பக்கங்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!


நூல்:            கொஞ்சம் டார்வின்

                    கொஞ்சம் டாக்கின்ஸ்!

ஆசிரியர்:     மனநல மருத்துவர் ஷாலினி

வெளியீடு:    கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை - 87.

கிடைக்குமிடம்: 122/130 என்.டி.ஆர் தெரு,

                   ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்,

                   சென்னை - 24.

                   தொலைபேசி: 044 - 42047162

 விலை: 80. பக்கங்கள்: 132

 


 


 


வியத்தலும் இலமே!

நிர்வாணப் பார்வையால் இந்த மொத்த உலகையும் அளந்து பார்க்கும் பயிற்சியின் அடுத்த கட்டமாக நம் அருகாமையில் மிகப் பரவலாகப் பயன்படும் சில மீம்களை ஆராயலாம்.

உணவு:

பெரும்பாலானவர்களின் வீட்டில் காலை எழுந்தவுடன் காஃபி என்று பழக்கம் நிலவுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த காஃபி எனும் கொட்டை முதன்முதலில் உற்பத்தி ஆன நாடு அரேபியா. இன்றுவரை காஃபியின் உயிரியல் பெயர் ‘காஃபியா அரேபிகா’தான். அரேபியர்கள் அவர்களது நாட்டிற்கு இருபுறமும் இருந்த எல்லாக் கரைகளையும் கண்டவர்கள், வணிகம், வானியல், அறிவியல், கணிதம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒரு காலத்தில் அரேபியர்களே மிகச் சிறந்த சாதனையாளர்களாகத் திகழ்ந்தார்கள். இன்றளவும் நாம் பயன்படுத்தும் பிரபல ஆங்கிலச் சொற்களின் வேர் அரபு மொழியில் இருந்தே வருகிறது. உதாரணம் அல்கஹால் (மது), அல் சீப்ரா, அல் காரிதம் (கணித முறைகள்), அல் பெட்ராஸ் (பறவை இனம்) அல் கெமி (வேதியல்).

இந்த வரிசையில் அரேபியர்கள் உலகிற்குத் தந்த பெரும் கொடைதான் காஃபி. அய்ரோப்பா, வடஅமெரிக்கா மாதிரியான குளிர்ப் பிரதேசங்களில், சூடாகப் பருக, களைப்பு நிவாரணப் பானம் தேவைப்பட்டபோது அவர்கள் பயன்படுத்தியது அரேபியர்கள் அறிமுகப்படுத்திய காஃபியைத்தான். காஃபி தூக்கத்தைத் துரத்தி அடித்தது, தலைவலியைப் போக்கியது. ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தியது. குளிர்ப் பிரதேசத்திற்குத் தோதான பானமாக இருந்ததால், ஆங்கிலேயர் காஃபியை விரும்பிப் பருகினார்கள். அவர்கள் ஆதிக்கம் செலுத்திய ஊர்களில் எல்லாம் காஃபித் தோட்டங்களை நிறுவி, தங்களுக்குத் தடையில்லாமல் காஃபி கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

இப்படிக் குளிர் தேசத்தின் காலைப் பானமான காஃபியைத்தான் வெப்ப தேசமான இந்தியாவிலும், காலை எழுந்தவுடன் காஃபி என்று பருகுகிறோம் நாம்!

தேனீரும் கிட்டத்தட்ட இதே போலத்தான். சீனர்கள் குளிர்காலத்தில் பயன்படுத்திய கசாயம் தேனீர். அதை மார்கோபோலோ மாதிரியான வியாபாரிகள் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த, இந்திய மலைகள் எல்லாம் மொட்டை அடிக்கப்பட்டு, தேனீர்த் தோட்டங்களாக மாறின. உஷ்ணப் பிரதேசத்தின் பிரஜைகளான இந்தியர்களும் தேனீர் குடிப்பதைத் தினசரி மீமாக மாற்றிக் கொண்டார்கள்.

இப்படிப் பல நாட்டுப் பழக்க வழக்கங்களில் தினசரிச் சங்கமத்தைச் சமையலில்தான் அப்பட்டமாகப் பார்க்கலாம். நாம் இந்திய உணவு என்று அடித்துச் சொல்லும் பலதும் வெளியூரிலிருந்து இங்கே வந்து சேர்ந்தவை.

மிளகாயும், உருளைக்கிழங்கும், தக்காளியும் தென் அமெரிக்காவிலிருந்து போர்ச்சுகீசியரால் இங்கே அறிமுகமானவை. பிரியாணியும், பரோட்டாவும், கபாபும், குருமாவும் முகலாயர்கள் அறிமுகப்படுத்தியவை.

இதைப் போலவே ஆசியாவில் வளரும் மிளகு, பட்டை, லவங்கம், ஏலம், மாதிரியான மசாலா பொருட்கள் பெரும் அளவிற்கு அய்ரோப்பிய சமையலில் பயன்பட்டன. அய்ரோப்பியர்கள் இந்தியாவை நோக்கிப் படை எடுக்கக் காரணமே இந்த மிளகும், பட்டை லவங்கமும்தான் என்றால் இப்போது நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால், அய்ரோப்பாவின் கொடும் குளிரில் வெறுமனே உப்புப் போட்டு சுட்ட அல்லது வேகவைத்த கறியைச் சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் அவர்கள் ஏன் மசாலா பொருட்களுக்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று.

உணவு என்பதை வெறும் உண்டு உயிர்வாழும் வழியாக மட்டும் மனிதர்கள் பாவிக்கவில்லை. உணவு என்பது அந்தஸ்தின் குறியீடு, மத நம்பிக்கையின் குறியீடு, தூய்மையின் குறியீடும்கூட.

உதாரணத்திற்கு, இன்று அதிகம் சம்பாதிக்கும் நபர்கள் இயற்கையின் தூய்மை கொஞ்சமும் கெட்டுவிடாத ஆர்கானிக் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பது, இதுதான் பாதுகாப்பு, இதுதான் இயற்கையோடு ஒட்டிய வாழ்வு என்று இவர்கள் நம்புவதால், அதிக விலை கொடுத்தும் ஆர்கானிக் உணவை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

அதேபோல சில மத நம்பிக்கைகளும் உணவுப் பழக்கங்களை மாற்றிவிடுகின்றன. உதாரணத்திற்குச் சமணர்கள். அகிம்சை என்பது சமணத்தின் முக்கிய கொள்கை என்பதால், பிற உயிர்களுக்குத் தீங்கே இல்லாதபடி தங்கள் உணவு முறையை வகுத்துக் கொண்டார்கள்.

இவர்கள் உயிர்களை ஏக்கேந்திரியம், திவியேந்திரியம், த்ரியேந்திரியம், சௌயேந்திரியம், பஞ்சேந்திரியம் என்று புலன் எண்ணிக்கையை வைத்து வகைப்படுத்துகிறார்கள். அதிக இயந்திரியங்கள் இருக்கும், மிருகம், பறவை, மீன், முட்டை ஆகிய உயிர்களுக்கு ஆத்மா இருக்கும் என்பதால், இவற்றை இவர்கள் சாப்பிடவே கூடாது.

செடிகளுக்கு ஒரே இயந்திரியம் இருப்பதால் அவற்றை மட்டும்தான் உண்ணலாம். அதுவும் மீண்டும் உயிர்ப்பிக்கவல்ல பூமியின் அடியில் விளைகிற, கிழங்கு வகைகள், கேரட், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பீட்ரூட் ஆகிய காய்களை இவர்கள் உண்ணுவதில்லை.

வடிவில் ஒன்றாக இருந்தாலும், பல உயிர்களைச் சுமக்கும் அனந்தகாய்களையும் இவர்கள் உண்பதில்லை. உதாரணம், நிறைய விதைகளைக் கொண்ட, கத்திரிக்காய், பூசணிக்காய், தரைப்பூசணி, பலாப்பழம் மாதிரியான உணவுகளைச் சாப்பிட மாட்டார்கள்.

தேன், தேனீக்களை இம்சித்துப் பெறுவது என்பதனால் அதுவும் விலக்கப்பட்ட உணவு.

வெண்ணை, காளான், தோசை, டோக்லா, மது மாதிரியான பதப்படுத்தப்பட்ட, பிற நுண்ணுயிர் இருக்கக்கூடிய உணவையும் இவர்கள் உண்பதற்குத் தடை.

பாலும் தயிரும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தயிர் அன்று தோய்ந்ததாக இருக்க வேண்டும். புளித்திருந்தால் அதில் நுண்ணுயிர்கள் இருக்குமல்லவா?-

இப்படிப் பலவிதமான அத்தியாவசியச் சத்துக்கள் தரக்கூடிய உணவுகளைத் தவிர்த்துப் பத்திய உணவாய் இவர்கள் உண்டு வந்தால், கெட்ட சக்திகள் தங்களை அண்டாது, சாத்வீகமாய் மனதை வைத்துக்கொள்ளலாம் என்று சமணர்கள் நம்புகிறார்கள்.

ஏதோ காலத்தில், “இவ்வளவு சத்துக் குறைவான உணவை உண்டாலும், எவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறோம் பார்’’ என்று தன் மரபணு வீரியத்தைக் காட்டிக்கொள்ள இந்த மீம் பயன்பட்டிருக்கலாம். அல்லது மிகையான வளங்கள் நிறைந்த செல்வச் செழிப்பான காலத்தில், மனிதர்களுக்கு உடல் பருமனால் வந்த உபரிநோய்களுக்கு அந்தச் சமணப் பத்திய உணவு முறை, எடை குறைக்க உதவி, நல்ல ஆரோக்கியத்தைத் தந்திருக்கலாம். இந்தக் குறிப்பிட்ட தேவை இருந்த காலத்தில் சமணக் கோட்பாடு பயனுள்ள மீமாக இருந்திருக்கலாம். 

எவ்வகை உயிரானாலும், அதனால் தானாய்த் தனக்குண்டான எரிபொருளை உருவாக்கிக் கொள்ள முடியாது. செடிகள் சூரிய ஒளியோடு கரியமில வாயுவைக் கலந்து எரிபொருளைத் தயாரிக்கின்றன. ஆனால், செடிகள் இப்படி உணவு தயாரிக்க, அவற்றிற்கு கரியமில வாயுவை ஏற்படுத்தித் தருவதே மற்ற தாவரபட்சினி மிருகங்கள்தான். மரங்கள் பிழைக்க வேண்டுமானால் அங்கே மற்ற விலங்குகளும் உடனிருக்க வேண்டும்.

சமணர்கள் என்றால் எங்கோ குஜராத்தில் மட்டும் வாழ்பவர்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சங்ககாலத் தமிழர்களில் பலரும் சமணரே. பல்லவர், களப்பிரர் காலத்தில் சமணம்தான் தமிழகத்தின் மிகப் பிரசித்தமான, பலரால் கடைப்பிடிக்கப்பட்ட பெரு மதம். இன்றும் தமிழ்ச் சமணர்கள் சிறுபான்மையினராய் இங்கே வசிக்கிறார்கள்.

ஆனால், சங்க காலத்தில் பெரு மதமாய் இருந்த சமணம், இப்போது எப்படிச் சிறுபான்மை மதமாய் மாறியது?

எவ்வகை உயிரானாலும், அதனால் தானாய்த் தனக்குண்டான எரிபொருளை உருவாக்கிக் கொள்ள முடியாது. செடிகள் சூரிய ஒளியோடு கரியமில வாயுவைக் கலந்து எரிபொருளைத் தயாரிக்கின்றன. ஆனால், செடிகள் இப்படி உணவு தயாரிக்க, அவற்றிற்கு கரியமில வாயுவை ஏற்படுத்தித் தருவதே மற்ற தாவரபட்சினி மிருகங்கள்தான். மரங்கள் பிழைக்க வேண்டுமானால் அங்கே மற்ற விலங்குகளும் உடனிருக்க வேண்டும்.

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் இயற்பியல் பூங்காவை நிறுவியபோது, என்ன முயற்சித்தும் அங்கே பசுமையே ஏற்படவில்லையாம். இத்தனைக்கும் நீர்வளம் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பகுதிதான் அது. ஆனால், அங்கே பூக்கள் பூக்கவில்லை, பறவைகள் வந்து கூடுகட்டவில்லை, வறட்சி தாண்டவமாடியது. மான்கள் எல்லாம் செத்துப்போக ஆரம்பித்திருந்தன.

ஏன் என்று புரியாமல் குழம்பினார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். பலவாறாக யோசித்து, நான்கு ஜோடி ஓநாய்களை இந்த வனப்பகுதியில் அறிமுகப்படுத்திவிட்டார்கள். அடுத்த ஆண்டே, பூக்கள் பூத்துக்குலுங்கின, பறவைகள் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தன. மான்கள் ஆரோக்கியமாக துள்ளி ஓடின. எப்படி?

ஓநாய்கள் இல்லாத காட்டில் மான்களின் எண்ணிக்கை அளவிற்கு அதிகமாகப் பெருகி இருந்தது. இத்தனை மான்களும் மேய்ந்ததில் எல்லாச் செடிகளும், முளையிலேயே தின்னப்பட்டிருந்தன. அதனால் செடிகள் துளிர்க்கவில்லை. அதனால் முழு வளர்ச்சி இல்லை. அதனால் மரங்கள் உயரமாகி இருக்கவில்லை. அதனால் பறவைகள் வந்திருக்கவில்லை.

ஆனால் ஓநாய்கள் வந்த பிறகோ, மானின் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதனால் செடிகள் முழுவளர்ச்சி அடைந்தன. பூத்துக் காய்த்துக் கனிந்தன. பறவைகள் வந்து பழங்களை உண்டு, விதைகளைப் பரப்பின, அதனால் காடு பெருகியது.

இதுதான் இயற்கையின் பிரம்மாண்ட உணவு வலை. இப்படி ஒவ்வொரு உயிரும் அதன் அளவோடு இருந்ததால்தான் உலகின் சமன்பாடு சரியாக இருக்கும்.

இயற்கையின் இந்த பிரம்மாண்ட அமைப்பை முழுவதுமாய்ப் புரிந்து கொள்ளாமல், வெறுமனே கொல்லாமை என்கிற ஒரே மீமை மட்டும் காப்பாற்றி வந்தார்கள் சமணர்கள்.

இப்படிச் சமணர்கள் ஜீவகாருண்யம் காத்து, அகிம்சையைப் போதித்தபோதுதான், வெளியிலிருந்து வந்தார்கள், மாமிசம் சாப்பிடும் ஆயுதம் ஏந்திய சைவர்கள். சைவர்கள் வழிபட்ட சிவபெருமானோ சமணக் கோட்பாடுகள் அனைத்திற்கும் நேர் எதிரானவர். மாமிசம் சாப்பிடுவார், நாட்டியம் ஆடுவார், தன் மனைவியோடு இல்வாழ்க்கை நடத்துவார். அவர் தவமிருக்கப் போனாலும் அவர் மனைவி அவரைத் தடுத்து நிறுத்துவார். மனைவிக்கு அவ்வளவு உரிமையும் தன்னில் பாதிப் பாகத்தைக் கொடுத்தார் சிவன்.

சமண மீம் பிழைத்ததா? சைவ மீம் பிழைத்ததா?

ஆயிரக்கணக்கான சமணத் துறவியர் எல்லோரும் சைவர்களிடம் வாதத்தில் தோற்றுப் போய், ஒப்பந்தமிட்டபடியே கழுவில் ஏறித் தற்கொலை செய்து மாண்டு போனார்கள். “கழுவில் ஏறி’’ என்பது சொல்வதற்கும் கேட்பதற்கும் மிக லேசாய் இருந்தாலும், அது மிகக் கொடூரமான தண்டனை முறை.

ஒரு கூரிய கட்டையின் மேல், ஆசன வாய் குத்தும்படி உட்கார்ந்துக்கொண்டே இருத்தல். மெல்ல மெல்ல அந்தக் கட்டையின் கூரிய முனை குத்தி குத்தியே உதிரம் வெளியேறி, குடல் அழுகி, மிகுந்த வலியுடன் சாகும் முறை இது. ஏகேந்திரியத்திற்கெல்லாம் அகிம்சை மீமைப் போதித்த சமணத் துறவியர் வெறும் ஒரு வாக்குவாதத்தில் தோற்றுப் போனதற்காக ஏற்றுக்கொண்ட தண்டனை இது!

இப்போது உங்கள் நிர்வாணப் பார்வையை வைத்துக் கவனித்துச் சொல்லுங்கள், எந்த மீம் பிழைக்க உதவும்?

இது பல்லாண்டு காலங்களுக்கு முன் நடந்த மீம் யுத்தம். இதே போன்ற ஒரு மீம் யுத்தம் சென்ற நூற்றாண்டிலும் நடந்தது.

சமண மதம் என்னதான் பெரு மதமாகத் தொடராவிட்டாலும், அதன் கோட்பாடுகள் வெவ்வேறு விதங்களில் நடைமுறை வாழ்வில் இழையோடிக் கொண்டேதான் இருந்தன. மொட்டை அடித்துக்கொள்வது, பள்ளிக்குப் போய்ப் படிப்பது, விரதமிருப்பது, முக்கியமான விரத நாட்களில் மாமிசம் உண்ணாமல் இருப்பது மாதிரியான பல குட்டி சமண மீம்கள் இன்றும் நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

அதில் ஒரு பகுதிதான் மாட்டுக்கறி உண்ணாமல் இருப்பது.

மாட்டுக்கறி, குதிரைக்கறி, ஆட்டுக்கறி என்பன எல்லாமே வைதீக (வேத) காலத்தில், அன்றாடம் எல்லோரும் யாகத்தில் வாட்டிச் சாப்பிட்டு வந்த உணவு. ஆனால், ஆஸ்தான மதமாய்க் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்த காலத்தில், கறி உணவு அந்தஸ்தில் குறைவானதாகவும், அகிம்சை உணவு அந்தஸ்தில் உசத்தியானதாகவும் கருதப்பட்டது.

அதனால் வைதீகர்கள் சமண மதக் கோட்பாடுகளுக்கு மாறினார்கள். அகிம்சை முறைப்படி தயாராகும் சாத்வீ உணவிற்கு மாறினார்கள். இன்றும் வைதீகர்கள் (பிராமணர்கள்) இஞ்சி, பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை. சாத்வீக உணவைச் சாப்பிடுவதை இவர்களும் தம் கொள்கையாக ஏற்றிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, சமணப் பெயரான ஸ்ரமணா எனும் ஷர்மா என்கிற பெயரை இவர்களே இன்னமும் தங்கள் குடும்பப் பெயராகக் கொண்டிருக்கிறார்கள். ஷர்மா என்பது வடநாட்டில் மட்டும் விளங்கும் குடும்பப் பெயர் என்று சிலர் நினைத்தாலும், உண்மையில் தமிழ் பேசும் பல பிராமணரின் முழுப் பெயரையும் நீட்டி முழங்கினால், கடைசியில் சர்மா என்றே முடியும்.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்க முன்பு வரை, பிராமணரை அழைத்து மரியாதை செய்வதை, “சமாராதனை’’ அதாவது ஸ்ரமணருக்கு ஆராதனை என்றே அழைத்திருக்கிறார்கள்.

இவை எல்லாமே இன்றையப் பிராமணர்கள் முன்னாளில் சமண மத நம்பிக்கையின் வழி வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள்.

இந்தச் சமண -_ பிராமணக் கோட்பாடுகளின்படி மாமிசம் சாப்பிடுவது மஹா பாவம். அதுவும் அவர்கள் உட்கொண்ட ஒரே மாமிசப் புரதமான, பால் எனும் அத்தியாவசிய உணவினைத் தரும் இன்னொரு தாயான பசுவின் மாமிசத்தைச் சாப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மஹா பாதகமான குற்றம் என்றே இவர்கள் கருதினார்கள்.

சமண _ பிராமண மீம்கள் அதிகப் புழக்கத்தில் இருந்த இந்தக் காலத்தில் பசுவின் மாமிசத்தைச் சாப்பிடும் நபர்களை எல்லாம் மிலேச்சர்கள், பாவிகள் என்றே இவர்கள் கருதினார்கள்.

இருந்தும் பசுவின் மாமிசத்தைச் சாப்பிடும் வழக்கம் நின்றபாடில்லை. போருக்குப் போகும் வீரர்களும், காட்டில் வேட்டைக்குப் போகும் ஆட்களும் சமணக் கோட்பாடுகளை எப்படியும் கடைப்பிடிக்க முடியாது. கிடைத்ததைச் சாப்பிடாவிட்டால் அவர்கள் உயிரோடு திரும்ப முடியாதே!

அத்தோடு வெகுமக்கள் உண்ணாத உணவென்பதால், மலிவாகக் கிடைத்த மாமிசம் இது, அதனால் ஏழைகளுக்கு இது சகாய உணவாகிப் போனது. இப்படி மாட்டுக்கறி சாப்பிடலாம் எனும் மீம் ஒரு பக்கம், மாட்டுக்கறியைச் சாப்பிடவே கூடாது, பாலை மட்டும்தான் அகிம்சையாக உட்கொள்ளலாம் எனும் மீம் இன்னொரு பக்கம்: இதில் எந்த மீம் பிழைப்பிற்கு உகந்தது?

இந்தத் தர்க்கம் இந்தியாவில் ஓடிக்கொண்டிருந்தபோது தான், மாட்டுக்கறியைத் தன் முழு நேர உணவாய்ச் சாப்பிடும் அய்ரோப்பியர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள். அகிம்சை உணவை மட்டுமே சாப்பிட்டுச் சாத்வீகமாய் வாழ்ந்த கோடிக்கணக்கான மனிதர்களை, சில நூறு அய்ரோப்பியர்கள் அடிமைகளாக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இப்போது மீண்டும் யோசித்துச் சொல்லுங்கள்: எந்த மீம் பிழைக்க உதவியது?

உடைகள்:

முன்பு நெசவு என்பது பெரும்பாலும் கைத்தறி மட்டுமே. அதில் உழைப்பு அதிகம். அதனால் கூலி அதிகம். அதனால் துணியின் விலையும் அதிகமாக இருந்த காலம். துணியின் விலை அதிகம் என்பதால், ஏழைகளுக்கு உடை என்பதே கட்டுப்படியாகாத நிலை. அதனால் ஆடவர் ஒரு கோவணமும், பெண்கள் வெறுமனே கண்டாங்கிச் சேலையும் அணியும் பழக்கத்தில் இருந்தார்கள்.

ஆடைகளுக்கு விலை உண்டு என்பதனால் அவை அந்தஸ்தின் குறியீடாயின. அந்தஸ்தின் குறியீடானதால், ஏழைகள், அடிமைகள், குறைந்த சமூக அந்தஸ்தில் இருப்பவர், “உயர்குடிக்குச் சமமாய் உடை அணியக்கூடாது’’ என்கிற வர்க்க பேதம் இந்தியாவில் இருந்தது.

அதனால் உயர்குலப் பெண்கள் மட்டும்தான் மேலாடை அணியலாம். மற்ற சாதாரண குலப் பெண்கள் மேலாடை அணியவே கூடாது என்பது பண்டைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பொது விதி. இப்படி ஆடை அணியாமல் இருந்த பெண்களின் முலை அளவைப் பொறுத்து, அதற்கு ஏற்பக் கப்பம் கட்ட வேண்டும் என்றும் ஒரு விசித்திர உபவிதியும் இருந்தது.

பெரிய முலை இருக்கும் பெண்ணுக்கு அதிக வரி, சின்ன முலை இருக்கும் பெண்ணுக்குக் குறைந்த வரி என்று முலைக்காரம் வசூலிக்கப்பட்டது.

இப்படி வரி செலுத்தாத பெண்களை மாடுகளுக்குப் பதிலாக ஏரில் பூட்டி உழச் செய்யும் தண்டனை வேறு விதிக்கப்பட்டது.

இந்தச் சட்டம் அமலில் இருந்தபோதுதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். பெண்களை இப்படிக் கொடூரமாக நடத்தும் அவலத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தைக் கிருத்துவப் பாதிரிமார்களும் கன்னியாஸ்திரிகளும் மேற்கொண்டதினால், திருவாங்கூர் சமஸ்தானத்துப் பெண்களுக்கெல்லாம், “கிருத்துவராக மாறிவிட்டால், நாமும் இவர்களைப் போல உடம்பை மறைக்கும் குப்பாயம் போட்டுக்கொள்ளலாம்’’ என்கிற ஆசை தொற்றிக்கொண்டது.

இதனாலேயே கன்னியாகுமரி, நாகர்கோயில், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் பலரும் குடும்பம் குடும்பமாகக் கிருத்துவ மதத்திற்கு மாறி, முழு ஆடை அணிந்துகொண்டார்கள்.

இப்படி மதம் மாறாத மற்ற பெண்கள் பெரும் அவலத்திற்கு ஆளாகிட, வேதனை தாளாமல், நங்கேலி எனும் பெண், தன் மார்பகங்களைத் தானே அறுத்து வாழை இலையில் வைத்து, “இதற்குத் தானே இவ்வளவு அட்டகாசம்?’’ என்று கப்பம் கேட்டு வந்த அரண்மனைக் காவலருக்குக் கொடுத்துக் கேட்க, அந்தக் காட்சியைக் கண்டு பயந்து ஓடினார்கள் காவலர்கள்.

நங்கேலி அத்தோடு உயிரிழந்தாள். அவள் மரணத்தின் துக்கம் தாளாமல் அவள் கணவனும் உடன் கட்டை ஏறி இறந்து போனதாய்ச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் திருவாங்கூரில் பெரிய புரட்சியை உருவாக்க, 1813_1859, கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் இந்த தோள் சீலைப் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் திருவாங்கூர் அரசி மனம் இளகி, இந்தக் கொடுமையான முலைக்காரம் மீமை நீக்கி, அனைத்து ஜாதிப் பெண்கள் பொதுவான மேலாடை அணியலாம் என்கிற புதிய மீமுக்கு மாறினார்கள்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக