“நம்பிக்கைகள் வேற, உண்மைகள் வேற. இரண்டையும் போட்டுக் குழப்பாதீங்க…”
“அப்படின்னா, நம்பிக்கைகள்ல உண்மை இல்லைன்னு ஒத்துக்கிடுறீங்கதானே? உண்மைதான்னு நம்புறது வேற, அறிவியல்பூர்வமா உண்மை இல்லைன்னு தெரிஞ்சும் நம்புறது வேற, இல்லியா?”
“என்ன சார் பெரிய அறிவியல்? நேத்து சொன்னதை இன்னிக்கு மாத்திச் சொல்றாங்க…”
“எதை அப்படி மாத்திச் சொன்னாங்கன்னு தெரியலை. இருந்தாலும், நேத்து சொன்னது சரியில்லைன்னு தெரிய வருதுன்னா அதை நேர்மையா ஒத்துக்கிட்டு உண்மைமையச் சொல்றது அறிவியல். ஆனால், மாத்திக்கிட்டால் ஏதாவது ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டு மாத்திக்கிடாமலே இருக்கிறது நம்பிக்கை.”
“மாத்திக்கிடுறதோ மாறாமல் இருக்கிறதோ அவங்கவங்க விருப்பம். நம்புறவங்களைப் புண்படுத்தாதீங்கன்னுதான் சொல்றேன்…”
“நம்பிக்கை வலிமையா இருக்குதுன்னா எதுக்காகப் புண்படணும்? அறியாமையில பேசுறாங்கன்னு விட்டுட்டு உங்க நம்பிக்கைகளைத் தடையில்லாமத் தொடர வேண்டியதுதானே? நம்புறதுல எங்கேயோ ஒரு பலவீனம் இருக்குதுன்னு உங்களுக்கே தெரியுது, அதனாலதான் புண்படுறதா நினைக்கிறீங்க. ஆனால், புண்படுத்துறதா சொல்றவங்கள்ல பல பேரு, உண்மையிலேயே புண்பட்ட உணர்விலேயிருந்து அப்படிச் சொல்றதில்லை. தங்களுடைய அதிகாரமும், மக்களுடைய சிந்தனையை அடக்கி வைச்சிருக்கிற மேலாதிக்கமும் தகர்ந்துபோயிடும்கிற ஆத்திர உணர்விலேயிருந்துதான் அப்படிச் சொல்றாங்க…”
“அவங்களை விடுங்க, அந்த அரசியலுக்குள்ல நாம போக வேணாம். ஆனா, நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாதுங்கிறதுதான் என்னோட கருத்து.”
“அவங்களும் இப்படித்தான் சொல்றாங்க. போகட்டும். நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாதுங்கீறீங்க, ஓகே. நம்பிக்கையின்மையைக் கேள்வி கேட்கலாமா?”
“தாராளமா… நம்பிக்கைகளே இல்லாம இருக்கிறது பத்திக் கேள்வி கேட்கிறது நல்லதுதான்.”
“உடம்பு சரியில்லைன்னா டாக்டர்ட்டப் போறது கும்பிட்ட சாமி காப்பாத்தும்கிற நம்பிக்கை இல்லாததாலேதானே? எக்ஸாம் வர்றப்ப விழுந்து விழுந்து படிக்கிறது ஜெபம் பண்ணினதே போதும்கிற நம்பிக்கை இல்லாததாலேதானே? பாடுபட்டு உழைக்கிறது அளவற்ற அருளாளனின் கருணையால் நமக்குரிய அரிசி தானே வந்து சேரும்கிற நம்பிக்கை இல்லாததாலேதானே? அலுவலகத்திலே மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக்கிடறது தலைவிதிப்படி பதவி உயர்வு தானாகவே கிடைக்கும்கிற நம்பிக்கை இல்லாததாலேதானே? வாக்காளர்களை வணங்குறதும் காசு கொடுக்கிறதும் மிரட்டுறதும் கோயில்ல நடத்துன சிறப்பு வழிபாட்டிலே நம்பிக்கை இல்லாததாலேதானே?...”
-நேற்றைய (நவ.4, 2018) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின், விடைபெறுவதற்கு முன், தேநீர்க்கடையில் நடந்த கூடுதல் உரையாடல்.
-குமரேசன்
- தீக்கதிர் நாளேட்டின் முன்னாள் ஆசிரியர்
5.11.18 கட்செவி பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக