பக்கங்கள்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஜனோபகாரிகள்
மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்?
உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார்.
மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?
உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.
மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா?
உள்: ஆமா!
மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?
உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு
         போகிறார்.
மே.இந்: சமையல் செய்து கொண்டுவந்து கொடுப்பாரா?
உள்: திரும்பக் கொடுப்பதில்லை.
மே.இந்: அடித்துக்கொண்டா போகிறான்?
உள்: ஆம்.
மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?
உள்: ஆம், ஆம்!
மே.இந்: அடித்துக் கொண்டா......
உள்: ஓய், எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான்
        போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான்! ஆயிரம் வருடமாக இப்படி!
ராகு காலப் பயன்
ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால்தான், பத்து ரூபாய்
                நோட்டு விழுந்துவிட்டது.
மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன்!
வேடத்தின் பயன்
சு.ம.காரன்: பண்டித அய்யர்வாள்! உலோகம் என்றால் என்ன?
அய்யர்: பூமிக்குப் பெயர்_பொன், வெள்ளி இவைகளுக்கும் பெயர்.
சு.ம.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருத்தம்.
அய்யர்: அவைகளுக்காகத்தானே......
பயனற்றதால் வணங்கப்படுகிறது
ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம்
                வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா?
பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது.
ஒரு விஷயம் புரிந்தது
சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார்.
இப்போதும் பார்ப்பனர் கல் சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு
விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த அய்யர், சாமி தின்பதாகத்
தாமே அடித்துக் கொண்டு போகிறார் _ அந்த அய்யர், கரும்பைக் கக்கத்தில்
வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை.
சர்வம் விஷ்ணுமயம்
பாகவதர்: அப்பா, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா?
சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியைப்
பெயர்த்தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான், என் வயிற்றில்
 செலுத்துகிறேன்!
சாமிக்குக் காது செவிடு
அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள்.
கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன்.
சாமி: என்ன?
கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்?
சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும்.
கேட்க வந்தவர்: இதென்ன அய்யா, சாமி இப்படிச் சொல்லுகிறதே?
அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை.
-உண்மை இதழ்,16-30.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக