பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

கலைவாணர் போட்ட மந்திரம்

 
எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.
அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.
அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.
உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.
அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார்.  எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.
அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன்.  இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.
இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.
கேட்டவர்: உடுமலை நடராசன்
கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981
-விடுதலை,27.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக