பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

அமெரிக்க பேராசிரியரின் கேள்வியும் - பதிலும்! (1)(2)

அமெரிக்க பேராசிரியரின் கேள்வியும் - பதிலும்! (1)


அருமை நண்பர் அமெரிக்கப் பேராசிரியர் முனைவர் மானமிகு அரசு செல்லையா இரண்டு கேள்விகள் (27.10.2020) கேட்டுள்ளார்.


கேள்வி: நீங்கள் படித்த பல புத்தகங்களில் மிகவும் சிறந்தவையாகக் கருதுவன எவை? அவற்றை வரிசைப்படுத்தினால் எங்கள் புத்தகப் பட்டியலிலும் அவற்றை சேர்த்துக் கொள்ள இயலுமல்லவா?


இதற்குப் பதில் எழுதுவது நீண்ட ஒரு ஆய்வுக் கட்டுரை போல ஆகிவிடக்கூடும்! காரணம், எனது மாணவப் பருவம், குறிப்பாக கல்லூரி-பல்கலைக்கழகக் காலந்தொட்டே பற்பல நூல்களை நானே தேர்வு செய்தும் அல்லது மிக நெருக்கமான நண்பர்கள், இயக்கப் பிரமுகர்களான டார்ப்பிட்டோ ஏ.பி.ஜெனார்த் தனம் எம்.ஏ., போன்றவர்கள், எனது ஆசிரியர் கள், நூலக நண்பர்கள் மூலம் அறிவுறுத்தப்படும் பல நூல்களை வாங்கியோ அல்லது எங்கள் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கோ சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவன்.



தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அவ்வப்போது படித்த நூல்கள், மீண்டும் மீண்டும் படிக்க வேண் டும் என்று விரும்பப்படும் நூல்கள் வி.ச.காண் டேகரின் புதினங்கள், ராகுல சாங்கிருத்தியாயனின் நூல்களான ‘வால்காவிலிருந்து கங்கை வரை', ‘பொது உடைமை தான் என்ன?' மற்றும் ‘சிந்து முதல் கங்கை வரை‘, ‘ராஜஸ்தானத்து அந்தப் புரங்கள்', ‘ஊர் சுற்றிப் புராணம்'. ஆங்கிலத்தில் 'One Hundred Great Lives '. பண்டித நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா', 'Glimpses of the World History', ‘Letters From a Father to his Daughter' மற்றும் ‘Gilbert Slater’s - Dravidian Elements in Indian Culture' - இப்படி நீளும். அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. என்னும் இராமசாமி அய்யங்கார்  எழுதிய மொழி தொகுப்பு நூல்களும் அடங்கும். ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை விரும்பினால், அவர் எழுதிய அத் துணை முத்துக்களைச் சேர்ப்பதும், படிப்பதும் எனது வாடிக்கை!


பொதுவாக ஆங்கிலப் புதினங்களை அவ் வளவு விரும்பிப் படிப்பதில்லை.


ஒருமுறை அமெரிக்க நாவலாசிரியர் Irving Wallace  அவர்களது நூலை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார் - பல ஆண்டுகளுக்கு முன்பு. (அவர் வித்தியாசமான எழுத்தாளர்-ஓராண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவார்). அது புதினமாக இருந்தாலும், குறிப்பிட்ட மய்யக் கருத்து ஒரு சீர்திருத்தமாகவோ, சமூகத்தில் புரையோடிப் போன பிரச்சினையை அம்பலப் படுத்துவதாகவோ இருக்கும் என்பதால், அவரது அத்துணை நூல்களையும் படித்துச் சுவை காண்பேன்.


'The Man' என்ற ஒரு புதினம். அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பினத்தவர் தற்காலிகமாகக்கூட அதிபராக வந்தால் எப்படி யெல்லாம் தங்களது ஒவ்வாமையை அவரிடம் பிற சமுகத்தவர் காட்டுவர் என்பதைத் தொலை நோக்குடன் எழுதினார். அதனையே அறிஞர் அண்ணா அவர்கள் ‘வெள்ளை மாளிகையில்...!!' என்று ‘திராவிட நாடு' ஏட்டில் மிகமிகச் சிறப்பான இலக்கிய நடையில் எழுதினார்! மூலத்தைவிட இவரது தெள்ளு தமிழ் நடை மிகச் சிறந்ததாகும்!


 எந்த அளவுக்கு அமெரிக்க முற்போக்கு எழுத்தாளர்  Irving Wallace  - இர்விங் வேலஸ் அவர்கள், மனித உரிமையின் மீது தணியாத ஆர்வம் கொண்டவர் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு. 1976இல் நாங்கள் “மிசா”வில் - இந்தியா வின் நெருக்கடி நிலை காலத்தில் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டபோது வெளிவந்த ஒரு நூல்பற்றி ‘ஹிந்து' நாளேட்டில் மதிப்புரை படித்து, அதனை வாங்கி அனுப்பச் சொன்னேன். வீட்டாரும் அனுப்பினர். அந்தப் புதினத்தின் பெயர் ‘The R Document' (‘ஆர்.டாக்குமெண்ட்') என்பது! நெருக்கடி காலப் பிரச்சினைகள், கருத் துரிமைப் பறித்தல்  எல்லாம் அதில் மய்யப்படுத்தி கற்பனை போல எழுதப்பட்ட ஒன்றாகும். இந் திய அவசர கால நிலையின் வேற்று உருவகம் அந்தப் புத்தகம். அதனை அன்றைய மத்திய அரசு விற்காமல் பார்த்துக் கொண்டது, தடுத்து விட்டது! பிறகு செய்தி அழிந்து விட்டது!


இப்படி பல நூல்கள் தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் போன்றவர்களின் நூல்கள் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டு, அசைபோட வேண்டியவையாகும். அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், கா.அப்பாதுரையார், மயிலை சீனி.வேங்கடசாமி  ஆகியோர் எழுதிய நூல்கள் என - இப்படி நீண்ட பட்டியலே உண்டு.


‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதுமல்லவா?'


(நாளை பார்ப்போம்)

அமெரிக்க பேராசிரியரின் கேள்வியும் - பதிலும்! (2)


தோழர் அரசு செல்லையாவின் அடுத்த கேள்வி: நீங்கள் எழுதிய புத்தகங்களில் உங் களுக்கு மனநிறைவை ஏற்படுத்திய புத்தகங்கள் எவை?


1. இரண்டு ஆண்டுகள் ஆய்வு - தரவுகள் சேர்த்து எழுதிய, 25 பதிப்புகளுக்கு மேல் பரவிய ‘கீதையின் மறுபக்கம்!’.


‘கீதையின் மறுபக்கம்‘ என்ற இந்த ஆய்வு நூலை எழுத வேண்டுமென்ற எண்ணம், நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் மறைவதற்கு முன் அதுபற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுதிட வேண்டுகோள் விடுத்ததோடு, அய்யா அவர்களுக்கே உரித்த முறையில் - மொழியில் “தக்க சன்மானமும்'' வழங்கப்படும் என்றும் ‘விடுதலை’யில் வெளியிட்டார்; அய்யா வின் வாழ்நாளில் எந்தப் புலவரும், ஆராய்ச்சி யாளரும் அந்த வேண்டுகோளுக்கு இணங்க நூல் எழுதிட ஏனோ முன்வராதது வருத்தத்திற் குரியதே!


ஆந்திர பகுத்தறிவாளரும், தெலுங்கு நாளேடான ‘ஆந்திரப் பிரபா’ - கோயங்காவின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தைச் சேர்ந்த அவ் ஏட்டின் ஆசிரியருமான நாரண வெங்கடேசராவ் என்ற சீரிய பகுத்தறிவாளர் ‘வி.ஆர்.நார்லா’ என்று அழைக்கப்படுபவர், தலைசிறந்த அறிஞர் - தனது வீட்டின் மூன்று மகா அடுக்குகளிலும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்களே! அவ் வளவு ஆழமாக  தனது இறுதிக்காலம் வரை படித்தும், எழுதியும் வந்த துணிச்சலும், அறிவு நாணயமும் வாய்ந்த சிந்தனையாளர். அவர் எழுதிய “GEETHA - TRUE  READING” என்ற நூல் கிடைத்ததைப் படித்தேன். படித்தபோது இனித்தது. அது எனது முயற்சியைத் தூண்டியது. ‘லிப்கோ’ வெளியிட்ட சமஸ்கிருத சுலோகங்க ளைத் தமிழிலும் வெளியிட்ட பகவத் கீதை தொடங்கி பல நூல்களை ஒரு 6 மாதங்கள் அளவில் (2 ஆண்டுகள் வரை) திரட்டுவதும், படிப்பதும், குறிப்பெடுப்பதுமான பணியை, எனது பல்வேறு பிரச்சாரப் பணி, அன்றாட எழுத்துப்பணி, பத்திரிகை, இயக்க நிர்வாகத்தின் இடையே செய்து வந்தேன். அதற்கென குறைந்த பட்சம் ஓரிரு மாதங்களை தனியே ஒதுக்கினா லொழிய இப்பணியை முடிக்க முடியாது என்று எண்ணி அதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேன்.


அமெரிக்காவில் உள்ள மகள் அருள்செல்வி - பாலகுரு இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அது வழமையான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் - அமெரிக்காவில் கோடை காலம் அல்ல; அசாத்திய குளிர் - பனிக்காலம், அதனால் வீட்டில் வெப்பம் போதிய அளவில் இருக்கும் சூழலில் ஒரு தனி அறையில், நாங்கள் எடுத்துச் சென்ற இரண்டு பெரிய பெட்டி நூல்கள் - கீதைப் பற்றியவை - குறிப்புகளுடன் அந்த அறையை சுற்றிப் பரப்பி வைக்கப்பட்டு, கட்டு வெள்ளைக் காகிதம், மேசை - நாற்காலி - அமர்ந்து படித் தலும், எழுதுவதிலும்தான் ஏறத்தாழ ஒரு மாதம் சென்றது. உணவு வேளைக்கு அழைப்பார்கள். உண்டு சிறிது ஓய்வு, மாலை நேரங்களில் சில நாள் மட்டும் இளைப்பாறுதல் மற்றபடி இந்தப் பணிதான் என்று முடிக்கப்பட்டது.


700 சுலோகங்கள் - அதன் முரண்களைக் கூறியது கூறல் மட்டுமல்ல, முரணான செய்திக ளும் இப்படிப்பல உள்ளன. பலரும் படிக்காம லேயே அதில் வரும் சிற்சில சுலோகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு அதற்கு பதவுரை, கருத்துரை, தத்துவ உரைகளைக் கூறுவதே வாடிக்கையாகிவிட்டது.


அதில் இல்லாததையும்கூட பலர் அளக் கின்றனர்.


“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.


எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.


எது நடக்க இருக்கிறதோ,


அதுவும் நன்றாகவே நடக்கும்.


உன்னுடையதை எதை இழந்தாய்?


எதற்காக நீ அழுகிறாய்?


எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்ப தற்கு?


எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவ தற்கு?


எதை நீ எடுத்துக் கொண்டாயோ,


அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,


எதை கொடுத்தாயோ,


அது இங்கேயே கொடுக்கப்பட்டது,


எது இன்று உன்னுடையதோ,


அது நாளை மற்றொருவருடையதாகிறது,


மற்றொரு நாள், அது வேறொருவருடைய தாகும்''.


என்பதாக சில வாக்கியங்களைப் பலரும் கூறுவது வேடிக்கை; காரணம் அவை கீதையில் எங்கும் கிடையாது!


இதுபோலப் பலப்பல.


இந்த நூல் 25, 26 பதிப்புகள் வெளியாகியிருப்ப தோடு, ஆங்கிலத்திலும், மலையாள மொழியி லும் மொழி பெயர்க்கப்பட்டும் பரப்பப்பட்டு உள்ளது!


முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் பகவத் கீதை நூலை - அந்த சமயத்தில் திட்டமிட்டே நேரில் சென்று கொடுத்த இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலனிடம் அதை வாங்கிக் கொண்டு, “அவசியம் இதைப் (கீதையைப்) படிக்கிறேன்; நானும் ஒரு நூலைத் தருகிறேன். நீங்களும் அதைப் படியுங்கள். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம் அல் லவா?” என்பதாகக் கூறி தனது மேசையைத் திறந்து எடுத்துக் கொடுத்தது - “கீதையின் மறுப் பக்கம்'' நூல்...


இந்தச் செய்தி அப்போது நாளேடுகள், வார ஏடுகளில் செய்தியாக வந்தது; அன்று மாலையே எனக்கு உடனடியாக கலைஞர் அவர்களே தொலைப்பேசி வாயிலாகத் தெரிவித்து மகிழ்ந் தார். நானும் அவருக்கு எனது நன்றியைத் தெரி வித்துக் கொண்டேன்.


நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும், பல பிரமுகர்களும் பற்பல கூட்டங்களில் வெளி யீட்டு விழாக்களை நடத்தி, விளக்கி ஆற்றிட்ட சொற்பொழிவுகளும்கூட தனி சிறு வெளி யீடுகளாக வந்துள்ளது!


எனது அருமை நண்பர், மனித உரிமைப் போராளி. பிரபல வழக்குரைஞர் பாளை.சண் முகம் அவர்கள் இந்த நூலை முழுமையாகப் படித்து விட்டு, அவர் படுக்கையில் இருந்த நிலை யில், என்னை அழைத்து வெகுவாகப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். ‘என்ன ஓய், இதுதான் உமக்கு “MAGNUM OPUS” - மிகப்பெரிய நூல் - சிறந்த நூலாக அமையும்‘ என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.


அதன் தாக்கம் - பரவி 26 பதிப்புகள் வெளி வந்து, பல லட்சம் வாசகர்களைச் சென்றடைந்துள் ளது என்பது உழைப்புக்கேற்ற ஊதியம் அல் லவா?


அதுவும் தந்தை பெரியார் இட்ட கட்டளை யால் கிடைத்த “ஊதியம்‘’ தானே!


இல்லையா?


மற்ற இரு நூல்கள் - ‘சுயமரியாதைத் திரு மணம் - தத்துவமும் வரலாறும்!’


‘காங்கிரஸ் மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற நூல்.


இப்படி பல உண்டு என்றாலும், இவை இரண்டும் ‘கருத்தரித்தது’ சென்னை மத்திய சிறைச் சாலையிலும், திருச்சி மத்திய சிறைச் சாலையிலும்! வெளியில் வந்து பல ஆண்டுகள் கழித்தே இவை முழுமையடைந்து நூல்களாக வெளிவந்தன!


‘பரவாத செய்திகள் பரவ வேண்டும்!’ என்பது தான் அவற்றின் இலக்கு! என்று எனக்கு அவை மன நிறைவு அளித்தனவாகும்.


(கூடுதலாக ஒன்று ‘அய்யாவின் அடிச் சுவட்டில்...’ - பாகம் 1) இணைத்துக் கொள்ளலாம்!


இப்படி எழுதியது சமூகத்திற்கும், சந்ததி யினருக்கும் தெரிய வேண்டும் - புரிய வேண்டும் என்பதற்காக!


அதைவிட நான் எழுதிய புத்தகங்கள் எதற் கும் “ராயல்டி”  வாங்கியது கிடையாது. காரணம் இயக்கம் வேறு, நான் வேறு என்று பிரிக்கப்பட முடியாத அளவு இரண்டும் இணைந்த ஒன்று அல்லவா? தொண்டைவிட பெரு ஊதியம் வேறு தேவையா? நமக்கு என்று எண்ணி மன நிறைவு கொள்ளுபவன்.


நன்றி தோழரே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக