பக்கங்கள்

வியாழன், 8 நவம்பர், 2018

"வியப்பின் மறுபெயர் வீரமணி!'' வியப்புக்குரிய நூல்!

ஆங்கிலப் பேராசிரியர் அ. அய்யாசாமி



மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய "வியப்பின் மறுபெயர் வீரமணி" என்னும் நூலினை ஊன்றிப் படித்து,  இவ்வளவு அற்புதமாக ஒருவர் நூல் எழுத முடியுமா என்று வியந்தேன். திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பிள்ளைப் பருவத்திலேயே பெரியாரின் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டு, அவற்றைப் பரப்புவதும், செயல் படுத்துவதுமே தனது பணி என முடிவெடுத்துக் கொண்டு, தெளிவாகச் சிந்தித்து முறையாகத் திட்டமிட்டு வாழ்வின் ஒரு நொடியைக்கூட வீணாக்காமல் முனைந்து பாடுபட்டு, வெற்றிமேல் வெற்றியாக வரலாறு படைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அறிய அறிய தமக்கு ஏற்பட்ட வியப்பை மற்றவர்களின் நெஞ்சங்களில் ஏற்றும் வண்ணம் இந்த நூலை வடித்திருக்கிறார் மஞ்சை வசந்தன் அவர்கள்.

பதினோரு வயதில் மேடைப் பேச்சு, திருமணத்தில் உரை, பெரியாரே பேசுவதற்கு அழைத்த பெருமை, பன்னிரண்டு வயதில் கூட்டத் தலைமை, அடுத்த ஆண்டே மாநாட்டில் கொடியேற்றல், மாணவப் பரு வத்தில் கையெழுத்து ஏடுகள் என்று, கலைஞரின் பதினான்கு வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்ட சாதனையையே முறியடித்த ஆசிரியரின் வியத்தகு சாதனை களுடன் தொடங்கும் இந்த வரலாறு, அவரது சாதனைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பட்டியலிட்டவாறு நீள்கிறது.

பெரியார் அவர்களின் ஆணைக்கேற்ப ஆசிரியர் அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது ஒரு திருப்புமுனை. அவரது வாழ்வில் மட்டுமல்ல, விடுதலையின் வரலாற்றிலும். அன்றிலிருந்து அதற்கு ஏறுமுகம்தான். விற்பனை, அமைப்பு, உள்ள டக்கம் அனைத்திலும்.

மிசாக் கொடுமையில் சிறைப்பட்டு உடலாலும், உள்ளத்தாலும் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளாக்கப் பட்ட இவர், அதனைத் தாக்குப் பிடித்து மீண்டு வந்தது வியப்பே என்கிறார் மஞ்சை வசந்தன் அவர்கள்.

சமூகநீதி காப்பதில் இவர் புரிந்த சாதனை, சாதனை களுக்கெல்லாம் சிகரம். உச்சநீதிமன்றம் பெரும்பாலான தருணங்களில் சமூகநீதிக்கு எதிராகவே செயல் புரிந்திருக்கிறது என்பதனை நினைவில் கொண்டால் தான் ஆசிரியர் அவர்களின் பணி எத்துணை பயன் தந்தது என்பது புரியும். கூட்டங்கள் கூட்டி, மாநாடுகள் நடத்தி, கடிதங்கள் எழுதி, தந்திகள் அனுப்பி, போராட்டங்கள் நடத்தி, நாடாளுமன்ற உறுப் பினர்களை நெறிப்படுத்தி, குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர், உள்துறை அமைச்சர், எதிர் அணித் தலைவர் என்று அனைவரை யும் நேரடியாகச் சந்தித்து உரையாடி சமூகநீதியின் தேவையையும் இன் றியமையாமையையும் உணர்த்தி, அய்ம்பதா, அறுபத்தொன்பதா என்ற கேள்வி எழுந்த போது, இட ஒதுக்கீட்டின் அளவுகோல் மாநிலத் திற்கு மாநிலம் மாறுபடும் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ள வைத்து, தமிழ்நாடு அரசை 69 விழுக் காட்டைப் பாதுகாப்பதற் கெனத் தனிச் சட்டம் இயற்ற வைத்து, அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது அத் தடையை எதிர்த்துப் போராடி, தமிழகச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்து அதற்குப் பாதுகாப்பு நல்கி, அனைத்திந்திய அளவில் மண்டல் குழுவின் பரிந்துரைகளுக்குச் சட்ட வடிவம் தருவதற்கு இடையறாது பாடுபட்ட ஆசிரியர் வீரமணியின் உழைப்பு காவியமாக விரித்துரைக்கத் தக்கது. அதனை ஒன்றுவிடாமல் எளிய உரைநடையில் தொகுத்துத் தந்திருக்கிறார் மஞ்சை வசந்தன் அவர்கள்.

கண்ணன் தந்த கீதை என்றுதான் பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வீரமணி அவர்கள் பல கிருட்டிணன்களைப் பட்டியலிடுகிறார். அதேபோல் கீதையிலும் எத்தனை எத்தனையோ, பல்வேறு நூல் களில்  பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. கண்ணனையும், கீதையையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பகுப்பாய்வு செய்து பலருக்கும் தெரிந்த பகவத் கீதை யிலுள்ள முரண்பாடுகளைக் காரண காரியங்களுடன் தெளிவாக்கி, அவர் ஒரு நூலாக எழுதியவற்றின் தொகுப்பை ஒரே அத்தியாயத்தில் மஞ்சை வசந்தன் அவர்கள் பிழிவாகத் தரும்போது நமக்கு ஏற்படுவது வியப்பல்ல, மலைப்பு!

'உலகம் ஒத்துக் கொண்ட பெரியாரின் வாரிசு' என்ற அத்தியாயத்தில் மஞ்சை வசந்தன் அவர்கள் அடுக் கடுக்காக வாதங்களையும் சான்றுகளையும் அடுக்கித் தரும் நேர்த்தி அற்புதமானது.

இதுபோல் இன்னும் எத்தனையோ செய்திகள். ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆளுமைத் திறன், பண்பு நலன்கள், சாதனைகள், ஆற்றல், விடாமுயற்சி, பணி செய்யும் சீர்மை என்று அனைத்தையும் ஒன்று விடாமல் இந்த நூலினுள் திணித்து நமக்கு விருந்தாக்கித் தரும் மஞ்சை வசந்தனின் நூலே வியப்புக்கு மறுபெயர் ஆகிறது என்று துணிந்து கூறலாம். திராவிட இயக் கத்தின்பால் ஆர்வம் கொண்டவர்கள் தவிரப் பொது வாழ்வில் பங்குகொள்வோர், சிறந்த ஆளுமைகளின் தோற்றத்தை ஆராய்ந்து அறிவு பெறுவோர், புத்தக வாசிப்பாளர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்க நூல் இது. என்னுடைய உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தி உள்ளேன். இதில் சிறிதுகூட உயர்வு நவிற்சி இல்லை.

-  விடுதலை நாளேடு, 3.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக