பக்கங்கள்

வியாழன், 8 பிப்ரவரி, 2018

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்கள்: 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' படப்பிடிப்பு



சென்னை, பிப்.8 சென்னையில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டு இருப்பதை இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. சென்னைத் தலைமைச் செயலகம்  முன் கட்டப்பட்டுள்ள கோயில்களை இடிக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப் பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று 6.2.2018, புதன்கிழமை அன்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

அப்போது நீதிபதிகள், "தெய்வங்களின் சிலை வைத்து கோயில் எழுப்ப விரும் பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோயிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோயில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தே அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

இதனை அடுத்து சென்னை நகர் முழுவதும் அரசு நிலத்திலும், பொது இடத்திலும், சாலை குறுக்கிலும், ஓரங் களிலும் ஆக்கிரமித்திருக்கும் கோவில் களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடு இது தொடர்பாக  சென்னையின் பல இடங் களில் ஆய்வு நடத்தியது. அதில் இரயில் நிலையங்கள், பொது பூங்காக்கள், அரசு குடியிருப்புகள், மெட்ரோ இரயில் நிலை யங்களின் நிலங்களை அபகரித்து அங்கு பெரிய கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அசோக் பில்லர் மெட்ரோ இரயில் நிலை யம், அசோக் நகர் 11 ஆவது நிழற்சாலை, மாம்பலம் இரயில் நிலையத்தின் வாகன நிறுத்தம் பகுதியில் உள்ள கோவில்கள் என சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள் ளன. இவை அனைத்தும் எந்த ஒரு அனுமதியுமின்றி தனி நபர்களால் கட்டப் பட்டு அதில் வரும் வருமானத்தை அந்த தனிநபர்களே கோவில்கள் மற்றும் சாமி களின் பெயரில் அனுபவித்து வருகின்றனர்.

சென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்புக் கோயில்கள்

இது குறித்து மாம்பலம் பகுதியில் வசிக்கும் தியாகராயர் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி பி,கண்ணன் என்பவர் கூறும் போது "கோவில்கள் பல அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அப்பகுதி அரசியல் தலைவர்கள் தலையீடு உள்ளது. இந்தக் கோவில்களுக்கு வரும் வருவாயில் பெரும் பங்கு அந்த அரசியல் வாதிகளுக்குச் செல்வதால் அவர்கள் ஆக் கிரமிப்பிற்கு துணையாக இருந்து வருகின்றனர்.

முக்கியமாக தியாகராயர் நகர் மோதி லால் தெருவில் உள்ள நடைபாதையை அடைத்துக்கொண்டு இருக்கும் கோவிலை அகற்றுவதற்கு நாங்கள் நீதிமன்றம் சென்று தீர்ப்பை வாங்கி வந்தோம். ஆனாலும் இன்றளவும் அந்தக் கோவில் அகற்றப் படவில்லை. நடைபாதையில் கோவில் இருப்பதால் பள்ளிசெல்லும் மாணவர்கள் சாலைகளில் நடக்கும் நிலை ஏற்படுகிறது. அது மிகவும் குறுகலான திருப்பத்தில் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் வருப வர்கள் சாலையில் நடக்கும் மாணவர்கள் மீது மோதிவிடுகின்றனர். இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது" என்று கூறினார்.

சிட்லப்பாக்கம் குடியிருப்பு வாசிகள் நல அமைப்பின் தலைவர் பி. விஸ்வநாதன் கூறும் போது "அடுக்குமாடிக் குடியிருப் புகள் கட்டும் நிறுவனங்கள் அங்கேயே சிறிய கோவிலைக் கட்ட பணம் கொடுத்து நிலத்தை வாங்கி கட்டுகின்றனர். அது பொதுமக்களுக்கு பிரச்சினையை ஏற் படுத்தவில்லை. ஆனால் பொது இடங் களில் கட்டப்படும் கோவில்கள் அனை வருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வண் ணம் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து மூன்று கோவில்கள் கட்டப்பட்டன. அதனை மேலும் விரிவுபடுத்த சிலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களை அகற்றினர். ஆனால் மீண்டும் கோவில்கள் இருந்த இடத்தில் வழிபாடுகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. சில ஆண்டுகள் சென்ற பிறகு அங்கு கோவில்கள் பெரிதாக கட்டப்படும்" என்று கூறினார்.

சிபிடபிள்யூ பகுதியில்

சென்னையில் உள்ள பல அரசு பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தின் உள்ளே அனுமதியின்றி பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள மத்திய அரசு பணியாளர்கள் குடியிருப்பு சிபிடபிள்யூ வளாகத்தில் 4 கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளிகள் ஒன்று கூடி அய்யப்பன் கோவிலைக் கட்டியுள்ளனர். மேலும் அதற்கு அருகிலேயே பெரிய அளவில் கோவில் ஒன்று கட்டப்பட்டு அது ஆண்டு தோறும் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. இது யார் அனுமதியுடன் செயல்படுகிறது. இந்த இடத்திற்கு யார் வாடகை கொடுக்கிறார்கள், இக்கோவில் களில் வரும் வருமானம் எங்கு யாருக்குச் செல்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

கலைஞர் கருணாநிதி நகர் அரசு பணியாளர் குடியிருப்பு வளாகத்தின் ஓரத்தில் இஎஸ்அய் மருத்துவமனைக்கு எதிரே உள்ள பகுதியில் அம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அரசு அதி காரியாக இருந்த ஒருவர் இதைக் கட்டினார். தற்போது அவர் பணி ஓய்வு பெற்று தனது வீட்டைக்காலிசெய்து சென்ற பிறகும் மீண்டும் அக்கோவில் தலைமைப் பூசாரி யாக இருந்து கொண்டு அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.

இரயில்வே நிர்வாகம்

என்ன செய்கிறது?

மாம்பலம் இரயில் நிலையத்தை ஓட்டி வாகனம் நிற்கும் பகுதியில் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இடிக்காமல் பிற பகுதிகளை வாகனம் நிறுத்த பயன்படுத்தி வருகிறது இரயில்வே நிர்வாகம்.

2007-ஆம் ஆண்டு சென்னை கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் இராணுவத்திற்குச் சொந்தமான நிலத்தில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அந்தக் கோவிலை பெரிதுபடுத்தி கும்பாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது புதிதாக வந்த தென்னிந்திய தரைப்படை கமாண்டர் ராணுவத்தின் நிலத்தை ஆக்கிர மித்துள்ள அந்தக் கோவிலை உடனடியாக இடித்துத் தள்ள உத்தரவிட்டார். இராணுவ அதிகாரியின் உத்தரவை அடுத்து கோவில் இடிக்கப்பட்டது, அப்போது எந்த பொது மக்களும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 8.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக