பக்கங்கள்

திங்கள், 7 டிசம்பர், 2020

மாற்று மத காதல் - நீதி மன்ற தீர்ப்பு

https://drive.google.com/file/d/1odrEKcSE-tcPze9Mj4Lz2nA0LmyA1Dbo/view?usp=drivesdk

*எஸ்,முருகேசன்*
சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் என்பவர் தான் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணும் தன்னை காதலித்து வந்ததாகவும், தாங்கள் இருவரும் மேஜர் என்றும், தங்கள் திருமணத்திற்கு காதலி வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் தனது காதலி வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டுக்கு வந்து விட்டதாகவும், ஆனால் காதலியின் பெற்றோர்கள் தனது வீட்டுக்குள் புகுந்து காதலியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சட்ட விரோதமாக காவலில் வைத்து இருப்பதாகவும் இதனால் தனது காதலியின் வாழும் உரிமையான அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தனது காதலியை கண்டுபிடித்து தர போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஒரு ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனுவை தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.


மனுவை விசாரித்த நீதிபதிகள் போலீசார் மற்றும் காதலியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதனடிப்படையில் 10.4.2018 ஆம் தேதி காதலியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணின் தந்தையும் தனது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.


அன்றைய தினம் காதலியை அழைத்து நீதிபதிகள் விசாரித்த போது, காதலி தான் மணிகண்டனை உயிருக்கு உயிராக காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் ஆனால் தனது பெற்றோர் தன்னை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் காதலன் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்கிறார் என்ற ஓரே காரணத்துக்காகவே திருமணத்திற்கு தனது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.


அப்போது காதலியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனுக்கும், பெண்ணுக்கும் இடையே திருமணம் ஏதும் நடக்காத நிலையில் மணிகண்டன் எப்படி ரிட் மனு தாக்கல் செய்தார்? முதலில் காதலியை ஆஜர்படுத்த கோரி காதலன் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியுமா? முதலில் ரிட் மனு தாக்கல் செய்ய மணிகண்டனுக்கு தகுதி உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.


தந்தையின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை 16.4.2018 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் காதலிக்கு 19 வயதே ஆகியிருந்ததால் அவருக்கு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் காதலியை அனுப்பி வைத்தனர்.


அதன்பிறகு 16.4.2018 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் காதலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அதனால் காதலியை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி காதலி மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் மறுபடியும் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காதலி தனது காதலில் உறுதியாக இருந்தார்.


அதனால் முதலாவதாக காதலன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வியை விவாதித்தனர்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டளை 226 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்கும் போது, ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது நீதிமன்றத்திற்கு தெரிய வந்தால் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாம். எனவே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய ஒருவருக்கு தகுதி உள்ளதா? இல்லையா? என்று ஆராய வேண்டியதில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தான் சட்ட விரோதமாக காவலில் இருப்பதாக கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் மேஜர் ஆவார். எனவே அவரது விருப்பப்படி வாழ முடியும் என்றனர்.


அப்போது தந்தை தரப்பில் குறுக்கிட்ட வழக்கறிஞர், உரிய வயதை அடைந்த ஒரு பெண் பெற்றோருடன் இருப்பதை சட்ட விரோத காவலில் இருப்பதாக கருத முடியாது என்று கூறி உச்சநீதிமன்றம் "லால் பரமேஸ்வர் Vs உல்லாஸ் NN (2014-CRLJ-192)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.


அதற்கு பதிலளித்த நீதிபதிகள், மகளுடன் பேச பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மகள் தனது காதலில் உறுதியாக இருப்பதோடு மட்டுமின்றி, தான் சட்ட விரோத காவலில் இருப்பதாக கூறுவதால் தந்தை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறினர். மேலும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் என்பதால் மணிகண்டன் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு சட்டப்படி சரியான ஒன்று என்றனர்.


மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு எப்படிப்பட்ட உதவிகளை கட்டாயமாக மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று " சத்தியவாகினி Vs யூனியன் ஆப் இந்தியா மற்றும் பலர் (W. P. NO - 231/2010 என்ற வழக்கில் 27.3.2018 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.


அந்த தீர்ப்பில்.....


கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் பஞ்சாயத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவர்களை அதே மாவட்டத்தில் பாதுகாப்புள்ள வேறு வீட்டில் குடியமர்த்த வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்து கொண்ட நபர்களுக்கு பாதுகாப்பான வீட்டை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அந்த பாதுகாப்பு வீடானது மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பியின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்ய விரும்புபவர்கள் கொடுக்கும் கொலை மிரட்டல் மனுக்களை தீவிரமாக பரிசீலித்து கலெக்டர் மற்றும் எஸ்பி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான உதவிகளை செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்பதியர் விரும்பினால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசின் பாதுகாப்பில் அவர்கள் தங்க விரும்பினால் அவர்களிடமிருந்து குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு முதலில் ஒரு மாதத்திற்கும் பின்னர் ஒவ்வொரு மாதமாக சூழ்நிலைக்கு ஏற்ப தங்க அனுமதிக்க வேண்டும். மொத்தமாக ஒரு வருடத்திற்கு மேலாக கூட தங்க அனுமதிக்க வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களிடமிருந்து மிரட்டல் புகார் பெறப்பட்டவுடன் கலெக்டர் அல்லது எஸ்பி, அந்தப் புகாரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு குறைவில்லாத ஒரு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


புகார் விசாரணைக்கு ஏற்கும் அதிகாரி புகாரில் உண்மையிருந்தால் அது குறித்த அறிக்கையை எஸ்பியிடம் வழங்க வேண்டும். அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட எஸ்பி அதனை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்து FIR பதிவு செய்ய சொல்ல வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றி துணை கண்காணிப்பாளர் வழக்கை புலனாய்வு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும். மிரட்டல் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் FIR பதிவு செய்து அவர்கள் மீது கூட்டுசதி மற்றும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிற பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.


இந்த நடைமுறைகளை கலெக்டர் மற்றும் காவல் அதிகாரிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது 6 மாதங்களுக்கு உள்ளாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


(அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எப்படி எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே "ஆறுமுகம் சேர்வை என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது)


அதனால் காதலின் தந்தையின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே காதலி தனது விருப்பம் போல வாழலாம் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-கட்செவி வழியாக வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக