாக இருந்தது. இன்றைக்கு 4.5 சதவிகிதமாக இருக்கிறது.


வேலையில்லாத் திண்டாட்டம் ஏராளம் இப் பொழுது. இருக்கின்ற கம்பெனிகளை மூடுகிறார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது.


ஆனால், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், உலகம் சுற்றும் வாலிபன் போன்று, எல்லா நாடு களுக்கும் சென்று வருகிறார். இங்கே என்ன நடக் கிறது என்பதைப்பற்றி கவலைப்படாமல்.


எனவே, இவர்களுடைய ஆட்சியில், பொருளா தாரம் என்பது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது.


அதேநேரத்தில், மோசடி சாமியார்கள், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம், இங்கே இருந்து சென்று, தீவை உருவாக்கிவிட்டேன்; போட்டி நாடு - இந்து நாடு உருவாக்கி விட்டேன் என்று சொல்கிறார்.


எனவே, மத்திய அரசாங்கத்திற்குப் போட்டி நம் முடைய இயக்கத்துக்காரர்கள் அல்ல; அரசாங்கத்தைக் கவிழ்ப்பவர்கள் கிடையாது. அதேநேரத்தில், அதனை கவிழ்த்து, வேறு விதமாகப் போயிருக்கிறார்கள் நித்தியானத்தாக்களும், காவிச் சாமியார்களும்தான்.


அவர்கள் எப்படி உங்களுடைய அரசாங்கம், உள்துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றின் தய வில்லாமல் எப்படி வெளிநாட்டிற்குச் சென்றார்கள்.


நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளைத் திசை திருப்பத்தான் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்!


எப்படி நீரவ் மோடி போனார்; ஒருவர் சென்றதும், காங்கிரஸ் அரசாங்கத்தை நீங்கள் குறை சொன்னீர்கள்; இன்றைக்கு வைர வியாபாரிகளாக இருப்பவர்கள், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளி நாட்டிற்குத் தப்பிச் செல்கிறார்களே, அதற்கு என்ன பதில்?


அதையெல்லாம் கேட்கப் போகிறார்கள் என்பதற் காகத்தான், இப்பொழுது இராமர் கோவில், குடியுரிமைப் பிரச்சினை.


விலைவாசியைப்பற்றி கவலைப்படாமல், தங்கம் விலையைபற்றி கவலைப்படாமல், அரிசி, காய்கறி விலைகளைப்பற்றி கவலைப்படாமல் இப்பொழுது நாமெல்லாம் எதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக் கிறோம்?


ஆகவே நண்பர்களே, இது திசை திருப்பல்தான்.


இந்தப் பிரச்சினையால் கலவரங்கள் ஏற்பட்டால், எல்லோரையும் பிடித்து சிறைக்குள் வைக்கிறோம். வீட்டுக் காவலில், நாட்டுக் காவலில் வைக்கிறோம். நாடே சிறைச்சாலை ஆவது என்பது ஜனநாயகமா? பாசிசமா? என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அய்யா நாராயணசாமி அவர்களுடைய தலை மையில் இருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மீறித்தானே நடந்திருக்கிறது.


தலையில் குட்டு வைத்த நீதிமன்றம்!


இங்கே யாருக்கு அதிகாரம் என்ற பிரச்சினையில், நீதிமன்றத்திற்குச் சென்றவுடன், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. ஆனாலும், அந்த நீதிமன்றத் தீர்ப்புகூட சரியாக அமல்படுத்தப் படவில்லை.


நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படவில்லை;  அரச மைப்புச் சட்டம் மதிக்கப்படவில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநராக வந்தவர் சுதந்திரமாகக் கருத்துச் சொன்னால், அது மதிக்கப்படுவதில்லை; பொதுவானவர்கள் கருத்துச் சொன்னால், அவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும்; அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசத் துரோகம்  என்ற அம்பை எய்த வேண்டும் என்று சொன்னால், என்ன அர்த்தம்?


தேர்தலுக்கு முன்பே சொன்னோம்;


 


தமிழகம் விழித்துக்கொண்டது!


எனவேதான், நீங்கள் இன்றைக்கு விழிப்போடு இருக்கவேண்டும்; இதை நாங்கள் முன்பே சொன் னோம்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சொன்னோம்; தமிழகம் விழித்துக்கொண்டது; ஆனால், மற்ற பகுதிகள் விழித்துக் கொள்ளவில்லை. மக்களை மட்டும் குறை சொல்ல விரும்பவில்லை. கட்சிகளும் அதற்குக் காரணம்.


இங்கே ஒரு ஒற்றுமையை நாம் கட்டினோம்; இங்கே உரையாற்றிய அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டிலே ஒரு நல்ல கூட்டணியை உருவாக் கினோம்; புதுச்சேரியையும் சேர்த்தோம். அதனால், இங்கே எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இங்கே சாயம் ஏற்ற முடியவில்லை. ஜனநாயகம் காயப்படுத்தப்படவில்லை. ஆனால், வேறு வகையில் அதனை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.


இது பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி,


 


அறிவியலை உருவாக்கிய பூமி


அதேநேரத்தில், அன்றைக்கு வடநாட்டில் உள்ள வர்களுக்குப் புரியவில்லை. இன்றைக்கு அவர்களும் புரிந்துகொண்டார்கள்.


நமக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், நம்மாட்கள் தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். காரணம், இது பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி, அறிவியலை உருவாக்கிய பூமி.


ஆனால், அங்கே அப்படியில்லை. எடுத்தவுடனே கலவரங்கள்தான் நடைபெறும். வாரணாசியில் கல வரம், டில்லியில் கலவரம், உத்தரப்பிரதேசத்தில் கல வரம், மேற்கு வங்கத்தில் கலவரம், வடகிழக்கில் கலவரம், மற்ற இடங்களில் கலவரம்.


இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததினால் நடை பெறும் கலவரங்களால், வெளிநாட்டு அதிபர்கள் வருகையை ரத்து செய்திருக்கிறார்கள். வெளிநாட் டுக்காரர்கள் இதனைக் கண்டித்து தீர்மானம் போடு கிறார்கள். நம்முடைய நாட்டின் மரியாதை என்னாவது? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.


பக்தியைவிட, புத்தி மிக முக்கியம்!


எனவேதான், இங்கே வந்திருப்பவர்கள் அத்துணை பேரும் - நீங்கள் யாரும் எங்களுடைய தேசப் பக்திக்குக் களங்கம் கற்பிக்க முடியாது. எங்களுக்கு தேசம் உண்டு; எங்களுக்குப் பக்தி இருக்கிறதா? என்பது பிறகு; எங்களுக்குப் புத்தி இருக்கிறது. பக்தியைவிட, புத்தி மிக முக்கியம். புத்தி இருப்பவன்தான் பலசாலி.


கட்சிகளுக்கு என்னுடைய வேண்டுகோள் என்ன வென்றால், ஒன்றே ஒன்றுதான்.


இப்பொழுது தீப்பிடித்து எரிகிறது; அது அணைக்கப்படவேண்டும்; அந்தத் தீ காவித் தீ.


அந்தத் தீ முழுக்க முழுக்க காலிகளால் வைக்கப்பட்ட தீ. காலிகளால் வைக்கப்பட்டாலும், முதலிலே தொடங்கியது காவிகள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அபாயம் இருக்கிறது.


எனவேதான், இந்த மக்கள் அண்ணன் தம்பிகள். இஸ்லாமியர்கள் என்றால் யார்? நம்முடைய அண்ணன் தம்பிகள்தானே! இங்கே சாயபு மரைக்காயர் சொன்னார் அல்லவா! கஞ்சி கொடுத்தோம் என்றும், பொங்கல் விழாவிற்கு அவர் வந்தார் என்றார்.


''இஸ்லாம் ஆனவர்கள் தெரு''


நான் கடலூர்காரன். அங்கே இஸ்லாமிய நண்பர்கள் ஏராளம் உண்டு. நான் படித்தது அங்கேதான். உங் களுடைய பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?


''இஸ்லாம் ஆனவர்கள் தெரு''வில் உள்ளது என்பார்கள்.


அந்த வார்த்தையை நன்றாகக் கவனியுங்கள்; இஸ்லாம் ஆனவர்கள்; இஸ்லாம் ஆனவர்கள் என்றால், என்ன பொருள்? அவர்கள் எல்லாம் அரேபியாவில் இருந்து இங்கே பொத்தென்று குதித்தவர்கள் அல்ல. இங்கேயே இருந்தவர்கள்தான்.


அவர்களை நீ எட்டி நில் என்றீர்கள் நீங்கள்; யார் கட்டிப் பிடித்தார்களோ, அங்கே போய்விட்டார்கள் அவர்கள்.


உன்னுடைய மதம் தொடக்கூடாது என்றது; அவர்களைப் படிக்கக்கூடாது என்று சொல்லியது: அவர்களை எட்டி நில் என்று சொல்லியது: சண்டாளா என்றது.


இன்னுங்கேட்டால், அதைவிட அசிங்கம், சொல் வதற்கே அசிங்கப்படவேண்டும்.


பாரத ரத்னா பட்டம் போன்று


 


நினைத்திருந்தார்கள்


மனுதர்மத்தில் எட்டாவது அத்தியாயம், பத்தாவது சுலோகத்தில் சொல்கிறார்கள்,


சூத்திரன் என்றால், தேவடியாள் மகன் என்று.


எங்களுடைய தாய்மார்கள் எல்லாம் தாசிகளா? இவ்வளவு அவமானத்தை இந்த நாடு பொறுத்துக் கொண்டிருக்கிறதே, பெரியார் என்ற மாமனிதர் தோன்றவில்லை என்றால், என்னாவாகியிருக்கும்.


இந்த சூத்திரப் பட்டத்தை, ஏதோ பாரத ரத்னா பட்டம் போன்று நினைத்திருந்தார்கள், நம்மாட்கள். இதை உணர்த்தியதே அவர்தானே.


''இவாளலெல்லாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள்'' என்றார்கள் சிலர்.


சூத்திராள்; சற்சூத்திராள் என்றால்


 


என்ன பொருள்?


உடனே பெரியாருக்குக் கோபம் வந்து, ''அட முட்டாள் பயலே, சூத்திரன் என்றாலே, தாசிப் பிள்ளை கள் என்று சொல்கிறார்கள்; நீ அதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவாள் எல்லாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள் என்று ஒருபடி மேலே என்று சொன்னால், நீ அசல் 'தேவடியாள் மகன்' என்று அல்லவா சேர்க்கவேண்டும் என்று சொல்வார்.


அந்த வார்த்தையை நான் சொல்ல மாட்டேன்; பெரியார் சொல்வார், அவருக்கு வயசு இருந்தது.


இந்த இழிவை, பிறவி இழிவை ஒழித்தவர் தந்தை பெரியார்.


என்னுடைய தாய் விதவையானால், முன்னால் வராதே என்று சொன்ன மதம்தான் இந்து மதம்.


இன்றைக்கு இந்த இயக்கத்தினால், பார்ப்பனர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள். பார்ப்பனப் பெண்கள் உள்பட அத்தனை பெண்களுக்கும் விடுதலை கொடுத் தது இந்த இயக்கம்தான்.


இந்த இயக்கம் யாருக்கும் விரோதமானதல்ல; யாரையும் வேற்றுமைப்படுத்தக் கூடிய இயக்கமல்ல.


இன்றைக்கு ஒரு மொட்டைப் பாப்பாத்தியையாவது பார்க்க முடியுமா?


ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அக்கிர காரத்திற்குச் சென்றால், மொட்டைப் பாப்பாத்தி அம்மா என்று இருப்பார்கள். வெள்ளை சீலை கட்டிக்கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருப்பார்கள்.


இன்றைக்கு ஒரே ஒரு மொட்டைப் பாப்பாத்தியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கலாம். நம்மாட்கள், நம் முடைய பெண்கள் வேண்டுமானால், அப்படி வேடம் போட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் அப்படியில்லை. திருந்திவிட்டார்கள், பாராட்ட வேண்டும், வரவேற்கிறோம்.


திராவிடர் இயக்கம் செய்த


 


அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி


எப்படி அந்தத் தைரியம் வந்தது? திராவிடர் இயக்கம் செய்த அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி.


பெண்ணுரிமை, பெண்கள் ஆண்களைப் போல படிக்கவேண்டும். வித்தியாசம் இருக்கக் கூடாது. கீழ்ஜாதி - மேல்ஜாதி என்ற பேதம் இருக்கக்கூடாது.


எங்களுக்கு மதம் பிடிக்காது; மனிதர்களுக்கு மதம் பிடிக்கக் கூடாது.


மதவெறியை மாய்ப்போம் -


மனிதநேயத்தைக் காப்போம் -


ஜாதியை ஒழிப்போம் -


சமத்துவத்தை உருவாக்குவோம் -


சாமியார்கள் இல்லாத நாடு -


ஜனநாயகம் தழைக்கும் நாடு என்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவோடு இருங்கள்.


சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழாவில்


 


சூளுரை எடுப்போம்!


அதைத்தான் சி.மு.சிவம் விரும்பினார் -


அவருடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் அதையே சூளுரையாக எடுப்போம் என்று கூறி,


மழையையும் பொருட்படுத்தாமல், மழையும் போட்டியிட்டது; நாங்களும் போட்டியிட்டோம். நாம் வென்றோம், மழை தோற்றது. இதுதான் எதிர் காலத்திலும் நடக்கும்.


எனவே, மத்திய அரசு எங்களோடு போட்டி போட்டால், நீங்கள் தோற்பீர்கள். நாங்கள் வெற்றி பெறு வோம் என்பதற்கு இந்தக் கூட்டமே அடையாளம் என்று சொல்லி, மக்கள் எங்களோடுதான் இருப்பார்கள். மழை என்றால், ஓடிவிடக் கூடிய கூட்டமல்ல, இந்தக் கூட்டம்.


பெரியாரின் தொண்டர்கள் - லட்சியத்திற்கு விலை கொடுக்கும் தொண்டர்கள்!


அதேபோன்று, அச்சுறுத்தல் என்றால், கலைந்து விடக் கூடிய கூட்டமல்ல.


அடக்குமுறை என்றால், கலைந்து ஓடிவிடக் கூடிய கூட்டமல்ல; அதனை நெஞ்சிலே சந்திக்கக்கூடிய, ஏந்தக் கூடிய பெரியாரின் தொண்டர்கள். லட்சியத்திற்கு விலை கொடுக்கும் தொண்டர்கள் என்பதைக் கூறி,


சிறப்பாக இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.


நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வளர்க சி.மு. சிவம் அவர்களுடைய புகழ்!!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக