பக்கங்கள்

சனி, 24 ஆகஸ்ட், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (39): அம்பேத்கரும் பெரியாரும் ஓரே நோக்கமும்,கொள்கையும் உடையவர்கள்!

நேயன்




ஆரிய திராவிட வேறுபாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை (தொடர்ச்சி)

10.3 ”பிராமணன் ஒப்புயர்வுற்றவனாக இருக்கும் காரணத்தாலும் அவனது உயர்ந்த பிறப்பின் காரணத்தாலும் (குறிப்பிட்ட) வரையறைக்குட்பட்ட விதிகளைப் பின்பற்றும் காரணத்தாலும், அவனது குறிப்பிட்ட புனிதத்தன்மை பெற்றிருக்கும் காரணத்தாலும், (எல்லா) சாதிகளுக்கும் தலைவனாயிருக்கிறான்

11:35 பிரமணன் உலகைப் படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான். எனவே அவன் படைக்கப்பட்டவை அனைத்துக்கும் புரவலனாக விளங்குகிறான். அவனிடம் எந்த மனிதனும் அமங்கலமான எதையும் சொல்லவோ, கடுமையான சொற்களைப் பயன்படுத்தவோ கூடாது.

பிராமணர்கள் மனம் கோணும்படியான எதையும் மன்னன் செய்யக்கூடாது என்று கூறி மனு பின்வருமாறு எச்சரிக்கிறார்:-

11:313 அவன் (மன்னன்) மிகக் கடுமையான துன்பத்துக்கு உள்ளான போதிலும் பிராமணர்களுக்குச் சினம் உண்டாக்கக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்குச் சினம் ஏற்பட்டால், கணப்போதில் மன்னனையும் அவனுடைய படையையும் வாகனங்களையும் அழித்து விட முடியும்.

11:31 சட்டத்தை அறிந்த பிராமணன் எந்தக் (குற்றத்தையும்) மன்னனின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதில்லை, தனக்குத் தீங்கு செய்வோரைத் தன்னுடைய அதிகாரத்தினாலேயே அவன் தண்டிக்கலாம்.

11:32 அவனுடைய சொந்த அதிகாரம் மன்னனின் அதிகாரத்தை விடப் பெரியது, எனவே பிராமணன் தனது எதிரிகளைத் தன்னுடைய சொந்த அதிகாரத்தின் மூலமே தண்டிக்கலாம். இப்படி ஆரிய ஆதிக்கத்தைப் பற்றி குறிப்பிடும் அம்பேத்கர், இன ஆய்வுகள் பற்றி விமர்சித்து, எதற்கும் சரியான சான்றுகள் இல்லை என்று கூறி இறுதியில் ஒரு நிலைப்பாட்டை ஏற்கிறார்.

மண்டை ஓட்டு அமைப்புக்குறியீட்டின் அடிப்படையில் இந்திய மக்கள் (1) ஆரியர்கள், 2) திராவிடர்கள், 3) மங்கோலியர்கள், 4) சித்தியர்கள் என நான்காக பிரிக்கலாம் என்ற சர்ஹெர்பர்ட் ரிஸ்லேயால் கருத்தை ஏற்கிறார்.

அடுத்து டாக்டர் குஹியான் கருத்துப்படி இரு இனத்தாரின் உடலமைப்பை ஏற்கிறார். அதாவது 1) நீண்ட தலையை உடையவர்கள் 2) குறுகிய தலையைக் கொண்டவர்கள்.

இதை மேலும் சுருக்கி,

1) மத்திய தரைக்கடல் இனத்தவர் (அதாவது நீண்ட தலை கொண்டவர்) 2) மலைவாழ் இனத்தவர் அல்லது குறுகிய தலையைக் கொண்டவர்கள்.

முதல் இனம்தான் ஆரிய மொழி பேசும் இனம் என்கிறார்.



பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_7இல் பக்கம் 300இல் திராவிட ஆரிய இனப் பிரிவை ஏற்று மிக விரிவாக எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இதோ:

இந்தியாவில் நாகர்கள், ஆரியர்கள் என்ற இரண்டு இனம் இருந்தது. நாகர்கள் என்பது திராவிடர்களே. திராவிடம் என்பது மொழியால் வந்த பெயர். நாகர் என்பது இனப்பெயர். ஆக, திராவிடர் ஆரியர் என்ற இரண்டு இனங்களை அம்பேத்கர் ஏற்கிறார். (ஆதாரம்: பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_7; பக்கம்_300)

மேலும், தாழ்த்தப்பட்ட மக்களின் (திராவிடர்களின்) பூர்வீக நாடான இங்கு ஆரியர்கள் வாழ்ந்துகொள்ள அனுமதித்தற்கு ஆரியர்கள் திராவிடர்களிடம் நன்றிகாட்ட வேண்டும். மாறாக அவர்களை அடக்கியாள்வதும் இழிவு செய்வதும், வஞ்சிப்பதும், தாக்குவதும் நன்றிகெட்ட செயலாகும் என்கிறார் அம்பேத்கர். இதன் பொருள் என்ன? ஆரியர் _ திராவிடர் பாகுபாட்டை ஏற்றதுதானே?

அது மட்டுமல்ல, இதன்மூலம் திராவிடர்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள். மண்ணின் மக்கள். ஆனால் ஆரியர்கள் வந்தேறிய அயல்நாட்டார். ஆரியர்கள் இந்தியாவில் வாழ அனுமதியளித்தவர்கள் என்பதையும் உறுதி செய்துள்ளார். இந்திய வரலாறு நாகர்கள் (திராவிடர்கள்) எனப்படும் ஆரியர் அல்லாதாரால் தொடங்குகிறது. ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் (பின்னாளில்) நுழைந்து தங்களுக்கு வாழ்விடம் தேடிக் கொண்டவர்கள் என்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கர் இனம் பற்றிய மேல் நாட்டார் ஆய்வை ஏற்கத் தயங்கினார். காரணம்,  இன்றைக்குக் கிடைத்த தொல்லியல் தடயங்கள் அன்றைக்குக் கிடைக்கவில்லை. எனவே, இனம் பற்றிய ஆய்வில், ஆய்வு முடிவில் அவருக்கும் மேலை நாட்டு அறிஞர்களுக்கும் கருத்து முரண்பாடு இருந்ததே ஒழிய, ஆரிய திராவிட இனப் பிரிவை ஏற்றார். ஆனால், ஆரிய ஆதிக்கம் பற்றியோ அதை அழிக்க வேண்டும் என்பது பற்றியோ அவருக்குக் கருத்து முரண்பாடு இல்லை.

ஆரிய ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் அடித்தட்டு மக்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதில் பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.

அதை அம்பேத்கரே குறிப்பிடுகிறார்.

1924இல் வைக்கத்தில் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் நடத்திய மனித உரிமைப் போராட்டம் என்னைக் கவர்ந்தது. இந்தியாவிலே நடந்த முதல் மனித உரிமைப் போராட்டம் அதுதான். அந்தப் போராட்டத்தைப்பற்றி நான் பத்திரிகையில் தலையங்கம் எழுதினேன். மிகவும் உருக்கமாக எழுதினேன்.

ஆரிய பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட தோழர் ஈ.வெ.ரா முன்னின்று தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியது என் மனதைத் தொட்டது. நான் பின்னாளில் மாகாத் போராட்டம் நடத்த அதுதான் வழிகாட்டுதலாக இருந்தது என்கிறார் அம்பேத்கர் (Dr. Ambedkar Life and Mission -Keer) மேலும், இந்து மதத்தை அடியோடு ஒழித்து, புதிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துதான் எனக்கு உடன்பாடாக இருந்தது. நான்கு வர்ணத்தையும் பஞ்சமர்களையும் ஒழித்து ஒரே மனிதர்களாகச் செய்யாமல் என்ன சீர்திருத்தம் செய்தாலும் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் சூத்திரர்களுக்கும் என்ன பயன்?

இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டில் பெரியாரும் செய்து கொண்டிருக்கிறார் என்றார் அம்பேத்கர் (அம்பேத்கர் பேசுகிறார் பக்கம் 20)

அடுத்து சென்னை மாகாணத்தில் வகுப்பு வாரி உரிமை உத்தரவை ரத்து செய்தது சென்னை மாகாணத்தில் பெரியார் ஈவெரா தலைமையில் தமிழகமே கொதித்தெழுந்தது. இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் நான் உறுதியாய் இருந்தேன் என்கிறார். ஆக, சமூக நீதிக்குரிய இடஒதுக்கீடு, இந்துமத ஒழிப்பு, ஆரிய பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு ஆக நான்கிலும் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தனர் என்பது விளங்குகிறது. அப்படியிருக்க ஆரிய திராவிடப் போராட்டம் அம்பேத்கருக்கு பிடிக்காது என்று பித்தலாட்டம் பேசுவது எப்படிப்பட்ட மோசடிச் செயல்.

ஆரியர்களின் ஆதிக்க சாஸ்திரங்களை யெல்லாம் மாற்றி எழுத வேண்டும். அதுவே புரட்சி மதம் என்று அம்பேத்கர் கூறினார் என்றால் அது ஆரிய எதிர்ப்பில்லாமல் வேறு என்ன? இன ஆய்வு பற்றிய சிந்தனையில் அம்பேத்கருக்கு அய்யங்கள் இருந்ததால் ஆரிய இனமே இல்லை. திராவிட இனமே இல்லை என்றா பொருள்? இருவகை மண்டை ஓட்டை கூறுகிறாரே? மண்டையில் ஏறவில்லையா? நாகர் (திராவிடர்), ஆரியர் என்ற இரு இனங்கள் உண்டு என்று கூறுகிறாரே அதன் பொருள் என்ன?

நாகர்கள் பேசியது தமிழ் என்கிறாரே, அதன் அர்த்தம் என்ன? ஆரியர் வந்தபின் வடக்கில் வாழ்ந்த நாகர்கள் (திராவிடர்) மொழி மாறியது என்கிறார். ஆக, இந்தியா முழுமையும் வாழ்ந்தவர் திராவிடர் என்கிறார். ஆரியர் வந்தேறி என்கிறார். இவையெல்லாம் உம் கண்ணுக்குப் படவில்லையா? ஆரிய திராவிட பிரிவை அவர் ஏற்றதற்கு இவை ஆதாரங்கள் அல்லவா?

(தொடரும்...)

-  உண்மை இதழ், 1-15.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக