பக்கங்கள்

புதன், 28 பிப்ரவரி, 2018

வெகுண்டெழுந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கடவுளர் படங்களை தீக்கிரையாக்கினர்


ஜாதி இழிவுகளிலிருந்து காக்க முன்வரவில்லையே!

வெகுண்டெழுந்த தாழ்த்தப்பட்ட மக்கள்

கடவுளர் படங்களை தீக்கிரையாக்கினர்

புத்த மார்க்கத்தில் இணையவும் முடிவு



பெங்களூரு, பிப். 25 கருநாடக மாநிலத்தில் கலபுர்கி மாவட்டம் ஜெவர்கியை அடுத்த கோண்டகுளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்கள் சென்றனர்.

கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்துகொள்வதா என்று ஜாதி ஆணவம் கொண்ட உயர்ஜாதி வகுப்பினர் 9.2.2018 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினரை கடுமையாகத் தாக்கினார்கள். இந்த மோசமான தாக்குதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர்.

கோயில் திருவிழா மோதலையடுத்து தாழ்த்தப்பட்டவர்கள் பலரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். இந்து மதத்தின் பெயரால் ஜாதி பாகுபாடுகளால்தான் தாங்கள் தாக்கப்பட்டோம் என்பதை உணர்ந்த அவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்தார்கள்.

அம்முடிவின்படி, 11.2.2018 அன்று  இந்து மதக் கடவுளர்களின் உருவப்படங்களை வீதியில் போட்டு உடைத்து, செருப்புகளை அவற்றின்மீது எறிந்து, அவற்றின்மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள்மீது திணிக் கப்பட்ட இழிவிலிருந்தும், ஜாதி ஆணவத்துடன் உயர் ஜாதியினரால் தாக்கப்படுவதிலிருந்தும் தங்களை காப்பாற்ற இந்து மதத்தில் உள்ள ஆண் கடவுள், பெண் கடவுள் என எந்த ஒரு கடவுளும் முன்வரவில்லை, அந்த கடவுள்களால் பயன் ஏதும் கிடையாது என்று கோபாவேசத்துடன் ஒன்றிணைந்தார்கள்.

அக்கிராம தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தரப்பில் கூறப்பட்டதாவது:

“கோயில்திருவிழாவுக்குசென்றநாங்கள் தாக்கப்பட்டோம். உடல் அளவிலும் உள்ளத் தளவிலும் மோசமாக பாதிக்கப்பட்டோம். ஆகவே, எங்களைக் காப்பாற்றாத கடவுளர் படங்களை எங்கள் வீட்டிலிருந்து தூக்கி எறிவது என்று முடிவெடுத்தோம்’’ என்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்கியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்து மதத்துக்கு முழுக்கு

இந்நிலையில், கடவுளர் படங்களை அகற் றினால் மட்டும் போதாது, சமுதாயத்தில் நிலவி வருகின்ற ஜாதி ஏற்றத்தாழ்வுகளிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டுமானால், இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று கோண்டகுளி கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்க்கமாக முடிவெடுத்துள்ளனர்.

கோண்டகுளி கிராமத்தில் உள்ள 200 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரில் 58 குடும்பத்தினர் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என்றும், அதன்படி, 28.2.2018 அன்று புத்த நெறியை தழுவிக்கொள்வது என்றும் தீர்மானித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மூத்த தலைவர் விட்டல் தாத்மானி, தலித் சேனா தலைவர் அனுமந்த் யேல்சங்கி ஆகியோர் அதற்கான ஏற்பாட்டினை செய்து வருகிறார்கள்.
- விடுதலை நாளேடு, 25.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக